Gurudevar.org
 • முகப்புப் பக்கம்>
 • இந்துமதம் வேறு! ஹிந்துமதம் வேறு!>
 • ஹிந்துமதம் பொய்யானது - III
 • ஹிந்துமதம் பொய்யானது - III

  ஹிந்துமதம் பொய்யானது - III

  இந்துமதம்-ஹிந்துமத விளக்கக் கட்டுரைத் தொடர் - 3

  இன்றைக்கு ஆயிரமாயிரம் சித்தரடியான்களும், சித்தரடியாள்களும், சித்தரடியார்களும், தொடர்ந்து முயற்சித்தும் கூட தமிழர்களே பொய்யான ஹிந்து மதத்துக்குப் பாதுகாப்புத் தருகிறார்கள். மெய்யான இந்துமதத்தை எதிர்க்கிறார்கள். இவற்றால்தான் மெய்யான இந்துமதம் பற்றியும், பொய்யான ஹிந்துமதம் பற்றியும் விளக்கியுரைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

  மெய்யான இந்துமதப் படி பதினெண்சித்தர்கள் மண்ணின் ஈசர்களான மணீசர்களின் அக, புற நாகரிகங்களையும், வாழ்வியல்களையும், பண்பாடுகளையும் மேம்படுத்த வேண்டி தங்களுக்குள்ளே ஒருவரை ‘பிறமண்’ ஆக தேர்ந்தெடுத்தார்கள். பதினெண் சித்தர்கள் அறுவை மருத்துவத்தில் சிறப்பான தேர்ச்சி பெற்றவர்கள் என்ற காரணத்தினாலே மற்ற மனிதர்களுக்கும், பிறமணுக்கும் வித்தியாசம் தெரிய வேண்டி பிறமணுக்கு அறுவை மருத்துவம் செய்து ஐந்து தலைகளைப் பொருத்தினார்கள். பிள்னர் ஈசனுக்கும் (ஈசனும் ஐந்து தலை உடையவர்) பிறமணுக்கும் அடையாளம் தெரிய வேண்டி பிறமணின் ஐந்து தலைகளிலிருந்து ஒரு தலையை அகற்றி விட்டார்கள்.

  ஆனால் பொய்யான ஹிந்து மதப்படி ‘எங்கும் வியாபிததிருந்த பிரளய ஜலத்திலே எல்லாம் வல்ல இறைவன் சங்கல்பத்தால் ஒரு தாமரை தோன்றியதென்றும்; அதிலே பிரம்ம தேவன் தோன்றினான் என்றும், அவனுக்கு நான்கு முகங்களும், நான்கு கரங்களும் உள்ளன என்றும்; மேல் வலக் கரத்தில் ஜபமாலையும், மேல் இடக் கரத்தில் கமண்டலமும் பிரம்மனுடன் தோன்றின என்றும் கூறப்படுகிறது. மேலும், திருமாலின் நாபிக் கமலத்தில்தான் அந்தத் தாமரை மலர் தோன்றியது என்றும், அதாவது திருமால்தான் பிரம்மனைப் படைத்தார்’ என்றும் கூறப் படுகிறது.

  உண்மையான இந்துமதப்படி அண்டங்களும், பேரண்டங்களும், அண்டபேரண்டங்களும் இயற்கையாகத் தோன்றின, இவைகளில் 108 திருப்பதி அண்டங்களிலும், 243 சத்தி அண்டங்களிலும், 1008 சிவாலய அண்டங்களிலும்தான் மனிதன் வாழ்கிறான்.

  பொய்யான ஹிந்து மதப்படி பிரம்மன்தான் ஈரேழு உலகங்களையும் படைத்தான் என்றும்; பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகிய மூன்று உலகங்களைத்தான் பிரமன் முதலில் படைத்தான் என்றும்; அதனின்றுதான் மகலோகம், ஜனலோகம், தப லோகம், சத்யலோகம், ஆகியவை உருவாகின என்றும் கூறப்படுகிறது.

  உண்மையான இந்து மதத்தில் உயிரினங்களும், பயிரினங்களும், இயற்கையாகவே தோன்றின. உயிரினங்களில் அங்கவியல் சாத்திரப்படி (சாமுந்திரிகா லட்சணம்) நான்கு மணீசர்களை பிறமண் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நேம, நியம, நிடத, நிட்டைகள், சுருதி, ஆரண, ஆகம, மீமாம்சை, நான்மறை, நான்முறை, நானெறிகள், நான் வேதங்கள், ….. முதலியவைகளை அவர்களுக்குக் கற்பித்து அவர்களை மனிதர்களாக்கி தன்னுடைய ‘படைப்புத் தொழிலுக்கு’ (அதாவது வாழ்வியல் இயக்கத் தேவையான கலைகள், அறிவியல்கள், விதிகள் படைத்தல்) உதவியாக வைத்துக் கொண்டார். அவர்களே சனகன், சனந்தன், சனத்சாதகன், சனத்குமாரன் என்பவராவர்.

  பொய்யான ஹிந்து மதப்படி புல், பூண்டு, செடி, கொடி, மரம், பட்சிகள், பிராணிகள் என்று தொடங்கிய பிரம்ம சிருஷ்டையில் ஒன்பதாவதாக மனிதனை உருவாக்கினார் பிரம்மன். முதலில் பிரம்மதேவன் பகவானை தியானித்து புனிதமான (4) நான்கு மனிதர்களை தன் புத்திரர்களாக தோற்றுவித்தான். சனகர், சனந்தர், சனத்சுஜாதர், சனத்குமாரர் என்ற நால்வரே முதலில் தோன்றிய பிரம்ம குமாரர்கள். தன்னுடன் இருந்து படைத்தல் தொழிலுக்கு உதவுமாறு தன் குமாரர்களை வேண்டினான் பிரம்மன். ஆனால் அவர்களோ ஆத்ம ஞானமும், தெய்வ ஞானமும் மேலோங்கிய மனிதர்களாகப் பிறந்ததால் பகவானின் சேவைக்கே தங்களை அர்ப்பணித்துக் கொண்டு தவம் செய்யச் சென்று விட்டனர் என்று கூறப்படுகிறது.

  மெய்யான இந்துமதப்படி பிறமண் தேர்ந்தெடுத்துத் தயாரித்த சனகன், சனந்தன், சனத்சாதகன், சனத்குமாரன் முதல் உகமான கிரேதாயுகத்தில் பதினெண்சித்தர் பீடத்தில் முதல் பீடாதிபதியாக இருந்த சிவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, கல்லால மரத்தின் கீழ் அமரச் செய்து, அனைத்து இந்துமதப் பேருண்மைகளையும் கற்றுக் கொடுத்து, அவர்களை நடமாடும் நூலகமாக, எழுதாக்கிளவி இலக்கியங்களின் நாயகமாக, உரிய பக்குமடைந்தவர்களுக்கு மட்டுமே இந்து மதத்தின் அரிய பெரிய உண்மைகளைக் கூறும் பொறுப்பு நாயகமாக உருவாக்கப் பட்டார்கள். இன்றைக்கும் பதினெண்சித்தர் பீடாதிபதிகள் இந்த நான்கு சனகன், சனந்தன், சனத்சாதகன், சனத்குமாரன் ஆகிய இந்துமதக் கருத்துக் கருவூலங்களோடு தொடர்பு கொண்டுதான் இந்துமதப் பேருண்மைகளைத் தெரிந்து அருளாட்சி செய்யும் மரபு இருந்து வருகிறது. இதுவே மெய்யான இந்துமதத்திலுள்ள இந்த நால்வரின் வரலாறு.

  பொய்யான ஹிந்து மதப்படி, பிரம்மனின் நான்கு புத்திரர்களும், தவம் செய்யச் சென்று விட்டதால் பிரம்மதேவன் தன் புருவங்களின் அசைவினால் மற்றொரு புதல்வனை உருவாக்கினான். அவன் நீலலோகிதன் அல்லது ருத்ரன் எனப் பெயர் பெற்றான். தந்தையின் ஆணைப்படி அவன் சிருஷ்டித் தொழிலைத் தொடங்கினான். பஞ்ச பூதங்களுக்கு அதிபதியாகி பல உயிர்களை தோற்றுவித்தான் ருத்ரன். ஆனால், அவன் சிருஷ்டியால் உடல் பலமும், ஆணவமும், ஆத்திரமும், ஆவேசமும் மிக்க மனிதர்களே தோன்றினர். எனவே, பிரம்மன் தன் மகனை அழைத்துத் தவம் செய்யாமல் நீ செய்யும் படைப்புக்களால் லோகத்திற்கு நஷ்டமே உண்டாகும்; எனவே தவம் செய்வாயாக என்று கூறி விடை கொடுத்து மீண்டும் தானே சிருஷ்டியை மேற்கொண்டார்.

  இப்படி ஆபாசக் கதைகளின் மூலமும். காட்டுமிராண்டித் தனமான கற்பனைகளின் மூலமும், அண்டப்புளுகுகளின் மூலமும் ஆரியர்கள் தமிழர்களைத் தவறான திசைக்குத் திருப்பி விடப் பார்க்கிறார்கள். எங்கே இன்றைய தமிழ்ப் பத்தர்களும், அருளுலக ஆர்வலர்களும், ஆதரவாளர்களும் … மேற்கூறிய சனகர், சனந்தர், சனத்சாதகர், சனத்குமாரர் ஆகிய நால்வருடன் பத்தியால் தொடர்பு கொண்டு அருளுலகப் பேருண்மைகளைத் தெரிந்து கொண்டு விடப் போகிறார்களோ என்ற மித மிஞ்சிய அச்சத்தாலும், பயத்தாலும்தான் ஆரியர்களான பிறாமணர்கள் இவ்விதமான கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றார்கள்.

  உண்மையில் இந்த மண்ணுலகில் பிறப்பவைகளுக்கு உரிய பணிகளைச் செய்யும் பொறுப்பை ஏற்றுச் செயல்படுமாறு செயல்பட்டவரே பிறமண் (பிற = பிறப்பிற்குரிய, மண் = இம்மண்ணுலகில்). எனவே பிற + மண் = பிறமண் என்றால் இம்மண்ணுலகில் பிறக்கக் கூடியவைகளைப் பற்றிய பணிகளைக் கவனிப்பவர் என்றுதான் பொருள். இவரும் ஒரு சித்தரே, பிறமண் என்பது ஒரு பதவிதான். இந்தப் பதவியில் அடிக்கடி விண்ணுலகச் சித்தர்களும், மண்ணுலகச் சித்தர்களும் தேவைக்கேற்ப மாறிமாறிப் பதவி வகிப்பார்கள். இதுதான் பிறமணைப் பற்றிய உண்மையான வரலாறு. இம்மண்ணுலகில் கோடிக்கணக்கான பிறமண்கள் பதவி வகித்துச் செயலாற்றியிருக்கிறார்கள்.

  இப்பதவி போன்றதுதான் சிவன், திருமால், தேவேந்திரன், இந்திரன், வருணன், இயமன், …. முதலிய அனைத்துப் பதவிகளும். அதாவது மேற்படி பதவிகளில் அமருபவர்கள் மனிதர்களாக வாழ்ந்து சத்தி, சித்தி, முத்தி பெற்ற பெரியோர்களும், விண்ணுலகத்தவர்களும் பொறுப்பேற்பதுதான் வழக்கம். இதுவே உண்மையான இந்துமத வரலாறு. இதில் கற்பனையோ, ஆபாசமோ, பொய்யோ இல்லை.


  தொடர்புடையவை: