சிவராத்திரி வழிபாடு தமிழர்களுடையது; தமிழர்களைப் பார்த்து மற்ற இனத்தார்கள் இந்த வழிபாட்டைப் பின்பற்றிட ஆரம்பித்தார்கள்; தமிழர்களோ இது தங்களுடையது என்பதை மறந்து அன்னியருக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். விளக்கம் கீழே தரப்படுகிறது.
“ஆகாய கங்கை ஏற்ற இரவாம்
மாக்கடல் கடைந்த நஞ்சுண்ட மரண இரவாம்
ஏகாயம் எண்ணற்ற கோடி தோற்றுவித்த இரவாம்
கூகா எனப் பிறர்கூடி அழா வண்ணம்
சாகா வரங்கள் வழங்கும் வகைதரு சிவராத்திரி
வாகாகக் கொண்டாடி தோதாகப் பிறவித் துயர் போக்கிடலாம்”
(இருக்கு வேதம் 3:7:23)
(1) ஆதிசிவனார் (கடலுள் மறைந்திட்ட) இளமுறியாக் கண்டம் எனும் குமரிக் கண்டத்தில் இருந்திட்ட தென் இமயமலையின் அடிவாரத்தில் தென் இந்து, தென் யமுனை, தென் கங்கை என்ற மூன்று ஆறுகளும் கூடிய முக்கூடல் பகுதியில் பதினெண் சித்தர் மடத்திற்காக ‘மோகம்சிதறா’ நகரைத் தோற்றுவித்து முத்தமிழ்ச் சங்கத்தை நிறுவ ஆரம்பித்த இரவு.
(2) ஆதிசிவனார் முத்தமிழ்ச் சங்கத்திற்காக ‘மோகம்சிதறா நகரையும்’ அருகிலிருந்த மருத மரக் காட்டில் ‘மருத மரக்காட்டு நகர்’ என்ற பொருளில் ‘மருதை மாநகர்’ என்ற மாநகரத்தை தோற்றுவிக்க ஆரம்பித்த இரவு.
(3) ஆதிசிவனார் இந்து வேதத்திற்காகவும், இந்து மதத்திற்காகவும் பதினெண்சித்தர் மடத்தையும் பீடத்தையும் நிறுவுவதற்காக மோகம்சிதறா (மொகஞ்சதாரோ) நகரிலிருந்து சில கல் தொலைவில் ‘அருட்பாநகர்’ (அரப்பா) என்ற நகரைத் தோற்றுவிக்க ஆரம்பித்த இரவு.
(4) ஆதிசிவனார் உருவாக்கிய பதினெண்சித்தர் மடத்தில் இந்துவேத நூல்களையும், பதினெண் சித்தர் பீடத்தில் இந்துமத நூல்களையும் அண்டபேரண்ட அருளுலக ஆட்சி மொழியான முத்தமிழ் மொழி மூலம் கற்றுத் தேர்ந்து ‘மணீசர்’ என்ற நிலையிலிருந்து பக்குவப் பட்ட மனதையுடைய மனிதர்களாக மாறிட்டவர்களுக்கு முதன்முதல் அருட்பட்டங்கள் வழங்கிட்ட இரவு.
(5) ஆதிசிவனார் விலங்குகளோடு விலங்குகளாகத் திரிந்திட்ட மணீசர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்குரியவர்களை அழைத்து முத்தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து கல்வி கற்பித்திட ஆரம்பித்திட்ட இரவு. (6) இந்த ஞாலம் எரிகின்ற நெருப்புக்கோளமாக இருந்து எரிதல் அடங்கி கங்காக, நெருப்புக் கனலாக மாறியதும், நெருப்புக் கனல் பனிக்கட்டியாக மாறியதும், பனிக்கட்டி நீராக மாறியதும், நீர் நிலமாக மாறியதும், நிலத்தில் உயிரணுக்கள் தோன்ற ஆரம்பித்ததும் இந்த சிவராத்திரி எனப்படுகின்ற மாசி மாதம் தேய்பிறையில் சதுர்த்தசி இரவு பதினான்கு நாழிகைக்குரிய இலிங்க வடிவ கால இரவே மகாசிவராத்திரி என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது ஆவி, ஆருயிர், ஆன்மா என்ற மூன்றும் ஒருங்கிணைந்து இலிங்க வடிவில் சீவன் உருவான இரவே சீவராத்திரி எனும் சிவராத்திரியாகும். அதாவது இந்தச் சீவன்தான் அருவுருவ நிலையிலிருந்து உருவநிலை பெற்று மணீசனாக மாறிற்று. இப்படி மணீசன் தோன்றுவதற்குரிய சீவன் தோன்றிய இரவு சீவ இரவு. அதுவே சீவராத்திரி, சிவராத்திரி என்று அண்டபேரண்டமாளும் பதினெண்சித்தர்கள் குறிக்கின்றார்கள்.
எனவே, இந்துக்கள் அனைவரும் மகா சிவராத்திரி அன்று காலையிலிருந்து மறுநாள் காலை வரை உள்ள 24 மணி நேரத்தில், ஒரு சில மணித்துளிகளாவது தங்கள் ஊரில் உள்ள சுடுகாட்டிற்குச் சென்று நமது இந்துமதக் கடவுளர்களுக்கெல்லாம் கடவுளாக இருக்கின்ற சிவபெருமானை கும்பிட்டு வரவேண்டும். அத்துடன் தங்களுடைய மாண்டுபோன முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு விருப்பமான பலகாரங்களையும் உணவு வகைகளையும் சமைத்து எடுத்துக் கொண்டு, தேங்காய் பழம் பூ ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி, வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, சந்தனம், குங்குமம், திருநீறு, மஞ்சள் முதலியவைகளை எல்லாம் எடுத்துச் சென்று சுடுகாட்டில் ஏதேனும் ஓரிடத்தில் தண்ணீர் தெளித்து சாணமிட்டு மெழுகி, மாக்கோலம் போட்டு நெய்விளக்கு ஏற்றி, எல்லாவற்றையும் தலைவாழை இலை போட்டு படைத்து விட்டு, படைத்த உணவில் எல்லாவற்றிலும் சிறிது அங்கே எடுத்து வைத்து விட்டு மீதியை எடுத்துக் கொண்டு நேராக சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
அங்குக் கொடிமரத்தின் முன் அனைத்தையும் வைத்து விட்டு, தங்களுக்குத் தெரிந்த சிவன் பாடலை (சிவபுராணம்) அல்லது சீவகாயந்திரியை உரத்த குரலில் ஓதியபடியே ஐந்து முறை வலம் வர வேண்டும். பின் பலிபீடம் நந்தியையும் கும்பிட்டு விட்டு நேராக அம்மன் சன்னதிக்கு சென்று வழிபட வேண்டும். பிறகு கருவறையில் உள்ள சிவனை வழிபட வேண்டும். அதன்பிறகு மற்ற தெய்வங்களை வணங்கி விட்டு கோயிலில் உள்ள குரு, குருக்கள், குருமார், பூசாரி, அர்ச்சகர் என்றுள்ள அனைவரிடமும் வாழ்த்துப் பெற்று வீடு திரும்ப வேண்டும்.
வீட்டிற்கு வந்தபின் குத்து விளக்கு ஏற்றி ஊதுபத்தி அல்லது சாம்பிராணி புகையிட்டு சிவபெருமானையும், தங்களுடைய மாண்டுபோன தங்களது குல முதல்வர்களையும் (குல தெய்வங்களையும்) நினைத்துச் சிறிது நேரம் பூசையில் அமர்ந்த பின் அந்தப் படையலை அனைவரும் உண்ணலாம். மற்றவருக்கும் தரலாம்.
ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்