Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • அன்பு சேவுக!>
  • தெய்வீகச் சோதனை
  • தெய்வீகச் சோதனை

    தெய்வீகச் சோதனை

    தெய்வீகச் சோதனையே குருதேவரின் வாழ்க்கை!

    அன்புள்ள சேவுக!

    நான் தனியனாகக் காடு, மேடு, ஆறு, கடல் என்று இயற்கை கொப்பளிக்கும் இடங்களிலெல்லாம் திரிந்தபோது கூட அஞசவோ கலங்கவோ இல்லை; பசி வேட்கையுடன் திரிந்த மிருகங்களின் முன்னால் சென்ற போதும்; சீற்றமெடுத்துப் பாய்ந்துவரும் ஆற்று வெள்ளத்தில் நீந்திய போதும்; ஆர்ப்பரித்துப் பொங்கியெழுந்து நின்ற கடற் சூறாவளியில் பயணம் செய்த போதும்; ஆரவாரித்து ஓ’வென்று சுழன்று சுழன்று அடித்த புயற்காற்றில் சிக்கிய போதும் நான் மயங்கவோ, மதிமாறவோ இல்லை.

    இவைகளையெல்லாம் தாண்டி, மனிதர்களுக்காக, மானுட நலனுக்காக நான் பெற்ற அநுபவங்களையும், உற்ற ஏட்டறிவுகளையும், பட்டறிவுகளையும் சுமந்து வந்தபோதுதான் தயங்கினேன், தடுமாறினேன், சிந்தித்தேன். சமுதாயம் மூடநம்பிக்கையாலும், மடமைப் போக்காலும், வீணான வறட்டுவாதத் தத்துவத்தாலும் புரையோடிக் கிடப்பதைக் கண்டுத் துணுக்குற்றேன்! ஆழ்ந்து ஆராய்ந்தேன்!

    எனது தந்தை, பகுத்தறிவு மேதை, மாபெரும் சீர்திருத்தவாதி, பொதுவுடமைச் சிந்தனைவாதியான காக்காவழியன் பண்ணையாடி M. பழனிச்சாமிப் பிள்ளையவர்கள் சமுதாயத்தைப் பற்றிக் கூறிய கருத்துக்கள் என் நெஞ்சில் ஆழத் தைத்தன. அப்போதுதான் எனது தந்தை என்னிடம் விட்டுச் சென்றிருக்கின்ற மாபெரும் பொறுப்பை உணர்ந்தேன். தமிழ் மொழிக்காக, நாட்டுக்காக, இனத்துக்காக, தமிழக இந்திய உலக வரலாற்றுக்காக, உலகச் சமயங்களுக்காக, உலக அறிஞர்களுக்காக, அறிஞர்களின் சாதனைகளின் உண்மையான பலனை அடைவதற்காக, மருத்துவத்திற்காக, கலைக்காக, விஞ்ஞானத்திற்காக, தொழிலுக்காக, பொதுவுடமைத் தத்துவத்திற்காக,… என் மூலம் செய்ய வேண்டிய பணிகளை உணர்ந்தேன். நான் எதையும் என் சொந்தக் கருத்தாகவே தருவதில்லை. ஏட்டிலே இருப்பதை மீண்டும் மக்கள் மத்தியில் உம்மைப் போன்றவர்கள் மூலம் அள்ளித் தருகின்றேன், செயல்படுத்திப் பார்க்குமாறு அழைக்கின்றேன். உலக அமைப்பாளர்கள் அத்தனை பேரையும் உரத்தக் குரலில் அழைத்து உண்மைகளை எடுத்துரைக்கின்றேன்.

    காலம் விடியுமென்று கதிரவனுக்காகக் காத்திருக்கவில்லை. ஏழிசைப் பாடுமென்று புல்லினங்கள் வரவுக்காக ஏங்கியிருக்கவில்லை. ‘எனது கடன் பணி செய்து கிடப்பதே’ என்று வறண்ட, முட்புதர்க் காடுகளை சரமாரியாக வெட்டி வீழ்த்தித் தந்துவிட்டுச் சென்ற பகுத்தறிவுப் பகலவன், சிறக்கஞ்சாச் சிங்கம், வெண்தாடி வேந்தர், தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் பாதையில் உம்மைப் போன்றோரின் துணையோடு நடக்கின்றேன். ஆனால், இப்போதுதான் ஏச்சுக்களையும், பேச்சுக்களையும், ஏமாற்றங்களையும், தோல்விகளையும் சந்திக்க நேருமா? என்றஞ்சியே தாத்தாக்களின் ஆத்தாக்களின் துணையோடு எமது வாழ்க்கையையே தெய்வீகச் சோதனையாக்கிச் செல்லுகின்றேன். எம்முடன் நீயும் அணி வகுப்பாய்! உம்முடன் இந்த அவனியே அணி வகுக்கும் என்பதில் ஐயமில்லை!

    அன்பு
    ஞாலகுரு சித்தர் கருவூறார்

    (குருதேவர் அறிக்கை 7இலிருந்து)

    தொடர்புடையவை: