Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • அன்பு சேவுக!>
  • கருத்துப் பரிமாற்றம்
  • கருத்துப் பரிமாற்றம்

    கருத்துப் பரிமாற்றம்

    கருத்துப் பரிமாற்றக் கலந்துரையாடல்களே இன்றைய தேவை

    அன்புச் சேவுக!

    இன்றைய நிலையில், நாம் இனவெறியையோ! மொழிவெறியையோ, மதவெறியையோ!, வன்முறை வெறியையோ! தூண்டி விடுவதாகவோ ஊக்குவிப்பதாகவோ எளிதாகக் குற்றம் சாட்டப்பட்டு விடலாம். எனவேதான், நாம் மிகமிகத் தெளிவாகவும், விளக்கமாகவும், நேரடியாகவும் நமது கொள்கைகள், குறிக்கோள்கள், திட்டங்கள் …… முதலியவற்றை விளக்கியேயாக வேண்டும்.

    இதற்காகவே நாடெங்கும் கையெழுத்துப் பிறதி நூலகங்கள் துவக்கி வைக்கின்றோம்; நம்மவர்கள் தனித்தோ! குழுக்களாக இணைந்தோ வசதி வாய்ப்புப்படி அனைத்து வகையான வழிபாட்டு நிலையங்களிலும், பிற பொது இடங்களிலும் கூடி நின்று உரையாடல் முறையிலும்; வினாவிடை முறையிலும், கலந்துரையாடல் விவாத முறையிலும், நம்மையும், நமது இயக்கத்தையும் அறிமுகப்படுத்த வேண்டுமென்று முயலுகின்றோம். இவற்றைப் புரிந்தும் புரியவைத்தும் தொடர்ந்து மேற்படிச் செயல்கள் நிகழுமாறு செய்வதுதான் இன்றைய தேவை!

    நண்ப! நாம், திருவள்ளுவர், திருமூலர், சமயக் குரவர், சங்கராச்சாரியார், பெரியார் ஈ.வெ.ரா., புத்தர், மகாவீரர், ஏசு, முகம்மது நபி, காரல் மார்க்சு, கரம்சந்த் மோகன்லால் காந்தி …… முதலிய அனைவரின் சிறப்பு இயல்புகளை எல்லாம் நமது தாயகத்து மக்களுக்குத் தேவையான அளவு எடுத்துக் கூறியே செயல்படுகின்றோம்.

    தமிழினத்திற்கே உரிய ‘இந்து’ என்ற சொல்லையும்; இதற்குரிய பொருளையும் புரிந்து கொள்ள முயலாமலே வெறுப்பது, பிற இனத்தவர்களும், பிற மதத் தலைவர்களும், பிற மொழிகளுந்தான் உயர்ந்தவர் என நினைக்கும் அப்பாவித்தனம்………. முதலியவைகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்படுவதற்குரிய முழுமையான முயற்சிதான் இக்கலி உகத்தில் தோன்றிய பத்தாவது, பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோற்றுவித்த ‘இலக்கியப் புரட்சி’ [‘தத்துவப் புரட்சி’, ‘கருத்துப் புரட்சி’, ‘எண்ணப் புரட்சி’]. அதாவது மதத் துறையில் தோற்றுவிக்கப்பட்ட தீயவைகளும், காலப் போக்கில் தோன்றிய தீயவைகளும்தான் நமது மக்களின் வீழ்ச்சிகளுக்கும் தாழ்ச்சிகளுக்கும் காரணம் என்பதை முழுமையாக உணர்ந்ததால்தான்; இரு பதினெண் சித்தர் பீடாதிபதிகளும் ‘குருபாரம்பரியம்’ என்ற பெயரால் மத வரலாறும், ‘இலக்கியப் பாரம்பரியம்’ என்ற பெயரால் சமுதாய வரலாறும், ‘அரச பாரம்பரியம்’ என்ற பெயரால் தமிழ்நாட்டு அரசியல் வரலாறும் எழுதித் தொகுத்துக் கருத்துப் புரட்சியைத் தோற்றுவித்தனர்.

    இப்படி அவர்கள் இலக்கியக் கருவூலத்தைத் தந்து விட்டுச் சென்றுள்ள காரணத்தினால்தான், நம்மால் அவற்றை எளிதில் அறிந்து புரிந்து பகுத்து வகுத்துச் செயல்பட ஏதுவாக அமைகின்றது. இந்த எழுத்துலகத் தொகுப்பேதான் நமது புரட்சிக்குரிய ஆயுதங்கள். இவைகளேதான் நாம் எதிர்காலத்தில் நிகழ்த்தப் போகும் அருளாட்சிக்குரிய போர்ப்பாசறைகளாகவும் பாடிவீடுகளாகவும் அமையும்.

    நமது மொழி, இன, நாட்டு வரலாற்று இலக்கியங்களை நம்மவர்கள் படித்துணர்ந்தால் போதும்; முதலில் நம்மவர்கள் அறிவொளியும், அகவொளியும் பெற்றுத் திகழ்ந்திடுவார்கள். மக்களின் அறியாமையையும், கோழை மனத்தையும், கூலி மனப்பான்மையையும் ….. போக்க இக்கருத்துக்களை மக்களிடையே மேடைப் பேச்சாக வழங்க வேண்டும். நமது இயக்கப் பணி அல்லது கொள்கை அல்லது திட்டம் என்பது வேறொன்றுமல்ல; நமது இன மொழி நாட்டு வரலாற்றினை நமது தாயகத்து மக்களை உணர வைப்பதே ஆகும். இம்மாபெரும் பணிக்குத் தயாராகும் நம்மவர்கள் கையில் பிடித்திருக்கும் வாள்களும், வேல்களும், விற்களும் நமது இலக்கியங்களேயாகும் என்னும் கருத்துச் சிந்தனை வளம் பெற்றதாக இருக்க வேண்டும்.

    அன்பு
    ஞாலகுரு சித்தர் கருவூறார்

    (குருதேவர் அறிக்கை 21இலிருந்து)

    தொடர்புடையவை: