Gurudevar.org
 • முகப்புப் பக்கம்>
 • மெய்யான இந்துமதம்>
 • இந்துமத விளக்கவுரை
 • இந்துமத விளக்கவுரை

  இந்துமத விளக்கவுரை

  சென்னை, 6/11/85.

  இந்துமத விளக்கம் என்ற பெயரில் மெய்யான இந்துமதத்தையும் பொய்யான ஹிந்துமதத்தையும் பற்றி விளக்கியுரைக்க வேண்டிய இன்றியமையாத, அவசியமான கடமையாகி விட்டது. ஏனெனில், கடந்த சில நூற்றாண்டுகளில் (கி.பி.1040-கி.பி.1182 என்ற எல்லைக்கும் பிறகு) அன்னிய மதங்கள் இந்தியாவுக்குள் புகுந்து இந்துமதத்தவர்களில் பெரும்பாலானவர்களைக் கருத்துக் குழப்பத்திலும், செயல் தடுமாற்றத்திலும் சிக்க வைத்து மதம் மாற்றம் செய்து விட்டன. அதற்குக் காரணமே முறையான இந்துமத வரலாறும், நிறைவான இந்துமத விளக்கமும் நாட்டில் இல்லாமல் போனதுதான். அதாவது, பொய்யான ஹிந்துமதத்தால் காட்டுமிராண்டித் தனமான கற்பனைகளும், அண்டப்புளுகுகளும், ஆபாசப் பொய்களும், கனவுக்குதவாத கற்பனைகளும், மூடநம்பிக்கைகளும், ஏமாற்றுக்களும், சுரண்டல்களும், முதலாளித்துவங்களும், சர்வாதிகாரப் போக்குகளும், அடிமை உணர்வும் மிகுந்து விட்டன. இவற்றிற்கு மேலாக சாதிவெறிகளும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும், வறுமையும் இந்துமதத்தால் நியாயப்படுத்தப் பட்டுவிட்டன. எனவேதான், மக்கள் புதிய மதத்தை நாடிச் சென்று விட்டனர். எஞ்சியுள்ள இந்துக்களிலும் நாத்திகர்கள், கடவுள் மறுப்பாளர்கள், மதவெறுப்பாளர்கள் மிகுந்து விட்டார்கள்.

  இந்த இருளையும், இன்னலையும் முழுமையாக அகற்றுவதற்காகத்தான் இந்துமதத் தந்தையாகத் (The Father of Induism) வாழையடி வாழையாக வந்துள்ள ஞாலகுரு சித்தர் கருவூறார் இவ்விளக்கவுரையை நாடெங்கும் பரப்பி வருகின்றார். யாரையும், எவரையும், எந்தப் பிரிவு மக்களையும் இந்துமதம்-ஹிந்துமதம் கருத்துக்களால் பிரித்து வைக்க வேண்டும் என்பதல்ல நோக்கம். அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் செயல்படுகின்ற முறையிலேதான் விளக்கங்கள் எடுத்துக் கூறுகின்றோமே தவிர பெரியாருக்கு ஏற்பட்டது போல மாபெரும் தோல்வி, பழி, இழிவு வந்துவிடக் கூடாது என்ற மாபெரும் முயற்சியிலே ஈடுபட்டுள்ளோம். விரைந்து, விரிந்தும் இந்து-ஹிந்துமதக் கருத்து வேற்றுமைகளின் மூலமே இந்துமதத்துக்கென வரலாற்றையும், புதிய வடிவமைப்பையும் தர முயலுகின்றோம்.

  வறட்டுப் பிடிவாதமாக ஹிந்துமதத்தையும் அதற்குரிய சமசுக்கிருத மொழியையும் வலியுறுத்துபவர்களால் சனாதன தர்மமும், வட ஆரிய மாயையும், வேதமத நாகரீகமும் காப்பாற்றப் பட்டுவிட முடியாது. ஆனால், இதற்கு நேர்மாறாக ஹிந்துமதம் பற்றிய ஆராய்ச்சியில் பெரும்பாலானவர்களே நேரடியாக ஈடுபட்டு அதனுடைய பிற்போக்குத் தன்மைகளையும், குறைகளையும், கறைகளையும், சூழ்ச்சிகளையும், பயனற்ற நிலைகளையும் கண்டுபிடிப்பார்களேயானால் படிப்படியாக வேதமதத்தையும் சனாதன தர்மத்தையும் ஆரிய மாயைகளையும் எதிர்த்து முடிவில் பிறாமணர்களையே எதிர்க்கக் கூடிய பயங்கரமான சூழ்நிலையே உருவாகிவிடும்.

  எனவே, இன்றைய பிறாமணர்களும் திருந்தி 3000 ஆண்டுகளுக்குட்பட்ட அவர்களுடைய ஹிந்துமதத்தைத் துறந்து விட்டு பதினெண்சித்தர்களால் 43,73,086 ஆண்டுகளுக்கு முன்னால் தோற்றுவிக்கப்பட்ட மெய்யான இந்துமதத்தையும் அருளுலக ஆட்சிமொழியான அமுதத் தமிழ்மொழியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  இதனைப் புரிந்து கொள்ளாமல் ‘மதச் சீர்திருத்தத்தின் மூலமே இந்துக்களை, இந்தியர்களை, இந்துமத மூலவர்களான தமிழர்களை நலப்படுத்த முடியும்’ என்று முடிவெடுத்துச் செயல்பட்ட சொல்லடி நாயனார் பெரியார் ஈ.வெ.ரா.வை நாத்திகர் என்று பட்டம் சூட்டி மிகப்பெரிய அளவில் வெற்றிகளைப் பெற முடியாமல் செய்தது போல் ஆயிரமாயிரம் சித்தர்நெறிச் செல்வர்களை, இந்து மறுமலர்ச்சி இயக்கப் பணிகளை வெற்றி பெறுவதைத் தடுத்துவிட முடியாது. எனவே, அன்புகூர்ந்து இந்துமதத்துக்கும் ஹிந்துமதத்துக்கும் உள்ள வேற்றுமைகளையும், முரண்பாடுகளையும், போலிநிலைகளையும் விளக்கிடும் மாபெரும் கருத்துப் புரட்சிப் பணியில் அனைவரும் பங்கு பெற்றிடுமாறு அழைக்கின்றோம்.

  ஓம் திருச்சிற்றம்பலம்.

  தலைமைப் பொறுப்பாளர் அங்காளப் பரமேசுவரி சன்னிதானம்

  தொடர்புடையவை: