Gurudevar.org
 • முகப்புப் பக்கம்>
 • அன்பு சேவுக!>
 • தமிழர் பாடப்புத்தகங்கள்.
 • தமிழர் பாடப்புத்தகங்கள்.

  தமிழர் பாடப்புத்தகங்கள்.

  நமது வெளியீடுகளே தமிழரது பாடப் புத்தகங்கள்.

  அன்புச் சேவுக!

  (1) நம் நாட்டில் முதலாளிகள் ஏறத்தாழ நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது பேர்கள் இருக்கிறார்கள். அனைத்துக் கோயில்களிலும் விழாக்களிலும் கூட்டம் கூட்டமாகக் கலந்து கொள்ளும் மக்கள் நிறைய இருக்கிறார்கள். எண்ணற்ற மத நிறுவனங்கள், இயக்கங்கள், மதத் தலைவர்கள், மதக் கலைஞர்கள், மதப் பத்திரிகையாளர்கள், மதப் பேச்சாளர்கள், மத எழுத்தாளர்கள் …. இருக்கிறார்கள்.

  எங்குப் பார்த்தாலும் அடிக்கடி மதத்தின் பெயரால், சிறிய பெரிய கூட்டங்களும், விழாக்களும், கதை நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும், பிறவும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏறத்தாழப் பூசைக்கென்று தனியிடம் இல்லாத வீடே இல்லை, பூசைப்படம் மாட்டப்படாத கடையே இல்லை. இந்த அளவு நமது நாடு மதவாதிகள் மிகுந்த நாடாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்த நாட்டின் சமுதாய சீர்திருத்தவாதிகள், அரசியல்வாதிகள், இலக்கிய வாதிகள், தமிழார்வமுடையோர் ……… எனப்படுபவரெல்லாம் உதட்டளவில் நாத்திகக் கருத்துக்களையே மிகுதியாகப் பேசித் திரிபவர்களாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், தொடர்ந்து கால் நூற்றாண்டாக, நாத்திகப் போக்கும், நோக்கும் உடையவர்களே நமது அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். என்ன காரணம்? எது காரணம்? எப்படிக் காரணம்? எவ்வளவு காலம் காரணம்? என்னென்ன முயற்சிகள் காரணம்? …… என்பதையெல்லாம் ஆராய வேண்டும். இம்மாபெரும் சுமை நமக்கு இருப்பதால்தான் நாம் கழுத்து நோக, விழி பிதுங்க, மூச்சுத் திணற மெல்ல நிதானமாக நடைபோடுகிறோம். இதனைப் பிறரும், நாமும் புரிந்தும் புரியவைத்தும் செயல்படக்கூடிய சூழ்நிலையை எப்படியாவது உருவாக்கியே ஆக வேண்டும். ஆனால் அது அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும்.

  (2) நண்ப! நமது பத்தர்கள் மதவாதிகள் மதத்தால் வயிறு பிழைக்கும் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் முதலியோர்கள் வேண்டா வெறுப்பாக நாற்றம் அடிக்கும் குப்பையை நறுமணமிக்க மலரைத் தரும் செடி கொடிகளுக்கு உரமாக, கையால் அள்ளியள்ளி தூறில் (செடி அடியில்) வைத்துப் பணிபுரியும் ஆட்களைப் போலவே, மதத்தைத் தங்களுடைய வாழ்க்கையின் நன்மைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதாவது, பெரும்பாலான மதவாதிகள் உதட்டளவில் மதம் மடமையானது, மூட நம்பிக்கை மிகுந்தது, ஆபாசங்கள் மிகுந்தது, அறிவுக்கு அப்பாற்பட்டது, தவிர்க்க முடியாத தீயது என்ற கருத்தை எல்லாம் கூறியபடியேதான் மதத்தைப் பயன்படுத்தி வாழ்கிறார்கள். இதற்குக் காரணம் மதத்தைப் பற்றிய முறையான வரலாறு, நிறைவான தத்துவம், முழுமையான இலக்கியம், பொறுப்பான பயிற்சி, பொறுமையான சிந்தனை, உண்மையான மத உணர்வு, நேர்மையான மதச்சிந்தனை, ஒழுங்கு படுத்தப்பட்ட மதவாழ்க்கை, மதக்கலைகளில் பயிற்சி, மத குருமார்களிடம் தொடர்பு … முதலியன இல்லாமை, மதத்தைப் பற்றிய அச்சம், கூச்சம், இச்சை, வேற்று மொழியில் மதத்தைச் செயல்படுத்துதல், அன்னியர்களை மதத் தலைவர்களாக ஏற்றல், ….. முதலிய தவறுகள்தான். எனவே, இத்தவறுகளை அகற்றிடும் முயற்சி விரிந்தும், விரைந்தும் துவக்கப்பட்டே ஆக வேண்டும்.

  (3) நமது மதவாதிகள் கண்மூடிப் பத்தர்களாக, எல்லாம் கடவுள் செயலாக ஏற்கும் மந்தகதி உடையவர்களாக, புதுமை நாட்டமோ, புரட்சி நம்பிக்கையோ இல்லாதவர்களாக இருக்கிறார்கள். எனவேதான், ஒலிபெருக்கியோ, விளம்பரமோ இல்லாமல் எல்லாக் கோயில்களிலும் நம்மவர்கள் கூடி ஒருவர் இருவர் என்று நின்றாவது நமது வெளியீடுகளை உரக்கப் படித்துக் காட்ட வேண்டும். விற்பனைக்காக நமது வெளியீடுகளைக் கடைவிரிக்க வேண்டும். மக்களின் ஐய வினாக்களுக்கும் பதில் கூறிச் சிறுசிறு சொற்பொழிவுகள் நிகழ்த்துதல் வேண்டும்.

  (4) பொழுதுபோக்கும் கழகங்கள் நடத்துவது போலவே பல பணக்காரர்களும், சிலசில இலக்கியச் செல்வாக்குடையவர்களும், மதச்சபைகள், மன்றங்கள் வாரவழிபாட்டு அமைப்புகள், சிறுசிறு தொடர் இலக்கிய விழாக்கள்…. நடத்தி வருகிறார்கள். இவர்கள்தான் மதத்தை மயக்கப் பொருளாக, பிற்போக்குச் சத்தியாக, புரியாத துறையாகக் காப்பாற்றுவார்கள். எனவே, இவர்களிடமிருந்து மதத்தைக் காப்பாற்றிப் பகுத்தறிவுப் போக்கும், சமுதாய நலநோக்கும், விஞ்ஞானச் சூழலும் உடையதாக்கிடல் வேண்டும்.

  (5) மதவாதிகள் தங்களுடைய நூல்களும், தலைவர்களும் சமத்துவத்தை, பொதுவுடமையை, கூட்டுறவை, வட்டி வாங்காமையை, சுரண்டாமையை, ஏமாற்றாமையை, வேறுபாடு பாராட்டாமையை, பிறரை அடிமைப் படுத்தாமையை …. என்று எண்ணற்ற உயர்ந்த தத்துவங்களைக் கூறுவதற்காகக் கூறுவார்கள். ஆனால், யாருமே இவற்றைச் செயலாக்கும் ஆர்வத்தையோ, நம்பிக்கையையோ விரும்பி ஏற்றுப் போற்றும் பக்குவத்தையோ பெற்றிருக்கவில்லை. எனவேதான், நமது மதம் ஏட்டுச் சுரைக்காயாக, கற்பனையாக, பழங்கதையாக, கவைக்கு உதவாததாக இருக்கிறது. இதனை மாற்றும் ஏட்டறிவும், பட்டறிவும், புரட்சியுள்ளமும் உடைய மதவாதிகள் ஏறத்தாழத் தோன்றவே இல்லை என்றுதான் கூற வேண்டும்.

  (6) நண்ப! மத சம்மந்தமான அனைத்து விழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும், நம்மவர்கள் மதரீதியாகவே, சமுதாய, பொருளாதார, இலக்கிய, கலை, அரசியல் சிந்தனைகளை வளர்க்கும் வண்ணம் சொற்பொழிவாற்ற வேண்டும். இதற்குத் தேவையான பாடப்புத்தகங்கள் இதுவரை நாம் வெளியிட்டு இருக்கும் அறிக்கைகளும், அறிவிக்கைகளும், புத்தகங்களும், மாதந்தோறும் வெளிவரும் குருதேவர் இதழுமேயாகும்.

  அன்பு
  ஞாலகுரு சித்தர் கருவூறார்

  (குருதேவர் அறிக்கை 20இலிருந்து)

  தொடர்புடையவை: