Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • மெய்யான இந்துமதம்>
  • இராமகிருட்டிணரியம்
  • இராமகிருட்டிணரியம்

    இராமகிருட்டிணரியம்

    SRI RAMAKRISHNARISM

    மெய்யான இந்துமதம் (The True INDUISM) என்பதுதான் காலப் போக்கில் பல்வேறு அன்னியர்களின் அயராத கலப்பட முயற்சியால் திரிந்தும், சிதைந்தும், மாறியும், வேறுபட்டும், புதியன பல ஏற்றுத்தான் பொய்யான ஹிந்துமதம் (The False Hinduism) உருவாயிற்று. இதனால்தான், பல தத்துவார்த்தமான கற்பனைகள் (Philosophical Imaginations) தோன்றி விட்டன. இந்தக் கற்பனைகளே பயனற்ற சடங்குகளையும் (Useless Rituals), பொருளற்ற பழக்க வழக்கங்களையும் (Meaningless Customs and Manners) உருவாக்கி விட்டன.

    இதனால்தான், உருவ வழிபாடு (Idol Worship), மதச் சின்னங்களை அணிதல் (Religious Symbols), மத இலக்கியங்களையும் வரலாறுகளையும் புறக்கணித்தல் (discording the Religious Literature and History), அனைத்து மொழிகளுக்கும் தெய்வீக சத்தி உண்டு என்ற பேருண்மையைக் கொன்றிடும் வண்ணம் சமசுக்கிருத மொழியை மட்டும் பூசைக்குரிய மொழியாக வற்புறுத்துதல் (Giving religious importance and prominence to the Sanskrit Language as a language of Poojas by murdering or degrading the universal religious fact that all the Languages have religious importance and Divine Power.) … முதலிய தவறுகள் தோன்றி விட்டன.

    இவற்றால்தான் இந்துமதத்தின் மூலம் அருளை அநுபவப் பொருளாகப் பெறுவதும் அருளுலக அநுபவங்களை வழங்கக் கூடிய மதத் தலைவர்கள் தோன்றுவதும், அறிவியல் பூர்வமாக இந்துமதத்தைப் புரிந்து கொள்ள இயலாமல் போனதும் இந்துமதத்தால் பயனில்லை யென்று தவறாக எண்ணுபவர் வேற்று மதங்களில் சேருவதும் நிகழ்ந்தன.

    அப்படிப்பட்ட காலக்கட்டத்தில்தான் இராமகிருட்டிணர் உருவ வழிபாட்டால் காளியை (பவதாரிணி) நேரில் கண்டு தன்னை அருளூற்றாக்கிக் கொண்டார். இரவு பகலாகச் சுடுகாட்டிலும் புதைகாட்டிலும் அமர்ந்து அருளுலக அநுபவங்களைப் பெற்றார். அருள்மிகு இராமகிருட்டிண பரம அம்சரின் மெய்யான இந்துமத அநுபவம்தான், அவரை அனைத்து மதங்களையும் மொழிகளையும் சமமாக ஏற்றுக் கொள்ளும் சித்தர் நெறிச் செல்வராக, ஞானசித்தராக, வேதசித்தராக, நவநாத சித்தராக முதிர்ச்சி பெறச் செய்தது.

    ஆனால், அவர் பெயரால் சனாதன தருமமும், வடஆரிய வேதமதமும், சமசுக்கிருத மொழியும், பிறாமண உயர்வும், கற்பனையான பிரம்மஞான வாதமும் … வெறியாக வளர்க்கப்படும் நிலைகள் வளர்ந்து விட்டன.

    இவற்றால் மீண்டும் போலியான, பொய்யான ஹிந்துமதம் வளருகிறது. அதனால், தேவையில்லாத மத மாற்றங்களும், மதச் சண்டைகளும், சாதி வெறிகளும், ஏற்றத் தாழ்வுகளும், தீண்டாமைக் கொடுமைகளும் … வளர்ந்து விட்டன. இவற்றிற்குக் காரணம் பிறாமண ஆதிக்கமும், வடஆரிய வேதமதமும், சமசுக்கிருத மொழி இலக்கியங்களும், வறட்டுத் தனமான தத்துவ வெறியும்தான்.

    எனவே, மீண்டும் நாயன்மார்கள், ஆழ்வார்கள், அடிகளார்கள் … வழியில் வந்த இராமகிருட்டிணரின் பத்தி நெறி மதமான சித்தர் நெறி எனும் மெய்யான இந்துமதம் பிழைக்க வேண்டும், கிளைத்துத் தழைக்க வேண்டும். அதுதான், இந்துமத மறுமலர்ச்சியைத் தரும். இவரை ஞானசித்தர், வேதசித்தர், நவநாத சித்தர், சித்தர்நெறிச் செல்வர், மெய்யான இந்துமத ஆச்சாரியார், காளிதேவியின் அருட்செல்வர், இந்துமத மறுமலர்ச்சிச் சிற்பிகளுள் ஒருவர் … என்று அருளுலகச் சிறப்புக்களை வழங்குகிறோம்.

    அதாவது, இன்றைய குவலய குருபீடம், ஞானாச்சாரியார், குருதேவர், இந்துமதத் தந்தை, அரசயோகி, அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம், இராசிவட்ட நிறைவுடையார், நல்லிலக்கண மார்புடையார், ஆத்தாள் அமளிகை, கொற்றவை இருக்கை, பராசத்தி திருவடி, அருளாட்சி நாயகம், பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறார் அவர்கள் இராமகிருட்டிணர் வாழ்ந்த மெய்யான இந்துமத வாழ்வும், அவர் போதித்த மெய்யான இந்துமதத் தத்துவமும் ஒருங்கிணைந்த இராமகிருட்டிணரியம் (அல்லது இராமகிருட்டிணரியல் = The Ramakrishnarism) மீண்டும் உடனடியாக இந்தியா முழுவதும் முளைத்துக் கிளைத்துத் தழைத்துச் செழித்து வளர வேண்டும் என்று அறிவிப்புச் செய்கிறார். இதனைப் புரிந்து அனைவரும் மெய்யான இராமகிருட்டிணரின் சாதனைகளை உணர்ந்தும் உணர்த்தியும் செயல்படலே இந்துமத மறுமலர்ச்சிப் பணிகளை அணி செய்யும்.

    ஓம் திருச்சிற்றம்பலம்

    இந்து மறுமலர்ச்சி இயக்கம்

    நிறுவன நிர்வாகக் குழுக்கள்

    23.2.1986

    குறிப்பு:- 1986ஆம் ஆண்டின் துவக்க மலராக, முதல் “குருதேவராக’ வெளிவரும் சனவரி மாத அறிக்கை ‘இராமகிருட்டிணப் பரம அம்சரின் சிறப்பு மலராக’ வெளிவந்தது. அதில் வெளியான கட்டுரையே இது.


    தொடர்புடையவை: