Gurudevar.org
 • முகப்புப் பக்கம்>
 • 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி>
 • ஞானாச்சாரியார் வரலாறு - 1
 • ஞானாச்சாரியார் வரலாறு - 1

  ஞானாச்சாரியார் வரலாறு - 1

  இன்றுள்ள படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை ஏறத்தாழ எல்லோருமே தங்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ளவும், தேவைகளை எப்படியாவது நிறைவேற்றிக் கொள்ளவுமே முயற்சிப்பவர்களாக இருக்கிறார்கள்.

  இதைத் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் சமயம், சமுதாயம், அரசியல், கலை, இலக்கியம், தொழில் முதலிய எல்லாத் துறைகளையும் சார்ந்தவர்களில் எவருமே பொதுவாக நமது நாடு, மொழி, இனம், பாரம்பரியப் பண்பாடு, நாகரீகம்,… … … முதலியன பற்றிச் சிந்திப்பதே இல்லை. எனவேதான், நம் நாட்டில் மக்களிடையே தன்மான உணர்வு, தாய்மொழிப் பற்று, இன ஒற்றுமை, பண்பாட்டுப் பிடிப்பு, தன்னம்பிக்கை முதலியவை இல்லாமற் போய்விட்டது.

  பல்வேறு வகையான அன்னியர்களும், அன்னிய மொழிகளும், அன்னிய மதங்களும், அன்னிய நாகரீகங்களும் தொடர்ந்து நமது தாயகத்து மக்களின் எல்லா வகையான வாழ்க்கை நிலைகளிலும் நேரடியாகவே கலந்து ஆட்சி செய்ய ஆரம்பித்து விட்டன. எனவே, இந்நாட்டின் உயிர் நாடியான சித்தர் நெறியெனும் சீவ நெறியான மெய்யான இந்துமதம் பெருமளவில் சிதைந்து சீர் குலைந்து விட்டது. இவற்றைக் கட்டிக் காப்பதற்குரிய குரு, குருக்கள், குருமார், பூசாறி, சாத்திரியார், தோத்திரியார், அருளாளி, மருளாளி, சன்னிதானம், ஆதீனம், பண்டாரம்….. முதலிய 48 வகையினருமே தங்கள் தங்களின் வாழ்க்கையைக் கூடப் பாரம்பரிய மரபுப்படி அருளாற்றல் மிக்கதாக ஆக்கிக் கொள்ள முடியாமல் போய்விட்டது.

  எனவேதான், நான்கு யுகங்களாகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் பதினெண் சித்தர் மடம் அருட்பணி விரிவாக்கத் திட்டத்தை அறிவித்து செயலாக்க முன் வந்திருக்கின்றது. இதற்காக கருகுலம், தருகுலம், திருகுலம், குருகுலம் என்னும் நான்கையும் உருவாக்கிப் பதினெண் சித்தர்களின் முறைப்படி மேலே குறிப்பிட்ட 48 வகையான அருட்கலைஞர்களையும், ஏட்டறிவாலும், பட்டறிவாலும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. இன்றைக்கு (1990) 43,73,091 ஆண்டுகளுக்கு முன்னால் கடலுள் மறைந்த இளமுறியாக் கண்டத்தில் விண்வெளியிலிருந்து வந்த பதினெண் சித்தர்கள் தோற்றுவித்த சித்தர் நெறி எனும் சீவ நெறியான மெய்யான இந்துமதத்தைப் பாதுகாக்கும் பணி துவக்கப் பட்டிருக்கிறது பதினெண் சித்தர் மடத்தால்.

  அதாவது, சிதைந்து சீர்குலைந்து சிதறிக் கிடக்கின்ற தமிழர்களை ஒன்று திரட்டி ஒற்றுமைப் படுத்தி ஒருமுகமாகச் செயல்படச் செய்தற்கு உரிய ஆற்றல் இத்தாய்த் திருநாட்டிற்கே உரிய ஒரு மாபெரும் தத்துவத்தால்தான் முடியும். அதுவும், அந்தத் தத்துவம் தன்னல வெறியோ, பேராசைப் பேயோ பிடித்தாட்ட முடியாத தத்துவ நாயகத்தால்தான் வெளிப்படுத்தப் பட்டு நடைமுறைப் படுத்தப்படல் வேண்டும். ஆனால், இன்றைய நிலையில் தத்துவத்தைச் சொல்லி வழிநடத்தக் கூடிய தலைமையோ அல்லது துணையோ எந்தத் துறையிலும் இல்லை.

  ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் எனவேதான், ஒரு மாபெரும் தமிழினப் பேரரசை உருவாக்கியவரும், இத்தாய் நாட்டின் குருபீடப் பாரம்பரியத்தில் வாழையடி வாழையெனத் தோன்றியவருமான தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வாழ்வியல்களையும், போதனைகளையும், சாதனைகளையும் விரைந்து துண்டறிக்கைகளாகவும், சிறுசிறு நூல்களாகவும், பெரிய பெரிய தொகுதிகளாகவும் வெளியிட்டேயாக வேண்டும் என்ற நிலை தோன்றி யிருக்கின்றது. இதனை ஞானாச்சாரியார் சித்தர் கருவூறாரின் பத்தர்கள் மட்டுமாவது உடனடியாகப் புரிந்து இவரைப் பற்றிய நூல்கள் அனைத்தும் அச்சேறி வெளிவருவதற்கு உதவிட முன்வர வேண்டும்.

  தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் வருகின்றவர்கள் பெரிய கோயிலுக்குள் சென்று கருவறையிலுள்ள பெரியவுடையாரை வணங்கி வழிபட்டுச் செல்பவர்கள் பாதிப் பேருக்கு மேல் இருக்காது. ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் ஆனால், கோயிலுக்குள் சுற்றி வரும்போது கோபுரத்தருகில் அருட்கேணிக் கரையில் எழுந்தருளியிருக்கும் சித்தர் கருவூறாரை எல்லோருமே வழிபட்டுச் செல்வார்கள். அதிலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ளவர்களும், அதன் அண்மை மாவட்டத்தில் உள்ளவர்களும் சித்தர் கருவூறார் அவர்களைத் தங்களுடைய குலதெய்வமாக நினைத்து வழிபடுகின்றார்கள். வாராவாரம் குருவாரம் என்று கூறப்படும் வியாழக் கிழமையில் சித்தர் கருவூறாரை நேரில் வந்து வழிபடுகின்றவர்களும் தங்கள் தங்கள் இல்லத்தில் இவரது திருவுருவப் படத்தை வைத்து வழிபடுகின்றவர்களும் ஏராளமாக உள்ளனர். ஏறத்தாழ எல்லோருமே இவரை ‘குரு’ என்றும் ‘குருசாமி’ என்றும், ‘குருநாதர்’ என்றும், ‘குருதேவர்’ என்றும் போற்றி வணங்கி வழிபடுகின்றவர்களாக இருக்கின்றார்கள்.

  இப்படி, தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் கருவூறார் அவர்களுக்கு ஏராளமான பத்தர்களும் எண்ணற்ற திருச்சபைகளும், சங்கங்களும், வார வழிபாட்டு மன்றங்களும், திருவிழாக் கொண்டாடும் கழகங்களும், இவருடைய புகழ் பரப்பும் குழுக்களும் இருக்கின்றன. ஆனால், பொதுவாகத் தமிழ் நாட்டிலே எதையும் வரலாற்றுப் போக்கில் அல்லது பின்னணியில் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே இல்லையென்பதால் இம்மாபெரும் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் வரலாற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள முன்வரவே இல்லை.

  எனவேதான் இந்த ஞானாச்சாரியார் சித்தர் கருவூறாரின் பரம்பரையில் வாழையடி வாழையெனத் தோன்றிய இன்றைய 12வது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் அரசயோகி கருவூறார் அவர்கள் ஞாலகுரு சித்தர் அரசயோகி கருவூறார் அவர்கள்தமது பதினெண் சித்தர் மடத்தின் மூலம் இதுவரை அருளுரையாகவும், அறிவுரையாகவும், பாடல்களாகவும், பூசாமொழிகளாகவும், பூசாவிதிகளாகவும், பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் வரலாறுகளாகவும், இந்துமத வரலாற்றுச் சொற்பொழிவுகளாகவும் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் கருவூறாரின் வரலாற்றை வெளியிட்டு வந்த இவர் இப்போது பல புத்தகங்களைத் தொகுத்து அச்சிட முன் வந்துள்ளார். அதற்காக தஞ்சைப் பெரிய கோயிலில் எழுந்தருளியிருக்கும் சித்தர் சன்னதிக்கு வருபவர்களுடைய எல்லா வகையான ஆதரவுகளைப் பெறுவதற்காகவே இந்த வேண்டுகோள் பதிப்பு வெளிவருகின்றது.

  இன்றைக்கு அனைவரும் தஞ்சைப் பெரிய கோயிலில் எழுந்தருளியிருக்கும் சித்தர் கருவூறாரின் திருவுருவத்தை நேரில் கண்டும், நினைவில் கொண்டும் வணங்கி வழிபட்டு வருகின்றார்கள். ஆனால், இவருடைய பெயரைக் கூட சரியாக உச்சரிக்கத் தெரியாமல் இருக்கின்ற நிலைதான் இன்றைக்குத் தமிழகத்தில் இருக்கிறது. இவருடைய பெயர் ‘கருவூறார்’ = ‘கருவில் ஊறாத பிறப்பிறப்பற்ற பெருநிலை பெற்ற பெரியோர்’ ஆகும். இவருடைய மகன் பெயர் கருவூர்த் தேவர். ஆனால், ‘கருவூரார்’ என்று சுருக்கமாக அழைப்பது மரபாயிற்று. இக்கருவூறாரின் பேரன், கருவூர்த் தேவரின் மகன் பெயர் ‘திருமாளிகைத் தேவர்’ என்பதாகும். இம்மூவரைப் பற்றிய நூல்கள், இம்மூவரும் தொகுத்த நூல்கள், இம்மூவரும் எழுதிய நூல்கள் என ஏராளமாக இருக்கின்றன.

  இந்தத் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் கருவூறார் அவர்கள் கி.மு. 43,71,101ஆம் ஆண்டில் அண்ட பேரண்டங்களிலிருந்து வந்திருந்த பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்பர்களும், நாற்பத்தெட்டு வகைச் சித்தர்களும், நாற்பத்தெட்டு வகை வழிபடு நிலையினர்களும்… … முதலிய பலரும் சேர்ந்து இளமுறியாக் (லெமூரியா) கண்டத்தில் உருவாக்கிய இந்து மதத்தின் தலைமைப் பீடமான பதினெண் சித்தர் மடத்தின் ஞானாச்சாரியார்களின் பரம்பரையில் தோன்றியவராவார். இந்த ஞானாச்சாரியார்கள்தான் தமிழ்மொழிக்கும், தமிழினத்துக்கும், தமிழர் மதமான இந்து மதத்துக்கும், தமிழர்களின் நாடான, தமிழ் நாட்டிற்கும் தலைவர்களாக, காவலர்களாக, வழிகாட்டிகளாக, வழி துணைவர்களாக இருந்து வருகின்றார்கள்.

  எனவேதான், இந்த ஞானாச்சாரியார்களாக உள்ள பதினெண்சித்தர் பீடாதிபதிகளே தமிழ் மொழிக்கும், தமிழினத்துக்கும், தமிழ் நாட்டிற்கும், தமிழர்களின் மதமான இந்து மதத்துக்கும் குருதேவராக, குருபீடமாக, ஆச்சாரியாராக கருதப் படுகின்றார்கள். இதன்படி தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் கருவூறார் அவர்கள் குருபாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம், அரச பாரம்பரியம் எனும் முப்பெரும் வரலாற்று நூல்களிலும் கருவாக்கு, குருவாக்கு, தருவாக்கு, திருவாக்கு, அருள்வாக்கு, மருள்வாக்கு, கருவாக்கியம், குருவாக்கியம், தருவாக்கியம், திருவாக்கியம், அருள்வாக்கியம், மருள்வாக்கியம், கருவாசகம், குருவாசகம், தருவாசகம், திருவாசகம், அருள்வாசகம், மருள்வாசகம் எனப்படும் பதினெண்சித்தர்களுக்கு உரிய பதினெட்டு வகை அருள் நூல்களிலும் மிகத் தெளிவாகத் தம்மை ‘ஞானாச்சாரியார்’ பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் என்று குறிக்கின்றார்.

  இவையல்லாமல், இவர் தனக்கு முன் தோன்றிய பத்து பதினெண் சித்தர் பீடாதிபதிகளின் வரலாறுகளையும், நான்கு உகங்களுக்குரிய அனாதிகால வரலாறுகளையும், இம்மண்ணுலகின் தோற்ற மாற்ற வளர்ச்சி மாற்றங்களையும், பயிரின, உயிரின, விதி பற்றிய பேருண்மைகளையும் பல நூல்களாகவும் எழுதியுள்ளார். இவற்றுக்கெல்லாம் தெளிவாக வடிவமைப்பு தருவது போல் தாமே நூற்றாண்டுக் கணக்கில் முயன்று அருளாட்சி அமைப்பு பணியிலும், இந்து மத அருட்பேரரசாக சோழப் பேரரசு அமைப்புப் பணியிலும் ஈடுபட்டிட்ட செய்திகளைக் காலக் கணக்கீட்டு அடிப்படையில் குறித்து வைத்திருக்கின்றார்.

  இக்குறிப்புக்களுக்கெல்லாம் விளக்கம் தருவது இவரது மகனான கருவூர்த் தேவர், இவரது தந்தையான ஞானாச்சாரியார் சித்தர் கருவூறாரின் போதனைகளையும், சாதனைகளையும் காலக் கணக்கீட்டு அடிப்படையில் பட்டியலிட்டுத் தந்துள்ளார். இவற்றால்தான் இவர் தமிழர்களை ஒன்று திரட்டியும், ஒற்றுமைப் படுத்தியும் பிற்காலச் சோழப் பேரரசை இந்துமதப் பேரரசாகத் தோற்றுவித்த பெருமையும், இவர் விண்ணுயரக் கட்டிமுடித்த கற்கோயிலான தஞ்சைப் பெரிய கோயிலின் பெருமையும், சொற்கோயிலாக இவரது முயற்சியால் பன்னிரு ஆழ்வார்களின் பாடல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்ற தொகுப்பு நூலின் பெருமையும், நாயன்மார்களின் பத்திப் பாடல்களின் தொகுப்பான “திருமுறை”களின் (‘பதினோரு திருமுறை’ - இவர் காலத்தில் பதினோரு திருமுறைகள்தான் தோன்றியிருந்தன. இவரது மகன் கருவூர்த் தேவர் காலத்தில்தான் பன்னிரண்டாவது திருமுறை தொகுக்கப் பட்டது.) பெருமையும் விளங்கிடும். இவர் இப்படி உருவாக்கிய பேரரசும், கட்டிய கற்கோயிலும் (தஞ்சைப் பெரிய கோயிலன்றி இவர் காலத்தில் இவரால் பல கற்கோயில்கள் கட்டப்பட்டன. இருந்த போதிலும் கருவறைக் கோபுர அமைப்பிலும், இவரது வாழ்நாளின் இறுதியில் கட்டி முடித்த சிறப்புக்குரியது என்பதாலும், இதனைக் கற்கோயில் என்ற ஒற்றைச் சொல்லால் குறிக்கப் படுகின்றது.) தொகுத்த சொற்கோயிலும்தான் இன்று வரை தமிழ் மொழி, தமிழினம், தமிழர் சமுதாயம், தமிழர் பண்பாடு, தமிழர் நாகரீகம், தமிழர் மதமான சித்தர் நெறியெனப் படும் “சீவநெறி” எனப்படும் மெய்யான இந்து மதம், தமிழர் வரலாறு, தமிழர் இலக்கியம் எனப்படுபவையெல்லாம் வடிவமைப்போடும், வாழ்வியல் துடிப்போடும், தனித்த மரியாதை மிக்க உரிமையோடும் பெருமையோடும் வாழ்கின்றன! வாழ்கின்றன! வாழ்கின்றன!

  ஆனால் மேற்படி அனைத்துமே இவருக்குப் பிறகு சிறுகச் சிறுக நலிந்தும், மெலிந்தும், சிதைந்தும், சீரழிந்தும் பாதிப்புக்களைப் பெறலாகி விட்டன. எனவேதான், இன்றைய காலக் கட்டத்தில் இம்மண்ணுலகின் ஞானாச்சாரியார்களின் வாரிசான தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அரும்பாடு பட்டுக் கட்டிய மேற்படி அனைத்தையும் மீண்டும் பாதுகாப்பதற்காக அவருடைய பாரம்பரியத்தில் தோன்றியுள்ள இன்றைய பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் தமது பதினெண் சித்தர் மடத்தின் மூலம் அருளாட்சி அமைப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்.

  இவரும், பத்தாவது, பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதிகள் போல் ‘இந்து மறுமலர்ச்சி இயக்கம்’, ‘தமிழின மொழி மத விடுதலை இயக்கம்’, ‘அருட்பணி விரிவாக்கத் திட்டம்’, முதலான நாற்பத்தெட்டு வகையான நிறுவன நிர்வாகங்களை அமைத்துச் செயல்பட்டு வருகின்றார். இவரால் உருவாக்கப் பட்டுள்ள சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள் நாடு முழுவதும் சுற்றி வந்து அருளுலகப் பொருளுலக இருளகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் தமிழர்கள் மீண்டும் தன்னம்பிக்கையோடும், தன்மானப் பிடிப்போடும், மொழிப்பற்றோடும், இனப்பற்றோடும், பண்பாட்டு உணர்வோடும், நாகரீகப் பற்றோடும் ஒற்றுமைப் பட ஆரம்பித்து விட்டார்கள்.

  அதாவது, தமிழ் மொழிக்கும், தமிழினத்துக்கும் உயிர்நாடியான பதினெண் சித்தர்களுடைய சித்தர் நெறியெனும் சீவநெறியான மெய்யான இந்து மதத்தால்தான் சிதைவுகளையும், சீரழிவுகளையும், நலிவு மெலிவுகளையும், வீழ்ச்சி தாழ்ச்சிகளையும் அகற்ற முடியும்! அகற்ற முடியும்! அகற்ற முடியும்! இதற்காகத்தான் முதல் கட்டப் பணியாக தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் கருவூறாரின் வரலாற்றை வெளியிடும் முயற்சி துவக்கப் பட்டுள்ளது. இந்த அரிய பணிக்காக தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் கருவூறாரின் பத்தர்களின் ஆதரவும், உதவியும் நாடப் படுகின்றது.

  தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ஞானாச்சாரியார் சித்தர் கருவூறார் அவர்களின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள், போதனைகள், அருளாட்சித் தத்துவம், சித்தாந்தம், அவர் எழுதிய நூல்கள், தொகுத்த நூல்கள், அவருடைய மருத்துவ முறைகள், அருட்கலைகள், சேவலோன் போர்க்கலைகள், அவர் கட்டிய கோயில்கள், கட்டுவதற்காகத் திட்டமிட்ட கோயில்கள், அவர் செதுக்கிய சிலைகள், வார்த்தெடுத்த சிலைகள், அவர் தேவார திருவாசகத் திருமுறைகளைக் கொணர்ந்த வரலாறு, அவர் உருவாக்கிய கவிச் சக்கரவர்த்தி கம்பர், பாரதம் பாடிய பெருந்தேவனார், முப்பத்திரண்டாவது ஆதிசங்கராச்சாரியார், …….. முதலிய செய்திகள் தனித்தனி நூல்களாக வெளி வருவதற்கு உதவிட முன் வாருங்கள். ஓகாசனம், யோகாசனம், குண்டலினி, பழம்பிறப்புணர்தல், இப்பிறப்பினைப் புரிதல், மறுபிறப்பு பற்றி அறிதல், …… முதலிய அருட்கலைகள் தழைத்துச் செழித்திட உதவ முன்வாருங்கள். இதுவே தஞ்சைக் கருவூறார் அவர்களை வழிபடுதலும் கொண்டாடுதலும் ஆகும்.

  அருட்பணி விரிவாக்கத் திட்டம்

  தமிழின மொழி மத விடுதலை இயக்கம்

  இந்து மறுமலர்ச்சி இயக்கம்

  குருபீடம்,

  தொடர்புடையவை: