Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • அன்பு சேவுக!>
  • மதமே அரசின் தலைமை
  • மதமே அரசின் தலைமை

    மதமே அரசின் தலைமை

    அரசியலுக்கு உட்பட்டது மதமா? மதத்திற்கு உட்பட்டது அரசியலா?

    அன்புச் சேவுக!

    எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு இவ்வறிக்கையின் மூலம் நாம் மூன்றாண்டுகளை விரைந்து முடித்துவிட்டு; நான்காவது ஆண்டிலே காலடி எடுத்து வைக்கின்றோம், கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை விட, இன்றைய நாட்டின் நிலை மிகவும் சிக்கலானதாகவும், சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய வகையிலும் அமைந்துள்ளது. ஏனெனில் நாட்டின் எல்லாத் துறைகளுமே மேலோட்டமாக அமைதியாகக் காணப்பட்டாலும் உண்மையில் மிகவும் கொடூரமான இறுக்கமான பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன.

    நண்ப!
    சமயமும் - அரசியலும் ஒன்றையொன்று நேரடியாக மோதிக்கொள்ளும் காலக்கட்டம்’ வந்துவிட்டது. மதவாதிகள் ஆங்காங்கே நேரடியாக இன்றைய அரசியலில் ஈடுபடத் துவங்கி விட்டனர். இந்த நிலை குறித்து, அரசியல் வல்லுனர்களும் பொருளாதார மேதைகளும், சமுதாய நிலை எழுத்தாளர்களும் மிகத் தீவிரமாக ‘சமயம் – அதாவது மதவாதிகள் அரசியலில் ஈடுபடக்கூடாது’ என்றும்; ‘சமயப் போதகர்களும் குருமார்களும் சட்டமன்றத்தையும் பாராளுமன்றத்தையும் நிர்ணயிப்பதா?’… என்றும் வினாவெழுப்பி வருகின்றனர். மேலும், ‘சமயக் குருமார்களால்தான் மக்களின் வாழ்வும் வளமும் பாழாகி விட்டதாகவும்; பாழாகி வருவதாகவும் போலியான, மாயமான வாதத்தை மக்கள் முன் எடுத்து வைக்கின்றனர். இன்றைய நிர்வாகச் சீர்கேடுகளுக்கும்; சமுதாய ஒழுக்கக் கேடுகளுக்கும் காரணம் இந்த அரசியல் வாதிகளின் ஏமாற்றல்களும், பொருளாதாரவாதிகளின் பயனற்றத் திட்டங்களும், சமுதாயநிலை எழுத்தாளர்களின் சீழ்ப்பிடித்தக் கதைகளும் நவீனங்களும்தான் என்பதை மூடிமறைக்கவே இவ்வாறு சிந்துபாட ஆரம்பித்துள்ளனர்.

    அண்மையில் புகழ்பெற்ற அரசியல் விமரிசகர் ஒருவர் எழுதுகின்றார், ‘பஞ்சாப்பின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைப் போடுவது இன்றைய சீக்கிய மதகுருமார்கள். எனவே, அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சுத்தமான மக்களாட்சியை நிர்ணயிக்க வேண்டியது மக்களேயன்றி; மதக் குருமார்களல்ல’ - என்று கூறுகின்றார்.

    இந்தியா விடுதலை பெற்று நாற்பது ஆண்டுகள் ஆகியும் நாட்டில் வறுமையோ, பஞ்சமோ, வேலையில்லாத் திண்டாட்டமோ … முழுமையாக நீங்கவில்லை, மேலும், அரசியல்வாதிகள் தாங்கள் பதவிக்கு வந்து விட்டால் முடிசூடா மன்னர்கள் என்பதாகவும்; தங்களைத் தட்டிக்கேட்க நாட்டில் உள்ளவர்களில் எவருக்குமே தகுதியில்லை என்பதாகவும் … நினைத்து இறுமாந்து வருகின்றனர். இவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களே கூட தட்டிக் கேட்க முடியாத கட்டத்தில்தான் வேறுவழியின்றி சமயவாதிகள் - குருமார்கள் தங்கள் பொற்கோவிலின் மாடங்களை விட்டு மக்களைக் காக்க, அநீதிகளைப் போக்கப் புறப்பட்டு விட்டனர். இதனை மக்களுக்கு உணர்த்தும் பொறுப்பில் உள்ள சமுதாயவாதிகள்தான் இந்த நிலையைக் கண்டித்து போலியான வாதத்தை மக்கள் முன் வைத்துக் குழப்பி வருகின்றனர்.

    பதினெண் சித்தர்கள், இந்துமதத்தை சமூக விஞ்ஞானமாகப் படைத்ததே, நாட்டில் ஒழுங்கு விதிமுறைகள் கெட்டுப் போகும் காலத்துக் கண்டித்துத் திருத்துவதற்காகத்தான். இதைத்தான் தமிழக, தமிழின அரசு வரலாற்றில் காண்கிறோம்.

    இதற்காகத்தான், பதினெண் சித்தர் பீடாதிபதிகளும்; அவர்களின் கருவழி, குருவழி, விந்துவழி வாரிசுகளும்; அரச குடும்பத்தினர்களுக்கு குருமார்களாக, குருக்கள்களாக … இருந்து வந்துள்ளனர் . நமது மக்கள் போலியான அரசியல்வாதிகளின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க முடியாத காலகட்டங்களில்; மதவாதிகளின் அரசியல் தலையீடு அவசியமே

    ஏனெனில், இந்திய விடுதலைக்கு பிறகு: அரசியல்வாதிகள், ‘இந்திய விடுதலையே மதத்தின் பெயரால்தான் மக்கள் சத்தியை ஒன்று திரட்டிப் பெறப்பட்ட ஒன்று’ – என்ற பேருண்மையை மறந்தும் துறந்தும் செயல்பட ஆரம்பித்திட்டார்கள் குறிப்பாக, இவர்கள், ‘ஏறிவந்த ஏணி’யையே எட்டி உதைப்பது போலத் தங்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்த இந்து மதத்தின் ஒற்றுமையையும், உரிமையையும், பெருமையையும், பாரம்பரியங்களையும், நிறுவனங்களையும், மதத் தலைவர்களையும், மதப் பேரரறிஞர்களையும், மத இலக்கியங்களையும், மத நிகழ்ச்சிகளையும், மதச் சின்னங்களையும் … சிதைக்க, சீரழிக்க, இழித்துரைக்க, பழித்துரைக்க, கேலி செய்ய, கிண்டல் செய்ய, அன்னியர்கள் சூறையாடிடத் தேவையான வாய்ப்பு வசதிகளை வழங்கி வந்துள்ளார்கள்.

    நண்ப! ஒழுக்கமோ, நேர்மையோ, நீதியோ, கட்டுப்பாடோ, உண்மையோ … இல்லாதவர்களாகவே வாழுபவர்கள்தான் பெரும்பாலும், அரசியல் துறையில் இருக்கின்றார்கள். அவர்கள், நற்பண்புகளில் சிறந்த மதத்துறையினர் என்றாவது ஒருநாள் அரசியல் துறையைப் பிடித்துக் கொள்ள நேரிடுமோ என்று அஞ்ச ஆரம்பித்திட்டார்கள். அதனால்தான், மக்களுக்கு மதத்துறையில் பற்றோ, பாசமோ, மதிப்போ ஏற்பட்டு விடாமல் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்கின்றார்கள். இதற்காக, அன்னிய மதங்களைக் கொண்டு இந்து மதத்தின் சிறப்பையும், செல்வாக்கையும் தாக்கித் தகர்த்துத் தரைமட்டமாக்கி வருகின்றார்கள். இந்த முயற்சியில், எல்லா அரசியல்வாதிகளும் ஒருமித்த கருத்தினராய் ஒற்றுமையோடு செயல்படுகின்றார்கள். அதாவது, மேடைப்பேச்சு, எழுத்து, நாடகம், திரைப்படம் அனைத்திலும் இந்துமதத் தத்துவத்தையும், செயல்முறைகளையும், தலைவர்களையும், அருளாளர்களையும் இழிவு படுத்துவது, கிண்டல் செய்வது, கேலிபண்ணுவது என்பது மிகமிகச் சாதாரணமாகிவிட்டது. அத்துடன், எப்போதாவது ஏதாவது ஒரு சாமியார் ஒரு சின்னத்தவறை, ஒரு சின்னக் குற்றத்தைச் செய்தால் கூட அதை மிகப் பெரிய அளவில் விளம்பரப் படுத்தி, தரக்குறைவாக விமரிசனம் செய்வது மரபாகி விட்டது. அதே நேரத்தில், அரசியல்வாதிகள் செய்யும் கொலை, கொள்ளை, கையூட்டு, ஏமாற்றல், சுரண்டல் அதிகார முறைகேடு ….. முதலிய தவறுகள் மிகமிகச் சாதாரணமாக மலிந்து நிறைந்து கிடக்கின்றன. ‘இவைதான், அரசியல்வாதிகளின் இலக்கணங்கள் அல்லது வாழ்வியல் நடைமுறைகள் என்று நம்பி, விரும்பி மக்கள் ஏற்குமாறு செய்து விட்டனர். அதனால்தான் பெரும்பாலான அரசியல்வாதிகள்; பகுத்தறிவுவாதிகளாகவும், சீர்திருத்தவாதிகளாகவும், மத மறுப்பாளர்களாகவும் வேடமிட்டுக் கொண்டு வாழ்கின்றார்கள் அதாவது, மதவாதியாக அல்லாதவன் எந்தத் தவறையும் செய்யாலாம் அல்லது எந்தக் குற்றத்தையும் செய்யலாம் என்ற ஒரு தவறான நீதிக் கருத்துக்களை உண்டாக்கி விட்டனர். எனவேதான், இவர்கள், மதவாதிகள் அரசியலுக்கு வரவே கூடாது என்கின்றனர். இன்னும் சொல்லப் போனால், இந்துமத நிறுவனங்களும், நிர்வாகங்களும் மதத்தை வளர்க்கவே கூடாது என்று சொல்கின்றார்கள்.

    ஆனால், இந்த அரசியல்வாதிகள் அன்னிய மதங்களுக்கு அளவற்ற மதிப்பும், செல்வாக்கும், சலுகையும் வாரிவாரி வழங்கிக் கொண்டே இருக்கின்றார்கள் அதாவது, இந்த அன்னிய மதத்தவர்களின் ஆதரவு (வாக்குச் சீட்டு = வோட்டு) தங்களுக்கு அரசியலில் என்றென்றும் தேவை என்பதற்காகவே; இப்படி, அன்னிய மத்த்தவர்களை, ஆதரிக்கின்றார்கள். அதே நேரத்தில் இந்தியாவுக்குரிய மதங்கள் வளர்ந்தாலோ, வலிமை பெற்றாலோ தங்களுக்கு ஆபத்து என்று நினக்கின்றார்கள். எனவே, ‘மத்த்துக்குட்பட்டது அரசா? அரசுக்கு உட்பட்டது மதமா?’’ - என்பதை இந்த நூற்றாண்டு விரைவில் தீர்மானிக்க வேண்டும். அதற்கு மக்களை பக்குவப் படுத்தும் மாபெரும் முயற்சியில்தான் கடந்த இருநூறு ஆண்டுகளாக இ.ம.இ. பாடுபட்டு வருகின்றது.

    இ.ம.இ.யின் இருநூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட முயற்சியின் உச்சக்கட்ட நிகழ்ச்சியாகவே இப்போழுதைய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தமிழர்கள் அனைவரும் குருபாரம்பரியம் கூறுகின்ற மூன்று வகையான அமைப்புக்களின் கீழ் செயல் படத் தயாராக இருக்க வேண்டுகிறேன். 1. தமிழ்ப் பண்பாட்டு விடுதலை இயக்கம். 2. தமிழ்மொழி விடுதலை இயக்கம், 3. தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் இந்த மூன்று இயக்கங்கள் உருவாக்கும் முக்கோண அரணுடைய நகர்தான் அருளாட்சித் திருநகராக இருக்கும். அந்நகர்தான், ‘அரசியலுக்கு உட்பட்டது மதமா? மதத்துக்கு உட்பட்டது அரசியலா? என்பதை நிர்ணயிக்கும். இந்த நிர்ணயிப்பின் கருத்தலைகள், செயலலைகள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரவியே தீரும்; பிறகு உலகு முழுவதும் பரவியே தீரும்.

    அன்பு
    ஞாலகுரு சித்தர் கருவூறார்

    (குருதேவர் அறிக்கைகள் 38 மற்றும் 39இலிருந்து)

    தொடர்புடையவை: