Gurudevar.org
 • முகப்புப் பக்கம்>
 • அன்பு சேவுக!>
 • பண்பாட்டுப் புரட்சி இயக்கம்
 • பண்பாட்டுப் புரட்சி இயக்கம்

  பண்பாட்டுப் புரட்சி இயக்கம்

  ஊசலாட்டம்

  இந்து மறுமலர்ச்சி இயக்க ஊக்கம் தேயுமா! ஓயுமா! மாயுமா!

  அன்புச் சேவுக!

  நாம், ஒரு பண்பாட்டுப் புரட்சி இயக்கம்! நமக்கெனப் பழம்பெரும் வரலாறு, இலக்கியம் தத்துவம், வாழ்வியல் நெறி முறை …… முதலியவை உண்டு. ஆனால், கண்மூடிப் பழக்க வழக்கங்களாலும் மூடநம்பிக்கைகளாலும், தவறான தலைமைகளாலும், இனப்பற்று மொழிப்பற்று இல்லாமையாலும், இனஒற்றுமையும் ஒருமைப்பாடும் இல்லாததாலுமே …… அனைத்தும் மண்மூடிப் போயின. எனவே, நாம், இருளுக்குள் இருக்கிறோம்; நமக்குள் இருள் இருக்கக் கூடாது.

  நண்ப! நூற்றுக்கணக்கான முறை உறுதிமொழி வழங்கிக் குருவையே தாயாக, தந்தையாக, தெய்வமாக, வாழ்வாக ஏற்பவர்களைக் கொண்டுதான் அருட்படை உருவாக்கப்படல் வேண்டும். ஆனால், நம் நாட்டில் படித்த இளைஞர்களில் அலுவலக உழைப்பாளிகளான அறிவியல் சீவிகள் என்றும்; விவசாயம், தொழில் வாணிகம், கலை … என்று உடலுழைப்பாளிகளான செயல் சீவிகள் என்றும் இருபெரும் பிரிவுகள் உள்ளன. இவற்றை இணைத்தேயாக வேண்டும்.

  நமது, அறிவியல் சீவிகள்தான் அனைத்து வகையான இயக்க நடவடிக்கைகளைத் தலைமை தாங்கி முன்னின்று வழிகாட்டி நடத்தவேண்டும். ஆனால், ஊசலாட்டமும், திசைதிருப்பலும். திருத்தல்வாதமும், ஒதுங்கலும், பதுங்கலும் ….. எப்படியோ நமது அறிவியல் சீவிகளிடம் ஆங்காங்கே முளைவிட்டுக் கிளைத்துள்ளன. இவை, செழித்து வளருமுன் தத்துவ விளக்கம், கொள்கை விளக்கம் செயல்திட்ட விளக்கம், குறிக்கோள் நோக்கம் …… முதலியவைகளைப் பணியாளர்களாக நியமித்து இத் தவறான களைகளைப் பயிரிலேயே வேருடன் பறித்தெடுக்க வேண்டும். இதற்குத் துணிவும், நேர்மையும், நடுநிலையும், பொறுமையும், பொறுப்பும், உரமும், தரமும், திரமும், திறமும், தீரமும், வீரமும் உடைய பல செயல்கள் ஏட்டளவிலும் செயலளவிலும் வழங்கப்படல் வேண்டும்.

  நண்ப! யாம் யாரையும் குறைகூற முயலவில்லை ஆனால், நம்மவர்களுக்கிடையே சினிமாவும் சீமைச்சாராயமும். சிகரெட்டும் … ஆட்சிபுரிந்து அனைத்தையும் மறந்து செயல்படக் கூடியவர்களை உருவாக்கும் நிலை வளர்ந்து விடக் கூடாது. அதற்கு இதுகாறும் வெளிவந்துள்ள 35 முப்பத்தைந்து குருதேவர் மாத அறிக்கைகளையும்; ஓர் ஆண்டு மலரையும் ஏழெட்டுத் தனிநூல்களையும் திருப்பித் திருப்பிப் படிக்கும் பழக்கத்தை மேற் கொள்ளுமாறு அனைவருக்கும் அறிவுரை வழங்க வேண்டும். இதனை, நமது அறிவியல் சீவிகளுக்குச் சட்டமாக்க வேண்டும். அப்பொழுதுதான். அவர்களின் மயக்கம், தயக்கம், பேதளிப்பு, ஊசலாட்டம் முதலியவை அகன்றிடும். நம்மிடம் வளமான, வலிவான கொள்கை இருக்கிறது; தெளிவான. திட்டவட்டமான குறிக்கோளும் இருக்கிறது; மிக எளிய செயல்திட்டங்களும் இருக்கின்றன என்ற பேருண்மை அவர்களுக்குப் புரியும்.

  நண்ப! தலைமையை முழுமையாக ஏற்றுத் தலைமைக்கு முற்றிலும் கட்டுப்பட்டு எந்த ஆணையையும் ஏற்றுச் செயல்படுத்தும் வீரர்களாக அறிவியல் சீவிகளை உருவாக்க இயலாது என்ற நிலை நாளுக்குநாள் தெளிவாகிறது. மேலும் நகர நாகரிகமும் மேம்போக்கான வாழ்வும் அறிவியல் சீவிகளைக் கோழைகளாகவும், குழப்பவாதிகளாகவும், குறுகிய போக்குடையவராகவும் ஆக்கியுள்ளன. எனவே, நாம், அதிகப் படிப்பில்லாதவர்களையும், உடலுழைப்புப் பாட்டாளிகளையும் நம்பித்தான் அருட்படை திரட்ட வேண்டும். இதற்கு அருட்பணி விரிவாக்கத் திட்டம்தான் உரிய உயர்ந்த வழி.

  அன்பு நண்ப! அ,வி,தி. நிலையாட்களை நாடெங்கும் தோற்றுவிக்க வேண்டும் அ.வி.தி. செயல்வீரர்களை உருவாக்கும் பணியிலேயே முழுக் கருத்தையும் கவனத்தையும் செலவிடவேண்டும். இ.ம.இ.யின் மூலம் உருவாகும் கொள்கைவாதிகள் குடிகாரர்கள் போல் திடீர்திடீரென்று திசைமாறவும், திருத்தல்வாதம் போதிக்கவும் ஆரம்பித்திடும் நிலையை வளர்க்கக் கூடாது. ‘செய் அல்லது செத்துமடி’ (Do or Die) என்ற ஆணைக்கு அடிபணியும் வீரமனம் அ.வி.தி.யால்தான் உருவாகும்.

  நம்மவர்கள், கட்டாயமாக அன்றாடப் பூசை, வாரபூசை (வியாழன். ஞாயிறு) மாதப் பருவப்பூசை, அமாவாசை வேள்வி முதலியவைகளைக் கட்டாயமாகப் பயிற்சியாக்க வேண்டும். இல்லாவிட்டால் அருட் பேரரசான பிற்காலச் சோழப் பேரரசின் வீழ்ச்சியே நமக்கும் ஏற்படும். எனவே, யாம் நாளோலக்கத்திலிருந்தும் திருவோலக்கத்திலிருந்தும் விடுக்கும் இந்த அருளாட்சி ஆணையின்படி நமது சன்னிதானங்கள் மட்டுமாவது முழுமையான அ.வி.தி. செயல் வீரராவதற்கு மேற்குறித்த பயிற்சி நிலையைக் கடைப்பிடித்தேயாக வேண்டும். இதற்குரிய விளக்க ஆணைகளைத் திருவோலை நாயகமாகிய தாங்கள் உடனே எங்கும் அனுப்புமாறு குருவாணை வழங்குகிறோம்.

  அன்பு
  ஞாலகுரு சித்தர் கருவூறார்.

  (குருதேவர் அறிக்கை 37இலிருந்து)

  தொடர்புடையவை: