Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • தமிழ்மொழி>
  • இயக்கத்தின் கொள்கை விளக்கம்
  • இயக்கத்தின் கொள்கை விளக்கம்

    இயக்கத்தின் கொள்கை விளக்கம்

    இம்மண்ணுலக அகப் பண்பாடுகளுக்கும் புற நாகரீகங்களுக்கும் அடிப்படையான மதங்களின் மூலமதமான ‘மெய்யான இந்துமதமே’ தமிழருடைய மதம். இம் மதம், அறியாமைகளாலும், புரியாமைகளாலும், தெரியாமைகளாலும் பல்வேறு பிரிவுகளையும், திரிபுகளையும், மாற்று வடிவங்களையும், சிதைவுகளையும், மொழியாட்சிகளையும் பெற்றுவிட்டது.

    அதனால், இது மயங்கித் தேங்கிச் செயல்நலம் குன்றிவிட்டது; அன்னியர்களின் வேட்டைப் பொருளாகி விட்டது. இதனால், இம் மத மூலவர்களாகவும், காவலர்களாகவும் உள்ள திராவிட இனத்தவர்களும்; மூல இனத்தவரான தமிழினத்தவரும் தங்களுடைய மொழி, வரலாறு, இலக்கியம், வாழ்வியல், … முதலிய அனைத்தையும் தெரியாமல் அறியாமல் அனாதை நிலையையும், நாடோடி நிலையையும் பெற்று விட்டனர்.

    இம்மாபெரும் வீழ்ச்சியாலும், தாழ்ச்சியாலுமே உலக ஆன்மீகத்துறை, சமயத்துறை, மெய்ஞ்ஞான அறிவு, மத உணர்வு, பத்திநெறி, இறையியல் கலை, வேதாகமப் பயிற்சி, அருளார்ந்த வாழ்வு, உலக மத ஒற்றுமை, உலக மானுட இனப்பற்று, உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயப் போக்கு, உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டுப் போக்கு, … முதலிய அனைத்தும் மேய்ப்போன் இல்லாத மந்தையாக, மாலுமித் தலைவன் ‘கலபதி’ இல்லாத கப்பல் போல, சேனாதிபதி இல்லாத சேனை போல, அரசனில்லாத நாடு போல, ஆசிரியர் இல்லாத மாணாக்கர் போல, … நிலைகுலைந்து செயலிழந்து நிற்கின்றன. எனவே, உலகம் தழுவிய செழிப்பு, ஒற்றுமை, அமைதி, நிறைவு, நிம்மதி, சகோதரத் தத்துவம், பொதுவுடமை, சமாதானம், கூட்டுறவு … முதலியவைகள் ஏற்படுவதற்காகத் தமிழினம் தனது தாழ்ச்சி நிலைகளிலிருந்து மீட்சி பெற்றிட வேண்டும்.

    அதாவது, பதினெண்சித்தர்களால் இம் மண்ணுலக அருளியலுக்கும், அறிவியலுக்கும், பொருளியலுக்கும் மூல தாயகங்களாகவும், தத்துவ வித்துக்களாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்ட தமிழர்கள் அடிமைநிலை! மிடிமைநிலை! கூலிநிலை! போலிநிலை! தன்மானமற்ற நிலை! இனமான உணர்வற்ற நிலை! மொழியுரிமையுணர்வற்ற நிலை! இன விடுதலையுரிமை உணர்வற்ற நிலை! அகப்பண்பாட்டுப் பிடிப்பற்ற நிலை! புற நாகரீகப்பற்றற்ற நிலை! … முதலியவைகளிலிருந்து மாற்றம் பெற்றுப் பண்டைய பைந்தமிழர் போன்று மொழியினப் பண்பாட்டு நாகரீகப் பற்றும், பாசமும், பிடிப்பும், உரிமையுணர்வும், பெருமித உணர்வும், விடுதலையுணர்வும் உடையவர்களாகிடல் வேண்டும்.

    இதைத்தான் கடந்த 43,73,089 ஆண்டுகளாகப் பதினெண்சித்தர்களின் ‘சித்தர் நெறி’யெனும் சீவநெறியான ‘மெய்யான இந்துமதம்’ வலியுறுத்தி வளமாக வாழ்க்கைப் படுத்தி வருகின்றது. இப்பேருண்மையையே, ‘ஆறுவகையான வாக்குகள்’, ‘ஆறுவகையான வாக்கியங்கள்’, ‘ஆறுவகையான வாசகங்கள்’, ‘பதினோரு பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் குருபாரம்பரியங்கள்’ (The Religious History), ‘இலக்கிய பாரம்பரியங்கள்’ (The Social History and the History of the Language and Literature), ‘அரச பாரம்பரியங்கள்’ (The Political History); ‘நாற்பத்தெட்டு வகைச் சித்தர்களின் நூல்கள்’ … முதலியன விளக்குகின்றன.

    எனவேதான், இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் கீழ்; ‘தமிழ்மொழி விடுதலை இயக்கம்’, ‘தமிழின விடுதலை இயக்கம்’, ‘தமிழர் மத விடுதலை இயக்கம்’ எனும் முப்பெரும் இயக்கங்கள் செயல்படுகின்றன. இதில் பங்குபெற்று உலக நன்மைக்காக அனைத்துத் துறை விடுதலைக்காகப் பாடுபட அழைக்கிறோம்.

    “தமிழா! விழித்தெழு! உன் வரலாறுகளைத் தெரிய முற்படு! உன் வளமிகு மொழிச் செல்வங்களை அறிய முற்படு! உன் சமுதாயப் பண்பாடுகளைப் புரிய முற்படு! உன் அரசியல் நாகரீகங்களை உணர முற்படு! … உனக்கு வழிகாட்ட உன்னுடைய சமயம் காத்திருக்கிறது… புரிந்து, இந்து மறுமலர்ச்சி இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டிட வந்திடு!

    “இவ்வுலகுக்கே வழிகாட்டவும், வழித்துணையாக வாழ்ந்திடவும், வழிப்பயனாகத் திகழ்ந்திடவும் இம்மண்ணுலகின் மூத்த முதல்குடியான தமிழ்க்குடியே தயாராக வேண்டும்” … என்று இந்துமதத்தை இம்மண்ணுலகின் மூல முதல்மதமாகத் தோற்றுவித்த பதினெண்சித்தர் பீடாதிபதிகள் கூறுகிறார்கள். குருபாரம்பரியமும், அரச பாரம்பரியமும், இலக்கிய பாரம்பரியமும் கொண்டு தமிழின மொழிமத விடுதலை இயக்கங்கள் செயலாற்றுகின்றன. இனியும் தயங்காது தமிழர்களே திரண்டிடுவீர்!

    தமிழ்மொழி விடுதலை இயக்கம்,
    தமிழின விடுதலை இயக்கம்,
    தமிழர் மத விடுதலை இயக்கம்

    தொடர்புடையவை: