அருட்பணி விரிவாக்கத் திட்டம் வெற்றி பெறப் பாடுபடுங்கள்
அன்புச் சேவுக!
பதினெண் சித்தர்கள் பீடாதிபதிகள் தோன்றுகின்ற பொழுது மட்டுமே; அவர்களால், கல்லும் புல்லும்; அதாவது, அனைத்துவகையான உயிரற்ற பொருள்களும், உயிரினங்களும் கடவுளாக்கப்படும் அருட்பணி நிகழுகின்றது. எனவேதான், அனைத்தையும், அனைவரையும் அருளூற்றுக்களாக மாற்றும் அமாவாசை வேள்வி (கந்தழி நிலை = சூரிய வழிபாடு); மூன்றாம் பிறைத் தொழுகை (கொடி நிலை = விண்மீன், கோள் வழிபாடு); பருவபூசை (வள்ளி நிலை = திங்கள் (நிலவு, சந்திரன்) வழிபாடு) என்ற மூன்றும் அருட்பணி விரிவாக்கத் திட்டங்களாகின்றன.
ஆண்டுக்கொரு முறை கருகுலம், குருகுலம், தருகுலம், திருகுலம் ஆகிய நான்கிலும் அந்தந்த யுகத்துக்குரிய மாதங்களில்; ‘ஞானம் வழங்கு பால்குடப் பருவபூசைத் திருவிழா’ கொண்டாடும் திட்டம் செயலாக்கப் படுகிறது; இதன் மூலம் அனைத்து வகையான தர, திர தீர, வீர, உர… மக்களும் ஒரு முறையாவது அருளை அநுபவப் பொருளாகப் பெற்றுத் தெய்வீக இன்பம் துய்க்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதனால், அக இருளும், புற இருளும், அகன்று; சாதாரணப் பொது மக்களும் அருளாளர்களாக மாறும் முயற்சியில் ஆர்வம் கொள்ளும் நிலைகள் உருவாக்கப்படுகின்றன.
மனித வாழ்வும் ஏக்கத்திலும் துக்கத்திலும் தூக்கத்திலும், வெறியிலும், அற்பப் பொருளுலக ஆசைகளிலும் வீணாவதைத் தடுக்கும் முயற்சியே ஞானம் வழங்கு பால்குடப் பருவ பூசைத் திருவிழா, இந்த அமுத ஆண்டு வைகாசித் திங்கள் 9-ஆம் நாள் (23-5-86 வெள்ளிக்கிழமை) நிகழ்ந்த ஞானம் வழங்கு பால்குடப் பருவபூசைத் திருவிழாவில் நூற்றுக்கணக்கில் திருக்குடங்களுடன் உலா வந்தவர்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் அருளுற்றுக்களாகவே மாறினார்கள். இவர்கள் மெய் மறந்து அருளுலக இன்ப வெள்ளத்தில் சிறு துரும்பு போல் அலைமோதி துள்ளி ஆடினார்கள். இவர்கள், தங்கள் தலையிலிருந்த திருக்குடத்தை இறக்கிப் பொருளுலகுக்குத் திரும்ப மறுத்துக் குதித்து ஆடியும் அழுதும் புலம்பி ஆனந்தக் கண்ணீர் வடித்தும் ஆடினார்கள். ஒவ்வொருவரையும் நாலைந்து பேர் பிடித்தும் கூட நிறுத்த முடியவில்லை. இறுதியில் பத்துப் பதினைந்து பேர்கள் சேர்ந்து முயன்றுதான் அருள் வெள்ளத்தில் ஆடிச் சென்றவர்களின் தலையிலிருந்து திருக்குடத்தை இறக்க முடிந்தது திருக்குடம் இறக்கப் பெற்றும் சிலர் சுயநினைவு பெறப் பல மணிநேரம் ஆயிற்று இதே நிலைதான் கங்கைக்கரையில் இராமகிருட்டிணப் பரமஅம்சரால் அவரது அடியார் விவேகாநந்தருக்குக் கடவுளை உணரும் பொருட்டு ‘அருட்பெருஞ் சுடர்’ (The Divine Light அருட்பெருஞ்சோதி) மயக்க நிலையில் வழங்கப்பட்டு; மீண்டும் அவரை அந்த அருளுலகப் பேரின்ப நிலையிலிருந்து விடுவித்துப் பொருளுலக நிலைக்குக் கொணர்ந்தபோது ஏற்பட்டது அதாவது அருளுலக அநுபவம் எவரையும் பொருளுலக உணர்வுகளனைத்தையும் மறந்து பேரின்ப ஆட்டத்தில் ஈடுபடுத்திடும். இப்பேருண்மையை, இனியாவது அனைவரும் அறிந்தும், பிறர்க்கு அறிவித்தும் நமது அருட்பணி விரிவாக்கத் திட்டம் வெற்றி பெறப் பாடுபடுங்கள்.
அன்பு
ஞாலகுரு சித்தர் கருவூறார்.
(குருதேவர் அறிக்கை 29இலிருந்து)