இனிய நண்பா! கலிகாலத்தில் தங்களைப் போன்று சில ஆயிரம் பேர்களே உண்மையான தன்னம்பிக்கையும், தெளிவும், துணிவும், தளரா முயற்சியும் உடையவர்களாக வாழ்ந்து தெய்வீகத் துறையில் வளர்ந்தோங்கி சிறந்து வருகிறார்கள். நீங்கள்தான் குளிர்ந்த நிழலும் மணமிக்க மலர்களும் இனிய சுவைமிக்க கனிகளும் உலகுக்கு வழங்கக் கூடிய கனிமலர்ச் சோலைகள் ஆவீர்கள்.
உங்களைப் போன்றோரை மிகுதியாக உருவாக்குவதன் மூலம்தான் அல்லல்பட்டு ஆற்றாது அலைந்து அலைந்து அரற்றும் மனித இனத்திற்கு நிலையான தொண்டினைச் செய்ய முடியும் என்று திட்டமிட்டே, யாம் தொடர்ந்து இலைமறை காயாகவே வாழ்ந்து செயல்பட்டு வருகிறோம்.
நண்பா! திருவருள் அவ்வப்போது இடுகின்ற ஆணைகளைக் குருவின் ஒப்புதலோடு செயலாக்கி வரவேண்டிய தொண்டனாக வாழும் நான், என்னுடைய முயற்சிகளை அவ்வப்போது வெளி உலகம் உணருமாறு செய்து வருகிறேன். ஆனால், அம்முயற்சிகள் எவ்வளவு பெரியவைகளாக இருந்தாலும் உரிய பயனைத் தருவதில்லை.
“உருவத்தால் பெரிய மரங்களானாலும்
பருவத்தால் அன்றிப் பழா”
…. என்ற மூதுரையை மனதில் கொண்டே, எமது முயற்சிகளின் முடிவுகளைப் பற்றிக் கவலைப் படாமல் தொடர்ந்து பொறுமையோடும் அமைதியோடும் செயல்பட்டு வருகின்றோம்.
“அவனின்றி அணுவும் அசையாது”
“அவனருளால் அவன் தாள் வணங்கி”
என்ற திருவருட் கருத்துக்கள் நம்மைப் பொறுத்தவரை மெய்யாகி வருகின்றன.
“பட்டது போதும், பட்டது போதும் - இனிப்
பட முடியாது துயர்….. ”
… என்ற திருவருட் செல்வர்கள் புலம்புவது வழக்கமாக நிகழ்வதுதான். எனவே, தாங்கள் தங்களுக்கு ஏற்படக் கூடிய தோல்விகளுக்கும், இடர்ப்பாடுகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் மயங்காது தொடர்ந்து அமைதியான முறையில் செயல்பட்டு வாருங்கள். பிறர் உங்களை நம்ப வேண்டும் என்பதற்காக மாயங்களைச் செய்து காட்டவோ, தெய்வீகப் பேருண்மைகளையும், அநுபவங்களையும் தகுதியற்றவர்களிடம் எல்லாம் வெளிப்படையாக பேசிடவோ முற்பட்டு விடாதீர்கள். பேரொளி பரப்பும் தெய்வீக ஆற்றல்கள் அஞ்ஞான இருளில் உழன்று தடுமாறும் கோடிக் கணக்கான மக்களுக்கு ஒளிகாட்டி வழிகாட்டும் நற்காலம் வரும்வரை பொறுமையாக, முறையாகப் பூசைகளையும், தவங்களையும், வேள்விகளையும், யாகங்களையும், பிற தெய்வீகக் கடமைகளையும் தொடர்ந்து செய்து வாருங்கள். வைரத்தை எல்லோராலும் எடை போட முடியாது. அது போலத் தெய்வீக வாழ்வு வாழ்பவரை எல்லோரும் எடை போட்டு விட முடியாது.
உங்களைச் சுற்றி உருவாகி வரும் அடியார்களையும் அடியான்களையும் அன்புக்குரியோர்களையும் மிகவும் கட்டுப்பாட்டோடு தெய்வீகத் துறையில் ஈடுபட்டு அநுபவங்களைப் பெறும்படி செய்யுங்கள். வீணான ஆடம்பரமோ, ஆரவாரமோ, கூட்டமோ தேவையில்லை. விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் உங்களால் உருவாக்கப் பட்டால் போதும். அப்படி உருவாக்குகின்றவர்கள் பகுத்தறிவும், புதுமை நாட்டமும், புரட்சி உள்ளமும், தன்னலமின்மையும், பிறர் நலம் பேணும் பண்பும், தன்னம்பிக்கையும், குரு நம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும், துணிவும், தெளிவும், உண்மையும் உடையவர்களாக இருந்திட்டால் போதும்.
நண்பா! மனித வாழ்க்கையில் எந்த நேரத்திலும் மரணம் வரலாம். ஒவ்வொரு மனிதனும் அதை நிம்மதியோடும், துணிவோடும் வரவேற்கத் தயாராக இருக்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு மனிதனும் தான் எடுத்த மனிதப் பிறப்பு தன்னால் வீணடிக்கப் படவில்லை என்ற தன்னம்பிக்கையோடு வாழ்ந்திடல் வேண்டும். எனவே, ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய ஒவ்வொரு நொடி வாழ்வையும் பிறர் நலம் பேணுவதாக அமைத்துக் கொண்டு வாழ வேண்டும். மனிதனாகப் பிறந்தது மண், பெண், பொன் முதலியவைகளை அநுபவிப்பதற் காகத்தான் என்று தவறாகப் பலரால் கருதப்பட்டு வீணாக்கப் படுகின்றது. அதனால்தான், இவ்வுலகில், எண்ணற்ற திருவருட் செல்வர்கள் தோன்றியும் மனித இனத்தைச் செம்மைப் படுத்தவே முடியவில்லை.
நண்பா! உலகில் எந்த நாட்டு வரலாற்று ஏடுகளைப் புரட்டினாலும் தனிமனிதர்களான அரசர்கள், அமைச்சர்கள், தளபதிகள், பெருநிலக் கிழார்கள், பெரு வணிகர்கள்…. முதலியோரின் வரலாற்றைக் கூறுபவையாகத்தான் உள்ளன. ஒட்டு மொத்தமாக, ஒரு நாட்டில் வாழ்ந்த மக்களின் சமுதாய வாழ்வின் போக்கைக் கூறும் வரலாற்று ஏடுகளே இல்லை. ஆனால், பதி§னாராவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் எழுத்துக் குவியல்களில் உலக வரலாறு, இந்திய வரலாறு, தமிழக வரலாறு, …. முதலியவற்றைத் தெளிவாகக் காணலாம். அதனால்தான், அவர் தொகுத்தளித்திட்ட நூல்களையும், அவர் எழுதிய நூல்களையும் அச்சிட்டு வெளியிடுவதன் மூலம் உலக வரலாற்றுத் துறைக்கும் இலக்கியத் துறைக்கும் மாப்பரும் புதையல்களும், கருவூலங்களும் கிடைக்கும்படி செய்தவர்களாவோம் நாம். நமது முயற்சிகள் எப்படியும் வெற்றி பெற்றே தீரும்.
நண்பா! காம உணர்ச்சியும், சமய உணர்ச்சியும் இன்றைய நமது சமுதாயத்தை மயக்க நிலையிலும், வெறி நிலையிலும் செயல்படச் செய்து வருகின்றன. இவ்விரு உணர்ச்சிகளையும் ஊக்குவித்து வளர்ப்பனவாகவே இன்றைய நமது எழுத்தாளர்களும், படித்த மக்களும், கலைஞர்களும், அரசியல்வாதிகளும்…. உள்ளனர். எனவே, நான், எனது புதுமைச் சிந்தனைகளை, புரட்சிச் சிந்தனைகளை விரைவில் நல்ல பல நூல்களாக்கி விரைந்து வெளியிட்டிடல் இன்றியமையாததாகும். அதுதான், சமய மறுமலர்ச்சியை, இலக்கியப் புரட்சியை, அரசியல் விழிச்சியை, சமுதாய எழுச்சியை உருவாக்கிடும். இதனை விரைந்து செய்யாவிடில் நாம் மாபெருந் தவறு செய்தவர்களாவோம். வருங்காலச் சந்ததியார் நம்மைக் குறைகூறிக் குற்றம் சாட்டிடுவார்கள்.
நண்பா! என்னிடம் வரலாறு, இலக்கியம், சமயம், கலை, மருத்துவம், …. முதலிய பல துறைகள் பற்றிய பழமையான நூல்களும்; நான், எனது நாடோடிக் காடோடி வாழ்வின் அநுபவங்களாலும்; ஏட்டறிவாலும் எழுதிக் குவித்திட்ட நூல்களும் எண்ணற்று உள்ளன. ஆனால், அவற்றை அச்சிட வழியில்லை.