Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • குருதேவர் அருளியவை>
  • குருதேவர் உரை.
  • குருதேவர் உரை.

    குருதேவர் உரை.

    “…. ஏறத்தாழ 35 ஆண்டுகள் ஆகியிருக்கிறது, இந்தியத் துணைக் கண்டத்திலே. இங்கு அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது. இங்கு ஏழைகள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் இருந்து கொண்டே இருக்கின்றது. எங்குப் பார்த்தாலும் பிச்சைக் காரர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். எங்குப் பார்த்தாலும் கை கால் நொண்டி குட்ட நோய் தொழுநோய் பிடித்தவன், பைத்தியம் பிடித்தவன், அரைப் பைத்தியம் பிடித்தவன் என்பவன் எல்லாம் பிச்சைக்காரனாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நாற்றம் அடிக்கின்ற சாக்கடை ஓரத்திலே குடிசைகள் கட்டி வாழுகின்றவர்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றார்கள். முக்கால் நிர்வாணமாகவும், முழு நிர்வாணமாகவும் வாழும் மக்கள் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். முக்கால் பட்டினி முழு பட்டினி என்று கிடக்கின்ற மக்கள் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

    குருதேவர் இதைப் பற்றி யாருக்குமே அக்கரை இல்லை. யாருக்குமே அக்கரை இல்லை என்றால் இந்த நாட்டை யார் ஆளுகின்றார்கள் என்று கேட்க விரும்ப வில்லை. எது ஆளுகிறது? எந்தத் தத்துவம் இந்த நாட்டை ஆளுகிறது?; அந்தத் தத்துவத்திலே தவறு இருக்கிறது அல்லது பிழை இருக்கிறது, குறை இருக்கிறது, ஊனம் இருக்கிறது; அதைச் செப்பனிட்டுப் பார்ப்போம் என்று நெருங்க முடியவில்லை.

    ஏன் என்றால் இந்த நாட்டிலே தத்துவமே அரசு ஆள வில்லை. தனிப்பட்ட மனிதர்கள்தான் இந்த நாட்டிலே அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தனிப்பட்ட மனிதர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளைப் பொறுத்துத்தான் நாட்டிலே அரசியல் திட்டங்கள் இருக்கின்றன. எந்த விதமான தொலை தூர நோக்கத்தோடு திட்டமிட்டு நெடுங்காலமாகப் பயன்படக் கூடிய ஒரு மிகச் சிறந்த திட்டத்தை, திட்டங்களை உருவாக்கிக் கொண்டு எந்த ஒரு அரசியல் தலைவனும் புறப்பட வில்லை.

    ஏனென்றால், அரசியல் அடிக்கடி மாறக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. மிக அவலமானதாக, கேவலமானதாக இருக்கின்றது. ஆளும் கட்சியாக இருக்கின்றவன் தான் என்றென்றும் ஆளும் கட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பல தவறுகளை அனுமதிக்கின்றான். ஊழல்களை அனுமதிக்கின்றான். சுரண்டல்களை அனுமதிக்கின்றான். ஏமாற்றுக்களை அனுமதிக்கின்றான். பித்தலாட்டங்களை அனுமதிக்கின்றான். திருட்டுக்களை அனுமதிக்கின்றான். கொலைகாரர்களை அனுமதிக்கின்றான். அவர்களை எல்லாம் வாழ விடுகிறான். நடமாட விடுகின்றான். எனவே, எல்லா ஒழுக்கக் கேடுகளையும் வாழ விட்டால்தான் இவன் தொடர்ந்து ஆளும் கட்சியாக இருக்க முடியும் என்கின்ற நிலையிலே எத்தகைய நல்லவன் ஆளும் தலைவனாக வந்தாலும் அவன் பொல்லாதவனாக, இழிந்தவனாக, நலக் குறைவு உள்ளவனாக மாற்றப் படுகிறான்.

    அதே நேரத்திலே எதிர்க் கட்சியாக இருக்கின்றவன் தான் மீண்டும் ஆளும்கட்சியாக ஆக வேண்டும் என்பதற்காக ஆளும் கட்சியாக இருக்கின்றவன் எந்த நல்லது செய்தாலும் அதிலே குறை காணுகின்றான். அதோடு தன்னுடைய இயக்கம் மீண்டும் வர வேண்டும் என்பதற்காக எல்லா விதமான அயோக்கியத் தனங்களையும் பித்தலாட்டங்களையும் ஏமாற்றுக்களையும் சுரண்டல்களையும் செய்கின்றான்.

    எனவே, இந்த நாட்டிலே அரசியல் மூலம் எந்த நன்மையும் ஏற்பட முடியாது. அரசியலிலே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எதுவும் செய்ய முடியாது. நாம் விரும்புவதெல்லாம் எந்தத் தலைவன் வந்தாலும் இந்த நாட்டிலே எதையும் செய்ய முடியாது. தத்துவம் வர வேண்டும். அந்தத் தத்துவம் எது? ஒவ்வொரு மனிதனுடைய ஆணவத்தை, அகம்பாவத்தை, பொறாமையை, போட்டியை, பேராசையை, ஏமாற்றை, கெட்ட புத்தியை மாற்றக் கூடிய ஒரு தத்துவம் வேண்டும் என்றால் அது சமுதாயமா, அல்லது சமுதாயத்தை உருவாக்குகின்ற சமயமா என்பதுதான்.

    சமுதாயப் புரட்சியால் எதையும் செய்ய முடியாது. சமய வழிப் புரட்சியால்தான் எதையும் செய்ய முடியும். மதத்தால்தான் தனி மனிதனை சிந்திக்க வைக்க முடியும். அவனுடைய உள்ளத்தைத் தொட முடியும். அவனுடைய சிந்தையைத் தொட முடியும். அவன் செயல் புரியாமல், அல்லது தன்னுடைய செயலுக்கு விளக்கங்கள் தெரியாமல் தன்னால் அறிந்து கொள்ள முடியாமல் காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட செயல்களை எண்ணித் திகில் பிடித்து இருக்கும் பொழுது, விவரமே தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கும் பொழுது அதைத் தீர்த்து வைக்கக் கூடிய அருட்கலைகளை, 48 அருட்கலைகளை, 64 ஆயகலைகளைக் கற்ற நம்மவர்கள் மனித சமுதாயத்திலே பல தனி மனிதர்களை நெருங்குகிறோம் என்றால் அவர்களுக்கு நலம் அளிப்போம், நலிவுகளைப் போக்குவோம், மெலிவுகளைப் போக்குவோம், அச்சங்களைப் போக்குவோம், கூச்சங்களைப் போக்குவோம், மாச்சரியங்களைப் போக்குவோம், புரியாததைப் புரிய வைப்போம், தெரியாததைத் தெரிய வைப்போம், அறியாமையை அகற்றுவோம், முடியாததை முடியக் கூடியதாக ஆக்கித் தருவோம்.

    அந்த நிலையில் பல தனி மனிதர்கள் நம் பின்னால் ஒன்று திரண்டு வருவார்கள். அந்தத் தேர்ந்து எடுக்கப்பட்ட தனிமனிதர்களை நாம் இயக்கமாக வழிப் படுத்துவோம் என்றால் அந்தத் தேர்ந்து எடுக்கப் பட்டவர்களை நாடெங்கும் அனுப்புவோம் என்றால்; கிராமத்துக்கு நம்மால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒருவன் இருக்கிறான் என்றால் போதும், அந்தக் கணக்கிலே நமக்கு விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள் நமக்கு கிடைத்து விட்டால் நாம் உறுதியாக இந்த நாட்டை எல்லா அளவிலும் மாற்றிக் காட்டுவோம். மாற்றிக் காட்டுவதற்குப் புத்தகங்களை எழுதிப் பயனில்லை; மனிதர்களை உருவாக்க வேண்டும். அதைத்தான் நான் செய்து கொண்டு இருக்கிறேன். அந்த மாபெரும் பணியிலே இணையற்ற தொண்டாக எங்களோடு இணைந்து செயல்படத்தான் நீங்கள் உருவாகியிருக்கிறீர்கள். … … …

    நாம் கருத்துப் புரட்சியைத்தான் நம்புகிறோம். Revolution in Thinking, Revolution in Idea, in Idealogy. அப்பொழுதுதான் நம்மால் எதையும் செய்ய முடியும். மனிதர்களை நாம் கூவி அழைப்பதெல்லாம் எண்ணப் புரட்சிக்குத் தயாராகுங்கள். பிறகு கருத்துப் புரட்சிக்குத் தயாராகுங்கள் என்றுதான் சொல்லுகிறோம். எண்ணப் புரட்சி நிகழ்ந்தால்தான் கருத்துப் புரட்சி ஏற்படும். எண்ணத்திலே புரட்சி ஏற்பட வேண்டும். இந்தப் பழமைகளை உதறித் தள்ளுவதற்கு எண்ணத்திலே புரட்சி வேண்டும். இந்தப் பழமைகள் ஏன் நீடித்துக் கொண்டிருக்கின்றன, ஏமாற்றுக்கள் ஏன் நீடித்துக் கொண்டிருக்கின்றன, தனி மனிதர்கள் கொள்ளை அடித்துக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். தனி மனிதர்கள் தொடர்ந்து அரசியலிலே தலைமை வகித்துக் கொண்டு இருக்கிறார்கள். விரல்விட்டு எண்ணக் கூடிய பணக்காரர்கள் மட்டும் இந்த நாட்டை சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை எப்படி அனுமதித்துக் கொண்டிருக்கிறார்கள் ஒரு விடுதலை நாட்டிலே என்று நாம் கேட்க வேண்டும்.

    விடுதலை பெற்று 35 ஆண்டுகள் ஆன பிறகும் திரும்புகின்ற இடங்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் கூட்டம், இந்தப் பிச்சைக் காரர்களை ஒழிக்கவே முடியாதா? எச்சிலை எடுக்கின்ற நாடோடி நரிக் குறவர்களை ஒழிக்க முடியாதா? வேலை இல்லை என்று சொல்லிக் கொண்டு திரியும் இளைஞர்களை இந்த நாட்டு அரசாங்கமே சோம்பேறிகளாக்குகிறது. அவர்களை நாம் தடுத்து நிறுத்த முடியாதா? என்றுதான் நாம் கேட்கிறோம்.

    … அதைச் சொல்லுகின்ற தைரியம் யாருக்கும் இல்லை என்றால் அந்தக் கல்வியின் பெயரால் சுரண்டி வாழுகின்றவர்கள் கல்வியை ஒரு விலைக்கு விற்றுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நாட்டுக் குழந்தைகள் சுதந்திரக் குழந்தைகள். ஆனால், என்ன நடக்கிறது? ஒரு குழந்தை Church Park Conventக்குப் போனால் மாதம் 1000 ரூபாய் செலவழித்துக் கல்வியை விலைக்கு வாங்குகிறது. இன்னொரு conventக்குப் போனால் மாதம் 500 ரூபாய் செலவழித்து கல்வியை விலைக்கு வாங்குகிறது. இன்னொரு குழந்தைக்கு நூறு ரூபாய், இன்னொரு சின்னப் பள்ளிக் கூடமாயிருந்தால் மாதம் 20 ரூபாய், அதைவிட சின்ன பள்ளிக் கூடத்திற்கு 10 ரூபாய், பிச்சைக் காரப் பள்ளிக்கூடம் என்று அரசாங்கம் பள்ளிக் கூடம் நடத்துகிறது. அங்கு மதியவேளை சோறு போட்டு பாடம் சொல்லித் தருகிறது. இது என்ன நியாயம்? சுதந்திரத் தாய், பாரதத் தாய் ஈன்றெடுத்த குழந்தைகளிலே மழலை பேசும் அப்பாவிக் குழந்தைகளுக்கு கல்வி தரும் பொழுது ஒரு குழந்தைக்கு கல்வி ஆயிரம் ரூபாய்க்கு. இன்னொரு குழந்தைக்கு 500 ரூபாய்க்கு. இன்னொன்றுக்கு 100 ரூபாய், இன்னொன்றுக்கு 50, 20, 10 ரூபாய். அப்புறம் பிச்சைக் காரக் கல்வி. மதியச் சோறு போட்டு கல்வி சொல்லிக் கொடுக்கிறார்கள் என்றால் அந்தக் கல்வியின் தரம் எப்படி இருக்கும்?

    ஆயிரம் ரூபாய்க்கு தன்னுடைய குழந்தைக்கு கல்வியை விலைக்கு வாங்கித் தருகிறான் ஒரு தந்தை என்றால் அவன் தன்னுடைய மகன் அமெரிக்காவுக்குப் போக வேண்டும் அல்லது ஆசுத்திரேலியாவுக்கு போக வேண்டும்; அங்கிருந்து பணத்தை சம்பாதித்துக் கொண்டு வர வேண்டும் என்றுதான் நினைப்பான். அவன் தாய்நாட்டை விலைக்கு விற்பான். இனத்தை விலைக்கு விற்பான். தாய்மொழியை விலைக்கு விற்பான். இந்த நாட்டினுடைய நீதியை விலைக்கு விற்பான். இந்த நாட்டு மக்களின் நன்மையை விலைக்கு விற்பான். சொல்லப் போனால் எதையுமே விலைக்கு விற்கத் தயாராக இருப்பான்.

    மான ஈனமற்ற பிறவிகளாகத்தான் இன்றைய படித்த கூட்டம் இருக்கிறது. இந்தக் கம்பெனியிலே வேலை பார்க்கிறவனுக்கு 50 ரூபாய் அடுத்த கம்பெனியிலே கூடக் கொடுக்கிறான் என்றால் உடனே இந்த வேலையை உதறிவிட்டு அடுத்த கம்பெனிக்குப் போகத் தயாராக இருக்கிறான். Cooliக்கார Mentality. Coolism. Cooliக்கார பையன்களையும் பிச்சைக்காரப் பையன்களையும்தான் நம்ம படிப்பு உண்டாக்குகிறது. இந்த நாட்டுப் பள்ளிக்கூடங்கள் யாரை உண்டாக்குகிறது என்றால், எச்சிலை பொறுக்குகின்ற நாய்களை உருவாக்குகிறது. ரொட்டித் துண்டுக்கு வால் ஆட்டும் நாய்தான் B.A.வும் M.A.வும் M.Sc.யும் படித்திருக்கின்றன. இந்த நாய்கள் எந்த வெளி நாட்டிற்கும் போகத் தயாராக இருக்கின்றன. எச்சிலைச் சோறுக்கு ஓடி வருவது போல ஒரு விளம்பரம் வெளி நாட்டிற்குத் தேவை என்று வந்தால் எல்லாப் படித்தவனும் வேலைக்குப் போகத் தயாராக இருக்கிறான். தன்னுடைய தாயைப் பற்றிக் கவலை இல்லை, தாரத்தைப் பற்றிக் கவலை இல்லை, தான் ஈன்ற மக்களைப் பற்றி கவலை இல்லை. தாய் மொழி, நாடு, இனம் பற்றிக் கவலை இல்லை. எங்கே அதிகம் சம்பளம் இருக்கிறதோ, அங்கே போகத் தயாராக இருக்கிறான். அந்த நாட்டாளன் இவன் கையில் துப்பாக்கியைக் கொடுத்து இந்தியாவிற்கு விரோதமாக சண்டை போடு என்றால் உறுதியாக சண்டை போடுவான். ஏன்னா இவன் கூலிக்காரப்பயல்தான்.

    இப்படிப்பட்ட கூலிக்காரத் தன்மையை வளர்க்கக் கூடிய கல்வி தேவையா? ஏனென்றால் கல்வி விலைக்கு விற்கப் படுகிறது. இதை நிலையாக நாம் சிந்தித்தால் இன்றைக்கு அரசியலில் இருக்கக் கூடிய எவனுமே தைரியமாக இல்லை இதைச் சொல்லுவதற்கு. எனவே, நாம் அரசியலைப் பற்றிக் கவலைப்படவில்லை. நாம் சமுதாயத்தில் ஒன்றும் சொல்லத் தயாராக இல்லை. ஏனென்றால் அவன் எங்கோ ஒரு வெறி பிடித்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறான். எப்படியாவது பணக்காரனாகி விட வேண்டும் என்று. Middle Class Groupஇல் இருக்கிறவன் எல்லாம் என்ன நினைக்கின்றான்? ஏதோ ஒரு அரசாங்க Loanஐப் போட்டு ஒரு வீடு வாங்கிடனும். முடிஞ்சா ஒரு Scooter வாங்கணும் இல்லை ஒரு Car வாங்கணும். இதோடு அவங்க வாழ்க்கை முடிந்து விட்டது. ஒரு பிள்ளை இரண்டு பிள்ளை பெத்துக்கிறான். அந்த பிள்ளைக்கு வாழறத்துக்கு 4 TC pant, 4 TC Shirt வைச்சுக்கிறான். சிக்கனமாக வாழ கற்றுக் கொள்ளுகிறான். அதிலேயே அவனுடைய புரட்சிகள் செத்துப் போய் விடுகின்றன. அதை உடைத்து எறிய வேண்டி இருக்கும். அதை உடைத்து எறிய வேண்டியது என்றால் நாம் நம்முடைய சொந்தக் காலில் நின்று தத்துவத்தைச் சொல்லுவோம்.

    குருதேவர் நாம் தத்துவத்தின் வாரிசுகள். தத்துவத்தின் தலைவர்கள். இந்த நாட்டை இன்ன தத்துவம் ஆளப் போகிறது என்று சொல்லுவோம். எழுதி வைத்து தயாராக இருக்கிறோம். இந்த நாட்டை 3 மணி நேரத்தில் கூட மாற்ற முடியும் என்பதற்காக. இந்த நாட்டிலே என்ன வளமில்லை? இங்கு பங்கு போடுகின்ற முறையில்தான் தவறு இருக்கிறது. உற்பத்தி ஆகின்ற பொருளுக்கெல்லாம் வைக்கின்ற விலைகள் யார் கையிலேயோ இருக்கின்றது. வாங்குகின்ற மக்களிடம் இல்லை. ... ...

    விவசாயத்திலே புரட்சி செய்து பயனில்லை. பொருள்களை நிறைய உற்பத்தி செய்து பயனில்லை. யார் விற்கிறார்கள்? It is the rule of Traders. இங்கு யார் ஆளுகிறார்கள்? வணிகர்கள் இந்த நாட்டை ஆளுகிறார்கள். அந்த வணிகத் துறையிலே நாம் ஒரு பெரிய மாற்றத்தைச் செய்யா விட்டால் என்றும் ஏமாற்றம் இருந்தே தீரும். அதற்கும் நம்மிடம் திட்டம் இருக்கின்றது. தெளிவு இருக்கின்றது. கொள்கை இருக்கின்றது. குறிக்கோள் இருக்கின்றது.

    எனவே, இதற்காக நாம் ஆங்காங்கே நம்முடைய மதத்தின் பெயரால் மதவழிப் புரட்சிக்கு நாம் தயாராகிறோம். நாம் நேர்மையானவர்கள், உண்மையானவர்கள், மேன்மையானவர்கள். ஏற்றத்தாழ்வைப் போக்க வேண்டும் என்று சொல்கிறோம். சமத்துவ சகோதரத் தத்துவப் பொதுவுடமை கூட்டுறவு சமுதாயம் அமைக்க வேண்டும் என்று சொல்லுகிறோம்.

    நமக்கு அரசியலைப் பற்றிக் கவலை இல்லை. எந்த நாய் ஆண்டாலும் சரி, அவனைப் பற்றிக் கவலை இல்லை. இந்த நாட்டை எது ஆளுகின்றது? தத்துவம்தான். இராமாயண காலத்திலே இந்த நாட்டை 14 வருடம் இராமனுடைய செருப்பு ஆண்டு இருக்கிறது. எனவே, நாய் உயிர் உள்ளது. ஆண்டு விட்டுப் போகட்டும். செருப்பே நம் இந்தியாவை 14 ஆண்டு ஆண்டிருக்கின்றது என்ற பொழுது ஒரு நாய் ஆளவா கூடாது? கழுதையோ பன்றியோ கூட ஆண்டு விட்டுப் போகட்டும். ஆனால், இங்கே சமத்துவம் இருக்க வேண்டும் என்பதுதான். அதற்கு, இளைஞர்களால்தான் முடியும். அதுவும் இளைஞர்கள் என்றால் நான் எழுதிய புத்தகங்கள், நான் எழுதிய காவியங்கள், நான் எழுதிய காப்பியங்கள், நான் எழுதிய பெருங்கதைகள். நீங்கள் நான் எழுதி முடித்த கட்டுரைகள். நீங்கள் உங்களுடைய சிந்தையுடன் அவை வளர வேண்டும்.

    நீங்கள் ஆங்காங்கே உரையாடல்களாகப் பேச வேண்டும். அப்பொழுதுதான், நாம் விரும்புகின்றவற்றை அமைதி வழியிலே நிலைக்க முடியும். இல்லா விட்டால் இன்றைக்கு வன்முறைச் சத்திகள் தலைதூக்கி இருக்கின்றன. வன்முறை சத்தியினால் நாட்டிலே எதையுமே செய்ய முடியாது. விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரைக் கொன்று விடுவதாலோ அல்லது சில இடத்தைக் கொள்ளை அடித்து விடுவதாலோ அல்லது சிலதை வெடி வைத்துத் தகர்த்து விடுவதாலோ நன்மை வந்து விடாது. சமுதாயத்தின் அடித்தளத்து மக்கள் அனைவரும் தாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதைப் புரிந்து கொண்டு எழுச்சி பெற வேண்டும். அப்பொழுதுதான் நாம் எதையும் செய்ய வேண்டும். அதை ஆங்காங்கே உள்ள கோயில்களிலேதான் வைத்துச் சொல்ல வேண்டும். ஆங்காங்கே உள்ள கடவுளின் பெயரால்தான் சொல்ல வேண்டும். நம்முடைய புராண இதிகாசங்களின் பெயரால்தான் சொல்ல வேண்டும். அதற்கு நீங்கள் தயாராக வேண்டும் என்பதுதான்.

    எனவே, நீங்கள் ஒவ்வொருவருமே போகின்ற இடத்திலே மக்களுக்கு நன்மை செய்கின்றது மட்டுமல்ல, அங்கே கூடி கருத்துக்களைச் சொல்ல வேண்டும். கருத்துப் புரட்சி வர வேண்டும். நம்முடைய கருத்தைச் சொல்லுங்கள். நம்முடைய கருத்துக்கு ஒத்த கருத்து உடையவர்களை உருவாக்குங்கள். நாம் அவர்களை உருவாக்கிக் கொண்டுதான் சமயத்தையோ, சமுதாயத்தையோ சந்திப்போம்.

    அரசியலைப் பற்றி நமக்கு அக்கரை இல்லை. அரசியலே தேவை இல்லை. அரசாங்கம் என்று ஒன்று இல்லாமலேயே இந்த நாடு சமுதாய அமைப்பிலே வாழ முடியும். அந்த நம்பிக்கை உள்ளவர்கள் நாம். அப்படி இந்த நாட்டை கி.பி. 785இலிருந்து 1279 வரை 400 ஆண்டுகள் சித்தரிசம் ஆண்டிருக்கிறது. இந்த நாட்டை அதற்கு முன்னாலே சங்க காலத்திலே சித்தரிசம்தான் ஆண்டிருக்கிறது. எனவே, ஆண்ட ஒரு தத்துவத்தை - அது மாண்ட தத்துவமல்ல அது ஆண்ட தத்துவம் என்று சொல்லி அந்த தத்துவம் மீண்டும் ஆள வேண்டும்.

    இந்து மதத்தால்தான் எதையும் செய்ய முடியும் என்று சொல்லுகிறோம். அதைச் சொல்லும் பொழுது முகமதிய மதம் இந்துமதத்திலிருந்து தோன்றியது என்று சொல்லுவோம். கிறித்துவ மதம் இந்து மதத்திலிருந்துதான் தோன்றியது. புத்த மதமோ, மகாவீரமோ, Zoraster, Confucius இந்துமதத்தின் தத்துவத்திலிருந்து தோன்றியவைதான். உலகெங்கும் உள்ள கோவில்கள் வழிபாட்டு நிலையங்கள் அனைத்துமே இந்துக்களாகிய சித்தர்கள் உண்டாக்கியதுதான் - சித்தரிசம் என்றுதான் சொல்லுகிறோம். ஹிந்து மதம் என்று சொல்லவில்லை. இந்தியம் என்று சொல்லுகிறோம்.

    அதனால்தான் இந்து மறுமலர்ச்சி இயக்கம் என்று சொல்லுகிறோம். இந்தியப் பண்பாடு என்று சொல்லும் பொழுது தொன்மையான பண்பாடு அல்லது The Lost Lemuria கடந்த காலத்திலே இருந்து மறைந்து போன, கடலில் மறைந்த குமரிக் கண்டத்திலிருந்து பிறந்ததொரு தத்துவம் என்று சொல்லுகிறோம்.

    நம்முடைய தத்துவம் மனிதன் பிறப்பதற்கு முன்னால் பிறந்து இருக்கின்ற நேரத்திலே இனிமேல் கிடைக்கக் கூடிய மறுபிறப்பு அனைத்துக்கும் விடைகளைக் கொடுக்கக் கூடிய ஒரு மாபெரும் தத்துவம். எனவே, நீங்கள் ஒரு உரிமையோடு இந்தத் தத்துவத்தை விமரிசித்து நமக்கு என ஆட்களைச் சேர்க்க வேண்டும். அடிக்கடி ஆங்காங்கே நாம் தொகையிலே சிறிதாக இருந்தாலும் ஆங்காங்கே கூடிக் கூடி நாம் பேச வேண்டும். அந்த உறுதியை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இந்த உரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.

    Excerpts from the Speech delivered by His Holiness Siddhar Karuwooraar at HOTEL SELVAM, Trichy on 27.06.1982 at 6 PM.

    தொடர்புடையவை: