(1987இல் எழுதப்பட்டது)
‘இயக்கத்தின் முன்னாள் இருபெரும் தலைவர்களும், பதினெண்சித்தர் பீடாதிபதிகளுக்குரிய பயிற்சிகளையோ, முயற்சிகளையோ முழுமையாகப் பெறாதவர்கள். நானோ, இம்மண்ணுலகம் முழுவதும் பதினெண்சித்தர்கள் உருவாக்கிய அருளூற்றுக்களை வழிபட்டு பத்தி, சத்தி, சித்தி, முத்தி பெற்றிடவும் பதினெண்சித்தர் கலைகளில் பயிற்சியும் முயற்சியும் பெற்றிடவும் 36 ஆண்டுகள் கடுமையாக அலைந்து திரிந்து பலகோடியனுபவங்கள் பெற்றவன். இம்மண்ணுலகில் அருளாட்சி அமைக்கத் தோற்றுவிக்கப்பட்டவரான யாம், நோற்றிருக்கும் புரட்சிப் பாதையின் கொள்கைகளை, சீர்திருத்தக் கருத்துக்களை கூறப் புகுவேனானால் இன்றைய நிலையில் நாட்டிலுள்ள தலைமைச் சத்திகளால் அவற்றைச் சகித்துக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை? ஏனென்றால், புத்தரைப் போலவோ மகாவீரரைப் போலவோ ஒரே நாளில் ஞானம் பெற்றவரல்ல யாம்.
ஏனெனில், யாம் காடுகளிலும், கடலிடைத் தீவுகளிலும், மலைகளிலும், குகைகளிலும் கண்ட எத்தனையோ இருடிகளிடமும், முனிவர்களிடமும், தவசிகளிடமும் தொண்டராக இருந்தே தத்துவங்களை எப்படிச் செயலாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்தோம். ஏனெனில், யாம் வழங்கப் போவது அனைத்தும் எம் முன்னோரால் காலங்காலமாகக் காக்கப்பட்டு வரும், வளர்க்கப்பட்டு வரும் அல்லது பாதுகாக்கப்பட்டு வரும் ஞானக் கலைக் கருவூலச் செல்வங்களேயாம். இவற்றை யாம் சம்பாதிக்கவுமில்லை, உருவாக்கவும் இல்லை.
அதாவது ஏற்கனவே வெட்டப்பட்டுள்ள கிணற்றிலிருந்து நீரை இறைத்துத் தருபவரைப் போன்றவரே யாம். இந்த அருள்நீரை இறைத்துத் தரப் பயன்படுத்தும் சாதனமும், முயற்சியும்தான் எமது பயிற்சிகளும், முயற்சிகளும். இந்த நீரில் -- அருள்நீரில் விளையப் போகும் பயிர்கள்தான் தமிழக மக்கள். இவ்வருட்பயிர் விளைவதற்குரிய நாற்றங்கால்தான் இத்தமிழகம். இன்றும் கூட யாம், இன்னும் அருளுலக மாணவனாகவே தாத்தாக்களாலும், ஆத்தாக்களாலும், உலக அருளாளர்களாலும், அம்மையப்பன்களாலும் பயிற்றுவிக்கப் படுகின்றேன்.
அந்த நிலையில் இருக்கக்கூடிய யாம் எம்முடைய கருத்துக்களைக் கூறப் புகுவேனாகில் அவை மிகக் கடுமையாகவும், கொடுமையாகவும் சிலநேரத்தில் பச்சையாகவும், கொச்சையாகவும் கூட இருக்க நேரிடும். என்னோடு அல்லும் பகலும் உடனிருந்து பயிற்சி பெறும் சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்களாலேயே எம்மை முழுமையாக உணர முடியாதபோது இந்தச் சமுதாயம் எங்ஙனம் எம் கொள்கைகளை விரும்பி யேற்கப் போகின்றது?’