Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • அன்பு சேவுக!>
  • வீர வாழ்க்கை
  • வீர வாழ்க்கை

    வீர வாழ்க்கை

    கண்ணுக்கு விருந்தாகாது வீர உடல்!

    அன்புச் சேவுக!

    உரிமையை நிலைநாட்டிட ஆயுதங்களைத் தாங்கி புறப்படுகிறவன்; எண்ணற்றோர் உயிருக்கு முடிவையும், உடலுக்கு மாறா வடுவுடைய விழுப்புண்களையும் நல்குவதோடு வெற்றித் திருமகள் அளித்திடும் வீரப்புண்கள் எனும் முத்திரைகளைப் பெற்றுத் தன்னை வீர வரலாற்று மாளிகைக்குள் நுழையும் உரிமை பெற்றவனாக்கிக் கொள்கின்றான்.

    இறவாத தத்துவங்களை ஈன்றெடுப்பேன், உலகம் மறவாத அறிவுலக வரலாறு எழுதுவேன், வருங்காலம் என்றென்றும் கண்டு களிக்கக் கருத்து வளர்ச்சி மிக்க கலைக் கருவூலம் அமைப்பேன். மேலும், தாழ்த்தப் பட்டவர்களை உயர்த்துவேன், வீழ்த்தப் பட்டவர்களை எழுச்சி பெறச் செய்வேன், மூடி மறைக்கப் பட்ட பேருண்மைகளைத் தேடிக் கண்டுபிடித்து வெளிக் கொணருவேன், கோழையை வீரனாக்குவேன், எங்கும் எதிலும் இருள் படியாப் பேரொளியை ஏற்றி வைப்பேன், ‘கண்டவர் விண்டார்’ என்ற புதுப் பெருமையைப் படைப்பேன், ‘கடைவிரித்தேன் நல்ல வியாபாரம் நடந்தது’ என்ற அடைய முடியாப் பெருநிலையை அடைவேன்; என் மொழி, என் இனம், என் நாடு என்பவை எனது மூன்று நாடித் துடிப்பு. நான் எடுக்கும் முயற்சிகளும் பிறர் தடுக்கும் முயற்சிகளும் வீரவரலாற்றின் படிக்கட்டுகள் ….. என்று சூளுரைத்து வாளின்றி வேலின்றிப் போர் புரியப் புறப்பட்டவன் நெஞ்சமும், சிந்தையும், எண்ணற்ற வீரப்புண்களைப் பெற்று வடுக்கள் மிகுந்த திருவுருவைத்தான் பெற்றிட முடியும்.

    கண்ணுக்கு விருந்தாகாது வீர உடல்; கருத்துக்கும் நாட்டு நல்வாழ்வுக்கும் விருந்தாகுதலே வீரவுடல். நெடிய, பெரிய பயணங்கள், கடுமையும் கொடுமையும் நிறைந்த அநுபவங்கள். கடந்த காலம் இருளும், இன்னலும், இழப்பும், இழிவும், அழிவும், பழியும், வெடிப்பும், நொடிப்பும் மிக்கவை. நாற்றமடிக்கும் குப்பையால் நறுமணமிக்க மலர்களையும், சுவைமிக்க கனிகளையும் பெறலாம். மண்வாகுக்கேற்பவே பயிர் செய்யலாம்.

    அன்பு
    ஞாலகுரு சித்தர் கருவூறார்

    குறிப்பு: அருள்மிகு வீரமாகாளி சன்னிதானம் பரமாச்சாரியார் அவர்கள் குருவைத் தேடியலைந்த போது, மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கருங்காலக் குடி உயர்நிலைப் பள்ளியில் ‘சமயமும் விஞ்ஞானமும்’ என்ற தலைப்பில் குருதேவர் உரையாற்றியதற்கு பின்னால் ஈர்க்கப்பட்டு குருதேவருக்கு கடிதம் எழுதினார். அதற்குப் பதிலாக 29-4-1973 அன்று குருதேவர் முதன்முதலில் எழுதிய கடிதத்தின் நகலையே வெளியிட்டுள்ளோம்.

    (குருதேவர் அறிக்கை 11இலிருந்து)

    தொடர்புடையவை: