“… நண்பா! மனித வாழ்க்கையில் எந்த நேரத்திலும் மரணம் வரலாம். ஒவ்வொரு மனிதனும் அதை நிம்மதியோடும், துணிவோடும் வரவேற்கத் தயாராக இருக்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு மனிதனும் தான் எடுத்த மனிதப் பிறப்பு தன்னால் வீணடிக்கப் படவில்லை என்ற தன்னம்பிக்கையோடு வாழ்ந்திடல் வேண்டும். எனவே, ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய ஒவ்வொரு நொடி வாழ்வையும் பிறர் நலம் பேணுவதாக அமைத்துக் கொண்டு வாழ வேண்டும். மனிதனாகப் பிறந்தது மண், பெண், பொன் முதலியவைகளை அநுபவிப்பதற்காகத்தான் என்று தவறாகப் பலரால் கருதப்பட்டு வீணாக்கப் படுகின்றது. அதனால்தான், இவ்வுலகில், எண்ணற்ற திருவருட் செல்வர்கள் தோன்றியும் மனித இனத்தைச் செம்மைப் படுத்தவே முடியவில்லை…. "
“… நண்பா! உலகில் எந்த நாட்டு வரலாற்று ஏடுகளைப் புரட்டினாலும் தனிமனிதர்களான அரசர்கள், அமைச்சர்கள், தளபதிகள், பெருநிலக் கிழார்கள், பெருவணிகர்கள்… முதலியோரின் வரலாற்றைக் கூறுபவையாகத்தான் உள்ளன. ஒட்டு மொத்தமாக, ஒரு நாட்டில் வாழ்ந்த மக்களின் சமுதாய வாழ்வின் போக்கைக் கூறும் வரலாற்று ஏடுகளே இல்லை.
ஆனால், பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் எழுத்துக் குவியல்களில் உலக வரலாறு, இந்திய வரலாறு, தமிழக வரலாறு, …. முதலியவற்றைத் தெளிவாகக் காணலாம். அதனால்தான், அவர் தொகுத்தளித்திட்ட நூல்களையும், அவர் எழுதிய நூல்களையும் அச்சிட்டு வெளியிடுவதன் மூலம் உலக வரலாற்றுத் துறைக்கும் இலக்கியத் துறைக்கும் மாபெரும் புதையல்களும், கருவூலங்களும் கிடைக்கும்படி செய்தவர்களாவோம் நாம்.
நமது முயற்சிகள் எப்படியும் வெற்றி பெற்றே தீரும்…. "
" … நண்பா! காம உணர்ச்சியும், சமய உணர்ச்சியும் இன்றைய நமது சமுதாயத்தை மயக்க நிலையிலும், வெறி நிலையிலும் செயல்படச் செய்து வருகின்றன. இவ்விரு உணர்ச்சிகளையும் ஊக்குவித்து வளர்ப்பனவாகவே இன்றைய நமது எழுத்தாளர்களும், படித்த மக்களும், கலைஞர்களும், அரசியல்வாதிகளும் …. உள்ளனர். எனவே, நான், எனது புதுமைச் சிந்தனைகளை, புரட்சிச் சிந்தனைகளை விரைவில் நல்ல பல நூல்களாக்கி விரைந்து வெளியிட்டிடல் இன்றியமையாததாகும். அதுதான், சமய மறுமலர்ச்சியை, இலக்கியப் புரட்சியை, அரசியல் விழிச்சியை, சமுதாய எழுச்சியை உருவாக்கிடும். இதனை விரைந்து செய்யாவிடில் நாம் மாபெருந் தவறு செய்தவர்களாவோம். வருங்காலச் சந்ததியார் நம்மைக் குறைகூறிக் குற்றம் சாட்டிடுவார்கள்….”