Gurudevar.org
 • முகப்புப் பக்கம்>
 • மெய்யான இந்துமதம்>
 • அ.வி.தி. வரலாறு
 • அ.வி.தி. வரலாறு

  அ.வி.தி. வரலாறு

  அருட்பணி விரிவாக்கத் திட்ட வரலாறும் செயல் நிலை விளக்கமும்

  முன்னுரை

  ‘குரு பாரம்பரியம்’ எனும் நூல், பதினெண் சித்தர்களால் ‘மத வரலாறாகத்’ (Religious History) தொடர்ந்து அனாதிகாலம் முதல் (அனாதி காலம் என்பது கல்தோன்றி மண்தோன்றாக் காலம்] எழுதப்பட்டு வருகிறது. இதேபோல் இவர்கள் ‘அரச பாரம்பரியம்’ என்ற பெயரால், ‘அரசியல் வரலாறும்’ (Political History), ‘இலக்கிய பாரம்பரியம்’ என்ற பெயரால் ‘இலக்கிய வரலாறும்’ (History of language and literature) தொடர்ந்து எழுதி வருகிறார்கள். இவர்கள் காலக்கணக்கீட்டு முறையில்தான் (with a chronological approach) எதையும் எழுதுகிறார்கள். இவர்களின் நோக்கும், போக்கும் முழுக்கப் பகுத்தறிவுப் பாங்கும் (with a rationalistic attitude) விஞ்ஞானச் சூழலும் (with a scientific atmosphere) உடையனவே.

  இவர்களின் கொள்கை ‘எதையும் அன்பு வழியில், அமைதி வழியில், அறவழியில், மென்மை வழியில், சமாதான வழியில், விட்டுக் கொடுத்துப் போகும் வழியில், நேர்மை வழியில், தூய்மை வழியில், வாய்மை வழியில் அடக்கமாகப் பொறுப்போடும், பொறுமையோடும் செயல்படுத்துவதுதான்’.

  இவர்களின் குறிக்கோள்

  …… முதலியவையே.

  இவற்றையெல்லாம் எளிமையாகவும், இயல்பாகவும் மானுடர் விரும்பியேற்றுச் செயல்படுத்த உருவாக்கப்பட்டதே இந்துமதம். இது விண்வெளியில் வாழும் பதினெண் சித்தர்களின் மதம். இம்மண்ணுலகம் தோன்றும் முன்னரே விண்வெளியில் வாழ்ந்து வரும் மதம். ஒவ்வோர் உலகமும் தோன்றியவுடன் பதினெண்சித்தர்கள் அங்குச் சென்று வாழ்ந்து அந்தந்தப் பயிரினங்களும் உயிரினங்களும் தழைக்கத் தங்களது மதமான இந்து மதத்தைத் தங்களின் தாய்மொழியான தமிழில் வழங்கிடுகிறார்கள்.

  அனாதிகாலக் கருவூறார் தமது குருபாரம்பரிய வாசகமாக இந்து மதம் பற்றியும், தமிழ்மொழி பற்றியும் இப்படிக் குறிப்பிடுகின்றார். ‘இந்து’ என்ற சொல்லுக்கு நாற்பத்தெட்டுச் சொற்களைப் பொருள் விளக்கச் சொற்களாகத் தருகின்றார்.

  “…இந்து — 1. விந்து, 2. .உயிரணு, 3. உயிரின் கரு, 4. உயிரின் ஆரம்பமும் முடிவும், 5. இறை, தளை, உயிர் (பதி, பசு, பாசம்) 6. ஆவி, ஆன்மா, உயிர், 7. ஊழ்வினை, சூழ்வினை, ஆள்வினை,,. 8. அன்பு, 9. அமைதி, 10. அழகு, 11. அறம், 12. அருள், 13. அறிவு, 14. ஆர்வம், 15. ஆற்றல், 16. இன்பம், 17. இரக்கம், 18. இல்லறம், 19. இனிமை, 20. ஈகை, 21. உண்மை, 22. உறவு, 23. உய்வு, 24. உற்சாகம், 25. உழைப்பு, 26. ஊக்கம், 27. ஒண்மை, 28. ஒளி, 29. ஒலி, 30 பத்தி, 31. தவம், 32. தாய்மை, 33. தூய்மை, 34. துய்ப்பு, 35. கனிவு, 36. மேன்மை, 37. நிலைபேறு, 38. வாய்மை, 39. நேர்மை, 40 கூர்மை, 41. பெரியது, 42. அரியது, 43. சீரியது, 44. நிறைவானது, 45. நன்மையானது, 46. பயன்மிக்கது, 47. விழிப்பானது, 48. செழிப்பானது… என்று அனாதிகாலக் கருவூறார் இந்து மதத்துக்குப் பொருளாக நாற்பத்தெட்டினைக் கூறியபோதும்; காலப்போக்கில் மண்ணின் ஈசர்களான (மண்ணின் தலைவர்கள்) மனீசர்கள் —> ‘மணீசர்கள்’ அநுபவத்தால் நூற்றுக்கணக்கான பொருட்சொற்களை ‘இந்து’ என்ற சொல்லுக்கு உருவாக்கி விட்டனர்……”

  என்றிப்படிப் பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் (கி.மு.100 - கி.பி. 150) அவர்கள் தமது குருபாரம்பரியத்தில் குறிக்கிறார்.

  இந்த அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் ‘அருட்பணி விரிவாக்கத் திட்டம்’ பற்றிக் கூறும் குருபாரம்பரிய வாசகமே கண்டப்பகோட்டைச் சித்தர் கருவூறார் ஏளனம்பட்டியார் திரு உ. இராமசாமி (உருத்திரம்பிள்ளை மகன் இராமசாமி) அவர்களால் விரிவாக்கப்பட்டும் செயலாக்கப்பட்டும் ‘இந்து மறுமலர்ச்சி இயக்கம்’, ‘அருட்பணி விரிவாக்கத் திட்டம்’, ‘அருளுலக ஆர்வலர் கழகம்’ என்று மூன்று பெரிய அமைப்புகளாக கி.பி. 1772ல் பிறப்பெடுத்தன.

  “……அனாதிகாலக் கருவூறாரால் இம்மண்ணுலகில் தோன்றி விலங்கு நிலையில் வாழுவதை மாற்றிட இந்துமதம் அமுதத்தமிழில் மணிசர்களுக்கு வழங்கப்பட்டது. அது, காலப்போக்கில் மணிசரின் கற்பனையாலும், கனவாலும், தன்னலவெறியாலும், சுரண்டல் போக்காலும், ஏமாற்று உணர்வாலும், நினைவாற்றல் குறைவாலும் ….. இந்து மதம் பல தேக்கங்களையும், முடக்கங்களையும், இயலாமைகளையும் …. பெற்று விட்டது. அவற்றைப் போக்கிடவே ஆதிகாலக் கருவூறார் இந்து மறுமலர்ச்சி இயக்கம் (குறிப்பு:- இந்துமத மறுமலர்ச்சி இயக்கம் என்று குறிக்கவில்லை) தோற்றுவித்தார். அதற்காக ‘அருட்பணி விரிவாக்கத் திட்டம்’ அமைத்து அருளை அநுபவப் பொருளாக வழங்கினார். அப்பணி உலகம் முழுவதுமுள்ள மணிசர்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக ‘அருளுலக ஆர்வலர் கழகம்’ அமைத்தார்.

  இன்றைக்குப் பல்வேறு மதங்களும், சாதிகளும், மொழிகளும் இந்து மதத்தை நலிவடையச் செய்வதால் இந்துமதத்தின் பெருமையுணர்த்த அருளுலகக் கருத்து வாசகங்கள் முழக்கப்படல் வேண்டும். இதற்காகப் பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் குருபாரம்பரிய வாசகங்கள் சில உடனடியாக ஓலைகளில் எழுதி வழங்கப்படுகின்றன.

  - சித்தர் கண்டப்பக் கோட்டைக் கருவூறார் சித்தர் ஏளனம்பட்டியார் உ. இராமசாமிப் பிள்ளை

  பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் (கி.பி.785-1040) குருபாரம்பரிய வாசகம்:

  “… இந்து மதத்தை முழுமையாக அனைவரும் தெரிய, அறிய, ஆராய, புரிய, தெளிய, உணர, நம்ப, ஒப்புக்கொள்ள, ஏற்று நடைமுறைப்படுத்த பதினெண்சித்தர் மரபுப்படிப் பதினெட்டு நூல்கள் வழங்கப்படுகின்றன. (இப்பதினெட்டும் ஏற்கனவே இருந்திருக்க வேண்டும் என்றே கருத வேண்டியிருக்கிறது.)

  1. கருவாக்கு,
  2. கருவாசகம்,
  3. குருவாக்கு,
  4. குருவாசகம்,
  5. தருவாக்கு,
  6. தருவாசகம்,
  7. திருவாக்கு,
  8. திருவாசகம்,
  9. அருள்வாக்கு,
  10. அருள்வாசகம்,
  11. மருள்வாக்கு,
  12. மருள்வாசகம். (இப்பன்னிரண்டு நூல்களும் ‘விண்ணுலகத்தின் உயிராகப் பன்னிரண்டு இராசிகள் இருப்பதுபோல் மண்ணுலக இயக்கத்துக்கு உயிராக இருக்கும் பன்னிரண்டு இராசிகள் ‘இராசிவட்ட நூல்கள்’, ‘இராசிநிலை நூல்கள்’, ‘இந்துமதப் பன்னிரண்டு’ … என்று சிறப்பிக்கப்படுகின்றன.)
  13. சுருதிகள்,
  14. சூத்திறங்கள்,
  15. சூத்திரங்கள்,
  16. சூத்தரங்கள்,
  17. குருமார் ஒழுக்கம், (குருமார் ஒழுகலாறு என்று இந்நூலின் பெயருக்குப் பாடவேறுபாடு உண்டு)
  18. பூசாவிதிகள்.
  இந்துமதம் தழைத்தோங்க அனைவரும் அ.வி.தி. நிகழ்ச்சிகளில் முழங்க வேண்டிய அருளுலக முழக்கங்கள்:-
  1. சித்தர் நெறியால்தான் தமிழ் வாழும், வளரும், வளமுறும், வலிமைபெறும், பொலிவடையும்.
  2. தமிழால்தான் இந்துமதம் வடிவப்படும், வாழும், வளரும், வளமுறும், வலிமைபெறும், பொலிவடையும், பயன் நல்கும்.
  3. இந்து மதத்தால்தான் இந்தியாவே வாழும், வளரும், வளமுறும், வலிமைபெறும், பொலிவடையும், வடிவப்படும்.
  4. இந்து மதத்தால்தான் மனிதத்துவம் வாழும், வளரும், வளமுறும், வலிமை பெறும், பொலிவடையும்.
  5. இந்து மதத்தால்தான் உலக உயிர், ஆவி, ஆன்மா ஒற்றுமையும், ஒருமைப்பாடும், பற்றும், பாசமும், சமத்துவமும், பொதுவுடமையும் வாழும், வளரும், வளமுறும், வலிமைபெறும், பொலிவடையும், பிறவிப்பயனைத் துய்க்கும்.
  6. இந்து மதத்தால்தான் பிண்டத்துள் அண்டபேரண்டங்களை இணைத்து உணர்ந்து உய்வுறல் நிகழும்.
  7. இந்து மதத்தால்தான்……
   இந்து மதத்தால்தான் நலிவுகள் நலிவடையும்!
   இந்து மதத்தால்தான் மெலிவுகள் மெலிவடையும்!
   இந்து மதத்தால்தான் இழிவுகள் இழிவடையும்!
   இந்து மதத்தால்தான் பழிகள் பழியடையும்!
   இந்து மதத்தால்தான் மயக்கங்கள் மயங்கும்!
   இந்து மதத்தால்தான் கலக்கங்கள் கலங்கும்!
   இந்து மதத்தால்தான் தயக்கங்கள் தயங்கும்!
   இந்து மதத்தால்தான் தீயவை தீய்ந்திடும்!
   இந்து மதத்தால்தான் மாயங்கள் மாய்ந்திடும்!
   இந்து மதத்தால்தான் இல்லாமைகள் இல்லாமை பெற்றிடும்!
   இந்து மதத்தால்தான் பொல்லாமைகள் பொல்லாமை பெற்றிடும்!
   இந்து மதத்தால்தான் இயலாமைகள் இயலாமை பெற்றிடும்!
   இந்து மதத்தால்தான் தேக்கங்கள் தேக்கங்களாகி விடும்!
   இந்து மதத்தால்தான் ஏக்கங்கள் ஏக்கங்களாகி விடும்!

  இவ்வேழும் ஏழு கடலலைகள் போல் என்றும் எங்கும் எழுந்து பேரொலி கிளப்பட்டும். அவ்வொலியே அனைவரையும் கிளர்ச்சியுற்று விழிச்சியும் பெற்றுச் செழுச்சிக்காக அயரா முயற்சிகளைச் செய்யச் செய்யும்…..”

  - குருபாரம்பரியம்
  காவிரியாற்றங்கரைக் கருவூறார்

  இக்குறிப்புக்களை இங்கு குறிப்பதன் மூலம் அருட்பணி விரிவாக்கத் திட்டம் என்ற ஓர் அமைப்பு மிகமிகத் தொன்மையானது, உண்மையானது, திண்மையானது, நன்மையானது என்ற பேருண்மைகள் விளக்கப் படுகின்றன.

  கி.பி. 1772 ல் தோற்றுவிக்கப்பட்ட ‘இந்து மறுமலர்ச்சி இயக்கம்’ (இந்துமத மறுமலர்ச்சி இயக்கம் என்று குறிக்கப்படவில்லை) உலக ஆன்ம நேய ஒருமைப்பாட்டையும்; உலகச் சமத்துவச் சகோதரத்தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம் அமைக்கவும்… தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இது ஓர் உலகம் தழுவிய அமைப்பு. இதனுடைய கருத்து வீச்சால்தான், பத்தொன்பதாம் நூற்றாண்டில் கெக்கல், காரல்மார்க்சு, ஏங்கல்சு — முதலிய பொதுவுடமைத் தத்துவச் சிந்தனையாளர்கள் தோன்றினர்.

  ஆனால், அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் மந்திரவாதிகளும், சூன்யக்காரர்களும், சோதிடர்களும், மதத்தால் வயிறுபிழைக்கும் சூழ்ச்சிக்காரர்களும்… அதிகமாகி விட்டார்கள். இருப்பினும், அருளுலக ஆர்வலர் கழகம் தொடர்ந்து செயல்பட்டதால், டாக்டர் ஐன்சுடீனும் (அணுக்கொள்கை கண்டவர்), திரு எம். என். ராயும் (உலகப் பொதுவுடமை இயக்கமும், பகுத்தறிவுக் கழகமும் அமைத்தவர்) பெரிதும் முயன்று ‘உலக மத ஆய்வுக்குழு’ என்ற ஒன்றைத் தோற்றுவித்துப் பயனுள்ள சாதனைகளைச் சாதித்துள்ளனர்.

  எனவே, இ.ம..யின் இரண்டாவது பாரம்பரியத் தலைவர் என்ற முறையில் இன்றைய இந்தியாவின் நல்வாழ்வுக்காகவாவது; ஏழை, எளிய, பாட்டாளிப் பாமர மக்களைக் காப்பாற்றிடவாவது; ஆத்திகத்தின் சமுதாய நல விரோதப் போக்குகளையும் துரோகப் போக்குகளையும் தடுக்கவாவது இ.ம.இ., அ.வி.தி., அ.ஆ.க. என்ற மூன்றும் விரிவாக வளர்ந்து, விரைவாகச் செயல்பட வேண்டும் என்ற கருத்தையே இ.ம..யின் மூன்றாவது பாரம்பரியத் தலைவருக்கு வழங்குகிறேன்…”

  - எம்.பி. பிள்ளை இ.ம..யின் இரண்டாவது பாரம்பரியத் தலைவர் சித்தர் காக்கையர், ம.பழனிச்சாமி, காக்கா வழியன் பண்ணையாடி

  இப்படிச் சில தனிக் குறிப்புகளையே எமது அருட்பணி விரிவாக்கத் திட்டச் செயல்நிலை விளக்கம் என்ற நூலுக்கு முன்னுரையாக வழங்குகிறோம் யாம்.

  இந்துமதத் தந்தை குருமகா சன்னிதானம்
  ஞாலகுரு சித்தர் கருவூறார்
  பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி
  அரசயோகி
  அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம்
  இராசிவட்ட நிறைவுடையார்

  தொடர்புடையவை: