Gurudevar-yaar
 • முகப்புப் பக்கம்>
 • குருதேவர் யார்?>
 • அருட்புரட்சி முயல்பவர்
 • அருட்புரட்சி முயல்பவர்

  அருட்புரட்சி முயல்பவர்

  அன்புச் சேவுக!

  (அச்சிட்ட குருதேவர் அறிக்கை எண்:14இலிருந்து.)

  அன்புச் சேவுக! யாம் சாதாரணச் சித்திகளைப் பெற்ற அருளாளர்களைப் போல் அரசயோகிக் கருவூறார்ஓரிடத்திலமர்ந்து கொண்டு எம்மைக் காண வருகிறவர்களை எம்முடைய அருள் எல்லைக்குள் கொண்டு வந்து அவர்களுடைய அக, புற போராட்டங்கள் தற்காலிகமாக அமைதியடையும்படிச் செய்து செயல்பட்டிட்டால் இந்நேரம் உலகம் முழுவதும் எமக்கென ஒரு பெரிய மாபெரும் கூட்டத்தையும் எண்ணற்ற அமைப்புக்களையும் பெற்றிருக்க முடியும். ஆனால், யாம் அப்படிப்பட்ட மாயா நிலைச் செயல் புரிந்து எம்மை மட்டும் வளர்த்துக் கொள்ள விரும்பியதே இல்லை.

  எனவேதான், யாம், இம்மண்ணுலகில் இதுகாறும் தோன்றிட்ட அனைத்து வகையான அருளாளர்களின் வாழ்வியல்களையும் சாதனைகளையும் இணைத்துப் புதுமைப்படுத்தி உலகந்தழுவிய நிலையான நன்மைகளை விளைவிக்க ‘அருட்புரட்சி’ முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நிலத்திலிருந்து தங்கம் கலந்து மண்ணை வெட்டியெடுத்துக் குவிப்பது போல்தான் இதுவரை உலக அருளாளர்கள் அண்டபேரண்டத்துள் புதைந்து கிடக்கும் அருட்சத்திகளை வெளிக்கொணரும் முயற்சியில் மட்டுமே தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சென்று விட்டார்கள். அவர்கள் செய்யாதது தங்கத் தாதுகளை ஒன்று திரட்டி கட்டித் தங்கத்தை உருவாக்குவதும் அப்படி உருவாக்கிய தங்கத்தை உலக மக்களின் நல்வாழ்விற்குப் பயன்படும்படிச் செய்வதும் போன்று தங்களுடைய வாழ்வின் சாதனைகளை வடிவமைப்புப் படுத்தி என்றென்றும் அருட்சத்தி மக்களின் நன்மைக்கு பயன்படும்படியான செயல்திட்டத்தை வகுக்காமல் சென்றதால் இக்குறையை நிறைவு செய்யவே இவ்வியக்கத்தைத் துவக்கிச் செயல்படுகின்றோம். இதுதான் எமது தத்துவம், குறிக்கோள், சட்ட திட்டம்.

  அன்பு நண்ப! அருளுலகில் மாணாக்கர்கள் குருவைத் தேடிக் கண்டு பிடித்தாலும் அக்குருவின் பின்னால் பலகாலம் அலைந்து பலவாறு தொண்டுகள் புரிந்து அதன்பிறகே குருவின் அருளைப் பெறுவதென்பதே மிகப்பெரிய மரபாக இருந்து வருகின்றது. இதே நேரத்தில் அருளுலகில் ஒருசில குருமார்கள் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் தேடியலைந்து விரல்விட்டு எண்ணக்கூடிய சில மாணாக்கர்களை மட்டுமே உருவாக்கி அருள் வழங்கித் தங்களின் நினைவாகப் புதியதொரு கூட்டத்தை உருவாக்கிச் சென்று விடுவதும் மரபாக இருக்கின்றது.

  யாம், இப்படிப்பட்ட அருளுலகில்தான் பாரம்பரியமாகப் பெற்ற அருளையும் பயிற்சிகளாலும் முயற்சிகளாலும்; கல்வி கேள்வித் தொண்டுகளாலும், … பெற்றிட்ட அருட்செல்வங்களையும் இப்புவிப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளுக்கு தலைமேல் தூக்கிச் சென்று கூடைக்காரி போல் ‘அருளோ அருள்’ என்று கூறி வாரிவாரி மலிவுவிலைக்கு வழங்கிப் பார்த்துவிட்டு; இந்தியத் துணைக்கண்டத்திலும் இதனைச் சார்ந்த நாடுகளிலும் உள்ளவர்களுக்கு தாங்கள் அறிய கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இனாமாகவே வழங்கி விட்டோம். தம்மையும் புரியாமல், எம்மையும் புரியாமல் சிறுபிள்ளைத் தனமான செயல்களில் ஈடுபட்டு வீணாகிக் கொண்டிருக்கும் அருளுலக மாணாக்கர்களை எண்ணி வருந்துகிறோம்.

  உலக மதங்களுக்கெல்லாம் மூலமாகவும், தாயாகவும் இருப்பது இந்துமதமே. இந்துமதத்துக்கு மூலமாகவும் தாயாகவும் இருப்பது தமிழினமே. எனவேதான், நமது இனமக்களான தமிழர்களை அருளுலகத் தலைவர்களாக உருவாக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளோம் யாம். ஆனால், நம்மவர்கள் ஊசலாட்டம் மிகுதியாக உடையவர்களாக இருக்கிறார்கள். இதனால், இவர்கள் சில அடிகள் முன்னோக்கி நடந்த உடனேயே பயந்து பல அடிகள் பின்னோக்கி நடந்து விடுகிறார்கள். அதாவது, எல்லா மதவாதிகளையும் போல நமது இயக்கச் செயல்திட்டங்கள் வெறும் பொழுது போக்குக்குரியனவைகளாகவோ குறுகிய வட்டாரத்தார்களுக்கு மட்டுமே பயனளிக்கக் கூடியவைகளாகவோ, ஆரிய வேதநெறிக்கு அடிமைப்பட்டதாகவோ இல்லை என்பதனால்தான் குருட்டு மதவாதிகளும், தன்னல வெறியர்களும், சந்தர்ப்ப வாதிகளும் விலகிச் செல்கின்றனர். எனவே, களைகள் களைவதைப் பற்றி கவலையடைய வேண்டாம்.

  அன்பு ஞாலகுரு சித்தர் கருவூறார்

  தொடர்புடையவை: