Gurudevar.org
 • முகப்புப் பக்கம்>
 • சித்தர்கள்>
 • 11வது பீடாதிபதியின் சாதனைகள் 2
 • 11வது பீடாதிபதியின் சாதனைகள் 2

  11வது பீடாதிபதியின் சாதனைகள் 2

  இவர் அரசியல் மாற்றத்தின் மூலமே  தமிழ்மொழி, தமிழினம், தமிழ் நாடு என்ற முக்கோணக் கோட்டையில் அருளாட்சி அமைத்து உலகம் முழுதும் சித்தர் நெறியைத் தழைத்தோங்கச் செய்ய முடியும் என்று முடிவெடுத்தார்.

  இந்த முடிவுக்காகப் பலமுறை உலகச் சுற்றுப் பயணம் செய்தார். 11th Peedam கடலுள் மறைந்த குமரிக் கண்டத்தில் இருந்த அனைத்து விதமான கலைகளையும், அறிவியல்களையும் மீண்டும் மானுட இன நலனுக்காக சிறுபள்ளிகள், பெரும் பள்ளிகள், பன்னாட்டுப் பன்னோக்குப் பல்கலைக் கழகம் முதலியவை அமைத்து வளர்த்தார். தமிழ் மொழியின் மூலமும், தமிழினத்தின் மூலமுமே தான் விரும்பும் உலகச் சமத்துவச்  சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயத்தை அமைக்க விரும்பினார். ஆனால், இவர் எந்த ஒரு மொழியும் மற்ற மொழிகளை அடக்கி ஆள்வது தவறு என்று கண்டிக்கிறார்.

  எனவேதான், இவர் இம் மண்ணுலகில் உள்ள பெரும்பாலான மானுட இனங்கள் தமிழினத்தில் இருந்தே பிறந்தன என்றும், இம் மண்ணுலகின் பல பகுதிகளில் இயற்கையாகத் தோன்றிய மானுட இனங்களும் தமிழினத்தின் கலப்பால் தெய்வீக நிலையைப் பெற்று விட்டன என்றும் குறிக்கின்றார்.  இதேபோல் இம் மண்ணுலகில் தோன்றிய பெரும்பாலான மொழிகள் அனைத்தும் தமிழ் மொழியில் இருந்தே பிறந்தன என்றும், இம்மண்ணுலகின் பல பகுதிகளில் பேச்சு வழக்கில் இருந்த மொழிகளை எல்லாம் செம்மைப் படுத்தித் தமிழ் மொழியின் அடிப்படையிலேயே எழுத்துக்களையும், இலக்கண இலக்கியங்களையும் வரச் செய்தார்கள் சித்தர்கள் என்றும் குறிக்கின்றார் இவர். இவற்றின் மூலம் மனித குல வாழ்வையே தமிழ்மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் உரியதாகவே ஆக்கிக் காட்டுகிறார் இவர்.

  இவரது இக்கருத்து செயற்கை போல, கற்பனை போல, கனவு போல, புராணம் போல, இதிகாசம் போல தோன்றுகின்றது என்பதை இவரே உணர்ந்திருக்கிறார். எனவேதான், இவர் உலக வரலாறு மிகத் தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதியிருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் இவரை ஒரு வரலாற்றுப் பேராசிரியர் அல்லது வரலாற்றுத் துறையின் தந்தை என்றே கூறலாம். இவர் பல நூறாயிரம் ஆண்டுகள் மிகத் தெளிவாக முறைப்படி காலக் கணக்கீட்டு அடிப்படையில் வரலாறு எழுதியிருப்பது மிகச் சிறப்பாகும். இவர் இந்த உலகில் முதன் முதலில் தோன்றிய நிலம் குமரிக் கண்டம் என்பதைக் கூறி அதிலிருந்தே சமய வரலாறு, அரசியல் வரலாறு, இலக்கிய வரலாறு  என்ற மூன்று பெரும் நூல்களைத் தொடர்ந்து எழுதும் பழக்கத்தைத் தோற்றுவித்தார். இவர் இப்படி மூன்று பெரும் துறை சார்ந்த இலக்கியங்களை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் உருவாக்கியதோடு,  ஏறத் தாழ எல்லாக் கலைகளையும், அறிவியல்களையும் பற்றி எல்லா நூல்களையும் எழுதியுள்ளார். 

  அமராவதியாற்றங்கரைக் கருவூறாரின் சமுதாய மாற்றக் கொள்கையால், அரசியல் துரோகங்களையும், விரோதங்களையும், எதிர்ப்புகளையும், பகைகளையும், சூழ்ச்சிகளையும், அதிரடித் தாக்குதல்களையும், .... சமாளிக்கவே முடியாத மிகமிக மென்மையான, பண்பட்ட, நாகரீக நாடாகத்தான் தமிழ்நாடு உருவாயிற்று என்ற பேருண்மை இவரை எரிமலையெனக் குமுறச் செய்தது. எனவே, பூசைமணியையும், கற்பூரத் தட்டையும் ஏந்திய இவரது கைகள் போர்வாளும், வேலும், வில்லும் ஏந்தின. தவத்திலும், பூசையிலும் பழகிய இவர் தன்னை யானை ஏற்றம், குதிரையேற்றம், தேரோட்டுதல், மல்யுத்தம், படகு விடுதல், படை நடத்துதல் முதலிய கலைகளுக்கு உரியதாகப் பழக்கிக் கொண்டார். ஆழ்தவத்தில் அசைவற்றிருக்கும் விரல்களால் ஏட்டையும், எழுத்தாணியையும் எடுத்து இரவு பகலாக எண்ணற்ற நூல்களை எழுதிக் குவித்தார். துறவு  மேற்கொண்ட இவர் மானுட இன நலனுக்காக உறவு மேற்கொண்டு நெடுங்காலம் வாழ்ந்து வாழையடி வாழையென கருவூர்த் தேவரை உருவாக்கினார்.

  தொடர்புடையவை: