Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • குருதேவர் அருளியவை>
  • பூசைமொழி முன்னுரை.
  • பூசைமொழி முன்னுரை.

    பூசைமொழி முன்னுரை.

    பதினெண் சித்தர்களின் அருட்கொடை

    பதினெண் சித்தர்கள் மனிதர்களின் உடல் நலம் வளத்தோடும், வலிமையோடும், வாலிப்போடும், பொலிவோடும் விளங்க வேண்டுமென்பதற்காக உடம்பில் பூசிக் கொள்ளக் கூடிய தைலங்கள், உள்ளே சாப்பிடக் கூடிய காயகல்ப மருந்துகள், நவநஞ்சுகள், நச்சுமுறிகள், பாலில் சாப்பிடக் கூடிய வளம் எனும் சூரணம், வலிமை எனும் சூரணம், காயகல்ப லேகியங்கள்…… முதலிய பல மருந்துகளை விருந்தாக வழங்கியிருக்கிறார்கள்.

    இதேபோலப் பதினெண் சித்தர்களால் மனிதனுடைய ஆவி, ஆன்மா, ஆருயிர் என்ற மூன்றையும் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கும் தன்னோடு தொடர்புடைய மனிதர்களுக்கும் எப்படி யிருக்கின்றன என்று தெரிந்து கொள்ளப் பூசை மறைகளும், முறைகளும், நெறிகளும், வழிவகைகளும் விளக்கப் பட்டிருக்கின்றன. மேலும், ஒவ்வொரு தனிமனிதனும் தன்னுடைய பழம்பிறப்புக்களை உணரவும், மறுபிறப்புக்களைத் தெரியவும், இப்பிறப்பில் மெய்யான நிலைகளை அறியவும் உதவக் கூடிய வழிவகைகளையும், வசதி வாய்ப்புக்களையும் வழங்கியிருக்கிறார்கள் பதினெண் சித்தர்கள்.

    குருதேவர்இவற்றிற்கெல்லாம் மேலாகப் பதினெண் சித்தர்கள் எல்லா மனிதர்களுமே, தங்கள் தங்களுடைய மொழிக்கும், இனத்திற்கும், வட்டாரத்திற்கும், நாட்டுக்கும் உரிய கடவுள்களைக் காணவும், அவர்கள் கடவுள்களின் அருளைப் பெறவும், கடவுள்களோடு நெருங்கிப் பழகித் தங்களையும் கடவுளாக்கிக் கொள்ளவும் கூடிய எல்லா வகையான பூசைவிதிகளையும், பூசை முறைகளையும், வழிவகைகளையும் வழங்கியிருக்கிறார்கள். இவர்கள், தங்களுடைய தாய்மொழியான தமிழ் மொழியிலேயே அனைத்து வகையான பூசைமொழிகளையும் எழுதியிருக்கிறார்கள் என்றாலும் அவற்றை எந்த மொழிக்காரர்கள் வேண்டுமானாலும் அவர்களுடைய மொழியின் ஒலி நயங்களுக்கேற்ப உச்சரித்து ஓதலாம் என்ற அனுமதியை வழங்கியிருக்கிறார்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு நாட்டு மக்களும் அவரவர்களுடைய நாட்டுக்கும் இனத்துக்கும், மொழிக்கும் உரிய கடவுள்களை எல்லாம் சித்தர்களுடைய பூசைமொழிகளின் மூலம் வழிபட்டு எல்லாவகையான பத்தி, சத்தி, சித்தி, முத்தி நிலைகளையெல்லாம் பெறலாம் என்று விளக்கியிருக்கிறார்கள் பதினெண் சித்தர்கள். இவற்றால் எல்லா மனிதர்களுமே கடவுள் தன்மைகளைப் பெறவும், பிறப்பிறப்பில்லாப் பேரின்பங்களைத் துய்க்கவும், கடவுளாகவே மாறிக் கடவுள்களோடு வாழவும் தேவையான எல்லா வகையான வழிவகைகளையும் செய்திருக்கிறார்கள் பதினெண் சித்தர்கள்.

    இப்படிப் பதினெண் சித்தர்கள் பொதுவாக மானுடர் என்ற நோக்கிலும், போக்கிலுமே தங்களுடைய அருட்கொடைகளை வாரி வாரி வழங்கியிருக்கிறார்கள். அதாவது, நாட்டு வெறி, இன வெறி, மொழி வெறி, மத வெறி, சாதி வெறி, வட்டார வெறி, ஏழை பணக்காரர் என்ற வேறுபாட்டு வெறி….. முதலிய வெறியுணர்வுகளில் எந்த வெறியுணர்வும் இல்லாமல் இந்த உலகிலுள்ள எல்லா மனிதர்களையும் சமமாகக் கருதும் மனிதாபிமானத்தோடு செயல்பட்டு வருகிறார்கள். எனவேதான், இந்தப் பதினெண் சித்தர்கள் மட்டுமே தங்களுடைய அருட்கொடைகள் அனைத்திற்கும் ஒட்டு மொத்தமாக ‘இந்து மதம்’ என்று பெயரிட்டுள்ளார்கள். பதினெண் சித்தர்களுடைய இந்து மதம் ஒன்றுதான் தோற்றுவிக்கப்படும் பொழுதே பல சிறப்புக்களைப் பெற்ற ஒரு மதம்.

    அதாவது,

    இப்படிப் பட்டியலிட்டு எழுத ஆரம்பித்தால் கணக்கற்ற கருத்து விளக்கச் சுருக்க வாசகங்களைப் பெற்றிருக்கின்ற ஒரு மதமே இந்து மதம்.

    (குறிப்பு: இந்த வாசகங்கள் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியான ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் குறிப்புக்களிலிருந்து எடுக்கப்பட்டவை.)

    ஆனால் இப்படிப் பட்ட பதினெண் சித்தர்களுடைய ‘சித்தர் நெறி’யெனும் சீவ நெறியான மெய்யான இந்து மதம் பிறமண்ணினரெனும் பிறாமணரான வட ஆரியரால் தோற்றுவிக்கப்பட்ட பொய்யான ஹிந்து மதத்தால் மக்களிடமிருந்து மறைக்கப் பட்டு விட்டது. இதனால், பதினெண் சித்தர்களுடைய இந்து மதத்தின் மூலம் உலகந்தழுவிய நிலையில் எல்லா மானுடருக்கும் விளையக் கூடிய அரிய, பெரிய, சீரிய, நேரிய நன்மைகள் எல்லாம் பெருமளவில் தடைப் பட்டுவிட்டன! தடைப்பட்டு விட்டன! தடைப்பட்டு விட்டன! எனவே, இந்தப் பொய்யான ஹிந்துமதத்தால் ஏற்பட்டுள்ள மாயைகளையும், மயக்கத் தயக்கங்களையும், தவறான செய்திகளையும், பயனற்ற பழக்க வழக்கங்களையும், மடமை நிறைந்த கொள்கைகளையும், கண்மூடித்தனமான ஆபாசக் கற்பனைகளையும், மக்களைச் சுரண்டும் சூழ்ச்சிகளையும் முழுமையாக அகற்றி அழித்து ஒழித்திடல் வேண்டும். அதற்காகத்தான் பத்தாவது, பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகள் மிகப் பெரிய முயற்சிகளைச் செய்திட்டார்கள். இப்பொழுது அவர்களின் வழிவந்த பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் செயல்பட்டு வருகிறார். அவர்களுடைய சாதனைகளில் ஒன்றாக இப்பூசை மொழி வெளிவருகின்றது. எனவே, எல்லாப் பத்தியாளர்களும் குவலய குருபீடமான ஞானாச்சாரியாரின் மூலம் பதினெண் சித்தர்களுடைய இலக்கியங்கள் அனைத்தும் அச்சேறி வெளிவரவும்; உலகெங்குமுள்ள 144 வகைப்பட்ட அருளூற்றுக்களான கோயில்கள் புத்துயிர்ப்புச் செய்யப் படவும் தேவையான எல்லா வகையான உதவிகளையும், உழைப்புக்களையும் நல்கிட முன்வர வேண்டும். இதற்காகப் பதினெண் சித்தர் மடம், பீடம், கருகுலம் அனைத்து வகையான பத்தியாளர்களின் தொடர்பு மையமாக மாற வேண்டும்.

    ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்!

    தொடர்புடையவை: