Gurudevar.org
 • முகப்புப் பக்கம்>
 • குருதேவர் அருளியவை>
 • அருட்கேணிகள்.
 • அருட்கேணிகள்.

  அருட்கேணிகள்.

  ‘ஞாலகுரு’ குருமகாசன்னிதானம் சித்தர் கருவூறார் 10/3/82இல் சேலம் கோட்டை மாரியம்மன் சன்னிதானத்துக்கு விடுக்கும் ‘நலம் நாடும் மடல்’:

  (1) தாத்தாக்கள் ஆத்தாக்கள் அருளால் யாவும் நலமாகட்டும், வெற்றியாகட்டும், உண்மையாகட்டும், பயனாகட்டும்.

  (2) தங்களின் 8.3.82ஆம் தேதியிட்ட அஞ்சலை இன்று 9.3.82இல் கண்டோம். நமது R.E.C. நண்பர்கள் சங்கராச்சாரியார் பீடமும், தொட்டியம் மருதக்காளி சன்னிதானமும் யாமும் பலமுறை படித்துப் புரிந்தோம். தங்களின் சூழல்கள், உணர்வு நிலைகள், குடும்ப நிலைகள் மிகமிக அழகாக வண்ண ஓவியமாகத் தீட்டப் பட்டிருந்தன….. இனிக் கவலையே வேண்டாம்! வேண்டாம்! வேண்டாம்!

  (3) தண்ணீர் இறைக்கும் குடம் ஓட்டையாக இருந்தால் கிணற்றில் எவ்வளவு நீர் இருந்தாலும் குடத்தில் சிறிதளவுதான் வரும். அதுபோல், திருவருளையும், குருவருளையும் தொடர்ந்த அன்பு முயற்சிகளால், நம்பிக்கையால்தான் உருவாக வேண்டும், கருவாக வேண்டும், வளர வேண்டும். இதையுணர்ந்து தாங்கள் துணைவியாருக்கும் ‘குரு’, ‘திரு’ இரண்டும் உணர்ந்து நம்பி ஏற்றுச் செயல்படும் உறுதி, உரம், திறம் வளரச் செய்யுங்கள் - வாழ்க!

  (4) பல பிறப்புக்களால் நீங்களிருவரும் கணவனும் மனைவியுமாக வாழ்ந்திருக்கிறீர்கள். திருவையாறு K.S.இராசகோபாலன் (அருள்மிகு கருப்பழகி பீடாதிபதி, ஆதிசங்கராச்சாரியார் ஆதினம், பிறவாயாக்கைப் பெரியோன், காமாட்சி அம்மன் கோவில் தெரு, காருக்குடி, இராயம்பேட்டை (P.O.), திருவையாறு 613204) தங்களைப் போன்றே பல பிறப்புக்களாகப் பெற்றிட்ட மனைவியைப் பெற்றுள்ளார். ஆனால், இருவரும் பழம்பிறப்புணர்ந்து தெய்வ நிலை பெற்று விட்டனர். நீங்களும் விரைவில் அந்த நிலைகளைப் பெற வேண்டும். அதனால், அவருக்கு அஞ்சல் எழுதித் திருநீறு குங்குமம் அனுப்பச் சொல்லிப் பூசிக் கொள்ளுங்கள். இனி, எப்போது தஞ்சை சென்றாலும் ஒருமுறை குடும்பத்துடன் காருகுடிக்கு தேங்காய், பழம் பூ வெற்றிலை பாக்கு இனிப்பு காரம், பலகார வகைகள் முதலியவற்றுடன் காருகுடி சென்று பிறவாயாக்கைப் பெரியோர்களை வணங்கி அவர்களைத் தொட்டு வாழ்த்துப் பெறுங்கள். அவர் ஊரிலிருப்பதை முன் கூட்டி அஞ்சல் எழுதித் தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர் புன்னைநல்லூர் மாரியம்மன் சன்னிதானத்தையும் குடும்பத்துடன் தங்களைப் போல் பூசைப் பொருள்களுடன் வந்து வணங்கிக் கொள்ளச் சொல்லுங்கள்.

  (5) கொண்டலாம்பட்டிக் காசிவிசுவநாதன் மிகப்பெரிய சித்தரடியாராகக் குடும்பத்துடன் வளரப் போகிறவர். அவரும் அவர் துணைவியாரும் பல பிறப்புக்களாகக் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள். ஆனால், பல்வேறு வகையான மந்திரவாதிகளின் வேலைகளால் தொல்லைப் படுகிறார்கள். விரைவில் அவர்கள் நலமடைய வேண்டும். அவர்கள் ஒருவேளை பிறவாமை பெறலாம். அதற்குரிய யோகம் உண்டு. ஆனால், மனப் பக்குவம், ஆர்வம்…. முதலியவை முழுமையாக ஏற்படல் வேண்டும். அதனால்தான் பரிகாரம் செய்யும் பணியினை யாமே ஏற்றுள்ளோம். அவர் நமது இயக்க வளர்ச்சிக்குப் பேருதவியாக இருப்பார். அவரிடம் இந்த அஞ்சலைக் காட்டவும். அவர் முழுமுயற்சியுடன் தமக்குரிய பரிகாரங்களை விரைந்தும் விரிந்தும் செய்து கொண்டால் நல்லது. ஆனால், ஊழ்வினை, விதி வலிமையாக இருப்பதால் பொருளுலகச் சிக்கல்களால், அருளுலக வாழ்க்கை அடையத் தாமதங்கள் ஏற்படலாம். இருப்பினும், சன்னிதானத்துக்கு வந்துவிட்டதால் அருள்மேகங்கள் திரண்டு அருள்மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. இனி அருட்பயிர் முளைக்கும், கிளைக்கும், தழைக்கும், பயன் தரும். நல்ல அறுவடை உண்டு. அவர் வாழ்க! வளர்க! அவர்தம் இல்லத் துணைவியாரும் மக்கட்செல்வங்களும் வாழ்க! வளர்க! மலர்க!…. தாங்கள் அடிக்கடி சென்று கண்டு கொள்ளுங்கள். நல்ல நட்பை வளருங்கள். முடிந்தவரை தங்கள் யாகங்களுக்கு வந்து செல்லக் கூறுங்கள்.

  (6) தாங்கள் தங்களது இல்லத்திலேயே அருள்வழங்கும் பணியைச் செய்யுங்கள். கோயில்சித்தர்கள் ஒவ்வொரு குக்கிராமத்திலும், பட்டிதொட்டியிலும் கோயில்களை, ஆலயங்களை, பீடங்களை, இருக்கைகளை, கந்தழிகளை கட்டியது எதற்கு' ஏன்? எல்லோரும் திருப்பதி, சபரிமலை என்று பொருட்செலவும், கால விரயமும் செய்தால் குடும்ப நலம், தொழில், ஊர் என்ன ஆவது என்று கருதித்தான் அவரவர் கிராம தேவதைகளை, தெய்வங்களை, கடவுள்களை வழிபட ஏற்பாடு செய்தனர். அவை செயல்படக் காலப் போக்கில் பயன்படுத்துவாரின்றித் தண்ணீர் இறைக்காமல் பாழுங்கிணறுகளாய், தூர்ந்த கிணறுகளாய், …. மாறுவன போல் அருள் ஊற்றுத் தாழ்ந்து போய்விட்டன. அவற்றை உடனடியாக அவசரமாக, அவசியமாகத் தூறெடுத்து மீண்டும் மக்கள் அருள்நீரைப் பெற்றுக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும். இதற்காக எல்லா வழிபாட்டு நிலையங்களையும் புத்துயிர்ப்புச் செய்ய வேண்டும். அத்துடன் அருள்நீர் இறைக்கும் ஆர்வமும் ஆற்றலும் உடைய அருளாளர்களைக் கிராமம் தோறும் உருவாக்க வேண்டும்.

  (7) அதாவது, அருட்கேணிகள் இருந்து அதில் நீர் இறைப்பவர் இல்லா விட்டாலும் தோல்விதான்; அருள்நீர் இறைப்போர் இருந்து அருட்கேணி இல்லாவிட்டாலும் தோல்விதான். நாம்தான் இரண்டையும் உருவாக்கப் போகிறோம். காலங்கள் தோறும் தோன்றிடும் அருளாளர்கள் தங்களுக்கென அருட்கேணியை இரகசியமாகப் பயன்படுத்திக் காத்து வைத்துச் சென்றிட்டனர். ஆனால், நாமோ ஏற்கனவே இருந்த அருட்கேணிகளைச் செப்பனிடுவதுடன் புதிய அருட்கேணிகளைத் தேவையான இடங்களிலெல்லாம் தோண்டிக் கட்டி முடிக்கப் போகிறோம். உலகெங்கும் அருட்கேணிகள் தோண்டப் படும்; ஊரெங்கும் அருள்நீர் இறைக்கும் அருளாளர்கள் தோற்றுவிக்கப் படுவார்கள். அப்பொழுது அருட்பயிர் தழைத்துக் கொழுத்த அறுவடையைத் தரும். அதனால், எல்லாப் பஞ்சங்களும், பசிகளும், தாகங்களும், வெறிகளும், ஏக்கங்களும், தேவைகளும் தீர்ந்திடும். அப்பொழுதுதான் சாதிமதப் போராட்டங்கள், போர்கள், பொறாமைகள், வெறுப்புகள், மறுப்புகள், எதிர்ப்புகள், பகைகள், ஆணவ அகம்பாவச் சண்டைகள் ஆரவாரப் பதவிச் சச்சரவுகள் முதலிய அனைத்தும் அகன்று ஒழியும். அதன்பிறகே, எங்கும் “சமத்துவ சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம்” அமையும். இந்தச் சமுதாயத்தை ஆளுவதற்கு அருளாட்சியே அமையும்.

  (8) யார் எந்த எதிர்ப்பை, மறுப்பை, வெறுப்பை, ஒத்துழையாமையைத் தெரிவித்தாலும் அவர்கள் தூக்கி எறியப் படுவார்கள். ஏனெனில் போராட்ட நெருப்பில் குளித்துத் தயாராகும் சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள், மற்ற விருப்பாளர்கள், ஆர்வலர்கள், ஆதரவாளர்கள்,…. அனைவரும் கொள்கைப் பிடிப்பு (Faith in the Policies and the Principles of the Siddhars or the SIDDHARISM) உள்ளவர்களாக இருப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் அருளாட்சி அமைக்கும் குறிக்கோள் மாபெரும் புரட்சியாக வடிவெடுக்கும். அப்போது தங்களைத் துன்பத்துள் (Struggling and Suffering) ஆழ்த்திக் கொள்ளும் வீரர்களும் வீராங்கனைகளும்தான் புரட்சித் தளபதிகளாக வளர, செயல்பட முடியும். கூலிகளும், போலிகளும், கோழைகளும், சந்தர்ப்ப வாதிகளும், சுயநலக் காரர்களும்…. புரட்சிப் போக்கில் எரிமலை மேல் மூடியிருக்கும் சாம்பல் தூள் போல் காற்றில் பறப்பார்கள். அம் மாபெரும் அருட்புரட்சி நாளை நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் எதிர்பார்க்கிறோம் நாம்.

  (9) யாம், எப்பொழுது நினைத்தாலும் புரட்சியை நிகழ்த்த முடியும். ஆனால், புரட்சிக்குப் பிறகு உளுத்துப் போன இந்தச் சமுதாயக் கட்டிடத்துக்குள் புரட்சி அரசு கூடுமேயானால் கட்டிடம் இடிந்து விழுந்தே அனைவரையும் கொன்று புதைத்து விடும். அதனால்தான், புரட்சியை எவ்வளவு தூரம் தள்ளிப் போட முடியுமோ அவ்வளவு தூரம் தள்ளிப் போட விரும்புகிறோம். அதாவது ‘சமுதாய மாற்றம்’ (Social Change) ஏற்படுத்தாமல் வெறும் அரசியல் மாற்றம் (Political Change) ஏற்பட்டால் எள் முனையளவு கூட நன்மையை உருவாக்கவே முடியாது! முடியாது! முடியாது! எனவேதான் யாம் ‘ஒரு முழுமைப் புரட்சி’ (A Total Revolution) இந்தியத் துணைக் கண்டம் முழுதும் நிகழ்த்தப் படல் வேண்டுமென விரும்புகிறோம். அதற்கான செயல்திட்டங்களும் செயல் வீரர்களும் 1972க்கு முன்பே உருவாக்கப் பட்டு விட்டார்கள். ஏதாவது ஒரு முழு நிலவு நாளில் தாத்தாக்கள் ஆத்தாக்கள் ஆணை பிறப்பித்தால் ஒன்றிரண்டு கோடி அருளாளர்கள் [Divinators and Mystics, Saints and Sages] மலைமுகடுகள், அடர்காடுகள், அருவிச் சாரல்கள், ஆற்றுப் படுகைகள், குகைகள் முதலியவற்றிலிருந்து புறப்படுவார்கள். அப்பொழுது புயல்காற்றில் உலர்ந்த சருகுகள் சிதைந்து பறப்பது போல சமுதாய விரோதிகளும், துரோகிகளும், தன்னல வெறியர்களும், பதவிப் பித்தர்களும், பாரம்பரிய உரிமை பாராட்டுபவர்களும் இருந்த இடம் தெரியாமல் போவார்கள். மிக விரைவில் அருளாட்சிப் பயிர் விதைக்கப் பட்டுப் பசுமையாக முளைத்திடும். அப்பயிரை உரமிட்டு, நீர்பாய்ச்சிக் களை எடுத்துக் காத்து வளர்க்க வேண்டிய உழவர்களாகத்தான் உங்களை யெல்லாம் உருவாக்குகின்றேன். எனவே, இந்து மறுமலர்ச்சி இயக்கத்தைத் துவக்கி அதன்மூலம் இப்போது நானுருவாக்கும் உங்களைப் போன்ற அனைவருமே புரட்சிக்குப் பிறகு புரட்சிப் பயனை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் ஆட்சியாளர்களாகவே (Administrators or Officials) செயல்படுவீர்கள். இதை யுணர்ந்து பொறுப்புடனும், பொறுமையுடனும், அடக்கத்துடனும் பூசை, தவம், வேள்வி, யாகம் முதலியவைகளைச் செய்து சிறந்த அருளாளர்களாகத் தயாராக வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தார் அனைவரையுமே அருளாளர்களாக உருவாக்க வேண்டும். அப்பொழுதுதான் வாழையடி வாழையாக அருளாட்சி பேணும் வீரர்கள் கிடைப்பர்.

  (10) தாங்கள் ஓய்வு கிடைக்கும் போது வேம்படிதாளம் சென்றால் போதும். முதன்மையான, சிறப்பான நாட்களில் வேம்படிதாளம் சென்றாலும் சில மணி நேரம் அங்கு தங்கினாலேயே போதும். அதுவரை, தங்கள் துணைவியார் வீட்டிற்கு வரும் பிணியாளர்களை, குறையாளர்களை, பத்தர்களை “நீங்கள் விரைவில் திரும்பி விடுவீர்கள் என்பதைச் சொல்லிக் காத்திருக்கச் செய்தால் போதும்”. எக்காரணத்தை முன்னிட்டும் தங்களைத் தேடி வரும் பிணியாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பவே கூடாது! கூடாது!! கூடாது!!! கூடவே கூடாது! - திருவாணை குருவாணை. எனவே, தாங்கள் எங்கும் சென்று அவசியமாகத் தங்கவே தேவையில்லை. நீங்கள் இருக்குமிடத்திலேயே இருந்து செயல்பட்டாலேயே போதும்! போதும்! போதும்!

  (11) தங்கள் துணைவியார் திருவையும் குருவையும் புரிந்து வளரட்டும். தாங்கள் இல்லாத போதும் அருட்பணிகள் தொடரட்டும். அதற்குரிய பயிற்சியும் பக்குவமும் தங்கள் துணைவியாருக்கு உண்டாகட்டும். விரைவில் தங்கள் துணைவியாருக்கும் அருட்பட்டங்கள் வழங்கப் படும். தங்கள் இல்லம் அருட்கேணியாக இருப்பதுடன் அருட்சோலையென்றும் உருவாக்கப் படட்டும். அதில் அனைவரும் களைப்பாரட்டும், இளைப்பாரட்டும், களிப்புப் பெறட்டும். வாழ்க! வளர்க!… நமது அருட் குடும்பம்.

  (12) யாம், ஓய்வாக வீட்டிலேயே medical leave போட்டு விட்டுள்ளோம். கால்புண் ஆறிவருகிறது. மருத்துவர்கள் நடக்கவே கூடாது என்று சொல்லி விட்டார்கள். ஆயிரமாண்டுப் பழமையுடைய இரு கோயில்களை உயிர்ப்பித்ததில் யாமே குருதி கொட்ட, பாதிக்கப்பட நேரிட்டு விட்டது. நீங்கள் எல்லாம் இளஞ்செடிகள், வாடிவிடக் கூடாது என்பதாலேயே துன்பங்கள் அனைத்தையும் யாமே ஏற்றுக் கொண்டு விட்டோம். கவலை வேண்டாம். யாம் விரைவில் நலமடைய யாகம் செய்யுங்கள். அருட்சினைகள் செய்து திருநீறு குங்குமம் அனுப்புங்கள்.

  (13) யாம், எமது ஓய்வைப் பிறர் நலனுக்காகப் பயன்படுத்த விரும்புகிறோம். அதனால், வீட்டுக்கு கடைக்கு தொழிலுக்கு மந்திர, தாந்தரீக, வேள்வித் தகடுகள் தேவைப் படுபவர்களின் பெயர், வயது, வலது கைரேகை அனுப்பினால் மேற்படித் தகட்டுக்குரிய பூசைகள் செய்து திருநீறு குங்குமம் அனுப்புவோம். தாங்கள் யாருக்குத் தகடு தருகிறீர்களோ அவருடைய கையளவுக்கு ஒரு சாண் நீளம், அகலம் உள்ள சதுரச் செப்புத் தகட்டில் புனுகு தடவி, யாகத் தீயில் வாட்டிப் பின் ஒருபுறம் திருநீறும், மறுபுறம் குங்குமமும் ‘யாம் அனுப்புவது’ தடவி வாழ்த்திக் கொடுத்திட்டால் போதும். யாகத்தில் கோழி + சேவல் அல்லது ஆண் பெண் புறாக்கள் இணை பலியிடல் வேண்டும். அக் குருதியால் தகடு முழுமையாக மெழுகப் படல் வேண்டும். இதன் மூலம் பலர் கிரக கோளாறு, கண்ணேறு, மந்திரவாதிகளின் ஏவல், பில்லி. சூனியம்…. முதலியவைகளிலிருந்து காக்கப் படுவர். அவரவர் வசதிப்படி காணிக்கை, பூசைச் செலவு வாங்கி அனுப்புங்கள். யாம், படுத்த படுக்கையாக இருந்தாலும் பிறருக்குத் தொண்டு செய்ய, பிறர் துன்பம் துடைக்க விரும்புகிறோம். நம் வாழ்வு பிறர்க்குப் பணி செய்வதே. நாம் பொருளுக்காக அருளை விற்கும் வணிகர் அல்ல என்ற உணர்வுடன் செயல்படுங்கள். எங்கும் ஞானக் கொடி ஏற்றுங்கள். தந்தை பெரியார் ஈ.வெ.ரா. ‘சுயமரியாதைச் சங்கம்’ பதிவு செய்தது போல், நமது இயக்கத்தைப் பதிவு செய்தால் போதும். வேம்படிதாளப் பெரியவர் A.K.R. செகன்னாதச் செட்டியார் இல்ல யாக குண்டம் ஆதிசங்கராச்சாரியாரின் சன்னிதானம், ஆதீனம், பீடம் என்று முக்கோண முச்சத்திப் பீடமாகத் திருவாணை குருவாணை பிறப்பிக்கப் பட்டுவிட்டது. இதனை யுணர்ந்து சேலம் மாவட்ட நண்பர்கள் செயல்பட வேண்டும். இனி, அருட்பயிர் விதைப் பண்ணையாக, நாற்றுப் பண்ணையாக வேம்படிதாளம் செயல்பட்டிடும். அதனால், பெரியவர் விருப்பப் படியே புத்தகம் அச்சிடுவது, கொடியும் இயக்கமும் பதிவு செய்தல் நிகழட்டும். கவலை வேண்டாம். முழுப் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப் பட்டுவிட்டது. அதற்குரிய தாக்கீது; திருவோலை; மன்ற மடல்; குருவாணை இந்த அஞ்சல்தான். எனவே, பிழை ஏதுமில்லாமல் இதனைப் பல நகல்கள் எழுதி எமக்கு(4 நகல்கள்)ம், மற்ற அனைவருக்கும் அனுப்புங்கள். இந்த அஞ்சலை நகலெடுக்கும் பணியில் கொண்டலாம் பட்டிக் காசிவிசுவநாதன் செட்டியார், வேம்படிதாளம் AKR செகன்னாதச் செட்டியார் இருவரின் உதவியையும், துணையையும் பெற்றிடுங்கள். கையால் அழகாக எழுதி (சைக்கிளோசுடைல்) அச்சுப் பொறிநகல் தயாரித்தாலும் நல்லதுதான். முதலில் இதனை அவர்களுக்குப் படித்துக் காட்டுங்கள். நள்ளிரவில் திருவுள ஒப்புதல் பெற்று அருளால் எழுதப் பட்டதே இந்த ‘அருட்புரட்சி விளக்கம்’ என்ற அஞ்சல்.

  (14) “புரட்சி” என்ற சொல் பயன்படுத்தப் படுவதால் நம்மிடம் வன்முறை இருக்குமோ என்று யாரும் கருதக் கூடாது. நாம் முழுக்க முழுக்க அன்பு வழியில், அற வழியில், அமைதி வழியில், மென்மை வழியில், அருள் முறையில்தான் செயல்படுவோம்! செயல்படுவோம்! செயல்படுவோம்! நமது பண்பாடுகள் பாரம்பரிய மரபுகள், நாகரீகங்கள், கலைகள், பழக்க வழக்கங்கள், ஒழுகலாறுகள்…. அனைத்தும் தூய்மையாகக் காக்கப் படும். இந்தியாவில் உள்ள எல்லா இனங்களும், மொழிகளும், மதங்களும், பண்பாடுகளும், நாகரீகங்களும் சம உரிமையுடன் பெருமையாக வாழும் வாய்ப்பு வசதிகள் அருளரசில் அமைந்திடும். ஆதிக்கமோ, அடிமைப் படுத்தலோ, சுரண்டலோ, ஏமாற்றோ, பகற்கொள்ளையோ, கள்ளச் சந்தையோ, அதிகார ஊழலோ, ஆட்சி முறைகேடோ…. இருக்கவே இருக்காது. அதற்காக அருளாளர்கள் ஆட்சியாளர்களாக இருப்பார்கள்.

  (15) சித்தர்கள் அருளாட்சி புரிய மாவீரர்களையும், வீராங்கனைகளையும், சிறுவர் சிறுமியர்களையும் போர்க்கோலம் பூண்டே அருள்வழங்கும் திருவோலக்கத்தில் வீற்றிருக்கச் செய்திருக்கிறார்கள். ஊர்க்காவல் படையினர் (Police), நாடுகாக்கும் படையினர் (Military) ஆயுதத்தோடு இருப்பது போலவே நமது கடவுள்கள் எல்லாம் ஆயுதத்தோடேயே இருக்கிறார்கள். எனவேதான், பெரியார்பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் கடுமையாக மதச் சீர்திருத்தக் கருத்துக்களைக் கூறி அருட்பயிர் தழைக்கப் பாடுபட்டார். அவர், பொறுமை யிழந்தே ‘கடவுள் இல்லை; மதத்தைப் படைத்தவன் அயோக்கியன்! மதத்தை நம்புகிறவன் காட்டுமிராண்டி!….’ என்றெல்லாம் கடைசிக் காலத்தில் வெடித்துச் சீறினார்.

  உண்மையிலேயே அவருக்கு மதத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்திருந்தால் “எல்லோரும் கருவறைக்குள் சென்று பூசை செய்யும் உரிமை வேண்டும்; எல்லாச் சாதியினரும் கோயிலில் குருக்கள்களாக, அர்ச்சகர்களாக, பூசாறிகளாக ஏற்கப் படல் வேண்டும்; தமிழில்தான் பூசை மந்திரங்கள் சொல்லப் படல் வேண்டும்; மதத்தின் பெயரால் சுரண்டலோ, ஏமாற்றோ, மடமையோ கூடாது; - இந்து மதத்தின் வேதப் புத்தகம் எது? இதைத் தோற்றுவித்தவர் யார்?” என்று மதச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டிருப்பாரா? இதை அவருடைய தொண்டர்களைச் சிந்திக்கும் படிச் செய்ய வேண்டும். தமிழினத்துக்காக உழைத்த அவரை நமது மதிப்புக்கும், பத்திக்கும் உரிய அறுபத்து நான்காவது நாயனாராகச் சொல்லடி நாயனார் என்று சிறப்பிப்பதே நமது கடமை. அவரது பிறந்த நாளை இந்துமதத் திருவிழாக்களுள் ஒன்றாகக் கருத வேண்டும், ஏற்க வேண்டும், கொண்டாட வேண்டும் என்ற கருத்தையும் வெளியிட்டுள்ளோம் நாம். அதாவது, இராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, பிள்ளையார் சதுர்த்தி…. முதலியவை கொண்டாடப் படுவது போலப் பெரியார் பிறந்த தினமும் இந்தியா முழுதும் கொண்டாடப் படல் வேண்டும்.

  (16) தந்தை பெரியார் ஈ.வெ.ரா. தமிழினத்தின் தலைவராக விளங்கிய போதும்; இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவான, சொந்தமான இந்து மதத்தைச் சீர்திருத்தியவர், தூய்மைப் படுத்தியவர், வாய்மைப் படுத்தியவர். ஆனால், இவர் மதப் பெரியார்கள் போல் பூசை, பத்தி, பசனை… என்று செயல்படாமல்; விமரிசனம், ஏளனம் செய்தல்…. என்ற அதிர்ச்சி முறைகளை (Shock Treatments) மதத் தொண்டுக்குப் பயன்படுத்தினார். இதனைச் சித்தர் நெறியைப் புரிந்தவர்களால், உணர்ந்தவர்களால்தான் தெரிந்து கொள்ள முடியும். எனவேதான், அரசயோகி, இராசிவட்ட நிறைவுடையார், ஆத்தாள் அமளிகை, கொற்றவை இருக்கை, பராசத்தி திருவடி, சுரகுரு, அசுரகுரு, தேவகுரு, ஞானகுரு, ஞாலகுரு, குருமகா சன்னிதானம், சித்தர் கருவூறார், பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி என்ற நிலையில் உள்ள யாம் தமிழினத்தின் தன்னிகரில்லாத் தலைவர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா.வை ‘அறுபத்து நாலாவது நாயனார்’ என்று அறிவித்து; அவருக்குச் ‘சொல்லடி நாயனார்’ என்ற அருட்பட்டமும் வழங்கி யுள்ளோம். இதனை ஏற்றுப் போற்றுவதில்தான் தமிழின எழுச்சியும் செழுச்சியும் இந்தியச் சமுதாயப் புரட்சியும் அமைந்திருக்கிறது. எனவே, தந்தை பெரியார் ஈ.வெ.ரா.வை மறந்தோ, துறந்தோ, மறுத்தோ, வெறுத்தோ… செயல்படக் கூடிய எவரும் உண்மையான மக்கள் தொண்டைச் செய்யவே முடியாது! முடியாது! முடியாது! என்று கூறுகிறோம் யாம்.

  (17) இந்த அஞ்சலையும் விரைவில் ஒரு சிறு வெளியீடாக அச்சிட்டால் கூட நல்லதுதான். ஆனால், அதற்காகக் காத்திராமல் நமது நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பல நகல்களை எழுதி எமக்கு அனுப்ப வேண்டும். அவற்றை, யாம் பலருக்கும் அனுப்புவோம். முதலில் அவசரமாக ஓரிரு நாட்களுக்கு R.E.C. நண்பர்கள் கூட்டாக முயன்று இந்த “அருட்புரட்சி விளக்கம்” என்ற அஞ்சலை நகலெடுத்து சேலம் கோட்டை மாரியம்மன் சன்னிதானம் க. தண்டாயுதபாணி (போலி உயிரினமாக்குனர், மார்க்க பந்து தெரு, நாகம்மாள் தோட்டம், சேலம் - 637007) அவர்களுக்கும், பிறகு வேம்படிதாளம், வீரமாகாளி சன்னிதானம், தாயுமானவர் சன்னிதானம், புன்னைநல்லூர் மாரியம்மன் சன்னிதானம்…. முதலியவர்களுக்கு அனுப்புங்கள். எமக்கு 1+1=2 x 2 = 4 (Carbon Paper Copy), ஒரு பேனா நகல் விரைந்து அனுப்பவும். நமது R.E.C. நண்பர்கள் அனைவரும் இதன் நகலைத் தங்களின் கோப்பில் பாதுகாக்க வேண்டும். இந்த மூல நகல் மதுரைப் பாண்டிமுனீசுவரர் பீடாதிபதி, இருபத்தோறு தெய்வ முடியரசு கொண்டார் க. வீரபத்திரன் அவர்களின் கோப்பில் பாதுகாக்கப் படட்டும். சூரப்பட்டுக் கிராமம் கருமாரியம்மன் சன்னிதானம் ந. சண்முகம் (C/O முருகேசன், 24, புத்தகரம் கிராமம், இலட்சுமிபுரம் P.O. சென்னை-99) அவர்களுக்கும் உடனே இந்த நகல் அனுப்பவும்.

  அன்னை நாடு அருட்புரட்சி விளக்கம் பெறட்டும்! அருளாட்சி மலரட்டும்!

  ஓம் திருச்சிற்றம்பலம்

  அன்பு
  ஞாலகுரு, ஞானகுரு
  சித்தர் கருவூறார்.
  10/3/82.

  தொடர்புடையவை: