Gurudevar.org
 • முகப்புப் பக்கம்>
 • அன்பு சேவுக!>
 • மானுடநல உரிமை
 • மானுடநல உரிமை

  மானுடநல உரிமை

  மானுட நல உரிமை பேணும் புதியதோர் தத்துவம் பிறப்பிக்கப் படல் வேண்டும்.

  அன்புச் சேவுக!

  மதம்தான் அகவாழ்வுக்குரிய பண்பாட்டையும், புறவாழ்வுக்குரிய நாகரீகத்தையும், சமுதாய இயக்கத்துக்குரிய அரசியல் சித்தாந்தத்தையும் உருவாக்கிக் காத்துப் போற்றிப் பேணி வளர்த்து வருகிறது.

  எனவேதான்,

  ….. என்ற கருத்துக்கள் வலுவாக வளமாகச் செழித்து வருகின்றன.

  இப்படிப்பட்ட மதத்தையே வழியாக, வழித்துணையாக, வழிகாட்டியாக ஏற்றுத்தான் மனித வாழ்வில் மாற்றங்களையோ, ஏற்றங்களையோ, தோற்றங்களையோ விளைவிக்க முடியும். எனவே, யாராக இருந்தாலும் தங்களை மதவழியாகச் சிந்திக்கும் சிந்தனையாளர்களாகத் தயாரித்துக் கொண்டால்தான் பயனுள்ள சாதனைகளைச் சாதிக்க முடியும்.

  இந்த அரிய, கூரிய, சீரிய, சிறந்த பயன்மிக்க மதத்தின் உயிரே மொழியில்தான் இருக்கின்றது. எனவே, எந்த ஒரு மதமானாலும்; அது பிறப்பிக்கப்பட்ட அல்லது பிறப்பெடுத்த மொழியில்தான் அதனுடைய முழுமையான ஆற்றலும் விளக்கமும், பயனும் கிடைக்கும். எனவேதான் நெடுங்காலமாகக் கிறித்தவ மதம் தனது வேத நூலான ‘திரு பைபிளையும்’ பிற கருத்துக்களையும் சடங்கியல்களையும், மத நடைமுறைகளையும், ஒழுகலாறுகளையும் இப்ரூ மொழியிலும், இலத்தீன் மொழியிலுமே வைத்துக் காத்திட்டது. இதேபோல், இசுலாமும் தனது வேதநூலான ‘திருக்குரானையும்’ மற்ற படியுள்ள மதத்தொடர்பான அனைத்துச் செய்திகளையும் அராபிய மொழியிலும் பாரசீக மொழியிலுமே பாதுகாத்திட்டது. ஆனால், உலகம் முழுவதும் நாடு கடந்து மொழி கடந்து இனம் கடந்து இவை பரவியதால், பிற மொழியாளர்களும் மதத் தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் …… புரிந்து கொள்ளுவதற்காக அனைத்தையும் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்த்துத் தாராளமாக வழங்கிட்டார்கள். இதனைப் பின்பற்றி இந்துமதத்தின் தலைவர்களாகத் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் பிறாமணர்களும், பிறாமண ஆச்சாரியர்களும், பீடாதிபதிகளும், மடாதிபதிகளும் ஏன் சமசுக்கிருத மொழியிலுள்ள மத இலக்கியங்களை மொழிபெயர்த்துத் தர முன்வரவில்லை' - வெளிநாட்டார்களில் மாக்சு முல்லர் (Maxmuller), பர்ரோ (T.Burrow), டாயின்பீ (Toynbee), கோல் (G.H.Gole) ….. போன்று சிலர் சமசுக்கிருத இலக்கியங்களை உலகறியச் செய்ய மொழி பெயர்ப்புக்களைப் படைத்தார்கள். ஆனால், அவை சரியானவையல்ல! உண்மையானவையல்ல! ஆழமான பொருளை வழங்க வில்லை! ….. என்றே மேற்படி பிறாமணர்கள் விமர்சனங்களை வழங்கி இருட்டடிப்புச் செய்து விட்டனர். இந்தப் போக்கு ஏன்? ஏன்? ஏன்?

  நண்ப! தமிழ் மொழியிலிருந்து திருடப்பட்ட அல்லது கடன் வாங்கப்பட்ட தத்துவங்களும் சித்தாந்தங்களுமே சமசுக்கிருத மொழியில் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, வேதம், உபநிடதம், சுருதி, ஆரணம், ஆகமம்… எனப்படுபவை எல்லாமே ஏறத்தாழ ஒலிநயத்தை மட்டுமே நல்கக் கூடிய பொருளற்ற வெற்றுச் சொற்களின் கூட்டமேயாகும். எனவே, இவை மொழிபெயர்க்கப் பட்டால் கேலிக்கும், கேள்விக்கும் உரிய நிலையையே வட ஆரிய வேதமதமான ஹிந்துமதம் பெற்றிடும். இவற்றால்தான் மொழி பெயர்ப்பை மறுத்தும், வெறுத்தும் எதிர்த்தும் வருகின்றார்கள் பிறமண்ணினரான பிறாமணர்கள்.

  இப்படிப்பட்ட சூழலில்தான் நாம், நமது தமிழ்மொழிப் பூசாமொழி வாசகங்களை வெளியிட்டிடல் வேண்டும். இவற்றால், தமிழ் மொழிக்கு அருளை அநுபவப் பொருளாக ஊற்றெடுக்கச் செய்யும் ஆற்றலுண்டு என்பதை மெய்ப்பிக்கலாம்.

  நண்ப! நாம் பழங்காலத்தில் பயன்பட்டிட்ட இந்துமதத்தை மட்டும் மக்களுக்குச் சொல்லாமல் சாக்கிரடீசு, தாந்தே, கதே, இயேசு, முகம்மது நபி, கார்ல்மார்க்சு, ஏங்கல்சு, இலெனின், மாசேதுங், தொல்காப்பியர், திருமூலர், திருவள்ளுவர், யக்ஞவல்லி, வியாசர்கள், வால்மீகிகள், கம்பர்கள், பெருந்தேவனார்கள், இராமலிங்க அடிகளார், பெரியார் ஈ.வெ.ரா. …… முதலியோர் கூறியுள்ளவைகளையும் கூறியேயாக வேண்டும். அப்பொழுதுதான் இன்றைய நாட்டு நடப்பில் உயிர்த்துடிப்பும், உண்மையும், உற்சாகமும், ஊக்கமும், உட்கிடக்கைமிகு உழைப்பும், சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் பிறப்பிக்கப் படுவதற்குரிய புதியதோர் தத்துவம் பிறந்திடும். மானுட நல உரிமைக்காக நமது செயல்களின் முதல் கட்டமாகத் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு என்ற முக்கோண எல்லைக்குள் நமது செயல்களை உருவாக்கிடுவோம். நாம் எதையும் எவரையும் எப்போதும் சந்திக்க, சிந்திக்கத் தயாராக இருப்போம்.

  அன்பு
  ஞாலகுரு சித்தர் கருவூறார்

  (குருதேவர் அறிக்கை 22இலிருந்து)

  தொடர்புடையவை: