அருளுலகப் பயிற்சி முயற்சி தேர்ச்சி முறை விளக்கம்
அன்புச் சேவுக!
தாத்தாக்களும் ஆத்தாக்களும் அம்மையப்பன்கள் துணையோடு நிகழ்த்துகின்ற திருவிளையாடல்களுக்குக் காலப்போக்கிலதான்; செயல்முறையில் உரிய விளக்கங்கள் பெரிய அளவில் கிடைக்கின்றன. யாம், எந்த நொடியிலும், எதையும், எம் செயல் என்று எண்ணி விடாதிருக்கத் தாத்தாக்களும் ஆத்தாக்களும் எம்முடைய அன்றாட வாழ்வியல் நிகழ்ச்சிகளில் கூடத் தங்களின் விருப்பப்படியே முடிவுகளை வழங்குகிறார்கள் அதாவது, ‘ஊர் கூடி இழுக்கின்ற பெரிய தேருக்குச் சக்கரத்தடியிலேயே அமர்ந்து சிறிய முட்டுக்கட்டை போடுவது அவசியம்’ என்பது போல, ‘எண்ணற்ற அடியான்களும் அடியார்களும் சேர்ந்து இழுத்துச் செல்லும் எழுந்தருளிகள் அமர்ந்த அழகு செய்யப்பட்ட பெரிய தேராக இருக்கிறது எம்முடைய வாழ்க்கை’. இந்த வாழ்க்கைத் தேரின் சக்கரங்களுக்கடியிலே தொடர்ந்து முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வருகின்றன. அவை நமது அடியான், அடியாள், அடியார் பயிற்சி முயற்சி தேர்ச்சிகளில் அவ்வப்போது ஏற்படுகின்ற தளர்ச்சி நிலைகள். கட்டுபாடற்ற நிலைகள், தோல்வி நிலைகள், நம்பிக்கையற்ற நிலைகள், அவசர ஆத்திர நிலைகள், பேராசை நிலைகள், ‘தான்’ என்ற அகம்பாவ ஆணவ வீம்பு நிலைகள், அறியாமை நிலைகள், புரியாமை நிலைகள், தெரியாமை நிலைகள், உலகியல் மயக்க நிலைகள், ஒற்றுமையற்ற நிலைகள், ஒருமைப்பாடற்ற நிலைகள், நட்புணர்வற்ற நிலைகள், தோழமையுணர்வற்ற நிலைகள், தொண்டுணர்வற்ற நிலைகள், சமாதானப் போக்கற்ற நிலைகள், பிறரோடு ஒத்துப் போகத் தயாராக இல்லாத நிலைகள், பிறருக்கு விட்டுக் கொடுத்துப் போகத் தெரியாத நிலைகள் ….. என்று மிகப் பெரிய பட்டியலிட்டுக் காட்ட வேண்டிய வடிவங்களாகவே இருக்கின்றன என்பதை வெளிப்படையாகக் கூறிக்கொள்ள விரும்புகிறோம் யாம். ஏனெனில், இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் அடிப்படையான, உயிர் நாடியான, உள்ளீடான, மக்கள் தொடர்பு நிறுவனமான அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் தலைமைச் செயலாளர் நீ. நீயொருவன் எமது உணர்வு நிலைகளை முழுமையாகப் புரிந்து கொண்டால் போதும்; உன் மூலம் அனைவரும் புரிந்து கொள்வார்கள்.
நண்ப! யாம் இது காறும் தோன்றிய மற்ற அருளாளர்களைப் போல் முயன்றோ அல்லது திடீரென்றோ அருட்சத்தியையோ, சித்தியையோ, முத்தியையோ பெற்றவரல்ல. யாம் முக்காலமும் கடந்து, நிறைந்து, புரிந்து, அண்டபேரண்டங்களின் தொன்மைக்குச் சமமாக விளங்கும் பாரம்பரிய அருட் செல்வங்களைப் பெற்றிருக்கிறோம். எமது பதினெட்டாண்டு காலப் பயிற்சிகளும். பதினெட்டாண்டுகால முயற்சிகளும், கடலோடி, காடோடி, நாடோடி வாழ்வுகளும்; யாம் பாரம்பரியமாகப் பெற்ற அருட்செல்வங்களை எப்படியெப்படி உலகந்தழுவி வழங்க வேண்டுமென்ற வழிமுறைகளையும், நெறிகளையுமே வழங்கியிருக்கின்றன. யாம், அறிவு விழித்த நெறியிலேயே, உலகியலின் சொந்த பந்தப் பாசங்களோடு இரண்டறக் கலந்த நிலையிலேயே, பகுத்தறிவுப் போக்கிலும் விஞ்ஞானச் சூழலிலும் எமது பணிகளை ஆற்றி வருகிறோம். எமக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி; விரல் விட்டு எண்ணினாலும் மாளாத அளவுக்கு அடியான்களும், அடியாள்களும், அடியார்களும் கிடைத்திருப்பதுதான். இவர்கள், யாம் விரும்பும் தேவையான அளவிற்கு மேலேயே கிடைத்து விட்டார்கள். ஆனால் இவர்களுக்குள்; யாம் விரும்புகின்ற தகுதிகளை முழுமையாகப் பெற்றவர்கள் இன்னும் போதுமான அளவுக்கு எண்ணிக்கையில் உயரவில்லை! உயரவில்லை! உயரவில்லை! உயரவில்லை எனவேதான், யாம், இந்த தன்னிலை விளக்க(self - Criticism) அஞ்சலைத் தீட்டுகிறோம்.
நண்ப! நமது சித்தர் நெறிப்படி எல்லோரும் இல்லற வாழ்வு வாழ்ந்தே தீர வேண்டும். எல்லோருமே சொந்த பந்தப் பாசப் பிணைப்புகளோடுதான் வாழ வேண்டும். இந்த அடிப்படைக் கருத்தில்; யாம், எள்முனையளவு கூட மாற்றத்தை ஏற்படுத்தவில்லை, ஆனால், எம்மால் உருவாக்கப்பட்டு வருபவர்களில் சிலர் சொந்த பந்தப் பாசங்களை மறந்தவர்களாகவும், சிலர் துறந்தவர்களாகவும், சிலர் மறுத்தவர்களாகவும், சிலர் வெறுத்தவர்களாகவும், சிலர் ஒதுக்கியவர்களாகவும், சிலர் பதுக்கியவர்களாகவும், சிலர் புதுக்கியவர்களாகவும் ….. இப்படிப் பல நிலையில் இருக்கிறார்கள், இதற்கு யாம் எந்த நிலையிலும் காரண காரியமாகக் கருதப்பட்டு விடக் கூடாது, கருதப்பட்டு விடக் கூடாது, கருதப்பட்டு விடக் கூடாது, கருதப்பட்டு விடவே கூடாது, ஏனெனில், ‘யாம், எக்காரணம் பற்றியும் எவருடைய சாபத்தையும் பெறக் கூடாது, பெறக் கூடாது, பெறக் கூடாது, பெறவே கூடாது. அதாவது, எம்மிடம் வருபவர்கள் அவரவரின் ஊழ்வினைக்கும், வினைக்கும், ஆள்வினைக்கும், சூழ்வினைக்கும், நாள்கோள் மீன் பாதிப்புக்கும் ஏற்பவே மேலே பட்டியலிட்டுக் காட்டியது போல் பலவகையான உறவு நிலைகளையும், துறவு நிலைகளையும் பெற்றிடுகிறார்கள்.’ இப் பேருண்மையினை மற்றவர்கள் புரிந்து கொள்ளா விட்டாலும் பாதகமில்லை; நம்மவர்களாவது முழுமையாகவும், முறையாகவும், தெளிவாகவும், விளக்கமாகவும் புரிந்து கொண்டேயாக வேண்டும். இல்லாவிட்டால், உலகெங்கும் தோன்றி மறைந்த எண்ணற்ற மதங்களைப் போல, அல்லது அருள் இயக்கங்களைப் போல, அல்லது அருளாளர்களின் சாதனைகளையும் போதனைகளையும் போல; யாமும், எமது சாதனைகளும் போதனைகளும், எம்மால் உருவாக்கப்படும் நிறுவனக் கட்டமைப்புக்களும், நிர்வாக ஒழுங்கமைப்புகளும் மங்கி மறைந்திட நேரிடும். இதற்காகத்தான் யாம், கற்றுத் தேர்ந்த நல்லிளைஞர்களையே மிகுதியாகத் தேர்ந்தெடுத்துத் தயாரித்து வருகிறோம். எனவே, நம்மவர்களின் பயிற்சி நிலைகளையும், முயற்சி நிலைகளையும், தேர்ச்சி நிலைகளையும் ஒரு மின்னல் வேகக் கண்ணோட்ட ஆய்வு (A lightning Research Approach or Review) செய்யும் வண்ணம் இந்த அஞ்சல் எழுதுகிறோம்.
நண்ப! யாம், எமது திறமையால் யாரையும் ஈர்த்ததாக எண்ண வில்லை, எண்ண வில்லை, எண்ண வில்லை, எண்ணவே யில்லை. அதனால்தான் யாம் அரிதில் முயன்று உருவாக்கிய பேராற்றல் மிக்க அருட்கலைஞர்கள்; காட்டாற்று வெள்ளம் போல் கட்டுப்பாடில்லாமலும், பொறுப்பில்லாமலும், எமது சட்டதிட்டக் கட்டுப்பாடுகளின்படி செயல்படாமலும், நிறுவனக் கட்டமைப்புக்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டாமலும், நிர்வாக ஒழுங்கமைப்புக்களை விரும்பாமலும் தான்தோன்றிகளாகச் செயல்பட்டு; மிகப் பெரிய தோல்வி நிலைகளையும், தேக்க நிலைகளையும், பயனற்ற நிலைகளையும் உண்டாக்கி விட்டார்கள் உண்டாக்கி விட்டார்கள், உண்டாக்கி விட்டார்கள். இப்படிப் பட்டவர்களைத் திருத்துவதற்காக எழுதப்பட்ட நலம் பாராட்டுத் திருவோலைகளும், செயல் விளக்க மடல்களும், கண்டிப்புக் குருவாணை அஞ்சல்களும் ஏறத்தாழப் பயனற்றுப் போய்விட்டன, பயனற்றுப் போய்விட்டன, பயனற்றுப் போய்விட்டன, பயனற்றே போய்விட்டன. ஏனென்றால் யாம் வியந்து வியந்து பாராட்டிப் பூரித்துப் பெருமையடையும் அளவிற்கு மிகப் பெரிய சித்தி நிலைகளைப் பெற்ற சிலர் நம்மிடையே வாழுகிறார்கள். இவர்கள் அனைவருமே தங்களுடைய தகுதிகளை அறியாமலும், குருமொழி கேளாமலும், சட்டதிட்டக் கட்டுப்பாட்டிற்கு உட்படாமலும் செயல்படுவதால்தான்; நமது வளர்ச்சி குடத்துக்குள் ஏற்றி வைத்த விளக்காகவே இருக்கிறது. இவர்களைத் திருத்துவது எமது கையில் இல்லை! இல்லை! இல்லை! இல்லவே யில்லை!!! எனவே, இவர்களை யெல்லாம், இவர்களின் போக்கிலேயே விட்டுவிட்டோம் யாம். அடுத்த நிலையில் நம்மவர்களுக்கிடையில் படித்துப் பட்டம் பெற்றவர், பட்டம் பெறாதவர், வேலை பார்த்துச் சம்பாதிப்பவர், சம்பாதிப்பவர், சம்பாதிக்காதவர், பணக்காரர், ஏழை, செல்வாக்கான குடும்பத்தவர், சாதாரண குடும்பத்தவர், உயர் சாதிக்காரர், தாழ்ந்த சாதிக்காரர் என்ற வேறுபாடுகளும் மாறுபாடுகளும், முரண்பாடுகளும், போட்டி பொறாமைகளும் பேய்க்காற்றுப் போல் தலைவிரித்தாடுகின்றன. இவற்றால்தான், உலகாண்ட தமிழினம் இருந்த இடம் தெரியாமல் இருக்கிறது; உலகாண்ட மெய்யான இந்து மதம் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்குச் சிதைந்து சீர்குலைந்து எண்ணற்ற கற்பனை வடிவங்களைப் பெற்றுக் கிடக்கிறது; அண்ட பேரண்டமாளும் அருளுலகத் தமிழ்மொழி தனது மக்களாலேயே இழிக்கப் பட்டும், பழிக்கப் பட்டும், புறக்கணிக்கப் பட்டும், அடிமையாக்கப் பட்டும் அனாதை நிலையில் நாதியற்றுக் கிடக்கிறது; இவற்றிற்கெல்லாம் பரிகாரமாகத்தான், அருளுலக அரியணையில் பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடமாக அறிவு விழித்த நிலையில் திருவோலக்கத்திலும் நாளோலக்கத்திலும் அமர்ந்து அருளாட்சி நடத்தி வருகிறோம் யாம். அதாவது யாம், இலைமறை காயாகவே இருந்து கொண்டு, எம்மால் உருவாக்கப் படுபவர்களின் மூலமே உலகைச் சந்தித்துச் செயல்பட்டு வருகிறோம்.
(தொடர்ச்சி அடுத்த அறிக்கையில்)
(குருதேவர் அறிக்கை 32இலிருந்து)