இவர் தமிழ்ச் சமுதாயத்தைத் தொடர்ந்து சூழ்ச்சியால் வீழ்ச்சி நிலையில் வைத்திருக்கும் பேராற்றல் மிக்கவர்களை எதிர்த்துப் போராடுவதற்காக சமய மறுமலர்ச்சியை உருவாக்கினார். அதற்காக கி.பி. 785இல் மிகப் பெரிய முயற்சிகளைச் செய்து பொதிகை மலையில் இருந்து சத்தி இலிங்கம், சிவ இலிங்கம் என்ற இரண்டையும் மிகமிகப் பெரிய தொடர் முயற்சியால் நெடுந்தொலைவு எடுத்து வந்து முறையே தஞ்சாவூரிலும், கங்கை கொண்ட சோழபுரத்திலும் நிறுவினார். இவற்றிற்குரிய கோவில்களை இருநூறு ஆண்டுகள் கழித்தே, தான் உருவாக்கிய பிற்காலச் சோழப் பேரரசின் புகழ் மிக்க மாமன்னர்களைக் கொண்டு கட்டினார். இவர் மிகச் சிறந்த சிற்பி என்பதால், எண்ணற்ற கற்சிற்பங்களைச் செதுக்கியும், உலோகச் சிற்பங்களை வார்த்தும் பல அருள்வழங்கு நிலையங்களைக் கட்டினார்.
அக்கோயில்களைச் சாதனமாகக் கொண்டு ஆங்காங்கே கிடைத்த அருட்தன்மையுடைய மனிதர்களைத் தேர்ந்தெடுத்து முறையான பயிற்சியின் மூலம் அவர்களை அருளாளர்களாக ஆக்கினார். அப்படி உருவான அருளாளர்களைக் கொண்டே சமய, சமுதாய இருள்களை அகற்றினார். இதனால், பிற்காலச் சோழப் பேரரசு எனும் தெய்வீகப் பேரரசை உருவாக்கும் பெரும்படையினை அருட்படையாகத் திரட்டினார். அவரது முயற்சி நானூறு ஆண்டுகாலம் வரலாற்றில் நின்றது. ஆனால், அவரை இன்று கூட உணர்பவர் யாரும் இல்லை. இருப்பினும் அவர், தான் கட்டிய தஞ்சைக் கோபுரத்தின் மடியிலேயே சிலை வடிவில் நிலைத்து நிற்கின்றார். கடலலைகள் ஓய்ந்தாலும், கன்னித் தமிழினத்தைக் காக்க இவர் எடுத்த முயற்சிப் பேரலைகள் என்றும் ஓய மாட்டாதவை. இவர் உருவாக்கிய அருள் வழங்கு நிலையங்கள் விலை மதிக்க முடியாத கலைக் கருவூலங்களாக மலையென நிமிர்ந்து நிற்கின்றன.