Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி>
  • அருளாட்சி ஆணைகள்.>
  • அருளாட்சி ஆணைகள் - 1 முதல் 10 வரை
  • அருளாட்சி ஆணைகள் - 1 முதல் 10 வரை

    அருளாட்சி ஆணைகள் - 1 முதல் 10 வரை

    பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள் (பார் ஆண்ட தமிழர்கள் பராரிகளைப் போலப் பிறரின் பாதுகை தாங்கி வாழும் பரிதாப நிலைகளைப் போக்கிடும் ஆற்றல் இந்தப் பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகளுக்கு உண்டு.)

    கோயில்கள் வழி மட்டுமே நிகழ வேண்டிய அருளாட்சி, பொருளாட்சி:

    1. தமிழர்கள் தங்களுடைய இனத்தைச் சார்ந்தவர்களை அதிகமாக விரும்பவும், நம்பவும், மதிக்கவும், துணையாக ஏற்றுக் கொள்ளவும், வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளவும் …. நிகழ வேண்டும். அப்பொழுதுதான், தமிழினம், தன்னம்பிக்கையும், இன ஒற்றுமையும், விடுதலை வாழ்வும் பெற்றிட முடியும். இதற்காகத் தமிழ் இனநல அலுவலகங்களாகச் செயல்படும் கோயில் சொத்துக்களும் (அனைத்து வகையான வழிபாட்டு நிலையங்கள், கருவறைகள், வெட்டவெளிக் கருவறைகள் முதலியவற்றையும் கோயில் என்ற சொல் இங்கு குறிக்கின்றது.) கோயில் நடைமுறைகளும், உரிமைகளும், பெருமைகளும் அந்தந்த கோயிலின் வட்டாரத்தில் உள்ள (1) கோயில் பிள்ளை, (2) முதலி, (3) பண்டாரம், (4) அம்பலம், (5) அரசு, (6) நாட்டாண்மை, (7) குருமார், (8) குருக்கள் எனும் எண்பேராயத்திடம் ஒப்படைக்கப் படல் வேண்டும். இதில் அரசோ, பெருவணிகரோ, பெருநிலக் கிழாரோ தனிப்பட்ட முறையில் தலையிடக் கூடாது! கூடாது! கூடாது! கூடவே கூடாது!
    2. கோயில்தான் கலைப் பயிற்சிப் பள்ளியாக அரங்கேற்ற மண்டபமாக, சிற்ப ஓவியக் கூடமாக, மருத்துவமனையாக, போர்க்கலைப் பாடிவீடாக, இலக்கிய இலக்கணக் கல்விச் சாலையாக, அரசியல் வித்தகம் கற்பிக்கும் கலாசாலையாக இயங்க வேண்டும். மக்கள் மேற்படி கலைகளைக் கோயிலில்தான் கற்றும் உற்றும் தேர்ச்சி பெற வேண்டும். ஏனெனில், தெய்வீகம் கலக்காத கலை உய்வைத் தராது. அருள் சேராத முயற்சி இருளைத்தான் சேர்க்கும்.
    3. ‘கோயில்களில் ஆவி, ஆன்மா, ஆருயிர், சிந்தை, நெஞ்சம், மெய் எனும் ஆறுக்கும் தேவையான விருந்தும் மருந்தும் வழங்கப் படும் செயல்திட்டம்’ அன்னியர்களாலும், அன்னிய மொழிகளாலும் முடக்கப்பட்டு, அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு விட்டன. இவற்றைச் சரிசெய்ய வேண்டுமென்றால் அந்தந்தக் கோயில்களின் மரபுப்படி குருமார், குருக்கள், பூசாறி, ஓதுவார், பண்டாரம், முதலி, பிள்ளை, இசை வேளாளர், ….. எனப்படும் 48 வகையான கோயில் ஊழியர்களும் தமிழர்களாகவே தேர்ந்தெடுக்கப் பட்டு நியமிக்கப்பட வேண்டும். இவர்களாலேயே கோயில் பூசைகளும், சமயச் சடங்குகளும், சாத்திரியார் பணியும் பிறவும் நடந்திடல் வேண்டும்.
    4. யவனர், சோனகர், சீனர் முதலியோர்களின் கோயில்களிலே அவர்களுடைய மொழியே ஆட்சி மொழியாக இருப்பது போல், தமிழர்களின் கோயில்களில் தமிழ் மொழியே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். பிறாமணர்கள் மற்ற அன்னியர்கள் போல் தங்களுக்கெனத் தனிக் கோயில்கள் வைத்து அதில் சமசுக்கிருத மொழியை ஆட்சி மொழியாக வைத்துக் கொள்ளலாம். யவனர், சோனகர், சீனர் போலப் பிறாமணர்களும் தமிழர்களின் கோயிலுக்குள் வரத் தேவையில்லை. ஏனெனில், இவர்களாலும் இவர்களுடைய சமசுக்கிருத மொழியாலும்தான் மெய்யான இந்துமதம் சிதைக்கப் பட்டு பொய்யான ஹிந்துமதம் உருவாக்கப் பட்டது.
    5. கோயிலில் செயல்படும் அறங்காவலர்கள், அறங்கூறவையத்தார், அரசு நாயகங்கள், அம்பலத்தார் முதலியோர்கள் அந்தந்தக் கூற்றத்திற்கும், வட்டாரத்திற்கும் பொறுப்பேற்று அருளாட்சி புரிய வேண்டும். இதுவல்லாமல் அரசியலாரோ, பெருவணிகரோ, பெருநிலக் கிழாரோ இந்தக் கோயில் வழிச் செயல்படு அவையங்களில் தலையிடக் கூடாது.
    6. ஆண்டு தோறும் கோயில் வருவாய், தைத்திங்கள் பருவ பூசையை ஒட்டி முடிவு செய்ய வேண்டும். புதிய அவையத்தார்கள் பருவ பூசையிலிருந்து பதினெட்டு நாட்களுக்குள் தேர்ந்தெடுக்கப் பட்டாக வேண்டும். இப்படிப் புதிய நிறுவன நிருவாகம் தோன்றுவதற்கு எதிராகவோ, குறுக்காகவோ, மறுப்பாகவோ, தடங்கலாகவோ ஏதேனும் நிகழ்ந்தால் அல்லது யாராவது இருந்தால் அப்பொழுது மட்டும் அரசு நேரடியாகத் தலையிடலாம், தலையிடல் வேண்டும்.
    7. அந்தந்தக் கோயில்களில் அந்தந்தக் கிராமத்தார், ஊரார், வட்டாரத்தார், கூற்றத்தார் பொறுப்பிலேயே கல்வி, மருத்துவம், கலை, போர்க்கலை, சேவலோன் கலைகள்…. முதலியன வளர்க்கப் படல் வேண்டும். இதில் பிறமொழியினர் தலைமை தாங்குவதோ, பணிபுரிவதோ முற்றிலும் தடுக்கப் பட்டாக வேண்டும். இந்த நிறுவனங்களிலோ நிர்வாகங்களிலோ அரசு தலையிடவே கூடாது. அப்பொழுதுதான் இயற்கையான வளர்ச்சி அனைத்திலும் இருந்திடும்.
    8. கோயில் சொத்தைத் திருடுதல், ஏமாற்றுதல், பாழாக்குதல், ஊர் சபையில் பொய்ச்சாட்சி கூறல்…. முதலிய குற்றங்களைச் செய்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் கோயில் நிறுவனங்களால் கட்டப்படவும், வெட்டப்படவும் அதிகாரம் இருக்க வேண்டும். இதில் அரசோ, வேறு தனிமனிதரோ வேறு எந்தக் காரணத்தை முன்னிட்டும் தலையிடக் கூடாது! கூடாது! கூடாது! கூடவே கூடாது!
    9. ஒவ்வொரு கோயிலிலும் அதனுடைய வருவாயிற்கு ஏற்ப பாழி, பரதேசி, பண்டாரம், சாமி, ஆண்டி, சாது, நினைவு இழந்தோர், இல்லறம் ஏற்காதார், இல்லறம் நீத்தார், இல்லறம் நிறைவு செய்தார், மாணாக்கராய் உள்ளோர்…. எனப்படுபவர்களுக் கெல்லாம் உணவு, உடை, உறையுள் கொடுக்கப் பட்டாக வேண்டும். இவர்களால் எந்த விதமான பாதிப்பும் சமயத்துக்கோ, சமுதாயத்திற்கோ எப்போதுமே ஏற்படாத வண்ணம் பாதுகாக்கும் அரணாகவே கோயில் நிறுவன நிர்வாகங்கள் இருக்க வேண்டும்.
    10. அந்தந்தக் கோயிலின் நூலகம், கருவூலம், காட்சியகம், உயிரினப் பொதும்பு, பயிரினச் சோலை, பூசைமலர் தரும் பூங்கா…. முதலியவை அந்தந்த வட்டாரத்து இளைஞர்களாலும், சிறார்களாலும் பேணப்படல் வேண்டும். அதாவது, ஒவ்வொரு கோயிலும் அதற்கென உரிய தனித் தன்மைகளைப் பாதுகாத்து வளர்த்தேயாக வேண்டும். அப்பொழுதுதான் தனிமனிதப் பற்றையும், பாசத்தையும் போல்; குடும்பப் பற்றையும், பாசத்தையும் போல்; சமுதாயப் பற்றையும் பாசத்தையும், வட்டாரப் பற்றையும் பாசத்தையும் வளர்த்துக் கொள்ள முடியும். இதுவே, ஒட்டுமொத்தமாகத் தமிழர்களை ஒற்றுமைப் படுத்தும். அதாவது, அந்தந்த ஊர்க் கோயிலிலுள்ள நூலகம், கருவூலம், காட்சியகம் முதலியவைகளால்தான் அந்தக் கோயிலைச் சார்ந்த வட்டார மக்கள் தங்களின் முன்னோர்களைப் பற்றிய வரலாறு, பண்பாடு, நாகரீகம், சாதனை…. முதலியவைகளைத் தெரிந்தும், புரிந்தும், பாரம்பரியப் பெருமித உணர்வையும், உரிமை உணர்வையும் பெற்றுத் திகழ்ந்திடுவார்கள். இவற்றின் மூலம்தான் தனிமனிதர்களுக்குத் தன்னம்பிக்கையும், தன்மான உணர்வும், இனப்பற்றும், மொழியுணர்வும், இனத்தாரோடு ஒற்றுமையோடு கூடி வாழும் விடுதலை வாழ்வில் நாட்டமும் ஏற்பட்டிடும்! ஏற்பட்டிடும்! ஏற்பட்டிடும்!

    தொடர்புடையவை: