Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • அன்பு சேவுக!>
  • அருளுலக தேர்ச்சி முறை
  • அருளுலக தேர்ச்சி முறை

    அருளுலக தேர்ச்சி முறை

    அருளுலகப் பயிற்சி முயற்சி தேர்ச்சி முறை விளக்கம் - (தொடர்ச்சி)

    அன்புச் சேவுக!

    அனாதி காலத்து, விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த மனிதனுக்கு விண்வெளியிலிருந்து வந்திட்ட பதினெண் சித்தர்கள் ஆரம்ப கட்டத்தில் வழங்கிய அதே பயிற்சிகளையும், முயற்சிகளையும் வழங்குகிறோம் யாம்.

    அதாவது எதையுமே அநாகரீகமானது, உலகியலுக்கு அப்பாற்பட்டது, அச்ச கூச்ச மாச்சரியங்கள் உள்ளது, கடுமையானது என்று மறைத்தோ, குறைத்தோ, அஞ்சியோ, கெஞ்சியோ செயல்படுத்தாமல் ஏறத்தாழ அனைத்தையுமே பச்சையாகவும் கொச்சையாகவும் செயல்படுத்தி வருகிறோம் யாம். இதனால் விளைகின்ற நலிவு மெலிவுகளைப் பற்றியோ, சிதைவு இழப்புக்களைப் பற்றியோ கவலைப்படாமல் செயல்பட்டு வருகிறோம் யாம் இதுவரை. எனவேதான், யாம், எம்மிடம் ஒரு நொடிப் பொழுது பழகிவிட்டுப் பிரிந்தவர்களானாலும் சரி; அவர்கள் எம்மை மறக்கவோ, துறக்கவோ முடியாதவர்களாகவே வாழுகின்றார்கள் என்ற சாதனையைச் சாதித்திருக்கிறோம் யாம்.

    நண்ப! நம்மவர்களில் சிலர் யாம் அதிகமாகச் சித்து வேலைகளையும், அற்புதங்களையும், மாயங்களையும் செய்தால்தான் நமக்கு விரைந்த வளர்ச்சி ஏற்பட முடியும் என்று நம்புகிறார்கள், அப்படிப்பட்ட வளர்ச்சி விரைவில் தோன்றி அழியும் காளானின் வளர்ச்சியைப் போன்றதேயாகும். மேலும் இயற்கை கடந்த செயல்களைக் கண்டு வியந்து நமக்குச் சேருகின்ற கூட்டம் புற்றீசல்களைப் போல் அல்லது பட்டாம்பூச்சிகளைப் போல விரைவில் செயல் ஒடுங்கிப் போய்விடும். இக்கருத்தை, யாம், ஆழமாகவும், வலிமையாகவும் எடுத்துரைப்பதற்குக் காரணம் பதினெண் சித்தர்களின் தலைவரான சிவபெருமான் அறுபத்து நான்கு முறைகள் நேரில் தோன்றித் திருவிளையாடல்கள் புரிந்தும், அறுபத்துமூன்று நாயன்மார்களை அனுப்பி அற்புதங்களையும், மாயங்களையும், சித்துக்களையும் செய்து காட்டியும் கூடத் தமிழ் மொழியின் அருளுலக ஆட்சிநிலை நிலைத்து நிற்கவில்லை! மெய்யான இந்துமதம் நிலையான வாழ்வைப் பெறவில்லை.

    பதினெண் சித்தர்களின் நேரடி வாரிசான தமிழர்களுக்கிடையில் ஒற்றுமையும், பற்றும், பாசமும், கட்டுப்பாடும், ஒருமைப்பாடும், உரிமை உணர்வும், பண்பாட்டுப் பெருமித உணர்வும் நிலை குலையாமல் நிற்க முடியவில்லை, எனவேதான், யாம் சித்தர்களுக்கே உரிய ‘சித்துக்கள் அனைத்தையும் தனித்தனியே கடந்த நிலையில்’ தொடர்ந்து வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம். யாம், இம்மண்ணுலகின் மூலத் தத்துவத்தின் பாரம்பரிய நாயகமாகத் தோன்றியிருக்கிறோம். எம்மைப் போல் இன்னும் முப்பத்தாறு (36) பேர்கள் தோன்ற இருக்கிறார்கள். எனவேதான் யாம், கூறுவதைக் கூறுவோம் செய்வதைச் செய்வோம்; நடப்பது நடக்கட்டும் என்று நிதானமாக, அடக்கமாக, பொறுமையாக, பொறுப்பாகச் செயல்பட்டு வருகிறோம்.

    நண்ப! யாம் எந்தத் தனிமனிதரையும் உயர்த்தவோ தாழ்த்தவோ, ஒதுக்கவோ பதுக்கவோ, அடக்கவோ அடக்காமல் விடவோ முற்படவில்லை, முற்படவில்லை, முற்படவில்லை, முற்படவில்லை ஏனென்றால்,‘கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த சொல்லும் நெடுநாட்களுக்கு நிலைத்திருக்க மாடடா’ என்ற மூதுரையை நம்புகிறவரே யாம். அதாவது யாரும் யாரையும் உயரத்தில் தூக்கி நிறுத்தவோ, அல்லது முதன்மையாக விளம்பரப் படுத்தியோ வளர்த்துவிட முடியாது’ வளர்த்துவிட முடியாது! வளர்த்துவிட முடியாது! வளர்த்துவிடவே முடியாது! இதே போல் யாரும் யாரையும் அடக்கியோ, ஒடுக்கியோ மறைத்தோ, குறைத்தோ வளருவதைத் தடுத்துவிட முடியாது’ தடுத்துவிட முடியாது! தடுத்துவிட முடியாது! தடுத்துவிடவே முடியாது’ எனவே நம்மவர்கள் அச்சிட்டு வழங்கப் பட்டுள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும், கையெழுத்துப் பிரதிகளாக இருக்கின்ற எண்ணற்ற கட்டுரைகளையும், அஞ்சல்களையும், நூல்களையும் தேடிப் படித்துத் தங்கள் தங்களின் விருப்பத்திற்கும். ஆற்றலுக்கும் ஏற்பப் பயிற்சி முயற்சிகளைச் செய்து தேர்ச்சிகளைப் பெறுமாறு வேண்டுகோள் விடுத்துக் கொள்கிறோம் யாம்.

    தலைவர். குருதேவர்,
    ஞானாச்சாரியார்,

    (குருதேவர் அறிக்கை 33இலிருந்து)

    தொடர்புடையவை: