Gurudevar.org
 • முகப்புப் பக்கம்>
 • குருதேவர் அருளியவை>
 • தை மாதத்தின் சிறப்பு.
 • தை மாதத்தின் சிறப்பு.

  தை மாதத்தின் சிறப்பு.

  (I) பொதுவாக நாட்டு வழக்கில்; “தை பிறந்தால் வழி பிறக்கும்” - என்ற பழமொழி, என்ற மூதுரை எல்லோரும் அறிந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், இதில் எவ்வளவு செய்திகள் அடங்கியிருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது.

  (II) இந்த மண்ணுலகத்தைப் பொறுத்தவரை;

  (III) இப்படி அண்டபேரண்டங்களிலிருந்து வந்தவர்கள் இம்மண்ணுலகில் தண்ணீருக்குள்ளிருந்து வெளியே தோன்றிக் கொண்டிருந்திட்ட கற்பாறைகள் மீது தங்கி இம்மண்ணுலகைப் பற்றி ஆய்வுகள் நிகழ்த்தினார்கள். அப்பொழுது, அவர்கள் தங்களுடைய தாய்மொழியும், அண்டபேரண்ட அருளுலக ஆட்சிமொழியும்; அருளூறு அமுதத் தெய்வீகச் செம்மொழியுமான முத்தமிழ் மொழியிலேயே உரையாடினார்கள்; தங்களது நூல்களை எழுதினார்கள். இம்மண்ணுலகின் தோற்ற மாற்ற ஏற்ற இறக்க … நிலைகள் அனைத்தையும் குறித்திட்டார்கள். எனவேதான்,

  “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
  முன் தோன்றி மூத்த தமிழ்மொழி, தமிழ்க்குடி”

  என்ற வாக்குப் பிறந்தது. இதனுடைய பொருள் ஆழமானது, செறிவு மிக்கது, உலக வரலாற்று பேருண்மைகளுக்கு அடிப்படையானது.

  அதாவது, இவ்வுலகத்தைப் பொறுத்தவரை முதன்முதல் தோன்றிய நிலப்பகுதி என்பது விந்திய மலைக்கு தெற்கே இன்றைய இந்துமாக்கடல் இருக்கின்ற பகுதியிலேயே ஏழாயிரம் கல் தொலைவுக்கு நீண்டு விரிந்து கிடந்த ஒரே பெரிய நிலப்பரப்புத்தான் ‘இளமுறியாக் கண்டம்’ எனப்படும் ‘குமரிக்கண்டம்’. இங்குத் தோன்றிய மக்கள்தான் இவ்வுலகின் பூர்வீகக் குடிகள். இங்குத் தோன்றிய உயிரினங்களும், பயிரினங்களும்தான் இந்த உலகம் முழுவதற்கும் பரவின என்பதால் இளமுறியாக் கண்டத்தின் உயிரினங்களும், பயிரினங்களும்தான் இவ்வுலகின் பூர்வீகமானது. எனவேதான், இன்றைக்கும் தென் இந்தியாவில்; குறிப்பாக தமிழ்நாட்டில் எல்லா வகையான பயிரினங்களும், உயிரினங்களும் இருக்கின்றன. மனிதரிலும் இவ்வுலகம் முழுவதுமுள்ள எல்லா நாட்டவர்களையும் போன்ற வடிவமைப்பும், வண்ண அமைப்பும், தோற்றப் பொலிவும், வாழ்வியல் நோக்குகளும், போக்குகளும் உடைய மனிதர்கள் தமிழ்நாட்டுக்குள் மட்டுமே இருக்கின்றார்கள். இதுபோல் எந்த ஒரு நாட்டிலும் இவ்வுலகம் முழுவதுமுள்ள எல்லா மானுட இனத்தின் வகைகளையும் உடைய மனிதர்கள் இருப்பதில்லை.

  (IV) இப்படித் தமிழகத்தின் தொன்மை, மேன்மை, உண்மை, திண்மை, நுண்மை, … முதலியவைகள் எல்லாம் விளக்கி உரைக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம், நாள், கிழமை, வாரம், வாரத்தின் ஏழுநாட்கள், மாதம், ஒவ்வொரு மாதத்துக்கும் உரிய நாட்கள், ஒவ்வொரு மாதத்திற்கும் பெயர், 12 மாதம் சேர்ந்தது ஓர் ஆண்டு, ஒவ்வொரு ஆண்டுக்கும் பெயர், 60 ஆண்டுகள் சேர்ந்து இவ்வுலகின் இயக்கம், இவ்வுலகம் கடந்த வானவெளி சஞ்சாரம், முதலியவை அனைத்தும் ஒரு வட்டமாகின்றன; அதாவது முடிவு பெறுகின்றன; அதாவது முழுமை பெறுகின்றன. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, 61வது ஆண்டை முதல் ஆண்டாக மீண்டும் கருத முடிகின்றது. இதற்குக் காரணம் வானவெளி ஆராய்ச்சி, நிலவியல் ஆராய்ச்சி… முதலியவைகளில் இளமுறியாக் கண்டத்து மக்கள் மிகுந்த தேர்ச்சியைப் பெற்றிருந்தனர். அது மட்டுமல்ல, மக்கள் சாதாரணமாக இரண்டு அறுபது ஆண்டுகள் அல்லது மூன்று அறுபது ஆண்டுகள் காலம் என்று 120 முதல் 180 வயது வரை வாழுகிறவர்கள் அதிகமாக இருந்திட்டார்கள். அதனால் 60 ஆண்டுக்கொருமுறை நாள்நிலை, கோள்நிலை, மீன்நிலை, இராசிநிலை, இயற்கை வளம், … முதலியவைகள் எல்லாம் திருப்பம் அடைகின்றன. அதாவது அறுபது ஆண்டுக்கொரு முறை எல்லாமே மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகின்றன என்பதுதான் இளமுறியாக் கண்டத்து மக்கள் தங்களுடைய வாழ்நாளின் சோதனைகளின் மூலம் சாதித்த சாதனைகள் ஆகும். இச்சாதனைதான் இந்து வேதமாக, இந்துமதமாகப் பூத்துக் காய்த்து கனிந்து குலுங்குகின்றன.

  (V) இந்துக்கள், இந்து வேதத்தவர்கள் என்றாலேயே தமிழர்கள், தமிழ் மொழியினர் என்றுதான் பொருள். அதாவது தமிழ்மொழிதான் வேதத் தமிழ், தேவத் தமிழ், தெய்வத் தமிழ், கடவுள் தமிழ், ஆண்டவர் தமிழ், ஞானத் தமிழ், தவத் தமிழ், பத்தித் தமிழ், சத்தித் தமிழ், சித்தித் தமிழ், முத்தித் தமிழ், வேள்வித் தமிழ், யக்ஞத் தமிழ், யாகத் தமிழ், ஓமத் தமிழ், ஓகத் தமிழ், ஓகாசனத் தமிழ், யோகாசனத் தமிழ், மோகாசனத் தமிழ், போகாசனத் தமிழ், கந்தழி ஓம்பல் தமிழ், வள்ளி நிலை ஓம்பல் தமிழ், கொடிநிலை ஓம்பல் தமிழ், மணுநீதி தமிழ், … என்று தமிழின் பெருமையை விரித்துக் கொண்டே போகலாம்.

  (VI) இப்படித் தமிழ் பற்றி, தமிழர் பற்றி, ஆன்மீகத்தின் அடிப்படையில், அருளியலின் அடிப்படையில், அறிவியலின் அடிப்படையில்… விளக்கம் கூறக்கூடிய பல்லாயிரக் கணக்கானச் சித்தர்களை உருவாக்கிய பெருமை, உரிமை, பதினெண்சித்தர் மடத்திற்குத்தான் உண்டு. அதுவும் இன்றைக்கு நாளோலக்கத்திலும், திருவோலக்கத்திலும் அருளாட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் அந்தணர் அண்ணல், ஞானாச்சாரியார் இந்துவேதக் கடலில் மூழ்கி மக்களின் தேவைக்கேற்ற; உரிய, பயன் தரக்கூடிய தத்துவ முத்துக்களைத் தேடி எடுத்து வெளிக் கொணர்ந்து மக்களுக்கு அன்பளிப்பாக, அருட்கொடையாக, நன்மருந்தாக, பெருவிருந்தாக வழங்கிக் கொண்டிருக்கிறார்! வழங்கிக் கொண்டிருக்கிறார்! வழங்கிக் கொண்டிருக்கிறார்!

  இன்றைக்கு உலகம் ஐந்து பெரிய கண்டங்களாக பிரிந்து இருந்தாலும்; இவைகள் அனைத்திலும் உள்ள மக்களிடையே மிகுதியான அளவு எல்லாத் துறைகளிலும் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் காணப்படுகின்றன. இதற்குரிய காரணம் இன்றைய வரலாற்றுப் பேராசிரியர்களுக்கும், வரலாற்று வல்லுநர்களுக்கும், புதைபொருள் ஆய்வாளர்களுக்கும், நிலவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும், மானுடவியல் ஆராய்ச்சி யாளர்களுக்கும் … புரியாத புதிராகவே இருக்கின்றன.

  இப்புதிருக்கு விடை ஐந்து கண்டங்களிலும் வாழுகின்ற மானுடர்களுக்கு மூதாதையர்கள், முன்னோர்கள், இளமுறியாக் கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள்தான், அதாவது, இளமுறியாக் கண்டம் எனப்படும் குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மானுடர்களுக்கு அண்டபேரண்டங்களிலிருந்து மானுடர்களைக் காப்பாற்ற அனுப்பப்பட்ட ஆதிசிவனாரும், அவரோடு வந்த ‘விண்வெளி ஐம்பெரும் குழுவினரும்’ - (1) பதினெண்சித்தர்கள், (2) பதினெட்டாம்படிக் கருப்புகள், (3) 48 வகைப்பட்ட கடவுள்கள், (4) 48 வகைப்பட்ட வழிபடு நிலையினர்கள், (5) 48 வகைப்பட்ட சித்தர்கள் - அவர்களுக்குத் துணையாக வந்தவர்களும் இளமுறியாக் கண்டத்து மக்களுக்கு தமிழ்மொழியைப் போதித்து, தமிழ்மொழியின் சாதனைகளையும், போதனைகளையும் பயிற்றுவித்துத் தமிழினத்தை உண்டாக்கினார்கள். அந்தத் தமிழர்களில் மிஞ்சியவர்கள்தான் இன்றைய தமிழ்நாட்டில் தமிழர்களாக இருக்கிறார்கள் என்ற பேருண்மைதான் உலக மக்களிடையே உள்ள ஒருமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் காரணம் ஆகும்.

  எனவேதான், உலகம் முழுவதும் சனவரி மாதத்தை ஆண்டின் ஆரம்ப மாதமாக, முதல் மாதமாகக் கருதுகின்ற மரபு தமிழர்களுடைய மரபுதான். தமிழர்கள்தான்; இந்த நான்காவது யுகத்தில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தைமாதம் (சனவரி மாதம்) முதல்மாதமாக ஆண்டின் துவக்க மாதமாக இருந்ததை மாற்றினார்கள்; அல்லது மாற்றிக் கொள்ளும்படிச் செய்யப்பட்டார்கள். அதாவது இந்துவேதப்படி தை மாதம்தான் ஆண்டின் துவக்க மாதம்; ஆண்டின் முதல் மாதம்.

  ஆனால், இப்பொழுது சித்திரை மாதம்தான் தமிழ்ப் புத்தாண்டின் துவக்க மாதமாக; முதல் மாதமாகக் கொண்டாடப் படுகின்றது. இதுபற்றி இக்கலியுகத்தில் 3001 முதல் 3250 முடிய செயல்பட்டிட்ட சித்தர் அமராவதி ஆற்றங்கரைக் கரூரிலுள்ள பசுபதீசுவரர் ஆலயத்தை நிர்மாணித்த; 10வது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் அவர்கள்தான்; தமது குருபாரம்பரிய நூலிலும், இலக்கிய பாரம்பரிய நூலிலும், அரச பாரம்பரிய நூலிலும் நேரடியாகத் ‘தமிழரின் புத்தாண்டுத் துவக்கம் தை மாதமாகத்தான் இருந்தது’ என்பதையும்; காலப்போக்கில் சித்திரை மாதம் புத்தாண்டின் துவக்க மாதமாக, முதல் மாதமாக, ஆரம்ப மாதமாக மாற்றப் பட்டிட்டது என்பதையும் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். இவற்றின் சாரம்தான்; தை மாதத்தின் சிறப்புக்கள் என்ற கட்டுரையாக, சிறிய நூலாக வெளியிடப்படுகின்றது.

  (1) அண்டபேரண்டங்களிலிருந்து இந்த உலகம் வெறும் தண்ணீரால் ஆன உருண்டையாக இருந்தது. அப்பொழுது தண்ணீருக்குள்ளிலிருந்து கற்பாறைகள், கல் பரவலாக உள்ள இந்துமாக்கடல் பகுதியில் கல் மலைகள் வெளிப்பட ஆரம்பித்த காலத்தில்தான்; அண்டபேரண்டங்களிலிருந்து மூலப் பதினெண் சித்தர்களும், மூலப் பதினெட்டாம்படிக் கருப்புக்களும் அவர்களது துணைவர்களும் இவ்வுலகுக்கு வந்து கற்பாறைகள் மேல் தங்கி தங்களுடைய ஆராய்ச்சிகளை நிகழ்த்தினர். அந்த நிகழ்ச்சி தை மாதத்தில்தான் நடந்தது. இதுபற்றி மிகத் தெளிவான செய்திகள், மணுநீதி நூல்களிலும், இந்து வேதத்திலும், இந்துவேத நூல்களிலும், இந்துமத நூல்களிலும், ஆதிசிவனாரின் குருபாரம்பரியத்திலும், இலக்கிய பாரம்பரியத்திலும், அரச பாரம்பரியத்திலும் இருக்கின்றன.

  (2) இம்மண்ணுலகில் வாழ்ந்த மணீசர்கள் (மண் + ஈசர்கள்= மண்ணின் தலைவர்கள்) விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த நிலைமையினை மாற்றி, அவர்களைப் பக்குவப்பட்ட மனதை உடைய மனிதர்களாக மாற்றிட அனாதிசிவன்களான மணுநீதியார்கள் இம்மண்ணுலகத்திற்கு வர ஆரம்பித்த காலம் தை மாதமேயாகும்.

  (3) ஆதிசிவனார் இம்மண்ணுலகுக்கு வந்த காலம் தை மாதமேயாகும்.

  (4) ஆதிசிவனார் இப்பாரில் (பார் + உலகம்) வாழ்ந்து கொண்டிருந்த (வதிந்து கொண்டிருந்த = வசித்துக் கொண்டு இருந்த) பெண்ணான பார்வதியை (பார் + வதி = இவ்வுலகத்தைச் சேர்ந்த பெண்) மணந்து கொண்டது தை மாதத்தில்தான் (தைப்பூச நாளில்). அதுவும் தைப்பூச நாளன்று.

  (5) ஆதிசிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்த முருகன் தை மாதத்தில்தான்; தைப்பூச மீனில்தான், தைப்பூச யோகத்தில்தான் பிறந்தான்.

  (6) தைமாதத்தில்தான் திருப்பாற்கடல் கடையப்பட்டு இலக்குமியும், அமுதும், ஆலகால நஞ்சும் வெளிப்பட்டனர்.

  (7) தேவாசுரப் போர் தைமாதத்தில்தான் துவங்கியது. தொடர்ந்து பதினெட்டு ஆண்டுகள் மீண்டும் மீண்டும் இடைவெளி விட்டு தைமாதத்திலேயே நிகழ்ந்தது தேவாசுரப்போர். இந்தப் போர் முடிவுக்கு வந்ததும் தைமாதத்தில்தான்.

  (8) முருகன் தேவாசுரப் போரை நிகழ்த்திட அருட்படை (தேவர்களுடைய படை) சேனாதிபதியாகப் பொறுப்பு ஏற்றதும் தை மாதத்தில்தான்.

  (9) முருகன் தெய்வானையை மணந்ததும், வள்ளியை மணந்ததும் தை மாதத்தில், தைப்பூசத்தில்தான்.

  (10) ஆதிசிவனார், இளமுறியாக் கண்டம் எனும் குமரிக் கண்டத்தில் திருவிடம் என்ற தீவை தேர்ந்தெடுத்து இந்து வேதத்திற்காகவும், இந்து மதத்திற்காகவும், தமிழ்மொழிக்காகவும் செயல்படத் துவங்கியது தை மாதத்தில்தான்.

  (11) ஆதிசிவனார் திருவிடம் எனும் தீவில் தமிழ்மொழிக்காக மருதமரக் காடுகள் இருந்த பகுதியில் மதுரை மாநகரை உருவாக்கத் தொடங்கியதும்; இந்து நதிக் கரையில் இந்து வேதத்திற்காக ‘அருட்பா’ எனும் நகரை உருவாக்கத் துவங்கியதும் அதையடுத்து இந்துமதத்திற்காக ‘மோகம்சிதறா’ நகரை உருவாக்கத் தொடங்கியதும் தை மாதத்தில்தான். ஆனால், இம்மூன்றையும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள்தான் அமைத்தார். அதாவது முதலில் முத்தமிழ்ச் சங்கம் நிறுவுவதற்காக மருதை மாநகரை உண்டாக்கினார். அந்நகர் முழுமை பெற்றதும் அங்கு தை மாதத்தில்தான் முத்தமிழ் சங்கத்தைத் தோற்றுவித்தார். அதன் பிறகே அதாவது, முத்தமிழ்ச் சங்கம் தோற்றுவித்து அங்கு இளமுறியாக் கண்டத்து மக்கள் தமிழ்மொழியை நன்கு கற்றுக் கொண்டபிறகு (சுமார் எட்டு ஆண்டுகள் கழித்து) அங்கிருந்த இந்துநதிக் கரையில் இந்து வேதத்திற்காக அருட்பாநகர் என்ற ஒரு நகரை உருவாக்கினார். இந்த அருட்பா நகரில்தான் இந்துவேதங்கள் நான்கும், இந்துவேத நூல்கள் 392உம் (முந்நூற்றுத் தொண்ணூற்று இரண்டு), இந்துவேத சுலோகங்கள் எனப்படும் சூலகங்கள் 4,42,363உம் (நான்கு இலட்சத்து நாற்பத்து இரண்டாயிரத்து முன்னூற்று அறுபத்தி எட்டு) கற்றுக் கொடுக்கப்பட்டன. இப்படி இந்து வேதாகம பாடசாலை அருட்பா நகரில் நான்காண்டுகள் (48 மாதங்கள்) தொடர்ந்து நடத்தப்பட்டு; முழுநிலவு பருவ பூசைகள் 48 இந்துவேதாகம நெறிமுறைப்படி நிகழ்த்தப்பட்டிட்ட பிறகுதான் அருட்பா நகரை யொட்டியே (மோகம் சிதறா நகர்) மோகஞ்சிதறா நகர் உருவாக்கப்பட்டது.

  (12) இந்த மோகஞ்சிதறா நகர் இந்துமத நூல்கள் முப்பத்தாறையும் முறையாகக் கற்பிக்கும் பதினெண்சித்தர் பீடத்தைப் பெற்றிருந்தது. இதேபோல் அருட்பாநகர் இந்துவேதங்கள் நான்கையும், இந்துவேத நூல்களையும், இந்துவேத சுலோகங்கள் எனப்படும் சூலகங்களையும் கற்பிக்கின்ற பதினெண்சித்தர் மடத்தைப் பெற்றிருந்தது.

  (13) இப்படி மருதை மாநகரைத் தோற்றுவித்ததும், அங்கு முத்தமிழ் சங்கத்தைத் தோற்றுவித்ததும்; அருட்பா நகரைத் தோற்றுவித்ததும்; பதினெண்சித்தர் மடத்தைத் தோற்றுவித்ததும்; மோகஞ்சிதறா நகரைத் தோற்றுவித்ததும்; அங்கு பதினெண்சித்தர் பீடத்தைத் தோற்றுவித்ததும் ஆண்டின் முதல் மாதமான தை மாதத்தில்தான். ஆனால் இவையெல்லாம் ஆதிசிவனாரால் தோற்றுவிக்கப் பட்டவை என்பதனால் சிவராத்திரி அன்று அதாவது மாசி மாதத்தில் வரக்கூடிய மகா சிவராத்திரி அன்று அண்ட பேரண்டங்களிலிருந்து ஆண்டு தோறும் மூலப் பதினெண்சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புக்களும் இம்மண்ணுலகுக்கு வந்து தங்குவது வழக்கமாகி விட்டது.

  (14) அதாவது மூலப் பதினெண்சித்தர்களும்; பதினெட்டாம்படிக் கருப்புக்களும் ஆண்டு தோறும் முத்தமிழ் சங்கம் தோற்றுவிக்கப் பட்டதையும், பதினெண்சித்தர் மடம் இந்து வேதத்திற்காகத் தோற்றுவிக்கப் பட்டதையும், பதினெண்சித்தர் பீடம் இந்துமதத்திற்காகத் தோற்றுவிக்கப் பட்டதையும் நினைவு கொண்டு தமிழிலக்கியங்கள், இந்துவேத பகுப்புகள் அல்லது பிரிவுகள், இந்துமத நிறுவன நிர்வாகக் கட்டமைப்புகள் முதலியவற்றை யெல்லாம் ஆய்வு செய்து தேவையான திருத்தங்களைச் செய்திடுவார்கள். இதைத்தான், “மகா சிவராத்திரியில் அண்ட பேரண்டங்களிலிருந்து சித்தர்கள் வருவார்கள்” என்றும்; “இந்துவேதம் அருளப்பட்டது அல்லது செம்மைப்படுத்தப் பட்டது சிவராத்திரியில்தான்” என்றும்; “மகா சிவராத்திரி அன்றுதான் இந்துமதம் அருளப்பட்டது அல்லது செம்மைப் படுத்தப்பட்டது” என்றும் வழக்காற்றுச் செய்திகள் தோன்றின. ஆனால், உண்மையில் இந்து வேதத்தை, இந்து மதத்தை, முத்தமிழ் மொழியை ஆதிசிவனார் அருளத் தொடங்கியது தை மாதத்தில்தான். ஆனால் அது நிறைவு பெற்றது மாசி மாதம் மகாசிவராத்திரி அன்றாக அமைந்திட்டது. எனவேதான் மகா சிவராத்திரிக்கு அதிகம் சிறப்பும், முதன்மையும், எல்லாவிதமான, வகையான வழிபாடுகளுக்கும் உரிய நாளாகக் கருதப்படும் பெருமையும் உரிமையும் ஏற்பட்டிட்டது.

  (15) இவை போல் தை மாதத்தில்தான் முருகப் பெருமான் வள்ளி தெய்வானை வாழ்வியல் நிகழ்ச்சிகளும்; பிள்ளையார் சித்தி புத்தி முதலியவர்களின் வாழ்வியல் நிகழ்ச்சிகளும்; வினாயகர் வல்லபை வாழ்வியல் நிகழ்ச்சிகளும்; ஐயனார் அல்லி செந்தாமரை முதலியவர்களின் வாழ்வியல் நிகழ்ச்சிகளும்; … தை மாதத்தில்தான் துவக்கம் பெற்றும் மாசி மகா சிவராத்திரியில் நிறைவு பெற்றிருக்கின்றன. அதாவது இந்துவேதப்படி, இந்து மதப்படி கூறப்படுவது தை மாதமே ஆண்டின் துவக்க மாதம். இதில் தை மாதப் பூசம் எனும் விண்மீனும், மாசி மாதத்தில் மகம் என்னும் விண்மீனும் முதன்மை பெறுகின்றன.

  (16) தை மாத முதன்மைக்கு இருக்கும் சிறப்புப் போல் மாசி மாத மகா சிவராத்திரிக்கும் அதிகமாக இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது. இவையே இந்துவேதத்திலும், இந்து மதத்திலும், முத்தமிழ் இலக்கியங்களிலும் சிறப்பாகப் பேசப்படுகின்றன.

  தொடர்புடையவை: