Gurudevar.org
 • முகப்புப் பக்கம்>
 • அன்பு சேவுக!>
 • ஞானத் தேடல்
 • ஞானத் தேடல்

  ஞானத் தேடல்

  யாரும் ஞானத்தைத் தேடி வரவில்லை!?!?!?

  அன்புச் சேவுக!

  எல்லோருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் எளிதில் கிடைத்து விடும் என்று எதிர்பார்த்துப் பொதுநலத் தொண்டு ஆற்றிட இயலாது. தேவையில்லாமல் பிறரின் தலையீடும், காழ்ப்பும், போட்டியும், பொறாமையும், அறியாமையும் பொதுநலத் தொண்டர்களைத் திணறித் திக்குமுக்காடச் செய்திடும். அதிலும், எவரும் எளிதில் ஏட்டறிவாலோ, பட்டறிவாலோ தெரிந்து கொள்ள முடியாத பேருண்மைகள் நிறைந்த அருளுலகில் தொண்டாற்றுவது என்பது எளிதல்ல!

  இவ்வுலகில் விளாதிமீர் இலிச் இலெனினுக்கும், மாசேதுங்குக்கும் அடுத்து மூன்றாவது நிலையில் வைத்து எண்ணப்படும் மாபெரும் மார்க்சீயத் தத்துவ மேதையால் முழுக்க முழுக்கப் பகுத்தறிவுப் போக்கிலும் விஞ்ஞானச் சூழலிலும், சீர்திருத்த நோக்கிலும் வளர்க்கப் பட்ட எம்மையே …… நெருங்கிப் பழகுபவர்களில் கூடச் சிலர் மதவாதி, மடமைவாதி, மூடநம்பிக்கைக்காரன், பழமைவாதி, மந்திரவாதி, சோதிடன், உடுக்கையடிக்கிப் பூசாறி …… என்று குறை கூறுகிறார்கள். யாம், மிகத் தெளிவாகவும், திட்டவட்டமாகவும், காலக் கணக்கிட்டு வரலாற்றையும், இலக்கியத்தையும் துணையாக்கி … எமது பணிகளுக்குரிய கொள்கை, செயல்திட்டம், குறிக்கோள் முதலியவைகளை எழுதியும், அச்சிட்டும், பேசியும், ஆயிரமாயிரம் இளைஞர் மூலம் செயலாக்கியும் கூடப் பிறரின் கேலியும், கிண்டலும், ஏளனமும், எதிர்ப்பும், ஒதுக்கலும், பதுக்கலும், நீக்கலும், இருட்டடிப்பும்தானே பரிசாகக் கிடைக்கின்றன!

  நண்ப! யாம், முறையாக மழலை மொழி பேசிய காலத்திலிருந்து எந்தையிடம் உலக வரலாறு, இலக்கியம், தத்துவம், மருத்துவம், பிறகலைகள் ….. அனைத்தும் பாடம் கேட்டதோடு; உலகியல்படி விஞ்ஞானம் கணிதம் பயின்று இளங்கலைப் பட்டமும்; தமிழ் பயின்று முதுகலைப் பட்டமும்; அரசியல் சமுதாய இயல் பற்றி நாலாண்டுகளுக்கு மேல் முழுநேர அரசு ஆராய்ச்சி மாணாக்கனாக டாக்டர் பட்டத்துக்கு உழைத்தும்; இன்று உலகியலோடு ஒட்டி உறவாட அரசுப்பணியில் பொறுப்போடு பணியாற்றியும் கூட ….. எம்மைப் ‘பூசை மணியாட்டும் பண்டாரப் பயல்’, ‘தேவாரம் திருவாசகம் ஓதித்திரியும் தேசிகன்’, ‘கோயில் சாப்பாட்டில் வாழும் குருக்கள்’; ‘மந்திரக்காரன்’; ‘குறிகாரன்’; ‘சுடுகாட்டுச் சூன்யக்காரன்’; ‘மைவேலைக்காரன்’; ‘புராணப்பித்தன்’; ‘மத வெறியன்’ …… – என்றுதானே வெறுத்தும் மறுத்தும் பழித்தும் இழித்தும் பேசுகிறார்கள்.

  நண்ப! பதினெண் சித்தர்களின் வாக்குகளும் வாசகங்களும் எம் காலத்து மண்ணும் விண்ணும் இணையுமென்று உறுதி வழங்கியிருப்பதால்தான்; யாம், பதினெட்டாண்டுப் பயிற்சிகளையும், பதினெட்டாண்டு முயற்சிகளையும் நிறைவு செய்ததோடு நிம்மதியாகக் குருமகா சன்னிதானமாகப் பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடத்தில் அமர்ந்து போகியாகவும், யோகியாகவும் வாழ்ந்திட வில்லை. யாம், எமக்குக் கிடைக்கும் வசதி வாய்ப்பு, சூழல், ஆதரவு, ஏந்து, நட்பு, தோழமை, … முதலிய அனைத்தையும் பொதுநல நோக்கோடு பயன்படுத்தி ‘அரசயோகி'யாக, ‘அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானமாக’, ‘இந்து மதத் தந்தையாக’, …… உயர்ந்தோம். இன்று, தாமிரபரணியாற்றங்கரைக் கருவூறார் ‘ஞானாச்சாரியார்’ என்று எம்மைப் போற்றி ஏற்றி அருளும் நிலையையும் பெற்றுள்ளோம். ஆனால், எம்மை நாடி வருபவர்கள் எமது அருளால் தங்களின் குறை, துன்பம், தொல்லை, ….. முதலியவற்றைத் தீர்த்துக் கொள்ளத்தான் வருகிறார்களே தவிர யாரும் ஞானத்தைத் தேடி வரவில்லை. இதுதான் நம் மக்கள் நிலை …. புரிந்து செயல்படுக.

  அன்பு
  ஞாலகுரு சித்தர் கருவூறார்

  (குருதேவர் அறிக்கை 12இலிருந்து)

  தொடர்புடையவை: