பதினெண் சித்தர்களின் அருட்கொடையான நூற்றெட்டுப் பூசைமொழி நூல்களிலிருந்து இக்காலத்துக்கு ஏற்றனவாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பூசைமொழிகள் இந்த முதல்பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன. மொழி, இனம், நாடு, மதம்,…… என்ற வேறுபாடின்றி எல்லோரும் பயன்படுத்துதற்காகவே அருளூறு ஒலிநயங்களையும், பொருளையும் தரக்கூடிய சொற்களால் உருவாக்கப் பட்டதே இப்பூசைமொழி.
இதிலுள்ள ஒரே ஒரு பூசைமொழியை மட்டும் தொடர்ந்து முறையாகக் குருவழி ஓதிட்டாலும் போதும்; அருளுலகப் பத்தி சத்தி சித்தி முத்தி நிலைகளைப் பெறலாம்.
அவரவர் விருப்புக்கும் வாய்ப்பு வசதிக்கும் ஏற்ப யாரையும் குருவாக ஏற்கலாம். அதாவது, ஒருவர் பூசைமொழியை ஓதுவதற்குக் கட்டாயமாக மற்றொருவர் குருநிலையிலிருந்து ஓதிக்காட்டித் தொட்டு வாழ்த்தித் துணையாகவும் வழிகாட்டியாகவும் இருந்திடல் வேண்டும். பாரம்பரியமாக அருளுலக வாழ்வு வாழ்ந்திடுபவர் குருவாகத் தேர்ந்தெடுக்கப்படல் சிறந்த பயனைக் குறைந்த கால அளவுக்குள் விரிந்த அளவில் நல்கிடும்.
இந்தப் பூசைமொழியால் தமிழின மொழி மத விடுதலைக்குரிய அருட்தலைவர்கள் தோன்ற வேண்டும். பிறர், தன்னைக் கண்டவுடனும், தனது சொல்லைக் கேட்டவுடனும், தனது தொடுதலைப் பெற்றவுடனும் தன் வயப்பட்டுத் தானாகவே மாறித் தன்னாணைகளை நிறைவேற்றும் முழுமையான வாரிசுகளாகிடும்படிச் செய்யும் அருளாளனாக உயர்ந்திடும் தலைவர்களே தமிழர்களுக்குத் தேவை. ஏறத்தாழ ஆயிரமாண்டுகளாக இப்படிப்பட்ட அருட்தலைவர்கள் தமிழர்களுக்குக் கிடைப்பது அரிதாகி விட்டது. ஏனெனில், காலப்போக்கில் தோன்றிட்ட ஒருசில அருட்தலைவர்கள் கூடத் தமிழினத்தால் சரிவரப் பயன்படுத்தப் படவில்லை.
இவற்றை எண்ணித்தான் இந்தப் பூசைமொழிப் புத்தகத்தால் தமிழர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அந்த விழிப்புணர்வின் மூலம் அருளுலகின் வளமும், வலிவும், பொலிவும், ஆட்சிநிலையும் மிகச் சிறந்த செயல்நிலை பெறுவதற்காகப் பூசாறி, குரு, குருக்கள், குருமார், சாத்திரியார், தோத்திரியார், பண்டாரம், ஆதினம், சன்னிதானம், தம்பிரான், அருளாளி, மருளாளி…… முதலியோர் தோன்றுவதற்கென மெய்யான இந்துமத இலக்கியங்களை ஏட்டறிவாகவும், பட்டறிவாகவும் கற்பிக்கக் கூடிய பள்ளிகள், கல்லூரிகள் நாடெங்கும் தோற்றுவிக்கப் படல் வேண்டும். அதற்காக இந்துக்கள் தாராளமாக ஏராளமான செல்வங்களையும் உதவிகளையும் பதினெண் சித்தர் மடத்தின் மூலம் அருளுலகுக்கு வழங்க வேண்டும்.
இப்பூசைமொழி மதத்தின் பெயரால் மக்களைக் கூட்டமாகத் திரட்டிப் பொருளுலகப் பயனை உருவாக்க முற்படவில்லை. அதாவது, இப்பூசைமொழி ஒவ்வொரு தனிமனிதனும் ஏதாவது ஒரே ஒரு பூசைமொழியையாவது தொடர்ந்து பயிற்சி செய்து அருளாளனாகி இம்மனிதப் பிறப்பின் பயனை அடைய வேண்டுமென்பதற்கே முற்படுகிறது.
இப்பூசைமொழியால் தமிழர்களுக்குத் தமிழ் மொழியுணர்வு, இன உணர்வு, மத உணர்வு, பண்பாட்டுப் பாரம்பரிய உணர்வு,…… முதலியவைகள் எல்லாம் செழிப்படைந்து தமிழர்கள் ஒன்று திரண்டு ஒற்றுமைப்பட்டு ஒருமைப்பாட்டுடன் செயல்படும்நிலை உருவாக வேண்டும். அப்பொழுதுதான், தமிழினம் அருளுலகுக்கே வழியாக, வழிகாட்டியாக, வழித்துணையாகச் செயல்படும் பணியில் முழுவெற்றியினைப் பெற்றிட முடியும்.
இன்றைய அருளுலகில் இருளும், பகையும், போட்டி பொறாமையும், சண்டை சச்சரவும், பிரிவினை வெறியும் தலைவிரித்தாடும் அவல நிலைகளுக்குத் தமிழினமே சிறந்த மருத்துவனாகிட முடியும். இதற்காகத்தான், மத இலக்கியங்களில் ஏட்டுப்பூச்சிகளாக வாழும் வாழிவினை மாற்றி; மத இலக்கியங்களை விதைப்பண்ணைகளாகவும் நாற்றுப் பண்ணைகளாகவும் பயன்படுத்திடும் அறிவையும், செயல்நிலையையும், சிந்தனையையும், உணர்வையும் தருகின்ற இப்பூசைமொழி வெளியிடப்படுகின்றது.
‘பதினெண் சித்தர்கள் பாடல்களாகத்தான் அனைத்தையும் பாடிச் சென்றுள்ளார்கள்’ என்ற தவறான, பொய்யான, மாயமான கருத்து எப்படியோ நாட்டில் பரவி விட்டது. ஆனால், உண்மையில் பதினெண் சித்தர்கள் நான்கு வகையான உரைநடைகளைப் பயன்படுத்தியே அருளுலகப் பொருளுலக இலக்கியங்களை உருவாக்கியுள்ளார்கள். இதுபற்றித் தொல்காப்பியர் தமது இலக்கணத்தில் மிகத் தெளிவாக,
“பாட்டிடை வைத்த குறிப்பி னானும்
பாவின்று எழுந்த கிளவி யானும்
பொருள் மரபில்லாப் பொய்ம் மொழியானும்
பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும்
உரைநடை வகையே நான்கென மொழிப”
(செய்யுளியல் 17)
என்று குறிப்பிடுகிறார். ஆனால், வட ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் பிறமண்ணினரான ‘பிறாமணர் எனும் வட ஆரியர்’ செய்த சூழ்ச்சியால் மதுரை மாநகரும், அங்கிருந்த தமிழ்ச்சங்கமும் பேரழிவுக்கு உள்ளான போதுதான்; பதினெண் சித்தர்களின் நான்கு வகைப்பட்ட உரைநடைக்குரிய ஆயிரமாயிரம் நூல்கள் எரித்துச் சாம்பலாக்கப் பட்டன. ஆனால், பூசாறி, குரு, குருக்கள், குருமார் எனும் நால்வராலும்; பதினெண் சித்தர் பீடத்தின் வாரிசுகளாலும், ‘பதினெண் மையக் கணக்கு நூல்கள்’ என்ற ஆறு தொகுதிகள் காப்பாற்றப் பட்டதால் நூறாயிரக் கணக்கான ஆண்டுப் பழமையுடைய உரைநடைகள் கிடைத்திருக்கின்றன. இவை, ஆறு சமயத்துக்குரிய ஆறுதொகுதிகள் என்பதால் (18x6 = 108) நூற்றெட்டுப் பூசைமொழி நூல்களில் தொல்காப்பியம் கூறும் நான்கு வகைப்பட்ட உரைநடைகளையும் பெற முடிகின்றது. இவையல்லாமல், பதினெண் சித்தர் பீடாதிபதிகள் காலங்கள் தோறும் எழுதிட்ட குருபாரம்பரியங்கள், இலக்கிய பாரம்பரியங்கள், அரசபாரம்பரியங்கள்…… மிகத் தெளிவாக இன்றைக்கு 1990 ஆம் ஆண்டுக்கு முந்திய 43,73,091 ஆண்டுகளுக்குரிய உரைநடை இலக்கியங்களைத் தருகின்றன. இவையனைத்தும் தான் இவ்வுலகில் தோன்றக் கூடிய எல்லாவகையான மக்களையும் ஆவி, ஆன்மா, ஆருயிர் என்ற மூன்றையும் அறிந்து கடவுளாகிடச் செய்வனவாக உள்ளன. எனவேதான் இப்பூசைமொழி, “மனிதரைக் கடவுளாக்கும் பூசைமொழி” என்ற விளக்கத்துடன் வெளிவருகின்றது.
இப்பூசைமொழி பசனைப்பாடல்கள் போல் கூட்டமாக அமர்ந்து பாடுவதற்காக அருளப்பட்டவை மட்டுமல்ல; தனிமனிதர்கள் உலகியல்களையும், ஐம்புலன்களையும் ஆறாவது அறிவையும் வென்று; மனம் ஒன்றிய நிலையிலிருந்து ஓதுவதற்காகவே சிறப்பாக உலக மானுடர்க்கு அருளப்பட்டதாகும். இப்படி, இந்தப் பூசைமொழியை ஓதுபவர்கள் அனைத்து வகையான அச்ச, கூச்ச, மாச்சரிய, இச்சைகளையெல்லாம் எளிதில் வென்றிடலாம்; அருளை அநுபவப் பொருளாகப் பெற்றிடலாம்; பெற்ற அருளைப் பிறர்க்கு மருந்தாகவும் விருந்தாகவும் வழங்கிடலாம்; முப்பிறப்பினையும் புரியலாம்; தன்னைத் தானே கடவுளாக்குவதோடு, தான் விரும்புவனவற்றை எல்லாம் கடவுளாக்கலாம்; ஏற்கெனவே வழிபடு நிலையங்களில் உள்ள கடவுள்களை யெல்லாம் விழிச்சி நிலை, எழிச்சி நிலை, செழிச்சி நிலை, ஆட்சிநிலை பெறச் செய்திடலாம்; எப்பொழுதும் தன்னம்பிக்கையோடும், நிறைவோடும், நிம்மதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்திடலாம். எனவே, மானுடர் அனைவரும் மொழி, இனம், நாடு, மதம் கடந்து பதினெண் சித்தர்களின் பூசைமொழிகளைப் பயன்படுத்தி அவரவர்க்கு விருப்பமான அருள்நிலைகளையெல்லாம் பெற்றிடலாம் என்று அறிவிக்கப்படுகிறது.
ஞானாச்சாரியார்
சித்தர் கருவூறார்