Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • தமிழ்மொழி>
  • பிறாமணரால் தமிழர் வீழ்ச்சி
  • பிறாமணரால் தமிழர் வீழ்ச்சி

    பிறாமணரால் தமிழர் வீழ்ச்சி

    நாமறிய, இந்தக் கலியுகத்தில் பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியர்கள் இந்து மதத்துக்குரிய இந்தியாவுக்குள் நுழைந்த நாள் முதல்; இந்தியா முழுதும் பரவியிருந்த தமிழர்களின் அகவாழ்வுக்கும், புறவாழ்வுக்கும் பல்வேறு வகையான சிதைவுகளும், சிக்கல்களும், சீரழிவுகளும் சிறுகச் சிறுகத் தோன்ற ஆரம்பித்து விட்டன.

    ஆனால், இதனைத் தமிழர்கள் அன்றிலிருந்து இன்றுவரை உணர முடியாமலேயே இருந்து வருகிறார்கள். அதற்குக் காரணம், கடல் நிலத்தைச் சிறிது சிறிதாக அரித்து விழுங்குவது திடீரென்று நிகழ்வதில்லை; அதனை, யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடிவதில்லை. மேலும், எறும்புகள் கடிப்பதை யானை திடீரென்று உணர்ந்து கொள்ளாது. ஆனால், எறும்பு கடித்து உடம்பில் பெரிய புண் உண்டாகி யானை மாள்வதுண்டு. கண்ணுக்கு எளிதில் புலப்படாத ஊசி முனையளவே உள்ள மிக மிக நுட்பமான உடலமைப்புடைய செல்லுப் பூச்சி; எவ்வளவு பெரிய மரத்தையும், சிறுகச் சிறுக அரித்துத் தின்று பட்டுப் போகுமாறு செய்து; முடிவில், அம்மரம் கீழே விழுந்து மண்ணோடு மண்ணாகமக்கிப் போகுமாறு செய்கின்ற ஆற்றலைப் பெற்றிருக்கிறது.

    ஆரிய மாயை:

    இவற்றைப் போலத்தான், வட ஆரியர்கள், மிக மிக நுட்பமான; ஆனால் திட்பமான செயல்திட்டங்களை வகுத்துத் தங்களுடைய சிறிய கூட்டத்தோடு ஒற்றுமையோடும், கட்டுப்பாட்டோடும், ஒரே மாதிரியாகவும், தொடர்ந்து அடக்கமாகவும், அமைதியாகவும் செயல்பட்டு; ஆலமரம் போன்றும், மதயானை போன்றும், பெருநிலம் போன்றும் இருந்த தமிழினத்தை வீழ்த்தித் தாழ்த்தி ஆழ்த்திச் சிதைத்துச் சின்னாபின்னப் படுத்தி விட்டார்கள்.

    அதாவது, என்றைக்குமே! எவருமே! எளிதில் தமிழினத்தைக் காப்பாற்ற முடியாத அளவிற்கு; அதாவது, தமிழர்களை என்றைக்குமே இன உணர்வோ! இனப்பற்றோ!, இன ஒற்றுமையோ!, இன ஒருமைப்பாடோ! அடையவே முடியாதபடிச் செய்து விட்டார்கள் வட ஆரியர்கள். இப்படி, ‘வட ஆரிய மாயையெனும் இருள்’, தமிழர்களின் அக வாழ்விலும், புறவாழ்விலும் கவிழ்ந்து நிறைந்து விட்டதால் தமிழர்கள் அனாதைகளாகவும், நாடோடிகளாகவும், கூலிகளாகவும், எடுபிடிகளாகவும், கங்காணிகளாகவும், பிச்சைக் காரர்களாகவும் உலகெங்கும் பரந்து விரிந்து விட்டார்கள். எனவேதான், தமிழர்கள் தங்களுடைய தாய்நாட்டிலேயே சுய மரியாதை உணர்வோ!, தன்னம்பிக்கை உணர்வோ!, இன ஒற்றுமை உணர்வோ!, இன ஒருமைப்பாட்டு உணர்வோ!, மொழிப்பற்று உணர்வோ!, மொழியுரிமை உணர்வோ!, பாரம்பரியப் பெருமித உணர்வோ!, பண்பாட்டுப் பிடிப்பு உணர்வோ!,.... ஏறத்தாழ இல்லவேயில்லை என்ற நிலையில் வாழ ஆரம்பித்து விட்டார்கள்.

    அன்னிய ஊடுருவலால் தமிழர் பெற்ற அவலக் கேவலங்கள்:-

    இந்த வாழ்க்கையினால், தமிழர்கள் தங்களுடைய நாட்டிலேயே அன்னியர்களைப் போல ஒற்றுமையோ, ஒருமைப்பாடோ, பற்றோ, பாசமோ இல்லாமல்; தனித்தனிக் கும்பல்களாக, கூட்டங்களாக வாழ ஆரம்பித்து விட்டார்கள். இவர்களுக்கு மொழியறிவோ, மொழிப்பற்றோ, இலக்கிய விருப்பமோ ஏற்படவே முடியாத அளவுக்கு உலகெங்குமுள்ள அன்னியர்கள் இவர்களிடையே ஊடுருவல் செய்து விட்டார்கள்.

    அன்னியர்களே தமிழரின் வழிகாட்டிகளானார்கள்:

    எனவே, இந்தத் தமிழர்கள், தங்களுக்கு வழிகாட்டிகளாக, வழித்துணைவர்களாக, ஆசான்களாக, தத்துவ மேதைகளாக, குருமார்களாக, முதலாளிகளாக, அன்னியர்களையே விரும்பியேற்றுப் போற்றிடுபவர்களாகி விட்டார்கள். இன்னும் சொல்லப் போனால்; இவர்கள், அன்னிய மொழிகளையும், அன்னிய நாகரீகக் கூறுபாடுகளையும் விரும்பியேற்றுக் கடைப்பிடிப்பவர்களாகி விட்டார்கள். இதனால், தமிழர்கள் என்னும் கடலிலே இனவுணர்வும், மொழியுணர்வும், நாட்டுணர்வும் உடையவர்கள்; சிறுசிறு திட்டுக்களாகவும், தீவுகளாகவும் மாறி விட்டார்கள். தமிழினம் என்னும் பெருங்கடல் திட்டுக்களும், தீவுகளும் நிறைந்த ஆழமற்ற மீன் பிடிக்கும் கடலாகி விட்டது. அனைத்து வகையான அன்னியர்களும்; இந்தக் கடலிலே மீன் பிடித்து வாழ ஆரம்பித்து விட்டார்கள்.

    இதுவே தமிழினத்தின் மெய்யான நிலை; இதனை உணராமலும், உணர்த்தாமலும் கடந்த சில நூற்றாண்டுகளாக தமிழ் வாழ்க! தமிழினம் வெல்க! என்ற கூக்குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

    தொடர்புடையவை: