14-8-83 அதிகாலை ‘இலங்கைத் தமிழர்’ பற்றி அருள்மிகு (வேம்படிதாளம்) கபாலீசுவரி சன்னிதானம் சீ. மணி அவர்கள் சமூகத்துக்கு எழுதும் ‘குறிப்போலை’.
(1) குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் கருவூறார் உறக்கத்துக்காகக் கண்கள் கலங்கி மங்கிடவும், ஓய்வுக்காக விரல்கள் சளைத்துக் களைத்துச் சலிப்படைந்து தள்ளாட அதிகாலை 3 மணியளவில் எழுதப்படும் குறிப்போலை இது. எனவே, கையெழுத்தில் தெளிவு இல்லாமையோடு கருத்தோட்டத்திலும், சொல் செறிவிலும் தெளிவின்மை இருக்கக் கூடும். இருப்பினும், தொடர்ந்து அன்றாடம் பலரும் இலங்கைத் தமிழர் பிறச்சினை பற்றிய எனது கருத்தோட்டத்தைக் கேட்டு அஞ்சல் எழுதுவதால்தான் இக்குறிப்போலை தீட்டப் படுகிறது.
(2) நண்பரே! யாம் சொல்லச் சொல்ல எழுதவோ! அன்றி, யாம் எழுதியதை நகல் எடுக்கவோ எம் அருகில் ஆளில்லை. நமது இயக்க வீரர்கள் அவ்வப்போது வந்து நகல்கள் எழுதித் தருவதால்தான் சில இடங்களுக்காவது எமது தொடர்பு வளமாக இருக்கின்றது. தாங்கள் 5-8-83, 8-8-83 இரு நாட்களிலும் எழுதிட்ட அஞ்சல்களே எம்மை இக்குறிப்போலையை எழுதச் செய்துள்ளன.
(3) நண்ப! தங்களது வட்டாரத்திலிருந்து ல.க.கணேசன், பத்தவத்சலம், பச்சைமலைப் படபத்திர காளி சன்னிதானம் சீனிவாசன், .. . முதலியோர் எழுதிய அஞ்சல்களும் எம்மை இந்தக் குறிப்போலையை எழுதச் செய்துள்ளன. யாம், எம்மையும் அறியாமல் விருந்து கண்டு வீறிட்டெழும் வேங்கை போல் விவேகமின்றி விமர்சனங்களையும், விளக்கச் சான்றுகளையும், ஊன்றுகளையும் வெளியிட்டு விடக் கூடாது. இந்தியாவின் எண்பது கோடி மக்களுக்கும் இந்துமத வழியாகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாய அமைப்புத் திட்டத்தைச் செயலளவில் அறிமுகம் செய்யும் வரையிலாவது யாம் வானம்பாடியாக வாழ்ந்தே தீர வேண்டும். இறுதி வரையில் கூட இலைமறை காயாக வாழ்ந்தால்தான் இந்நாட்டில் பல தலைமுறைகளாக இருந்து வரும் கோழை நிலைகளையும், ஏழை நிலைகளையும், மோழை நிலைகளையும் முழுமையாக அகற்ற முடியுமென்றால், அப்படியே வாழத் தயாராகவும் இருக்கிறோம், யாம். பன்னெடுங்காலமாகப் பைந்தமிழர் கூட்டம் பகல் வேடக் காரர்களின் பத்தர்களாக வாழ்ந்து பழியும், இழிவும், நலிவும், மெலிவும், அழிவுமே அடைந்து வந்துள்ளார்கள். இவர்களை உண்மையான தத்துவ வாரிசு எத்தகைய பெருவீரமும், தீரமும், தியாகமும், அருளும் காட்டிச் செயல்பட்டாலும் சரி செய்வது எளிதாக இருப்பதில்லை என்ற வரலாறு எமக்கும் உரியதாகவே இருக்கிறது. எனவேதான், யாம் முடிந்தவரை அனைத்தையும் எழுதியும், மறைவாகக் காக்கப்பட வேண்டியவைகளை நேரில் வழங்கியும் செயல்படுகிறோம்… இருந்தும், உங்களுக்காக இலங்கைத் தமிழர் பற்றிச் சில குறிக்கிறோம்.
(4) தமிழர்களுக்கு, உண்மையுள்ள, தன்னலமற்ற துணிவு மிக்க, விவேகம் நிறைந்த, உலகியலோடு ஒத்துப் போகின்ற பொதுநல நாட்டமுடைய… நல்ல தலைவர்கள் ஆயிரமாண்டு இடைவெளியில் கிடைக்கவே இல்லை. ஒரு சில தலைவர்கள், மின்னல் போல் இடி போல் விரைந்து மறைந்தனர். தமிழினப் பகைவர்கள் தமிழர்களிலேயே தமிழினத் துரோகிகளும், விரோதிகளும், காட்டிக் கொடுக்கும் கூலிகளும், எளிதில் பிறருக்கு அடிமையாகும் அப்பாவிகளும்… தோன்றிக் கொண்டே இருக்கும்படி பல ஏற்பாடுகளைச் செய்து விட்டார்கள். எனவேதான், ஒற்றுமையற்ற தமிழர்களை அன்னியர்கள் கூலிகளாக, எடுபிடிகளாக, கங்காணிகளாக, அடிமைகளாக, பதவிக்காக எதையும் செய்யும் ஈனப் பிறவிகளாக, பணத்துக்காக எதையும் மறக்கும் மானங்கெட்டவர்களாக… மாற்றிடுகிறார்கள். அதனால்தான், பிற்காலச் சோழப் பேரரசுக்குப் பிறகு தமிழர்கள் இனப்பற்றோ! நாட்டுப்பற்றோ! மொழிப்பற்றோ! பண்பாட்டுப் பெருமையோ! நாகரீக உரிமையோ! வரலாற்று உணர்வோ! தன்னம்பிக்கையோ! … இல்லாத அனாதைகளாக, நாடற்றவர்களாக!, எவருக்கு வேண்டுமானாலும் ….. , அடிமையாக, கூசாவாக, காவடியாக, … வாழும் அப்பாவிப் பிறவிகளாக! வாழுகிறார்கள்! இதை எளிதில் மாற்றவே முடியாது! எனவேதான், யாம் நிர்வாணியாகவும், மறவியாகவும், தவசியாகவும், யோகியாகவும், … வாழ்ந்தே எண்ணற்ற அருளாளர்களை வாழையடி வாழையாகத் தோன்றும்படி செய்வதன் மூலமே தமிழினத்தின் அவலங்களை, கேவலங்களை, தாழ்வுகளை, தன்னம்பிக்கை இன்மைகளை, ஒற்றுமையின்மைகளை, நாட்டுப் பற்றின்மைகளை, மொழிப் பற்றின்மைகளை, இனப்பற்றின்மைகளை, … மாற்றித் திருத்திச் செப்பனிடும் திட்டங்களைச் செயலாக்கினோம். ஆனால், விண்ணுலக மண்ணுலகத் திருக்களும், தாத்தாக்களும், ஆத்தாக்களும், அருவ சித்தியாளர்களும், உருவ சித்தியாளர்களும், அருவுருவ சித்தியாளர்களும், இன்றைய உலகியலில் தேர்ந்த சிந்தனையாளர்கலும், அறிஞர்களும், மேதைகளும், சமுதாய இயல் விஞ்ஞானிகளும், இலைமறை காயாக வாழும் ஞானிகளும்… உடனடியாக எம்மை உலகியலுக்குள் வாழ்ந்து செயல்படுமாறு வற்புறுத்தி வெற்றி பெற்றார்கள். எனவே, முதலில் தமிழகம், பிறகு தென்னிந்தியா, அடுத்து இந்தியா, இறுதியாக, உலகம் … என்ற நிலைகளில் ‘அருளாட்சி அறிவிப்பு’, ‘அருளாட்சி அழைப்பு’, ‘அருளாட்சி அமைப்பு’ … என்று திட்டமிட்டுச் செயல்படத் துவங்கினோம் யாம். ஆனால், தரமும், உரமும், தீரமும், தியாகமும், அறமும், உண்மையும், பொதுநல நாட்டமும், தத்துவ உணர்வு, இறைமைப் பற்றும், … உள்ள நல்லவர்கள் சமய, சமுதாய, அரசியல், கலை, இலக்கியத் தத்துவத் துறைகளில் இல்லவே இல்லையென்று சொல்லும் படியான நிலையே நெடுங்காலமாகத் தமிழகத்திலும், இந்தியத் துணைக்கண்டத்திலும் நிலவிடுகிறது. இதனை வெளிப்படையாகச் சொல்லத் துணிவுள்ளவர்கள் கூட ஏனோ அடங்கி ஒடுங்கியே சென்று விடுகின்றனர். … இவற்றையெல்லாம் நினைத்துத்தான் எந்த நொடியிலும் எமது அருளாணை கேட்டுச் செயலுக்கு எழும் பல நூறாயிரக் கணக்கான அருளாளர்களைத் துணையாகப் பெற்றும் அடங்கியே, உரிய சூழல் உருவாகாமல் யாம் வெளிப் படக் கூடாது! கூடாது! கூடாது! கூடவே கூடாது! இதனை உணர்ந்து, உணர்த்தியும் செயல்படுங்கள்.
(5) தந்தை பெரியார் ஈ.வே.ரா. அவர்கள், எமது தந்தை அருள்மிகு (காகபுசுண்டர்) சித்தர் காக்கையர் ம. பழனிச்சாமி அவர்கள், அரசியல் மேதை திரு எம்.என்.ராய், இசுலாமியர்க்கு தனிநாடு வாங்கித் தந்த சின்னா (ஜின்னா) … முதலியவர்களுடைய அறிவுரைப் படிதான்; “… ஆங்கிலேயர்கள் ‘திராவிட நாட்டை’ (தென்னிந்தியா) அல்லது தமிழ்நாட்டைத் தொடர்ந்து ஆளவேண்டும். வட இந்தியக் காரர்களிடம் திராவிடர்களை நிலையான அடிமைகளாக்கிச் சென்று விடக் கூடாது. காந்தி சுதந்திரம் என்ற பெயரால் தென்ன்¢ந்தியாவை வட இந்தியக் காரர்களுக்கு அடிமையாக்குகிறார். இது மாபெரும் மோசடி. வடநாட்டுக் காரனுக்கும், தென்னாட்டுக் காரனுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இந்தியா ஒரே நாடாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. இந்தியாவைக் காந்தி கையில் கொடுத்தால் வடநாட்டான்தான் இந்தியாவை என்றென்றும் ஆளுவான். வட நாட்டான் தமிழர், தெலுங்கர், கன்னடியர், மலையாளி … முதலியவர்களை இந்தியர் என்று ஒப்புக் கொள்ளவே மாட்டான். இந்தி பேசுகிறவன் மட்டுமே இந்தியனாகக் கருதப்படுவான். இந்தி பேசுகிறவனை எசமானனாக ஆக்கி விடாதீர்கள். திராவிடர்கள், தங்களை உணர்ந்து ஒற்றுமைப்பட்டுத் தனிநாடு கேட்கும் போது இந்திக்காரன் முடிந்தவரை தென்னிந்தியாவைச் சுடுகாடாக்கிய பிறகுதான் பிரித்துக் கொடுப்பான். அல்லது தனிநாடு கொடுக்கவே மாட்டான். திராவிடனுக ஒன்று சேரவும் மாட்டானுக! தனிநாடும் கிடைக்காது. வடநாட்டானுங்க நல்லாக் கொள்ளையடிப்பானுங்க! குதிரையேறுவானுங்க! மூட்டைப் பூச்சி போல் உறிஞ்சுவானுங்க! நீதியுள்ள ஆங்கில அரசு திராவிட நாட்டை நேரடி ஆட்சியின் கீழ் வைத்துக் கொண்டால்தான் திராவிடர்களுக்கு நன்மையேற்படும்… “ என்று மிகத் தெளிவாகத் திராவிட நாட்டுப் பிரிவினைக் கருத்தை வெளியிட்டார். ஆனால், யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல், காங்கிரசுக் கட்சியின் பெயரால் எண்ணற்ற இனத் துரோகிகள், நாட்டு விரோதிகள், கைக்கூலிகள், அப்பாவிகள்… திராவிட நாட்டைக் காந்தியின் தலைமையிலமையும் இந்தியாவுடன் சேர்த்தே அமைத்திட்டார்கள். இல்லாவிட்டால், இலங்கையில் திராவிட இனத்தவர் வெட்டியும், சுட்டும், எரித்தும் கொலை செய்யப் படுவது கண்டும் இராணுவத்தை அனுப்பாதிருக்கும் அனாதை நிலை திராவிடர்க்கு ஏற்பட்டிருக்குமா? - தமிழினத் தலைவர் பெரியார் ஈ.வே.ரா. கேட்டுக் கொண்டபடி இங்கிலாந்து நம்மை ஆண்டு கொண்டிருந்திருக்குமேயானால் இந்நேரம் சிங்களவர் இருந்த இடம் தெரியாமல் பேரழிவுக்கு உள்ளாகும் படி ஐரோப்பாவின் பெரும்படைகள் பாதுகாப்பிற்கு வந்திருக்காதா? இப்போது, வட இந்தியர்கள் ‘இலங்கை வாழ் தமிழரின் பிறச்சினை’ என்றுதான் கூறுகிறார்களே தவிர; ‘இலங்கை வாழ் இந்தியரின் பிறச்சினை’ என்று குறிப்பிடவே யில்லை. இந்த நிலையிலும் மானங்கெட்ட தமிழர்கள் பலராக வட இந்திய ஆட்சிக்கு வால் பிடிக்கிறார்கள். வடநாட்டு அரசை வாழ்த்தி, வணங்கிக் கும்பிட்டுக் கைகட்டிச் சேவகம் செய்யும் பிச்சைக் காரப் புத்தியைத் தமிழ்நாட்டை விட்டு எப்படி ஓட்ட முடியும்’ தமிழர்களுக்குப் பகைவர்களோ! எதிரிகளோ! வட இந்தியாவில் இல்லை; தமிழ் நாட்டில் வாழும் வட இந்திய அரசியல் வாதிகளின் கைக்கூலித் தமிழர்களே தமிழினப் பகைவர்கள்! தமிழின விரோதிகள்! எனவே, முதலில் உள்நாட்டுப் போராட்டங்களால், போர்களால் வட இந்தியர் போடும் எலும்புக்கு வாலாட்டும் நாய்களாக இருக்கும் தமிழர்களைத் திருத்த வேண்டும்’ என்று எம் தந்தை கூறியதை மட்டுமே இங்கு கூறிட விரும்புகிறேன்.
(6) நண்பர்களே! “இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களும், இழிவுகளும், இழப்புகளும், அழிவுகளும்… என்றாவது ஒருநாள் இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கும் ஏற்பட்டே தீரும்! இதில் எள் முனையளவு கூட ஐயமில்லை. தமிழினம் ஒன்றுபட்டு ஒற்றுமைப் பட்டு மொழியுரிமைக்காக, இனப் பெருமைக்காக, பண்பாட்டுப் பாரம்பரியச் செழுச்சிக்காக நெடிய ஒரு போராட்டத்துக்கு இப்போதே தயாராக வேண்டும். அதுதான் வருமுன் காத்தல். இல்லாவிட்டால், தமிழை, தமிழ் நாட்டை, தமிழ்ப் பண்பாட்டை, தமிழினத்தை வடநாட்டாருக்கு அடிமையாக்கிடும் கங்காணிகளும், கைக்கூலிகளும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். “இந்தி ஆதிக்கத்தால் தமிழ் ஏறத்தாழ அடங்கி ஒடுங்கி விட்டது. வடநாட்டு முதலாளிகளால் தமிழகம் முழுக்கச் சுரண்டப்படும் வாயில்கள் வணிகச் சந்தைகள் அமைந்து விட்டன. வடநாட்டானின் பட்டம், பதவி, வெகுமதி, ஊதியம், கூலி, பரிசு, சலுகை… முதலியவைகளுக்காகத் தமிழை மறந்து இந்தியிலேயே எழுதவும், பேசவும் ஆரம்பித்திட்ட தமிழர் கூட்டம் வளருகிறது. விரைவில் தமிழினம், தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழ் நாகரிகம்… என்பவையெல்லாம் பொருளில்லாத சொற்களாகிடும்…..” என்று பல வெளிநாட்டுத் தமிழர்கள் எமக்கு எழுதியுள்ள வாசகங்களை மட்டும் இங்கே குறிக்கிறேன். புரிக! புரிய வைத்திடுக! செயல்படுக!
(7) ‘இந்துமதத்தால் எல்லாக் குறைகளையும், தவறுகளையும் அகற்றி இந்தியாவை அருளாட்சிக்கு உரிய ஒரு நாடாக ஆக்கிட முடியும்…’ என்ற நம்பிக்கையுள்ள அப்பாவியாகவே இருக்கிறேன் நான். ‘பூசை மணியும், கற்பூரத் தட்டும், பூசைமொழி வாசகமும் போதும் இந்தப் பூசாறிக்கு…’ என்று அடங்கி வாழவே எம் மனம் நாடுகிறது. இளஞ் சிங்கங்களாகிய நீங்கள் சிந்தித்து ஒன்று கூடி ஒற்றுமையுடன் செயல்படுங்கள்.
(ஒப்பம்) அன்பு
குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் கருவூறார்.