Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி>
  • அருளாட்சி ஆணைகள்.>
  • அருளாட்சி ஆணைகள் - வரலாற்று விளக்கம்
  • அருளாட்சி ஆணைகள் - வரலாற்று விளக்கம்

    அருளாட்சி ஆணைகள் - வரலாற்று விளக்கம்

    குருதேவர் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி வழங்குவது:

    பிற்காலச் சோழப் பேரரசை (கி.பி.785 - 1279) ஓர் அருட்பேரரசாகச் செயல்பட உருவாக்கிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள்; தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி நிறைவு செய்யும் நிலையில் வெளியிட்ட பதினெட்டு அருளாட்சி ஆணைகள். இவர் உருவாக்கிய தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் அனைத்துத் துறை ஆசிரியர்களும் மாணாக்கர்களும் விரும்பி ஏற்றுப் போற்றிப் பேணிப் பரப்பிட்ட சிறப்பினைப் பெற்றவை இந்த ஆணைகள்.

    இந்தப் பதினெட்டு அருளாட்சி ஆணைகளைத் தஞ்சைப் பேரரசின் ஆணைகளாக அறிவிக்கத் தயங்கினான் முதலாம் இராசராச சோழன் எனும் அருள்மொழித் தேவன். இவன் ஏற்கனவே தனது அண்ணனும், சோழப் பேரரசின் இளவரசனும் ஆன ஆதித்த கரிகாலனின் கொலை பற்றிய விசாரணையில் பொறுப்பில்லாமல் காலதாமதம் செய்ததால்; பீடாதிபதியின் கோபத்திற்கு ஆளாகியிருந்தான். எனவே, பீடாதிபதி நேரடியாகத் தஞ்சைப் பெரிய கோயிலைப் பற்றிய நிறுவன நிர்வாகத்தைப் பற்றியும்; நாடு தழுவிய அனைத்து வகையான வழிபாட்டு நிலையங்களின், கோயில்களின் நிறுவன நிர்வாகத்தைப் பற்றியும், தமிழின ஆரிய போராட்டத்தைப் பற்றியும் தமிழுக்கும் சமசுக்கிருதத்திற்கும் நிகழ்ந்து கொண்டிருந்த போரைப் பற்றியும் முதலாவது இராசராசனிடம் விவாதித்தார்.

    அவனோ பிறமண்ணினனான பிறாமணர்கள் எனும் வட ஆரியர்களின் கைப்பாவையாகவும், சமசுக்கிருத மொழியின் அடிமையாகவும், பொய்யான ஹிந்து மதத்தின் மாயையில் மாட்டிக் கொண்டவனாகவும் இருந்தான். எனவே, எதையுமே முடிவாக தெரிவிப்பவனாகவோ, செய்பவனாகவோ இல்லை அவன். எனவேதான் பீடாதிபதி அவர்கள் ஒரு மிகப் பெரிய உள்நாட்டுப் போர் உருவாகும் நிலையைத் தோற்றுவித்தார்.

    ஆனால், இராசேந்திர சோழனும் (இராசராசனின் மகன் முதலாம் இராசேந்திரன்) அரச குலத்துப் பெண்டிர்களும் தஞ்சைப் பெரிய கோயிலுக்கே வந்து பீடாதிபதியிடம் மன்னிப்புக் கேட்டும், ‘அருட்பேரரசை அவரே உருவாக்கி அவரே அழித்து விடக் கூடாது’ என்று வேண்டிக் கொண்டதாலும், பீடாதிபதி (முதலாம்) இராசராசனுக்குச் சாபங்களைக் கொடுத்துத் தன்னுடைய தேவியர் மூவருடன் நிலவறைக்குள் சென்றிட்டார். அந்த மாபெரும் நிகழ்ச்சியால் விளைந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாமலும்; அந்த நிகழ்ச்சிக்கு ஏதும் பரிகாரம் செய்ய முடியாமலும் ஏங்கி மயங்கிக் கலங்கிய (முதலாம்) இராசராசன் தஞ்சைப் பெரிய கோயிலின் உச்சியிலிருந்து அக்கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் சன்னதியின் முன் தலை குப்புறக் குதித்துத் தற்கொலை செய்து கொண்டான்.

    இந்த இருபெரும் நிகழ்ச்சிகளும் அருட்பேரரசின் எல்லைகளுக்கும் அப்பாற்பட்டு அருளுலகிலும் பொருளுலகிலும், அரசியலிலும், சமுதாயயியலிலும், மதத் துறையிலும் … மாபெரும் வீழ்ச்சிகளை நெடுங்காலம் பரபரப்போடு ஏற்படுத்தின. எனவேதான், பீடாதிபதியின் ‘பதினெட்டு அருளாட்சி ஆணைகள்’ அனைத்து வகையான சித்தர்களின் நூல்களிலும் நிலையான இடத்தைப் பெற்றிருக்கின்றன. பீடாதிபதியின் திருமகனார் கருவூர்த் தேவரும், பேரன் திருமாளிகைத் தேவரும் மேற்படி பதினெட்டு அருளாட்சி ஆணைகளையும் செயலாக்க முயன்று முழுமையான வெற்றியினைப் பெற முடியாமல் போய்விட்டது.

    இப்படிப் பதினெண்சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகளும், இவற்றைத் தோற்றுவித்தவராலும், அவரது மகனாலும், பேரனாலும் செயலாக்கப் படுகின்ற முயற்சியில் மாபெரும் தோல்வி அடைந்த காரணத்தினால் மிகப் பெரிய அருட்பேரரசு வீழ்ச்சியுற்றது. தமிழினம் தாழ்ச்சியுற்றது. மெய்யான இந்துமதம் மிகப் பெரிய சிதைவுகளையும், சீரழிவுகளையும், சிக்கல்களையும் பெற்று இருந்த இடம் தெரியாமல் உள்ளது. எனவேதான், காலங்கள் தோறும் இந்துமத மறுமலர்ச்சிக்காகப் பாடுபட முன்வருகின்ற அனைத்து வகையான சித்தர்களும் மேற்படி பதினெட்டு அருளாட்சி ஆணைகளையே தங்களுடைய கொள்கையாகவும், குறிக்கோளாகவும், செயல்திட்டமாகவும், தங்களின் வாழ்வியல் சித்தாந்தமாகவும், தத்துவமாகவும் ஏற்றுச் செயல்படும் நிலை தொடர்ந்து வருகிறது.

    அதாவது, பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதியால் உருவாக்கப் பட்ட பதினெட்டு அருளாட்சி ஆணைகளும் இலைமறை காயாகவே ஓராயிரம் ஆண்டுகளாக இருந்து வருகின்றன. இந்தச் சோக வரலாற்றை ஏட்டளவிலும், நாட்டளவிலும் வெளிப்படுத்தும் பணிதான் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் கருவூறார் தமது நாளோலக்க நிலையிலும் திருவோலக்க நிலையிலும் இருந்து வழங்குகிறார்.

    எனவே, மெய்யான இந்துமதத்தின் மூலவர்களாகவும் காவலர்களாகவும் அருட்செல்வர்களாகவும் இருக்கின்ற தமிழின மக்கள் தங்களை அறிந்து தலைவனை அறிந்து கொள்ள முற்பட வேண்டும். அல்லது தலைவனை யறிந்து தங்களை யறிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தமிழினம் வீழ்ச்சிகளிலிருந்தும், தாழ்ச்சிகளிலிருந்தும், இழிநிலைகளிலிருந்தும், பழிநிலைகளிலிருந்தும், அடிமைநிலைகளிலிருந்தும் … விடுபடுவதற்குரிய விழிச்சி நிலைகளையும், எழிச்சி நிலைகளையும், கிளர்ச்சி நிலைகளையும்…. பெற்றுச் செழிச்சி யடைய முடியும்! செழிச்சி யடைய முடியும்! செழிச்சி யடைய முடியும்!

    அதாவது, தமிழர்கள் தங்களுடைய பண்பாட்டுக்கும் நாகரீகத்துக்கும் மூலமாக உள்ள குருகுலத்தார்களை இனம் கண்டு ஏற்றுப் போற்றிப் பேணிப் பாதுகாத்துப் பயனடைய வேண்டும்! பயனடைய வேண்டும்! பயனடைய வேண்டும்! இதன் பிறகே, தமிழர்கள் தங்களுடைய பழம்பெரும் வரலாறுகளை விளக்கும் சான்றுகளையும், ஊன்றுகளையும் ஏடுகளாக, புதைமேடுகளாக, குகைகளாக, கோயில்களாக, பாழடைந்த மாளிகைகளாக, பழுதடைந்த புதைபொருள்களாக…. அப்படி யப்படியே பாதுகாத்து ஆராய்ச்சிகளைச் செய்து அறிவார்ந்த மறுமலர்ச்சிக்குரிய ஞானப் புரட்சிகளைச் செய்வார்கள்! செய்வார்கள்! செய்வார்கள்! இதற்காகத் தங்களுடைய சங்க இலக்கியங்களையும், மற்ற இலக்கியங்களையும் அவசரப் பட்டுப் புராண இதிகாசங்கள் என்றோ அல்லது நாடோடிப் பாடல்கள் என்றோ வெறுத்து ஒதுக்கிடாமல் ஏற்றுப் போற்றிப் பயன்படுத்திடும் நிலை உருவாக வேண்டும்.

    தமிழர்கள்தான் இம்மண்ணுலகின் முதல் குடியினர், மூத்த குடியினர் என்ற பெருமைக்கும் உரிமைக்கும் உரியவர்கள் என்பதால்; இந்தத் தமிழர்கள் ஒன்று திரண்டு ஒற்றுமைப் பட்டு ஒருமைப்பட்டிட்டால்தான் உலக ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும்; உலக சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயத்தை உருவாக்க முடியும். இதற்காகத்தான் தமிழர்களை மொழிவழியாகவாவது மதவழியாகவாவது ஒற்றுமைப் படுத்தும் நிகழ்ச்சி முயற்சி பதினெண்சித்தர் பீடாதிபதிகளால் தொடர்ந்து மீண்டும் மீண்டும் நிகழ்த்தப் பட்டு வருகின்றது.

    இந்தக் கலியுகத்தில் மட்டும்தான் மாற்றார்களும், வேற்றார்களும் ஏமாற்று வேலைகளால் தமிழர்களின் ஒற்றுமை உருவாக முடியாமலேயே செய்து வருகிறார்கள். இதனால், பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதிக்கு ஏற்பட்டிட்ட தோல்வி வரலாறே இப்போதும் தொடர்கிறது. இதற்காகத் தமிழர்களே தங்களைத் தாங்களே உணர்ந்தும், தன்னம்பிக்கை பெற்றும், இன ஒற்றுமையை விரும்பியும் செயல்படக் கூடிய ஒரு புதுமையான விழிச்சியான, எழிச்சியான நிலைகளை உருவாக்க முயற்சிக்கிறோம், யாம். இந்த முயற்சியின் வடிவமாகவே, தமிழ்மொழி பற்றிய நூல்களும், தமிழிலக்கியங்களின் தொகுதிகளும், மெய்யான இந்துமதம் பற்றிய நூல்களும் கணக்கற்று படிகள் எடுக்கப் பட்டு நாடெங்கும் வழங்கப் பட்டு வருகின்றன.

    ஏட்டறிவுடையோர் குறைவாக உள்ளனர் என்பதால், மேற்குறித்த ஏடுகளில் உள்ள செய்திகளை ஆங்காங்கே எடுத்துக் கூறி விளக்கும் பணிகள் பல வடிவங்களில் நிகழ்கின்றன. குக்கிராமத்திலிருந்து பெருநகரம் வரை மந்தைகளிலும், மன்றங்களிலும், சந்தைகளிலும், சாவடிகளிலும், சத்திரங்களிலும், மண்டபங்களிலும், கோயில்களிலும் கதைகளையும், காதைகளையும், (கவிதைகளையும்), காப்பியங்களையும், கீதைகளையும் அன்றாடம் விரித்துரைத்து அறிவுச் சுடர் கொளுத்தும் பணி தொடர்ந்து நிகழ ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன எம்மால்.

    இப்படி யெல்லாம் அரும்பாடுபட்டு வளர்த்த மெய்யான இந்துமதத்தைக் கட்டிக் காத்திட தமிழர்களில் குருமார்கள், குருக்கள்கள், அருளாளர்கள், அருளாளிகள், அருளாடு நாயகங்கள், மருளாளர்கள், மருளாளிகள், மருளாடு நாயகங்கள், பூசாறிகள், ஓதுவார்கள், பண்டாரங்கள், ஐந்திறத்தார்கள், எந்திறத்தார்கள், மந்திறத்தார்கள், …. முதலியவர்கள் தோன்றிட வேண்டும். ஆனால், தமிழர்களில் பொய்யான ஹிந்துமதத்தில் நம்பிக்கை யுடையவர்களும், பயனற்ற சமசுக்கிருத மொழியில் ஆர்வமுடையவர்களும்தான் இருக்கிறார்கள்.

    எனவே, தமிழர்களை இனப்பற்றும், தன்னம்பிக்கையும், தன்மானப் பிடிப்பும், விடுதலை உணர்வும், நாட்டுணர்வும், பண்பாட்டுணர்வும், சமுதாயக் கட்டமைப்பும், அரசியல் ஒழுங்கமைப்பும் உடையவர்களாக உருவாக்கிடுவதற்காகத் தமிழ்மொழியை மட்டும் பயன்படுத்தாமல், தமிழர் மதமான சித்தர் நெறி எனப்படும் மெய்யான இந்துமதத்தையும் பயன் படுத்தியேயாக வேண்டும். அதாவது, தமிழ்மொழி யறிவும், மெய்யான இந்துமதத்தின் அறிவும்தான் தமிழர்களை மீண்டும் தமிழர்களாக்கி ஒற்றுமையும், ஒருமைப்பாடும் பெறச் செய்ய முடியும்.

    இதற்காகத் தமிழர் அல்லாதார் யாராக இருந்தாலும் தமிழர்களுடைய சமய சமுதாய அரசியல் இலக்கியத் துறைகளில் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த அளவு தமிழர்களுக்கு இன உணர்வும், மொழியுணர்வும், தன்னம்பிக்கையும், பண்பாட்டுப் பிடிப்பும் ஏற்படுவதற்கு மெய்யான இந்துமதத்தின் மறுமலர்ச்சி ஒன்றுதான் வழி. இதற்குரிய செயல்திட்டமே பதினெண் சித்தர்களின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள்.

    இதனைப் புரிந்தும், புரிந்து கொள்ளாமல் நாடாளுபவர்களும் நாட்டு மக்களும் மதத் துறையை யாருடைய தலையீடும் இல்லாத ஒரு தனித் துறையாகச் செழிப்போடு போற்றி வளர்க்க வேண்டும் என்ற உணர்வைப் பெறாமல் இருக்கிறார்கள். இந்த உணர்வு வளவளர்ச்சி பெற்றிட்டால்தான் தமிழினம் பற்றும், பாசமும் மிக்க ஒற்றுமையைப் பெற்றிடும்.

    தமிழர்கள் தங்களுடைய முன்னோர்களின் இடிபாடுற்றுக் கிடக்கும் கோட்டைக் கொத்தளங்களையும், மாளிகைகளையும், இருளடைந்து கேட்பாரற்றுக் கிடக்கின்ற அனைத்து வகையான கோயில்களையும் முடிந்த வரை செப்பனிட்டு முதியோர் முதல் இளஞ்சிறார் வரை அவற்றைக் காட்சிப் பொருளாகவாவது கண்டு களிக்குமாறு செய்தல் வேண்டும். ஏனென்றால், இவைதான் அகப் பண்பாட்டையும், புற நாகரீகத்தையும் கற்றுத் தருபவைகளாகவும், போற்றிப் பேணிப் பாதுகாத்து வளர்ப்பவைகளாகவும் இருக்கின்றன.

    இன்னும் சொல்லப் போனால் ஏடுகளில் எழுதியுள்ள இலக்கிய இலக்கணங்களைப் படிப்பது போல் நாட்டு நடப்பில் அநுபவக் கல்விச் சாதனங்களாக நமது முன்னோர்களால் விட்டுச் செல்லப் பட்டிருக்கின்ற அனைத்து வகையான கோயில்கள், கோட்டை கொத்தளங்கள், அரண்மனைகள், மாடமாளிகைகள், முதலியவைகளை யெல்லாம் உற்று உற்றுப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது, ஏடுகளைப் படிப்பது போல; நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற அனைத்துக் கட்டிடங்களையும் பார்த்துப் பார்த்துத்தான் சிந்தையாலும் நெஞ்சத்தாலும் படிக்க வேண்டும்.

    இந்தச் செயல்திட்டம், பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள் மூலம்தான் நிறைவேற்றப் பட்டிடும். ஏனெனில், இந்தப் பதினெட்டு அருளாட்சி ஆணைகள்தான் தமிழினத்தின் அனைத்து வகையான தாகங்களையும், பசிகளையும், எதிர்பார்ப்புக்களையும் தணிக்கக் கூடிய அருட்கேணியின் ஊற்றுக் கண்கள். எனவே, இந்த ஊற்றுக் கண்கள் நன்கு செயல்படுவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ! அவை அனைத்தும் செய்தாக வேண்டும்.

    ஆனால், அருள்மொழித் தேவன் எனும் இராசராசன் (முதலாம் இராசராசன்) இந்தப் பணிகளை யெல்லாம் புரிந்தும் புரியாதவனாக; உணர்ந்தும் உணராதவனுமாக; தெரிந்தும் தெரியாதவனுமாக; வட ஆரிய மாயையில் சிக்குண்டு பொய்யான ஹிந்துமதத்தை வளர்த்திடுபவனாகி விட்டான். இன்னும் சொல்லப் போனால், அருட்பேரரசாக மலர்ந்த சோழப் பேரரசின் நிலையான தலைமைப் பீடமாக கட்டப் பட்ட கருவறைக் கோபுரம் உடைய தஞ்சைப் பெரியவுடையாரின் கோயிலை வட ஆரியரின் சமசுக்கிருத மொழிக்கும், சனாதன ஹிந்து மதத்திற்கும் காணிக்கையாக்கி விட்டான் இந்த அருள்மொழித் தேவன்.

    எனவேதான், அருட்பேரரசின் தந்தையான பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் சோழப் பேரரசின் எந்தச் சாசனத்திலும் இலக்கியத்திலும் தன்னைப் பற்றிய செய்திகளில் எதுவுமே இடம் பெறத் தேவையில்லை! தேவையில்லை! தேவையில்லை! என்று குருவாணையிட்டுச் சென்றிட்டார். அக்குருவாணையை உடனடியாக முழுமையாக நிறைவேற்றுவதாக இராசேந்திர சோழன் (முதலாம் இராசேந்திரன்) உறுதிமொழி வழங்கியபடி செய்து முடித்தான் என்றாலும், கருவூர்த் தேவரால் தனது தந்தையின் சாதனைகளும், படைப்புக்களும், கொள்கைகளும், குறிக்கோள்களும், செயல் திட்டங்களும் வாழையடி வாழையாக மறைகளாகவும், முறைகளாகவும், நெறிகளாகவும், வேதங்களாகவும் காப்பாற்றப் படும் நிலைகள் உருவாகின.

    எனவேதான், மூவர் உலா என்ற நூலிலும் வர்ம சாத்திறம், மருத்துவம், கட்டிடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, போர்க்கலை பற்றிய நூல்களிலும், பீடாதிபதியின் கருவழி வாரிசுகளின் நூல்களிலும் இந்தப் ‘பதினெண் சித்தர்களின் பதினெட்டு அருளாட்சி ஆணைகளும்’ நிலைகுலையாமல் காலங்கள் தோறும் உரிய உரைநடையில் தெளிவாக வாழ்ந்து வந்திருக்கின்றன.

    இந்த மாபெரும் வரலாற்றுப் பேருண்மையை உணர்ந்தாவது; தமிழ் மொழியின் பெயராலோ! தமிழ்நாட்டின் பெயராலோ! தமிழினத்தின் பெயராலோ! தமிழ்ப் பண்பாட்டின் பெயராலோ! …. செயல்படப் புறப்படுகின்றவர்கள் அனைவரும் இந்தப் பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள் எனும் செயல்திட்டத்தை முறையாகவும், முழுமையாகவும் தெரிந்து, அறிந்து, ஆராய்ந்து, புரிந்து, தெளிந்து, உணர்ந்து, நம்பி, விருப்பத்தோடு செயலாக்க முற்பட வேண்டும்.

    அப்பொழுதுதான், உண்மையிலேயே தமிழினத்திற்காக பாடுபட முன்வருபவர்கள் ஊசிமுனையளவாவது நிலையான பயனுள்ள சாதனையைச் சாதிக்க முடியும்! சாதிக்க முடியும்! சாதிக்க முடியும்! அப்படி யில்லாவிட்டால் தமிழின நலத்துக்காகப் பாடுபடுபவர்கள் அனைவருமே தோற்றவர்களாக, பொய்யர்களாக, ஏமாற்றுக் காரர்களாக, கருத்துக் குருடர்களாக, தன்னல வெறி பிடித்த கோழைகளாக, தமிழினத் துரோகிகளாகத்தான் வாழ்ந்து செல்ல நேரிடும்! வாழ்ந்து செல்ல நேரிடும்! வாழ்ந்து செல்ல நேரிடும்!

    தொடர்புடையவை: