இமயம் முதல் குமரி வரை இருந்த தமிழின மக்கள் சமுதாயம் (The Tamils are the Indians = The Tamils are the aboriginates of the India) பல்வேறு வகையான சாதி சமயப் பிரிவுகளால் வேற்றுமைகளையும், வேறுபாடுகளையும், மாறுபாடுகளையும், ஏற்ற இறக்கங்களையும், வெறுப்புகளையும், மறுப்புகளையும், போட்டி பொறாமைகளையும், சண்டை சச்சரவுகளையும் பெற்று எழுச்சி பெற முடியாத வீழ்ச்சிகளையும், உயர்ச்சி பெற முடியாத தாழ்ச்சிகளையும் பெற்றதைக் கண்டு; அதன் மீட்சிக்காகத் திட்டமிட்டுச் செயலாற்றப் புறப்பட்ட மாவீரரே ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் (கி.பி.785- கி.பி.1040).
இவர் தமிழ்ச் சமுதாயத்தைத் தொடர்ந்து சூழ்ச்சியால் வீழ்ச்சி நிலையில் வைத்திருக்கும் பேராற்றல் மிக்கவர்களை எதிர்த்துப் போராடுவதற்காக சமய மறுமலர்ச்சியை (The Religious Renaissance) உருவாக்கினார். அதற்காக கி.பி.785இலேயே மிகப் பெரிய முயற்சிகளைச் செய்து பொதிகை மலையில் இருந்து ‘சத்தி இலிங்கம்’, ‘சிவ இலிங்கம்’ என்ற இரண்டையும் மிகமிகப் பெரிய தொடர் முயற்சியால் நெடுந்தொலைவு எடுத்து வந்து முறையே தஞ்சாவூரிலும், கங்கைகொண்ட சோழபுரத்திலும் நிறுவினார்.
இவற்றிற்குரிய கோயில்களை இருநூறு ஆண்டுகள் கழித்தே, தான் உருவாக்கிய பிற்காலச் சோழப் பேரரசின் புகழ் மிக்க மாமன்னர்களைக் கொண்டு கட்டினார். இவர் மிகச் சிறந்த சிற்பி என்பதால் எண்ணற்ற கற்சிற்பங்களைச் செதுக்கியும், உலோகச் சிற்பங்களை வார்த்தும் பல அருள்வழங்கு நிலையங்களைக் கட்டினார்.
அக்கோயில்களைச் சாதனமாகக் கொண்டு, ஆங்காங்கே கிடைத்த அருட்தன்மையுடைய மனிதர்களைத் தேர்ந்தெடுத்து முறையான பயிற்சியின் மூலம் அவர்களை அருளாளர்களாக ஆக்கினார். அப்படி உருவான அருளாளர்களைக் கொண்டே சமய சமுதாய இருள்களை அகற்றினார். இதனால், பிற்காலச் சோழப் பேரரசு எனும் ‘தெய்வீகப் பேரரசை’# (The Divine Kingdom; The Kingdom to safeguard the Siddharism or the Indhuism) உருவாக்கும் பெரும்படையினை அருட்படையாகத் திரட்டினார்.
அவரது முயற்சி நானூறு ஆண்டு காலம் (கி.பி.785 - 1290) வரலாற்றில் நின்றது. ஆனால் அவரை இன்றுகூட உணர்பவர் யாரும் இல்லை. இருப்பினும் தான் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் கோபுரத்தின் மடியிலேயே அவர் சிலை வடிவில் நிலைத்து நிற்கிறார்.
கடலலைகள் ஓய்ந்தாலும் கன்னித் தமிழினத்தைக் காக்க இவர் எடுத்த முயற்சிப் பேரலைகள் என்றைக்குமே ஓயா மாட்டாதவை. இவர் உருவாக்கிய அருள் வழங்கு நிலையங்கள் விலை மதிக்க முடியாத கலைக் கருவூலங்களாக மலையென நிமிர்ந்து நிற்கின்றன.
இன்றுள்ள படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை ஏறத்தாழ எல்லோருமே தங்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ளவும், தேவைகளை எப்படியாவது நிறைவேற்றிக் கொள்ளவுமே முயற்சிப்பவர்களாக இருக்கிறார்கள்.
இந்தியத் துணைக் கண்டத்தில், இந்து மதத்துக்கென உள்ள கோயில்களில் மிகப் பெரிய வரலாற்றுப் பின்னணியையுடைய கோயில் இதுதான். இக்கோயில்தான் கட்டிடக் கலையிலும், கோயில் விஞ்ஞானத்திலும், அருட் துறையிலும் புரட்சியாகக் கட்டப்பட்டது.
தஞ்சைப் பெரிய கோயிலை அருளாட்சிக்குரிய கருவறைக் கோபுரக் கோயிலாகக் கட்டிய ஞானாச்சாரியார் சித்தர் கருவூறார் தம் காலத்திலேயே குமரி முதல் இமயத்தின் முடி வரை உள்ள எல்லாக் கோயில்களையுமே புத்துயிர்ப்புச் செய்து முடித்தார்.
ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் தஞ்சைப் பெரிய கோயிலை நான்காண்டு காலத்திற்கு மேல் கோயில் கோபுரத்தின் மேல் பகுதியை மூடாமல் மொட்டைக் கோபுரமாகவே வைத்திருந்தார்.
பதினெண்சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும், இம் மண்ணுலகுக்கு வழங்கிய அண்டபேரண்டமாளும் இந்து மதத்தில், ‘ஞானாச்சாரியார்’ எனப்படுபவர்கள் பதினெண்சித்தர் பீடாதிபதிகளே. இந்த ஞானாச்சாரியார்களே இம்மண்ணுலகின் ‘ஞானம்’, ‘அகஞானம்’, ‘புறஞானம்’, ‘விஞ்ஞானம்’, ‘மெய்ஞ்ஞானம்’ எனும் ஐந்தினையும் மனிதரின் ஐம்புலன்களின் மருந்தாகவும், விருந்தாகவும் வழங்கியவர்கள்.
ஒரு வரிக் கருவாசகங்கள், குருவாசகங்கள், தருவாசகங்கள், திருவாசகங்கள், அருள்வாசகங்கள், மருள் வாசகங்கள், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராம் பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் எழுதிய நூல்களில் உள்ளன.
நான்கு யுகங்களாக ஞானாச்சாரியார்கள் தோன்றி வருகிறார்கள். இவர்கள் இன்று 1989 உடன் 43,73,090 ஆண்டுகள் எனும் மிகப் பெரிய இடைவெளியில் (12) பன்னிரண்டு ஞானாச்சாரியார்கள்தான் தோன்றியிருக்கிறார்கள். இவர்கள் மிகப் பெரிய நெடிய இடைவெளிகளில்தான் தோன்றியிருக்கிறார்கள்.
“அருட்பேரரசு என்ற ஓர் அமைப்பு அல்லது ஒரு நிறுவனம் உருவாக்கப் படல் வேண்டும், அதை உருவாக்குவதற்கென்று தயாராக்கப் பட்டிடும் அருட்படை என்றென்றைக்கும் அரசாங்கம் என்ற கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு தனித்து அருளாட்சி நாயகத்தின் தலைமையின் கீழ் இயங்க வேண்டும். அப்பொழுதுதான் எல்லா இனங்களும், மொழிகளும், நாடுகளும் யாருக்கும் அடிமைப்படாமல் முழுமையான விடுதலை உணர்வுடன் வாழ முடியும்:”
“…….. இன்றைய நிலையில், நம் தாயகத்து மக்கள் யவன மதம், சோனக மதம், சீன மதம், புத்த மதம், சமண மதம், வேத மதம், …. என்று பல மதங்களிலும் பேரார்வத்தோடு முழுமையாக மூழ்கி விட்டார்கள். இதனால், நமது தாயகத்து மக்களுக்குத் தாங்கள் தமிழர்கள், தங்களுடைய மொழி தமிழ் மொழி, தங்களுடைய நாடு தமிழ் நாடு, தங்களுடைய அகப் பண்பாடும், புற நாகரிகமும் தமிழினத்திற்கே உரியது … என்ற நம்பிக்கையோ, பற்றோ, பாசமோ, பெருமித உணர்வோ, உரிமையுணர்வோ ஏறத்தாழ இல்லாமலேயே போய்விட்டது.
ஒரு நாட்டின் கடவுளையோ, ஒரு மொழிக்குரிய கடவுளையோ, ஓரினத்தின் கடவுளையோ, மற்ற நாட்டினரோ, மற்ற மொழியினரோ, மற்ற இனத்தினரோ வழிபட்டுப் பயனே இருக்காது. ஏனென்றால் ஏறத்தாழத் தமிழ்மொழியின் ஒலியலைகளைக் கொண்டு உலக மொழிகள் அனைத்தையும் பேச முடியும் என்பது போல், வேறெந்த மொழியையும் கொண்டு தமிழ் மொழியைப் பேச முடியாது.
ஞானாச்சாரியார் விளக்கும் பதினெண் சித்தர்களின் மெய்யான இந்துமதம்
இம்மண்ணுலகில் பதினெண்சித்தர்களின் மெய்யான இந்து மதம் தவிரத் தோன்றக் கூடிய மதங்கள் அனைத்துமே அம்மதத்தின் மூலவர்களுடைய அருட்செயல்களையும், வாழ்வியலில் வெளிப்பட்ட அற்புதங்களையும், அவர்களைப் புரிந்து கொள்ளாத மக்களால் அவர்கள் அடைந்த தொல்லைகளையும், துன்பங்களையும், அவர்களை முழுமையாக ஏற்றுக் கொண்ட அடியவர்களின் முயற்சி வரலாறுகளையும் அடிப்படையாகக் கொண்டவைதான்.
ஞானாச்சாரியார் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் ‘நிலவறையின் வாயிலிலே’ என்ற தலைப்பிட்ட குரு பாரம்பரிய வாசகங்களில் அருள் வாக்கும் இந்து மதமும் என்ற தலைப்பில் நிறைய எழுதியிருக்கிறார். அதில் ஒரு சில துளிகள்.
“விண்ணுயர்ந்து கண்கவர் வனப்புடன் செம்மாந்து நிற்கின்ற தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறைக் கோபுரத்தைக் காண்பவர்களே கூட, இக்கோயில் பற்றியோ’!; இக்கோயிலுக்குரிய இந்து வேதம் பற்றியோ; இந்து மதம் பற்றியோ சிந்திப்பதில்லை; என்கிற நிலைதான் நாட்டில் இருக்கின்றது என்கின்ற பொழுது, இக்கோபுரத்தின் அருகே அமர்ந்திருக்கக் கூடிய ஞானாச்சாரியாரைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள் என்பதை எண்ணித்தான் இச்சிறு புத்தகம் வெளியிடப்படுகிறது.”