இந்த மெய்யான இந்துமதம் பற்றிய உண்மைகளை முதலில் தமிழர்கள், பின் இந்தியர்கள் புரிந்து கொண்டால் இன்றைக்கு இருக்கும் அனைத்து விதமான போராட்ட நிலைகளும், ஆதிக்க நிலைகளும், பொருள் ஆதாரம் பற்றிய மயக்க நிலைகளும், குழப்ப நிலைகளும், கேவலங்களும், அவலங்களும், … உலக அளவில் அகன்று விடும்.
எனவேதான், கி.மு.43,71,101இல் இந்துமதத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கிய பதினெண்சித்தர் பீடாதிபதிகளே காலங்கள் தோறும் தோன்றித் தோன்றி இந்துமதம் மறுமலர்ச்சி, வளவளர்ச்சி, வலிமைமிகு ஆட்சிமீட்சி,… முதலியவைகளை நிறைவேற்றும் இந்துமதத் தந்தையாக, உலக மானுட நலக் காவலராக விளங்குகின்றனர்.
இந்தப் பதினெண்சித்தர் பீடாதிபதிகள் வழியில் 11 பதினெண்சித்தர் பீடாதிபதிகளுக்குப் பின் இராசிவட்ட நிறைவுடையாராக திருத்தோற்றம் நல்கியவரே ஞானாச்சாரியார் குருதேவர் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள். (கி.பி.1936 -). இவர் கருவிலேயே பெற்ற திருவுடன் இலைமறை காயாகவே செயல்படுகின்றார்.
“… தனிமனிதன் செம்மைப்பட்டால்தான் அக் குடும்பமே செம்மைப்படும். ஒரு குடும்பம் செம்மைப் பட்டால்தான் ஒரு சமூகமே செம்மைப்படும். ஒரு சமூகம் செம்மைப் பட்டிட்டால் அந்த இனத்தின் அனைத்துப் பிரிவு மக்களுமே செம்மைப் பட்டிடுவர். அப்படி ஓர் இனம் செம்மைப் பட்டிட்டால்தான் படிப்படியாகப் பல இனங்களும் செம்மைப்பட்டு உலகமே செம்மைப் பட்டிடும்…….. அதனால்தான் பதினெண் சித்தர் பீடாதிபதிகள் காலங்கள் தோறும் தோன்றி இம்மண்ணுலக மூல இனமும் முதல் இனமுமான தமிழினத்தைச் செம்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறார்கள். இப்படித்தான் உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டையும்; மானுட நல மேம்பாட்டையும்…….. படிப்படியாக உருவாக்கியே உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயத்தைத் தோற்றுவிக்க முடியும். அதுவே, விண்ணும் மண்ணும் இணையும் நிலை. …….அந்நிலைக்காகவே கலியுகத்தில் இந்து மறுமலர்ச்சி இயக்கம் தோற்றுவிக்கப்படுகின்றது……..”
- பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞாலகுரு சித்தர் காவிரி ஆற்றங்கரைக் கருவூறாரின் (கி.பி.785-கி.பி.1040) குருபாரம்பரிய வாசகம்.
தமிழர்கள்தான், இம்மண்ணுலகின் அருளுலக வாரிசுகள், வழிகாட்டிகள், தத்துவ வித்துக்கள்…… தமிழினம் குறையும்போது அருளுலகம் இருண்டு போகும், வறண்டு போகும். அநீதி அரசாட்சி செய்யும். திருடர்கள் காவலர்களாக இருப்பார்கள். அயோக்கியர்கள் நீதிபதிகளாக இருப்பார்கள்.
- சித்தர்களின் அருள்வாசகம், மருள்வாசகம்
இன்றைக்கு நாட்டு நடப்பில் எல்லோரும் சித்தர்கள் என்றவுடன் நினைவு கூரும் அகத்தியர், திருமூலர், இடைக்காடர், போகர், புலிப்பாணி, அகப்பையர், பாம்பாட்டிச் சித்தர், தேரையர், குதம்பையர், சட்டைநாதர் … என்ற பட்டியலில் உள்ளவர்கள் மூலப் பதினெண்சித்தர்கள் அல்லர். இவர்கள் அனைவரும் மற்ற 48 வகைச் சித்தர்களாவர்.
“குருபாரம்பரியம் குறிக்கும் தென்பாண்டித் தமிழன், ஞானசித்தன், உச்சிக்குடுமியான், வெள்ளாடையான், மந்திர சித்தியான் ஆதிசங்கரன் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். ஆதிசங்கரன் முதலாம் விசயாலயனின் அருளாட்சி முயற்சிக் காலத்தில் வாழ்ந்தவன்.”
“உலகம் முழுவதும் அருளாட்சி அமைக்க ‘அற்புதங்களை’, ‘மாயங்களை’, ‘வியப்புக்களை’, ‘இயற்கை யிறந்த செயல்களை’, ‘அதிசயங்களை’, … செய்வதன் மூலம் முயற்சித்த ஈசா மாண்டார், மீண்டார், அருளாளர்களை ஆண்டார்…”
-- குருபாரம்பரியம்.
பெரியார் ஈ.வெ.ரா. மத மறுமலர்ச்சிக்காக மதச் சீர்திருத்தத்தை மாபெரும் புரட்சிப் போக்கில் நிகழ்த்திட்டார். அதனால் வழிபாட்டுக்கு உரிய கடவுளர் சிலைகளை உடைத்தார். படங்களை அவமானப்படுத்தினார். கடவுளே இல்லையென்று கூறினார். அவர் அந்த அளவுக்குத் தீவிரமாக, வீரமாக மதச் சீர்திருத்தத்தைச் செய்ததால்தான் மதவாதிகள் பாழடைந்த கோயில்களைப் புதுப்பிக்கவும், பழைய பழக்க வழக்கங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் புத்துயிர் கொடுக்கவும் ஆரம்பித்திட்டார்கள்.