Gurudevar-yaar
 • முகப்புப் பக்கம்>
 • குருதேவர் யார்?>
 • சாதனை
 • சாதனை

  சாதனை

  சோதனை + வேதனை ≡ சாதனை

  குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் பதினெண்சித்தர் பீடம், மடம்.(குருதேவர் அறிக்கையில் வெளியிடப்பட்ட ‘முன்னுரை’யிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள்)

  நிறை யக்ஞர்

  ... ... ... யாம் தனித்த எம் முயற்சியிலும் ஈடுபடாமல் தகுதியுடையார் எவர் கிடைத்தாலும் சரி, அவர்களை யெல்லாம் ஒன்றுதிரட்டி, ஒற்றுமைப்படுத்தி, ஒருமுகப்படுத்தியே செயல்படுத்துகிறோம். இருந்த போதிலும் எமக்குக் கிடைக்கக் கூடியவர்களின் தரம், திரம், தீரம், திறம், ... முதலிய பண்புநலன்களையும்; கொள்கைப்பற்று, குறிக்கோள் பிடிப்பு, செயல் உறுதி, தலைமையிடத்துள்ள அசைக்க முடியாத அளக்க முடியாத நம்பிக்கை, தலைமையின் ஆணையைச் சொந்த பந்தப் பாச உணர்வுகளுக்கும், உலகியலின் மதிப்பீடுகளுக்கும், பிறரின் ஒப்புதல்களுக்கும் அப்பாற்பட்டு உடனுக்குடன் அப்படியே செயலாக்கிடும் செயலூக்க வீரம், ... முதலிய அரிய சீரிய பெரிய நேரிய ஆற்றல்களையும் ... காலப்போக்கில் எடையிட்டே ஒவ்வொருவரிடமும் அவரால் செய்ய இயலக் கூடிய பணியினை ஒப்படைத்து வருகிறோம்.

  எனவேதான், இந்து மறுமலர்ச்சி இயக்கத்தையும் அதன் கீழுள்ள பதினெட்டுக்கும் மேற்பட்ட நிறுவன நிர்வாகங்களையும் இமயம் முதல் குமரி வரையுள்ள பரந்த இந்துமத இந்தியாவுக்குள் மட்டும் வளர்க்காமல்; இம்மண்ணுலகிலுள்ள எல்லாநாடுகளிலும் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்துக் கூட வளர்த்து வருகிறோம் யாம். இதனால்தான், ‘உலக ஆன்மநேய ஒருமைப்பாடு’, ‘உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம்’, ‘உலக இன விடுதலை இயக்கம்’, ‘உலக மொழி விடுதலை இயக்கம்’, ‘உலகப் பண்பாட்டு விடுதலை இயக்கம்’, ‘உலகமத விடுதலை இயக்கம்’, ... என்பனவற்றை எல்லாம் எம்மால் கொள்கை அளவோடு நிறுத்திடாமல், செயலளவில் நுண்மையாகவும் திண்மையாகவும் அமைதியாகவும் நிதானமாகவும் நிறைவேற்றிட முடிகின்றது.

  1.   எமது வெற்றி தனிமனித வெற்றியாகாது!
  2.   யாம், தனிமனிதரல்ல! ஒரு மாபெரும் உலக இயக்கம்!
  3.   யாம் எம் காலத்து உலக வரலாறாகவே வாழுகிறோம்! வளருகிறோம்!
  4.   யாம் மனித இனத்தின் உயிர்த் தத்துவ வித்துக்களின் விதைப் பண்ணையாவோம்!
  5.   யாம் தமிழ்மொழி, இனம், நாடு எனும் முக்கோணச் சத்தி பீடத்தின் சீவனாவோம்!
  6.   யாம், தமிழின விடுதலையே இந்துமத விடுதலை என்ற தத்துவத்தின் மெய்ப்பொருளாவோம்!
  7.   யாம் தமிழ்மொழி அண்டபேரண்டமாளும் அருளுலக ஆட்சிமொழி என்ற உண்மையின் சான்றாவோம்!
  8.   யாம், மதமே மானுடத்தின் துய்ப்புக்கும், தூய்மைக்கும், வாய்மைக்கும், உய்வுக்கும் வழியென்ற தத்துவத்தின் விளக்கமாவோம்!

  ... (விரிவஞ்சி இவ் வாசகங்களை இவ்வளவில் நிறுத்துகிறோம்)

  இப் பேருண்மைகளை எடுத்துச் சொல்லியும், எமக்குக் கிடைப்பவர்கள் மூலம் செயலாக்கியுமே வாழுகிறோம்.

  நிறை யக்ஞர் இப்படி யாம் மாபெரும் அரிய சீரிய பெரிய நேரிய ... பணிகளுக்காக மாவீரர்களையும், அருட்படைத் தளபதிகளையும், அருட் பட்டாளத் தளபதிகளையும், அருட்சேனைத் தளபதிகளையும், அருட்பணித் தலைமை அலுவலர்களையும், அதிகாரிகளையும், ... தயாரிக்கும் மாபெரும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்.... எனவேதான், யாம் உலகியல் மறந்தும், துறந்தும், மறுத்தும், வெறுத்தும், கடந்தும், அப்பாற்பட்டும், ... பலவகையான கடுமையான, கொடுமையான ... சோதனைகளை எல்லாம் செய்து உரியவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்.

  இதனால், எண்ணற்ற வேதனைகளையும், மிகமிகப் பெரிய தோல்விகளையும், எதிர்பாராத ஏமாற்றங்களையும், போக்கிட இயலாத ஏக்கங்களையும் ... பெற்றிட நேரிடுகின்றது. இருந்தாலும் யாம் 1992-96க்குள் நிகழ இருக்கும் அருளாட்சி அமைப்புப் பணிக்காக விரல்விட்டு எண்ணக் கூடிய தளபதிகளை; அலுவலர்களை, அதிகாரிகளை, மாவீரர்களைத் தயாரித்தேயாக வேண்டும்! தயாரித்தேயாக வேண்டும்! தயாரித்தேயாக வேண்டும்!

  ஒருவேளை எம்மால் யாம் எதிர்பார்க்கக் கூடிய பக்குவமுள்ளவர்கள் போதுமான அளவு தயாரிக்க முடியாமற் போகுமேயானால், அதற்காக யாம் ஏக்கமோ, ஏமாற்றமோ அடையமாட்டோம்! அடையமாட்டோம்!! அடையமாட்டோம்!!! அடையவே மாட்டோம்!!!! அதாவது, யாம், எமக்குக் கிடைத்துள்ளவர்களை யெல்லாம் அவரவர் பக்குவத்துக்கும், ஆற்றலுக்கும், ஆர்வத்துக்கும், நம்பிக்கைக்கும், ... ஏற்பப் பலவகைகளாகப் பகுத்துப் பட்டியலிட்டு எண்ணற்ற சிறிய பெரிய அணிகளையும், குழுக்களையும், தனிமனிதச் செயல்நிலைகளையும் உருவாக்கிடுவோம்.

  அப்படி உருவாக்கப் பட்டவைகளிடம் அருளாட்சி அமைப்புப் பணியின் பல்வேறு வகையான பொறுப்புக்களில் உரிய உரிய பொறுப்புக்களைத் தேர்ந்தெடுத்தே ஒப்படைப்போம். அதிலும், பல பேராற்றல் மிக்க நல்லவர்களை அருளாட்சி அமைந்த பிறகும் அருளாட்சி சிறந்திட எப்படி யெப்படி உழைக்க வேண்டும் என்பதற்குரிய பயிற்சிகளையும் இந்த அருளாட்சி அமைப்புப் பணியின் போதே பெற்றிடும்படிச் செய்திடுவோம். எனவே, யாம் எக்காரணம் பற்றியும் ஒரு சிறு துரும்பைக் கூட, அதாவது ஒரு சாதாரண மனிதரைக் கூட வீணாக்கிட மாட்டோம், வேண்டாமென்று ஒதுக்கிட மாட்டோம்! மாட்டோம்! மாட்டோம்! மாட்டவே மாட்டோம்!

  ஆனால், இரகசியம் காக்கும் பண்பும், எல்லோருடனும் ஒத்துப் போய் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென்ற உண்மையான உள்ளுணர்வும்; தலைமையைத் தன்னுயிரென மதிக்கும் கருத்தும்; என்றைக்கும் கொள்கைக்கோ குறிக்கோளுக்கோ துரோகமோ விரோதமோ பெற்றிடாத சிந்தைத் தெளிவும்; இறுதி வரை உறுதியுடன் போராடும் நெஞ்சுரமும்; அருளுலக ஏட்டறிவும், பட்டறிவும் போதுமான அளவு பெற்றவரும், ... என்று சிறப்புத் தகுதிகளைப் பெற்றவர்களே இயக்கத்தின் உயிரோட்டமாகவும், முன்னோட்டமாகவும், மூல அணிச் சத்தியாகவும் செயல்பட அநுமதியும் ஒப்புதலும் பெற்றிடுவர். அதற்குத் தாத்தாக்கள் ஆத்தாக்கள், அம்மையப்பன், தேவிகள், ... முதலானோர்களின் பரிந்துரையும் முடிவுமே ஏற்கப்படும். இதுபற்றி எல்லோரும் புரிந்து கொள்ள இயலாது! இயலாது! இயலாது! இயலவே இயலாது! ஏனெனில், நமது இயக்கம் அருளாளர்களின் ஆணைகளால் இயங்கும் ஒன்றாகும்.

  யாம் இவ்வளவு தூரம் எம்மையும், எமது செயல்நிலைகளையும் பற்றி; தன்னிலை விளக்கம் கொடுப்பது பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும். ஏனெனில், நம்மவர்களுக்கிடையில் தனித்தனிக் குழு மனப்பான்மை (Groupism), தனிமனித ஆதிக்கங்கள் (Individual command), தேவையில்லாத போட்டி பொறாமைகள், சிலருக்கு மட்டும் குருதேவர் அதிகச் சலுகையும், ஆதரவும் தருவதாக வருத்தம்; பலர் குருதேவர் பிறரின் புகார்களை நம்பித் தம் மீது நடவடிக்கைகள் எடுக்கப் பட்டதாக வருந்துவது; பலர் தங்களுக்குக் கண்டிப்புக்களும், தண்டனைகளும் வழங்கப் பட்டதைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் வருந்துதல், பலர் தங்களுடைய உழைப்புக்கும், ஊக்கத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் ஏற்ற பயன் கிடைக்க வில்லையே என்ற ஏக்கமும் ஏமாற்றமும் பெற்றிருத்தல் ... சிலர் தங்களால் முழுமையாகக் குருதேவரின் ஒப்புதலையும், ஏற்புதலையும் எதிர்பார்த்த அளவு விரைவில் பெற முடியவில்லையே என எரிச்சலும், புகைச்சலும் அடைந்திருத்தல், ... என்று பல்வேறு நிலையினர் இருக்கின்றனர்.

  இவர்கள் அனைவரிடமும் முதற்கண் எமது வருத்தத்தையும் ஆழ்ந்த பரிகார நோக்குடைய மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம் யாம். இதைத் தவிர வேறு வழியில்லை. அனைவரும் எமது அன்புக்கும், பற்றுக்கும், பாசத்துக்கும், மதிப்பிற்கும், வாரிசுநிலைக்கும் உரியவர்கள்தான். யாம் எல்லோரையுமே உலகியல் கடந்து, எந்த பீடாதிபதியும் செயல்படாத அளவு அச்ச கூச்ச இச்சை மாச்சரிய நிலைகளை வென்று எமது உரிமை வாரிசுகளாக்கவே முயலுகிறோம். ஆனால், ஏறத்தாழப் பெரும்பாலானவர்கள் தங்கள் தங்களின் சொந்த விருப்பு வெறுப்பு கற்பனை கருத்து சூழல் ... முதலியவைகளுக்கேற்ப எமக்குத் தொடர்ந்து சிறிய பெரிய தோல்விகளையும், சோதனைகளையும், வேதனைகளையும் நல்கிடுகிறார்கள்.

  நிறை யக்ஞர்ஆனால், யாமோ மகிழ்ச்சி மிகுந்த நிதானத்தோடும், அமைதியோடும் அனைத்தையுமே எமது சோதனை முயற்சிகளின் சாதனைப் பட்டியலில் குறித்து வைத்து; எமது வாழ்க்கையைச் சுவைமிக்க வரலாறாகவும், இலக்கியமாகவும் வளர்த்து வருகிறோம்.

  இவற்றை யெல்லாம் எண்ணிப் பார்த்து; நம்மவர்கள் அன்புகூர்ந்து தங்களுடைய வெற்றி தோல்விகளுக்காகத் தங்களின் தலைவர், வழிகாட்டி, வழித்துணை, ... என்ற நிலையில் இருக்கும் குருதேவரிடம் வருத்தப் பட வேண்டாம் என்ற வேண்டுகோளை மட்டும் விடுத்துக் கொள்ளுகின்றோம். எமது வாழ்வின் குறிப்பிட்ட நொடிகள் ... பல பெரிய பெரிய வீர காவியங்களாகும் தன்மையினை உடையவை. பாரதகாலக் கண்ணனை விட, யாம், எமது கொள்கை, குறிக்கோள், செயல்திட்டம் முதலியவைகளுக்காகவே வாழுகிறோம் என்பதைப் புரிந்து கொண்ட பலர் நம்மிடையே இருக்கிறார்கள்.

  அந்த நல்லவர்கள் யாம் மானுடவியல் கடந்தும், உலகியல் கடந்தும் இரவுபகலாகப் பாடுபட்டுக் கொண்டே இருப்பதால்தான் அருளுலகச் சாதனைகள் மிகுந்து எதிர்பார்ப்புக்கு அதிகமாகவே அருளாட்சி அமைப்புப் பணி எண்ணற்ற வெற்றிகளைப் பெற்று வருகின்றது என்ற பேருண்மைக்கு என்றென்றும் சான்றாகவும், ஊன்றாகவும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே நிறைவு காணுகிறோம். அனைவரும் ஒற்றுமையுடனும், ஒருமைப்பாட்டுடனும் தலைமைக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட்டிடல் வேண்டுமென்ற வேண்டுகோளை விடுத்து இம் முன்னுரையை நிறைவு செய்கிறோம் யாம்.


  தொடர்புடையவை: