Gurudevar.org
 • முகப்புப் பக்கம்>
 • அன்பு சேவுக!>
 • தத்துவத் தலைமை
 • தத்துவத் தலைமை

  தத்துவத் தலைமை

  நமக்குத் தனிமனிதத் தலைமை கிடையாது; தத்துவம்தான் தலைமையேற்கும்

  அன்புச் சேவுக!

  உனக்கு யாமெழுதியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஞ்சல்கள் நம்மிருவரின் தோழமையையும், நட்பையும் மட்டும் விளக்குவனவாக இல்லை. இவை, வரலாற்று முதன்மையும், சிறப்பும் புகழும் பெறுபவை இவை, இந்தப் புவிப்பரப்பின் அறியாமை, புரியாமை, தெரியாமை, இயலாமை, இல்லாமை, கல்லாமை, பொல்லாமை, மாயை, மயக்கம், குழப்பம், கலக்கம் ….. முதலிய அனைத்தையும் தெளிவுபடுத்தும் ஒளிப்பெருஞ்சுடராக அருட்பெருஞ்சோதியாக! கோடைகாலப் பகலவனின் ஒளியாக! ….. விளங்குகின்றன. இருந்தும், நம்மவர்களிலேயே பெரும்பாலானவர்கள் விடுக்கப்படும் அஞ்சல்களின் பொருளாழத்தைப் புரிந்து கொள்ளாமல் புலம்புவர்களாக இருக்கிறார்கள்.

  நண்ப! முன்பெல்லாம் தி. க. வில் பெரியார், அறிஞர் அண்ணா. நாவலர் நெடுஞ்செழியன் கலைஞர் கருணாநிதி ….. போன்றவர் பொதுக்கூட்டம் பேச வந்தால்; கூட்டத்துக்குப் பல மணிநேரத்துக்கு முன்பிருந்தே கொள்கை விளக்க நூல்கள், உலகப் பேரறிஞர்கள், மாவீரர்கள், புரட்சிக்காரர்கள் …. முதலியோரின் வரலாற்று நூல்கள்; தமிழின மன்னர்கள், புலவர்கள். பல்கலைவாணர்கள் முதலியோரின் சாதனைகளையும் போதனைகளையும் விளக்கும் நூல்கள்… முதலியவை கடை விரித்து விற்கப்ப்டும். பொதுக்கூட்டத்தில் பேசுபவரனைவருமே பொதுமக்களைத் தங்களது கழக வெளியீடுகள், மலிவு விலையில் கிடைக்கும் புத்தகங்களாகவும்; அரிய பெரிய பயன்மிகு நூல்களாகவும்; அறியாமை அகற்றும் அதிரொலியாகவும் ….. விளக்கி விளம்பரம் செய்து ; வாங்கிப் படிக்குமாறு வேண்டுகோள் விடுப்பார்கள். ஆனால் இன்றைய நிலையில் எந்தச் சமய சமுதாய அரசியல் கட்சிகளும் துணிவோடு தங்களுடைய கருத்தை, கொள்கையை, குறிக்கோளை ….. விளக்கும் நூல்களை அச்சிடுவதும் இல்லை. ஒருவேளை தவிர்க்க முடியாத காரண காரியங்களால் ஒரு சில நூல்களை அச்சிட்டாலும் அவற்றைப் பொது கூட்டங்களில் விளம்பரம் செய்து விற்பதில்லை. அதாவது, அச்சிட்ட நூல்களைப் பெயரளவில் சிலருக்கு வழங்கிட்டு மற்றவற்றைத் தாங்களே முடக்கி வைத்திடும் பழக்கத்தைத்தான் பெரும்பாலான அரசியல் கட்சிகள் செய்கின்றன. இப்படியாக ஏறாத்தாழ எல்லாக் கட்சியுமே ‘தனது கொள்கை இதுதான்’; ‘தனது குறிக்கோள் இவைதான்’; ‘தனது செயல் சிததாந்தங்கள் இன்னவைதான்’ என்று வெளிப்படையாகவும், நேரடியாகவும், தெளிவாகவும் விளக்கிக் கூற முடியாதவைகளாகவும் இயலாதவைகளாகவுமே இருக்கின்றன. அதாவது இன்றைய நிலையில் ஏறத்தாழ எந்தக் கட்சிக்குமே கொள்கை கிடையாது! குறிக்கோள் கிடையாது! செயல் சித்தாந்தம் கிடையாது! என்பதுதான் உண்மை. ஆனால், எல்லாக் கட்சிகளிலும் தலைவர்கள் பலராகவும், சிலராகவும் இருக்கின்றார்கள்; தொண்டர்களும் தேவையான அளவு இருக்கிறார்கள். இதெப்படி முடிகிறது என்றால் ‘தனிமனிதச் செல்வாக்கும் புகழும்’ கட்சிகளை வளர்க்கின்றன.

  இப்படித் தனிமனிதச் செல்வாக்கினால்தான் கட்சிகள் வளர்க்கப்படுகின்றன என்ற பேருண்மை மத்திய அரசிலும், மாநில அரசிலும் நிலவுகின்றன. எனவேதான் எந்தக் கட்சியும் தொண்டர்கள் எடுக்கும் முடிவின் படி இயங்கவில்லை. அதாவது ஏறத்தாழ எல்லாத் தனிமனிதர்களின் கட்சிகளுமே சொந்த விருப்பு வெறுப்புக்களாலேயே நிகழும் கட்சியாகத்தான் இருக்க நேரிடுகிறது. இயங்குகின்றனவாகவே இருக்கின்றன. எனவே எந்தக் கட்சியாலும் நம் நாட்டு மக்களுக்கு நிலையான நன்மைகள் திட்டவட்டமாக உருவாக்கிட முடியாது! முடியாது! முடியாது! முடியவே முடியாது! எனவேதான் தத்துவத்தையோ, தொண்டர்களையோ நம்பாமல் சில ‘தனிமனிதச் சொத்துக்களாகவோ’. அல்லது ‘ஒரு சிலரின் கூட்டுச் சொத்தாகவோ'தான் இயங்குகின்றன. எனவேதான், எந்தக் கட்சியிடத்தும் நம்பிக்கையோ! ஆர்வமோ வளர்த்துக் கொள்ளாமல் ஏனோதானோ என்று வாழுகிறார்கள். இந்த அவல கேவல நிலைகளைப் புரிந்து நமது இயக்கத்தவர்கள் அதிக அக்கரையுடனும் ஆர்வத்துடனும் செயல்பட்டு நமது இயக்கத்தப் பொது மேடைப் பேச்சுகளின் மூலமும்; அச்சிட்ட புத்தகங்கள், அறிக்கைகள் ….. முதலியவைகளின் மூலமும் வளர்க்கப் பாடுபட வேண்டும்! பாடுபட வேண்டும்! பாடுபட வேண்டும்! பாடுபட்டேயாக வேண்டும்! இல்லாவிட்டால், நமது வருங்காலச் சந்ததியார் தமது இருண்ட இன்னல்மிகு வாழ்க்கைக்குக் காரணமாக இருந்தவர்களின் பட்டியலில் நம்மையும் சேர்த்து வசை பாடிடுவார்கள்! வசை பாடிடுவார்கள்! வசை பாடிடுவார்கள்! இதனை உணர்ந்தும் உணர்த்தியும் செயல்பட முற்படுங்கள்.

  நண்ப! நாம் மாதாமாதம் (ரூ 1-00) ஒன்று விலையில் வெளியிட்டு வரும் குருதேவர் அறிக்கைகள் முப்பத்து மூன்றும்; நாம், வெளியிட்டுள்ள ஏழெட்டுப் புத்தங்களும் மட்டுமே போதும் நமக்கு, இவற்றை வைத்துக் கொண்டே; நாம், நமது வரலாற்றுப் பின்னணி, இலக்கியச் சான்று, கொள்கை வளம், குறிக்கோள் வலிமை, செயல்திட்டத் தெளிவு ….. முதலியவற்றை உலகம் முழுவதற்கும் விளக்கியுரைத்திடலாம். அதாவது, நமது இயக்கத்துக்கென்று வரலாற்று உரிமையும் இலக்கியப் பெருமையும், தத்துவ பாரம்பரியமும், செயல் சித்தாந்தச் செழுமையும் … மிகமிகத் தெளிவாகவும் முறையாகவும் நிறையாகவும் … இருப்பதைச் சுட்டிக்காட்டி விளக்கியுரைத்தே வானுற வளர்ந்திடலாம் நாம். ஆனால், நம்மவர்களில்; முன்னணியில் உள்ள பலர்; நமது இயக்கத்தைத் தங்களின பொழுதுபோக்குச் சாதனமாகவே பயன்படுத்துகிறார்கள், அதாவது ‘பாம்பும் சாகக் கூடாது; பாம்பை அடிக்கும் கம்பும் கையும் நோகக் கூடாது’ என்ற பழமொழிப் படியே பலர் நமது இயக்கப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் இவர்கள் எல்லோருமே நல்லவர்கள்தான்! நல்லவர்கள்தான்! நல்லவர்கள்தான்! இருந்தாலும், இந்த நல்லவர்கள் பெரும்பாலும் ஏமாளிகளாகவும், சோம்பேறிகளாகவும், அப்பாவிகளாகவும், சுறுசுறுப்பு இல்லாதவர்களாகவுமே இருக்கின்றார்கள் எனவேதான் இவர்களில் யாரையுமே கண்டிக்க விரும்பவில்லை யாம் ….. இது பற்றித் தாங்களே நம்மவர்களோடு சிந்தியுங்கள் …..

  நண்ப! பொறுப்பை உணர்ந்தவர்கள் கூடப் பொழுது போக்கும் சாதாரணமானவர்களாக மாறி வரும் நிலை நமது இயக்கத்துள்ளும் வளருகிறது, எனவே, நாம் தனிமனிதர்களை நம்பிப் பயனில்லை; நாம் நமது தத்துவத்தை நம்பித்தான் செயல்பட்டாக வேண்டும்! செயல்பட்டாக வேண்டும்! செயல்பட்டாக வேண்டும்! செயல்பட்டேயாக வேண்டும்! அதாவது கோபுரத்துப் பொம்மைகளுக்கும், கோபுரத்துக்கும் என்ன உறவு என்பதை விளக்கியுரைக்க வேண்டிய காலக்கட்டத்துக்கு வந்துவிட்டோம் நாம். எனவே, நாம், மீண்டும் (பேனாவையும் பேப்பரையும்) எழுதுகோலையும் தாளையும் மட்டுமே நம்பி நமது பணிகளை தொடருவோம். நாம் எதிர்பார்க்கும் நாளும் ஆளும் நமக்குக் கிடைக்கும் வரை விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் ஆங்காங்கே அருட்கணிப்புக் கூறியும், அருள் வழங்கியும் அருளுரையாற்றியும் செயல்பட்டிட்டாலே போதும்! போதும்! போதும்! ஏனெனில், யாம், யாரையும் அடிக்கடி தொந்தரவு செய்து இயக்கப் பணிகளில் ஈடுபடுமாறும், இயக்கம் வளர்க்க இயன்ற உதவிகளைத் தருமாறும் … … கேட்டுக் கொண்டே இருக்க இயலாது! அதாவது அவரவராக மனம் விரும்பி ஆற்றக் கூடிய பணிகளையும், தரக்கூடிய ஆதரவுகளையும், உதவிகளையும் பெற்றுச் செயல்பட்டால் போதும் நாம். எனவே, விரைவில் வில்லுப்பாட்டு நாடகம். கலை நிகழ்ச்சி … முதலியவைகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடப் போகிறோம் யாம், அது கண்டு ‘நமது குருதேவரா இப்படியெல்லாம் இறங்கிச் செயல்படுகிறார் …’ என்று வருந்தத் தேவையில்லை. ஏனெனில், ‘நல்லவர்கள் நினைப்பது மட்டும் நடப்பதே இல்லை நம் நாட்டில்’ என்ற குருபாரம்பரிய வாசகம் மெய்யாகி வருகிறது. எமக்கும் தோல்வி ஏற்பட்டிடுமோ?!?!… என்று எண்ணுகிறோம்… ஒதுங்குவோரும் பதுங்குவோரும் பலராவதை உணர்க.

  அன்பு
  ஞாலகுரு சித்தர் கருவூறார்.

  (குருதேவர் அறிக்கை 35இலிருந்து)

  தொடர்புடையவை: