Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • கோயில்கள்>
  • மதுரை மீனாட்சி ஆலயம்
  • மதுரை மீனாட்சி ஆலயம்

    மதுரை மீனாட்சி ஆலயம்

    மதுரை மாமூதூர் மீனாட்சியம்மன் ஆலயம்

    (1) இன்றைக்கு பல கோபுரங்களோடு விரிந்து பரந்து கிடக்கின்ற ஆலவாய் மதுரை மாமூதூர் மீனாட்சியம்மன் ஆலயம் தோன்றி வளர்ந்த வரலாறு இன்றோடு 43,73,086 ஆண்டுகள். எனவே, இதனுடைய முழுமையான வரலாற்றை விளக்க ஆயிரக்கணக்கான பக்கங்களையுடைய தொகுதிகளாகப் பல தொகுதிகள் வெளியிட நேரிடும். எனவே, இன்றைய மக்களின் ஆர்வத்தையும், அறிவியல் உணர்வையும், ஆராய்ச்சிப் போக்கையும், மெய்யான இந்து சமயத்தின் தொன்மையைப் பற்றிய பெருமித உணர்வையும் ஊக்குவிக்கும் வண்ணமே இந்தச் சுருக்க விளக்க அறிமுக முன்னுரைக் கட்டுரை எழுதப்படுகிறது.

    (2) இந்தக் கட்டுரைக்குத் தேவையான செய்திகள் அனைத்தும் எழுதாக் கிளவிகளாக உள்ளவைகளிலிருந்தும்; எழுதி மறையாக மறைத்துக் காக்கப் படுபவைகளிலிருந்தும்; முறையாகக் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருபவைகளிலிருந்தும்; நெறியாகச் செயல்வடிவில் மட்டும் விளக்கப்படுபவைகளில் இருந்தும்; தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்குமுரிய பக்குவப்படுத்தப்பட்ட, எளிதில் பயன்படும்படி பதப்படுத்தப்பட்ட இலக்கியமாக வழங்கப்படும் வேதங்களிலிருந்தும்; இருபத்தேயேழு வண்ண இலக்கியங்களாக இருக்கின்ற கதைகள், காதைகள், காவியங்கள் (காப்பியங்கள்), கீதைகள் எனப்படும் நான்குவகை இலக்கியங்களிலிருந்தும்; புராண இதிகாசங்களிலிருந்தும்; பதினெண்சித்தர் பீடாதிபதிகளால் மட்டுமே எழுதப்பட்டு வரும் குருபாரம்பரியம், அரசபாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம் எனும் மூன்று வகையான இலக்கியங்களிலிருந்தும்; வாக்கு வாக்கியம் வாசகம் எனப்படும் பதினெட்டு வகையான இலக்கியங்களிலிருந்தும் … முதலியவைகளிலிருந்து தரப்படுபவைகளாகும்.

    (3) நூல்வடிவில் இல்லாமல் பதினெண்சித்தர்கள், பதினெட்டாம்படிக் கருப்பர்கள், பதினெண்சித்தர் பீடாதிபதிகள், நாற்பத்தெட்டு வகைச் சித்தர்கள், நாற்பத்தெட்டு வகைப் பீடாதிபதி வழி ஆச்சாரியார்கள், பதின்மூன்று வகைக் கருவழி ஆச்சாரியார்கள், பதின்மூன்று வகைக் குருவழி ஆச்சாரியார்கள், நாற்பத்தெட்டு வகை வழிபடுநிலையினர்கள்; நாற்பத்தெட்டு வகை அருளாளர்கள், அருளாளிகள், அருளாடு நாயகங்கள், நாற்பத்தெட்டு வகை மருளாளர்கள், மருளாளிகள், மருளாடு நாயகங்கள் முதலியோர்களும், இவர்களின் கருவழி வாரிசுகளும், குருவழி வாரிசுகளும் பல்வேறு காலங்களில் பல்வேறு கருத்துப் பற்றி எழுதிய குறிப்புக்களில் மதுரை மாநகர், மதுரை மூதூர், மதுரை மாமூதூர், ஆலவாய்த் திருநகர், ஆலவாய் மதுரை மாமூதூர் … பற்றிய குறிப்புக்களும் நிறைய இருக்கின்றன. இவைகளையும் அடிப்படையாகக் கொண்டுதான் மெய்யான இந்துமதமெனும் மரத்திற்கு இன்றுள்ள ஆணிவேர் போன்ற மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தைப் பற்றிய செய்திகளை வெளியிடுகிறோம்.

    (4) மெய்யான இந்துமத வரலாற்றுப்படி தொன்மதுரை, தென்மதுரை, மதுரை, வடமதுரை, மானாமதுரை … என்று ஐந்து மதுரைகள் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் பஃறுளி யாற்றங்கரையிலிருந்த தொன்மதுரையும், குமரியாற்றங்கரையிலிருந்த தென்மதுரையும், வைகையாற்றங்கரையிலுள்ள மதுரையும்தான் மீனாட்சியம்மன் ஆலயம் என்ற ஒன்றினைப் பெற்றிருக்கின்றன. மேலும், இம்மூன்று நகர்கள் மட்டும்தான் திருநகர், மாமூதூர், ஆலவாய் … என்ற சிறப்புப் பெயர்களைப் பெற்றிருக்கின்றன. இந்த மூன்று நகரங்களும் மூன்று எல்லைகளாகக் கொண்டு ஒரு முக்கோண வடிவச் சத்திபீடம் இளமுறியாக் கண்டம் எனும் குமரிக் கண்டத்தில் அருளாட்சிகாக உருவாக்கப்பட்டன. அதாவது, சுமார் இன்றைய விந்திய மலையிலிருந்து தெற்கே ஏழாயிரம் (7000) கல் தொலைவு நீளமும், நாலாயிரம் (4000) கல் தொலைவு அகலமும் உள்ள மிகப்பெரிய நிலப்பரப்பாகவே இருந்திருக்கின்றது இளமுறியாக் கண்டம். இந்தக் கண்டமே இம்மண்ணுலகில் நீருக்குள்ளிருந்து வெளிப்பட்ட முதல் பெருநிலப் பரப்பாகும். இன்றைக்கு இந்துமாக்கடல் என்றுள்ள தண்ணீர்ப்பரப்பு அனைத்துமே ஒரு காலத்தில் இன்றைய தென்னிந்தியாவோடு சேர்ந்து ஒரு மிகப் பெரிய நிலப்பரப்பாக இருந்திருக்கின்றன. அது படிப்படியாக முதல் கடல்கோளில் தொன்மதுரையோடும், இரண்டாவது கடல்கோளில் தென்மதுரையோடும் கடலுக்குள் மூழ்கி விட்டது. அந்தக் குமரிக் கண்டத்தின் எஞ்சிய பகுதிகளில் மிகப்பெரிய பகுதியாக இருப்பதுதான் தென்னிந்தியா என்று சொல்லப்படும் விந்திய மலை முதல் குமரி வரையுள்ள நிலப்பகுதி. எனவே, இம்மண்ணுலகில் முதல் மனிதர்களான தமிழர்களின் பாரம்பரிய வாரிசுகளே இன்றுள்ள தென்னிந்தியர்கள் என்பதும், இம்மண்ணுலகில் முதல் மதமான பதினெண்சித்தர்களின் மெய்யான இந்துமதத்தின் மூலச் சத்திபீட மூன்று கோயில்களுள் ஒன்றே இன்றுள்ள ஆலவாய் மதுரை மாமூதூர் தேவி மீனாட்சியம்மன் ஆலயம். இது கோயிலல்ல! ஏனெனில் நாடோடிப் பாடல் எனப்படும் பிற்காலச் சித்தர்களின் பாடல்களில்,

    ஆலயம் கோயிலாச்சுதடி குதம்பாய்!
    கோயில் ஆலயமாச்சுதடி குதம்பாய்!
    மயில் குயிலாகக் கூவுதடி குதம்பாய்!
    கோலமிட்டென்ன ஏலமிட்டென்ன குதம்பாய்!
    ஆலவட்டம் போடுதடி அத்துனையும் குதம்பாய்!
    அறிவதேது புரிவதேது இனிமேல் குதம்பாய் …

    என்ற புலம்பல் காணப்படுகிறது. இதுபற்றிய ஆராய்ச்சிக் கருத்துக்களை விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம்.

    (5) மதுரை மீனாட்சி யம்மன் ஆலயத்துக்குரிய அருளூறு வாசகங்களில் (மந்தர, மந்திற, மந்திர, மாந்தர, மாந்தரீக, தந்திர, தந்தர, தந்திற, தாந்தர, தாந்தரீக, எந்தர, எந்திர, எந்திற, ஏந்தர, ஏந்தரீக, பூசை, தவம், வேள்வி முதலியவைகளுக்குரிய அத்திரங்கள், சாத்திரங்கள், சூத்திரங்கள், நேத்திரங்கள், நேம, நியம, நிடத, நிட்டை, நீதிகள், சுருதி, ஆரண, மீமாம்சைகள் முதலியவற்றின் வாசகங்கள்) மீனாட்சியம்மனைப் பற்றிக் குறிக்கும் சொற்கள் இன்றுள்ள மீனாட்சியம்மன் ஆலயத்துக்குள் எத்தனை எத்தனை மீனாட்சிகள், சொக்கிகள், சொக்கேசுவரிகள், அங்கயற்கண்ணிகள், அங்கயற் கண்ணேசுவரிகள், அங்கயற்கன்னிகள், அங்கயற்கன்னீசுவரிகள், (கன்னேசுவரிகள் என்ற பாடவேறுபாடு உண்டு) ஆலவாய் அழகிகள், மீனாட்சிசுந்தரேசுவரர்கள், அங்கயற்கண்ணிகள், கண்ணன்கள், அங்கயற்கன்னிகள், கன்னன்கள், அங்கயற்கண்ணீசுவரிகள், கண்ணீசுவரர்கள், அங்கயற்கன்னீசுவரிகள், கன்னீசுவரர்கள், ஆலவாய் அழகிகள், அழகன்கள், இவர்களல்லாமல் பழைய சொக்கிகள், சொக்கன்கள் … எனப்படும் வழிபடுநிலையினர் இருக்கிறார்கள் என்பதனைப் பட்டியலிடப் புகுந்தாலே போதும்; நான்கு யுகத்தில் சமய சமுதாய கலை இலக்கிய அரசியல் வரலாறுகள்; பண்பாட்டு வளவளர்ச்சி வரலாறுகள்; புறநாகரீக அறிவியல் வளர்ச்சி வரலாறுகள் மிகமிகத் தெளிவாக விளக்கப்பட்டுவிடும்! விளக்கப்பட்டுவிடும்! விளக்கப்பட்டுவிடும்!

    இன்னும் சொல்லப்போனால், பதினெண்சித்தர்கள் குறிக்கின்ற மீதிக்காலம், பாதிக்காலம், ஆதிக்காலம், அனாதிக்காலம் என்கின்ற நான்கு காலங்களிலுமே இன்றுள்ள மீனாட்சியம்மன் ஆலயம் இருந்திருக்கிறது. அதாவது, நான்கு யுகங்களாகவும் இந்த ஆலயம் இருந்து வந்திருக்கிறது. இது விந்திய மலைக்கு வடக்கேயுள்ள மண்ணுலக மலைகளின் அரசாக விளங்குகின்ற இமயமலை தோன்றுவதற்கு முன்பிருந்தே மெய்யான இந்துமதத்தின் அருளாட்சித் தலைமைப்பீட ஆலயமாக இருந்து வருகின்றது. விரிவஞ்சி இதுபற்றி இத்துடன் நிறுத்துகிறோம்.

    (6) இன்றுள்ள உயரிய கோபுரங்களும் சுற்றுமதில்களும், பெரிய பெரிய மண்டபங்களும் பிற்காலச் சோழப் பேரரசின் காலத்திலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்ற ஒன்றே ஆகும். அதாவது, தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் மெய்யான இந்துமதத்தின் மறுமலர்ச்சிக்காகவும், வளவளர்ச்சிக்காகவும், வலிமைச் செழிச்சிக்காகவும், ஆட்சிமீட்சிக்காகவும் கருவறை மேல் நெடுங்கோபுரம் அமைத்து முதன்முதல் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி முடித்ததுமே எதிர்பார்த்த வெற்றிகள் உருவாகாமல் போனதினால் நுழைவாயில்களின் மேல் நெடுங்கோபுரம் அமைத்திட ஆணையிட்டுச் சென்றதை யொட்டித்தான் தென்னாட்டிலுள்ள அனைத்து வழிபாட்டு நிலையங்களிலும் (இந்த வழிபாட்டு நிலையங்கள் ஆலயம், கோயில், பீடம், திருப்பதி … என்று நாற்பத்தெட்டு வகைப்படும். இவையல்லாமல், கருவறை என்ற பெயரில் உள்ள வழிபாட்டு நிலையங்கள் 48 வகைப்படும்) சுற்றுமதில் நுழைவாயில்களின் மேலும் மண்டபங்களின் மேலும் நெடிய கோபுரங்கள் கட்டப்படும் மரபு தோன்றியது. எனவே, பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் அருட்பணி விரிவாக்கத் திட்ட அமைப்புப் பணிகள் … இந்த மீனாட்சியம்மன் ஆலயத்திலும் நிலையாக இருக்கின்றன.

    (7) மெய்யான இந்துமதம் தோற்றுவிக்கப் படுவதற்கு எடுத்துக் கொண்ட காலம் வரையறைக்கு அப்பாற்பட்டு விரிந்து கிடக்கின்றது. அதாவது, இளமுறியாக் கண்டம் முழுவதும் சுற்றிப் பார்த்து எங்கெங்கு அருள் ஊற்றுக்கள் தென்பட்டனவோ அந்த அருள் ஊற்றுக்களை யெல்லாம் முறையாக ஆராய்ந்து அவற்றின் தன்மைகளுக்கேற்ப நாற்பத்தெட்டு வகையான வழிபாட்டு நிலையங்களுள் ஏதாவதொரு வழிபாட்டு நிலையத்தை குறிப்பிட்ட அருளூற்றின் மீது உருவாக்கினார்கள். இதேபோலவே, எல்லாவிதமான பயிரினங்களுக்கும், உயிரினங்களுக்கும் நன்மை பயக்கும் வண்ணம் நாற்பத்தெட்டு வகையான வெட்டவெளிக் கருவறைகளையும், உருவாக்கினார்கள். இவற்றால்தான் விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும் மிகமிக நெருக்கமான தொடர்புகளும் உறவுகளும் உரிமைகளும் நிலைபேறு பெற்றன. விண்ணுலகிலிருந்து அனைத்து வகையான தாத்தாக்களும் ஆத்தாக்களும் அம்மையப்பன்களும் மற்றவர்களும் தங்களுடைய அண்டபேரண்டமாளும் மெய்ஞ்ஞான அறிவாலும், விஞ்ஞான அறிவாலும், அருளாற்றலாலும், அருளுலகக் கலைகளாலும், பொருளுலகக் கலைகளாலும் இம்மண்ணுலகில் தோன்றிய அனைத்து வகையான பயிரினங்களையும், உயிரினங்களையும் வரிசைப்படுத்தி மானுட வாழ்க்கையை வளப்படுத்தினார்கள். அதாவது, பதினெண்சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புக்களும், நாற்பத்தெட்டு வகைச் சித்தர்களும், நாற்பத்தெட்டு வகை வழிபடு நிலையினர்களும், நாற்பத்தெட்டு வகை உருவ அருவ அருவுருவங்களும் மனித வாழ்வோடு இரண்டறக் கலந்து மெய்யான இந்துமத வாழ்வை உருவாக்கினார்கள். இப்படி விண்வெளியிலிருந்து வந்தவர்களே இந்த மண்ணுலகில் கல்மட்டும் தோன்றி மண் தோன்றாமலிருக்கும் ஆரம்பக் காலத்திலிருந்தே தொடர்முயற்சியாகப் பல நூறாயிரக் கணக்கான ஆண்டுகளாகச் செயல்பட்டுத்தான் மெய்யான இந்துமதத்தை இம்மண்ணுலகில் நிலைநாட்டினார்கள்.

    இந்த மெய்யான இந்துமதம் என்பதுதான் நாம் காணுகின்ற பரந்த விண்வெளியில் கணக்கற்று மின்னுகின்ற விண்மீன்கள் நிறைந்த பரந்து விரிந்த விண்வெளியிலுள்ள நூற்றியெட்டு திருப்பதி அண்டங்களையும், இருநூற்று நாற்பத்திமூன்று சத்தி அண்டங்களையும், ஆயிரத்தெட்டுச் சிவாலய அண்டங்களையும் இணைத்து அருளாட்சி நடத்தும் சமய சமுதாய அரசியல் தத்துவமும் சித்தாந்தமுமாகும். இந்த மெய்யான இந்துமதத்தின் மூலவர்களாகவும் காவலர்களாகவும் இயக்குனர்களாகவும் இருப்பவர்களே காலங்கள் தோறும் அனைத்து உலகங்களிலும் காலங்கள் தோறும் அனைத்து உலகங்களிலும் தோன்றித் தோன்றிச் செயல்படுகின்ற 1. பதினெண்சித்தர்கள். 2. பதினெட்டாம்படிக் கருப்பர்கள், 3. நாற்பத்தெட்டு வகை வழிபடு நிலையினர்கள், 4. நாற்பத்தெட்டு வகை கருவறை மூலவர்கள், 5. நாற்பத்தெட்டு வகை வெட்டவெளிக் கருவறை மூலவர்கள், 6. நாற்பத்தெட்டு வகைச் சித்தர்கள், 7. நாற்பத்தெட்டு வகை அருளாளர்கள், 8. நாற்பத்தெட்டு வகை அருளாளிகள், 9. நாற்பத்தெட்டு வகை அருளாடு நாயகங்கள், 10. நாற்பத்தெட்டு வகை அருட்பட்டத்தவர்கள், 11. பதின்மூன்று வகை குருவழி ஆச்சாரியார்கள், 12. பதின்மூன்று வகைக் கருவழி ஆச்சாரியார்கள், 13. நாற்பத்தெட்டு வகை பதினெண்சித்தர் பீடாதிபதி வழி ஆச்சாரியார்கள், 14. நாற்பத்தெட்டு பதினெண்சித்தர் பீடாதிபதிகள் எனப்படும் பதினான்கு வகையினர்கள் ஆவார்கள்.

    (8) இதேபோல் இந்த மெய்யான இந்துமதத்துக்கு ஆட்சிமொழியாகவும், பரந்து விரிந்து பட்டுள்ள அண்ட பேரண்டங்கள் அனைத்தையும் இணைக்கின்ற அருளுலக ஆட்சிமொழியாகவும் இருப்பதே அமுதத் தமிழ். இது செந்தமிழ், தீந்தமிழ், தெய்வத் தமிழ், கடவுட்டமிழ், பைந்தமிழ், ஒண் தீந்தமிழ், வண்டமிழ், இன்றமிழ், மென்றமிழ் … என்று நாற்பத்தெட்டு வகையான சிறப்புச் சொற்களால் சிறப்பிக்கப்படுகின்றன. இதனுடைய ஒவ்வொரு எழுத்தும் அருளாற்றலை உருவாக்கித் தரும். மந்திற, எந்திற, தந்திறச் சக்கரங்களாகவே இருக்கின்றது. இதனுடைய ஒவ்வொரு சொல்லும் உயிர்ப்புத் தன்மையும், புத்துயிர்ப்பு ஆற்றலும் உடையதாக இருக்கின்றது. இதுவே, அண்டபேரண்டங்களிலுள்ள உலகங்களில் தோன்றுகின்ற அனைத்து மொழிகளுக்கும் தாயாக, மூலமாக, ஆரம்பமாக, கருவாக, உள்ளீடாக, உயிராக … இருக்கின்றது. எனவேதான், ‘தமிழ்மொழியை பிழையற எழுதுவதே பெரிய யாகம், யக்ஞம், வேள்வி, ஓமம், ஓகம், தவம், … முதலியன செய்வதற்குச் சமமாகும்’ என்று சிறப்பிக்கப்படுகிறது. இதைப்போலவே, ‘தமிழை மிக அழகாகவும், இனிமையாகவும் உரிய இசையோடு பேசுவதே சிறந்த பூசை’ என்றும் சிறப்பிக்கப்படுகிறது … குருபாரம்பரியத்தில்.

    (9) இந்த மெய்யான இந்துமதத்திற்கென்று ஒவ்வொரு உலகிலும் நூற்றெட்டுத் திருப்பதிகள், 243 சத்திபீடங்கள், 1008 சிவாலயங்கள், கணக்கற்ற நாற்பத்தெட்டு வகையான கருவறைகள், நாற்பத்தெட்டு வகையான வெட்டவெளிக் கருவறைகள் செயலகங்களாக அமைக்கப்பட்டே அருளாட்சி நிறுவப்படுகின்றது. இப்படி அருளாட்சி நிறுவப்பட்ட பிறகுதான் அந்த உலகம் எவ்வளவு காலம் நிலைத்திருக்கும் என்பதைக் கணக்கிட்டு அதனை உகங்களாக (யுகங்களாக) வகுப்பார்கள், பதினெண்சித்தர்களும் பதினெட்டாம்படிக் கருப்புக்களும். அதன்பிறகே, பதினெண்சித்தர் பீடாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டு அருளாட்சி அமையும். அந்த அருளாட்சியின் அருட்பேரரசாக குறிப்பிட்ட நான்கு யுகங்களுக்குள் நாற்பத்தெட்டு வகைப் பீடாதிபதிகள் தோன்றுவார்கள். இவர்களின் அருளாட்சிக்குப் பிறகு அந்த உலகம் அனைத்து வகையான நிலைகளிலும், இயக்கங்களிலும் படிப்படியாகத் தேய்ந்து ஓய்ந்து மாய்ந்திடும்.

    (10) மேற்படி அருட்பேரரசு துவங்குவது முக்கோணப் பீடமாக சத்தி ஆலயங்களை அமைக்கப்பட்டேயாகும். இந்தச் சத்தி ஆலயங்கள் மூன்றும் புதிதாகத் தோன்றும் உலகின் நிலப்பரப்பின் மூன்று எல்லைகளாக இருக்கும். இதன்படி இம்மண்ணுலகில் கடலுள் மறைந்த இளமுறியாக் கண்டமெனும் குமரிக் கண்டத்தின் மூன்று எல்லை மையங்களில் ஆலவாய் மாமூதூர் மதுரையெனும் நகரங்கள் படைக்கப்பட்டு அதில் மீனாட்சியம்மன் எனப்படும் சத்திபீடங்கள் அமைக்கப்பட்டே அருளாட்சி துவக்கப்பட்டது. அப்படித் துவக்கப்பட்ட மூன்று சத்தி பீடங்களுள் ஒன்றுதான் இன்றுள்ள வைகையாற்றங்கரை ஆலவாய் மாமூதூர் மதுரை மீனாட்சியம்மன் ஆலயம். இத்துடன் விரிவஞ்சி இந்தக் கட்டுரை நிறைவு செய்யப்படுகிறது. அளப்பரிய ஆர்வமோ, அக்கறையோ உள்ளவர்கள் அண்டபேரண்டங்கள் பற்றியோ, ஆவி ஆன்மா ஆருயிர் பற்றியோ, உலக மொழி வரலாறு, இனவரலாறு, பண்பாட்டு வரலாறு, நாகரிக வரலாறு … முதலியவைகளைத் தெரிந்து கொள்ள விரும்பினால் நேரில் தொடர்பு கொள்ளலாம்.

    அருளாட்சி நாயகம்
    குவலய குருபீடம்
    குருமகாசன்னிதானம்
    ஞாலகுரு சித்தர் கருவூறார்

    தொடர்புடையவை: