Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • மெய்யான இந்துமதம்>
  • நமது தாயகம்
  • நமது தாயகம்

    நமது தாயகம்

    சென்னை, 8.10.85, 10.40am

    சாதிகளால், மதங்களால், மடாதிபதிகளால், இலக்கியக் கலைஞர்களால், கலையுலகச் சுவைஞர்களின் நாயகர்களால், அரசியல் கட்சிகளால், சமுதாயச் சீர்திருத்தத் தலைவர்களால், தொழிற்சாலைகளால், வட்ட வட்டார நல மன்றங்களால், … நமது தாயக மக்கள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்துள்ளனர். இப் பிரிவுகள் ஒன்றோடொன்று போட்டியும், பொறாமையும், பகைமையும், மாறுபாடும், வேறுபாடும், முரண்பாடும் வளர்த்துக் கொண்டே வருகின்றன.

    இதேபோல்தான் தலைவர்களாக இருப்பவர்களுக்கிடையில் என்றுமே ஒற்றுமையுணர்வோ, ஒருமைப்பாட்டுணர்வோ, நட்புணர்வோ, தோழமையுணர்வோ, கூட்டுணர்வோ, … முடியாத அளவுக்குத்தான் ஒருவருக்கொருவர் தேவையில்லாத, பயனில்லாத, உண்மையில்லாத பகைமைகளை வளர்த்துக் கொண்டுள்ளார்கள். இவர்களின் நோக்கமெல்லாம் மற்ற தலைவர்களை மட்டம் தட்டியோ, இருட்டடிப்புச் செய்தோ, இல்லாமல் செய்தோ, … தாங்கள் மட்டும் பெரிய தனித் தலைவராக வளர வேண்டுமென்பதுதான். இதற்காகவே, இவர்கள் தேவையே இல்லாத போராட்டங்களையும்; காரண காரியமற்ற பகையுணர்வுகளையும், உண்மையற்ற வெறுப்புணர்வுகளையும் மற்றவர்கள் மேல் வளர்த்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

    எனவே, தாயகத்து மக்கள் பாகப்பிரிவினையால் பல பங்குகளாக்கப் பட்ட ஒரு மந்தையின் ஆடுகள் போலத் தனித்தனிச் சிறு குழுக்களாக அல்லது கூட்டங்களாகப் பிரிந்து நின்று சரியாக வாழாமல் (மேயாமல்) கலங்கியுள்ளனர். இவர்களை யெல்லாம் ஒன்றுபடுத்தும் முயற்சி வென்றிட முடியாத கவலைக்குரிய சிக்கலான நிலையில்தான் இருந்து வருகின்றது. இதுவே நமது தாயக நிலை.

    இந்நிலையில் மாற்றம் செய்திட ஏற்றமிகு தத்துவம் எது? தலைவர் யார்? நம் தாயகத்தில் பழமையை ஆராய்ந்தறிந்தும் இன்றைய நிலைமைகளை துய்த்துணர்ந்து தேவையான செயல்திட்டங்களை வகுத்திடக் கூடிய தத்துவ நாயகனே தலைவனாக இருந்திட முடியும். அப்படிப்பட்ட தத்துவநாயகன் முறையானதாகவும், நிறையானதாகவும் உள்ள மொழியறிவு, இலக்கிய அறிவு, வரலாற்றறிவு, பண்பாட்டறிவு, பாரம்பரியப் பயிற்சியுணர்வு, பொதுமைநல நாட்டுணர்வு, சமத்துவ உணர்வு, சகோதரத் தத்துவ உணர்வு, … முதலியவைகளைப் பெற்றிருக்க வேண்டும்.

    அப்படியில்லாமல் எப்படியெப்படியோ முயன்று காலப்போக்கில் சந்தர்ப்ப சூழல்களுக்குரிய சூழ்ச்சிகளைச் செய்து தலைவர்களாகிட்டவர்களே மிகுதியாக உள்ளார்கள். இம்மாபெரும் குறைபாட்டுத் தலைவர்களால்தான் நமது தாயகம் எண்ணற்ற வலுவான, வலிமையான, காரணகாரியங்களும், சந்தர்ப்ப சூழ்நிலைகளும், எதிர்பாராத கொதிப்புமிக்க பதட்டமிகு வாய்ப்பு வசதிகளும் … நிறைய இருந்தும் கூட ஒரு பெரிய இயக்கம் உருவாக முடியவில்லை. பெரும்பாலான மக்களை ஒற்றுமைப்படுத்தி ஒருமையுடன் கிளர்ச்சிமிகு வளவளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுத்தும் அரிய பெரிய தலைவர்கள் தோற்றமும், ஏற்றமும், ஆற்றல்தரு மேன்மையும் பெற முடியவில்லை.

    இவற்றால்தான், நமது தாயகத்துக்கு அன்னியர்களே தலைவர்களாக, முதலாளிகளாக, வழிகாட்டிகளாக, பொழுதுபோக்கு கலைஞர்களாக, வணிகர்களாக, குருமார்களாக, ஆச்சாரியார்களாக, குருக்களாக, பூசாறிகளாக, ஆட்சியலுவலக அதிகாரிகளாக … இருந்து வருகிறார்கள். நம் தாயக மக்களும் உண்மையான தன்மான உணர்வும் உயிரோட்டமான தன்னம்பிக்கை யுணர்வும், இறவாமை பெற்ற இனப்பற்றுமிகு ஒற்றுமையுணர்வும், மறவாமையுற்ற மொழிப்பற்றுமிகு பெருமித உணர்வும், கட்டுக்கோப்புமிகு நிறுவன நிர்வாக ஒழுங்கமைப்புக்கு உட்பட்ட பண்பாட்டுணர்வும் முளைத்துக் கிளைத்துச் செழித்து வளரமுடியாத அளவு கூலியுணர்வும், அடங்கி யொடுங்கி வாழும் அடிமையுணர்வும், ஏழையுணர்வும், கோழையுணர்வும் … பல வடிவங்களில் தங்களால் தங்களுக்குள் அப்பாவியான வாழ்க்கை வாழுகிறார்கள்.

    இந்துமதத்தின் மறைகள், முறைகள், நெறிகள், வேதங்கள், நேம நியம நிடதங்கள், சுருதி ஆரண ஆகம மீமாம்சைகள்; அத்திற சாத்திற சூத்திற தோத்திற நேத்திறங்கள்; மந்திற மந்திர மாந்தர மாந்தரீகங்கள்; தந்திற தந்திர தந்தர தாந்தர தாந்தரீகங்கள், எந்திற, எந்திர, எந்தர, ஏந்தர ஏந்தரீகங்கள், ஓத சித்த போத நாதங்கள், ஈக ஊக ஏக தாக போக மோக வேகங்கள்; ஓமம் ஓகம் யாகம் யக்ஞம் வேள்விகள், … புராண இதிகாசங்கள், அருட்பாக்கள், தத்துவப் பாக்கள், சித்தாந்தப் பாக்கள், பாசுரங்கள், மாலைகள், எள்ளல்கள், ஏசல்கள், அழுகைகள், அரற்றல்கள், புலம்பல்கள், தொழுகைகள், பூசைகள், வேண்டல்கள், கும்பிடுகள், பாடுகிடத்தல்கள், தவமொழிகள், பூசாவிதிகள், கருவறைப்படிகள், குருமார் ஒழுக்கம், குருபாணி, கருவாக்குகள், கருவாக்கியங்கள், கருவாசகங்கள், குருவாக்குகள், குருவாக்கியங்கள், குருபாரம்பரியங்கள், குருவாசகங்கள், தருவாக்குகள், தருவாக்கியங்கள், தருவாசகங்கள், திருவாக்குகள், திருவாக்கியங்கள், திருவாசகங்கள், அருள்வாக்குகள், அருள்வாக்கியங்கள், அருள்வாசகங்கள், மருள்வாக்குகள், மருள்வாக்கியங்கள், மருள்வாசகங்கள், இலக்கிய பாரம்பரியங்கள், அரசபாரம்பரியங்கள், சித்தர் பாடல்கள், ஞானப்பாடல்கள், கதைகள், காதைகள், கவிதைகள், (காவியங்கள் = காப்பியங்கள்), கீதைகள், ஓச்சுக்கள், வீச்சுக்கள், நூல்கள், அத்தரங்கள், அத்திரங்கள், அத்திறங்கள், அத்தரங்கள், சாத்திறங்கள், சாத்திரங்கள், சாத்தரங்கள், சூத்திறங்கள், சூத்திரங்கள், சூத்தரங்கள், தோத்திறங்கள், தோத்திரங்கள், தோத்தரங்கள், நேத்திறங்கள், … எனத் தமிழில் பெயரைக் கூடப் பலரும் தெரிந்து கொள்ள இயலாத அளவு மறைக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்ட அருளுலக இலக்கியங்களே மெய்யான இந்துமதத்தை விளக்குவன.

    இவற்றை வளர்க்க வேண்டுமென்றால் அன்றாடம் காலை மாலை 2:30 மணி நேரம் (ஒரு சாமம்) இத்தாயகத்துச் சிறார்களும், இளைஞர்களும் பாடம் கேட்டு, ஓதி உணர வேண்டும். அதற்குரிய தமிழ்வேத, சித்த வேத, இந்து வேதப் பாடசாலைகள் துவக்கப்பட்டேயாக வேண்டும்.

    ஆனால், பதினெண்சித்தர்கள், சித்தர்கள், தமிழ்மொழி, இந்து என்ற சொல்லின் பொருள், இந்துமத உண்மை வரலாறு, இந்துமதமும் உலக மதங்களும் பற்றிய பேருண்மைகள், … முதலியவைகளைத் தெரியாத இந்துமதத் துறவிகள், சாமியார்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள், சன்னிதானங்கள், ஆதீனங்கள், தம்பிரான்கள், மதத் தலைவர்கள், மதத் தொண்டர்கள், மதச் சொற்பொழிவாளர்கள், அருளாளர்கள், … முதலியோரோ கடந்த சில நூற்றாண்டுகளாக அல்லது சில நூற்றாண்டுகளாக இத்திரு நாட்டில் உலா வருகிறார்கள். மதப்பணி ஆற்றுகிறார்கள்.

    எனவே, மதத் தலைவர்களாக இளைய தலைமுறையினரைத் தயாரிக்க வேண்டும். நமது மதத் தொடர்பான அனைத்து வகைச் செய்திகளையும், இலக்கியங்களையும், பிறவற்றையும் காலக்கணக்கீட்டு அடிப்படையில் (With a Chronological Approach, attitude and backing …) தெளிவாகவும், விளக்கமாகவும் கற்பிக்க வேண்டும். … இதற்குரிய நூல்கள் மீண்டும் மீண்டும் எல்லா நடையில், புதிய புதிய வடிவில் நூல்களை எழுத வேண்டும்.

    பல்வேறு பாடல், ஆடல், கூத்து, நாட்டியம், நாடகம், கதை, காதை, கவிதை, கீதை, … முதலிய வடிவங்களில் அனைத்தையும் வெளியிட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். இவற்றிற்காகப் பயிற்சிப் பள்ளிகள், குருகுலங்கள், கல்விச் சாலைகள் உருவாக்க வேண்டும். சாதாரண உலகியல் வாழ்வை ஏற்கப் போகும் சிறுவர், சிறுமியர் கூட மதக்கல்வியை (Religious Education) கற்க வேண்டும். அதுதான் நேர்மை, நீதி, வீரம், ஒற்றுமை, பற்று, பாசம், கட்டுக்கோப்பு, அன்பு, ஈவு, இரக்கம், தோழமை, நட்பு, கடமையுணர்வு, பொறுப்புணர்வு, பொறுமை, … முதலிய பண்புகள் முளைத்துக் கிளைத்துச் செழித்து வளர்ந்தோங்கிடும். இந்து மறுமலர்ச்சித் திட்டங்கள் செயலும், வடிவும், வாழ்வும், உய்வும், உயர்வும் பெற்றிடும், பெற்றிடும், பெற்றிடும்.

    இந்துமதக் கல்வியின் பெயரால் பிறமண்ணினரான பிறாமணரின் வட ஆரிய வேத மதமான ஹிந்து மதம் மறுவாழ்வு பெற்றிடக் கூடாது. எச்சரிக்கை. இந்து மதம்தான் மறுமலர்ச்சி பெற வேண்டும். அதற்குரிய வண்ணம் தமிழ்மொழியிலுள்ள இந்துமதம் தொடர்பான அனைத்து வகை இலக்கியங்களையும் அச்சிட வேண்டும்.

    அச்சிட்டவைகளையும், அச்சிடக் கூடாதவைகளையும் கற்றுத் தரக்கூடிய இளைஞர்களையும் அனைத்து வகையான கல்வி நிலையங்களையும் உருவாக்க வேண்டும். முகம்மதியர்கள் தங்களின் சிறார்களையும், இளைஞர்களையும் மதக்கல்வி கற்குமாறு செய்வதில் பேரார்வம் காட்டுவது போலவே இந்துக்களும் தங்களின் குழந்தைகளை மதக்கல்வி கற்குமாறு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் தன்னம்பிக்கை, இனமானம், தன்மானம், இனப்பற்று, மொழிப்பற்று, நாட்டுப்பற்று முதலியவை ஊற்றெடுக்கும் வீரமுள்ள, ஈரமுள்ள, தீரமுள்ள, உரமுள்ள, தரமுள்ள வருங்காலச் சந்ததி உருவாகிடும்! உருவாகிடும்! உருவாகிடும்!

    எனவே, வருங்காலத்தையாவது இருண்டதாக ஆக்கிடாமலிருக்க ஆபாசக் கலைகளிலிருந்தும், மோசடியான அரசியல் நிலைகளிலிருந்தும், ஏமாற்றுக்காரச் சமுதாய வலைகளிலிருந்தும் இன்றைய இளந்தலைமுறையைக் காத்திடப் பதினெண்சித்தர்கள் தமிழ்மொழியில் படைத்த இந்துமதத்தை மருந்தாகவும், விருந்தாகவும் வழங்கும் பணி துவங்கட்டும்! துவங்கட்டும்! துவங்கட்டும்!

    ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்!

    தொடர்புடையவை: