“சுமார் 500 ஆண்டு எல்லைக்குள் வாழ்ந்த கேரள நாட்டுப் பந்தள மன்னனுக்கும் அவனுடைய மூத்த மனைவிக்கும் பிறந்தவனே ஐயப்பன்.” அறுவை மருத்துவ முறையில் பந்தள மன்னனின் முதல் மனைவி பார்வதியின் வயிறு கிழிக்கப்பட்டு எடுக்கப்பட்ட குழந்தையே ஐயப்பன். இம் மருத்துவ மகப்பேறில் பார்வதி இறந்து போனாள். மன்னனின் இரண்டாவது மனைவி கங்கை (கங்கா) கருவுற்றுக் கோவிந்தன் என்ற ஆண் மகவைப் பெற்றாள். இவள் தனது மகனுக்குப் பட்டம் கிடைக்க வேண்டும் என்பதற்காகச் செய்த சூழ்ச்சிகளைக் கருவில் திருவுடையானாகப் பிறந்த ஐயப்பன் வென்றிடுகின்றான்.
நாட்டில் புதிதாகப் பரவத் தொடங்கிய இசுலாமிய ஆட்சியின் பெயரால் தோன்றிய முகம்மது யூசுப் என்ற கொள்ளைக்காரனைத் தனது அருளாற்றலால் திருத்திச் சமாது அடையச் செய்கிறான் ஐயப்பன். இறுதியாகச் சிற்றன்னை புலிப்பால் கேட்டதற்கு ஒரு புலிக் கூட்டத்தையே அழைத்து வந்து; தானோர் திருத்தோன்றல், தேவகுமாரன், அவதாரம், அருளாளன் என்பதை மெய்ப்பித்தான் ஐயப்பன். அதன்பிறகே தனது சிற்றன்னையை மன்னித்து; அவள் மகன் கோவிந்தனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி விட்டுத் தனது முத்திக்காகக் கடுந்தவம் செய்யப் 16 வயதிலே சபரி மலைக்குச் சென்றான்.
18 வது வயதிலே அருட்பெருஞ்சோதியாக அனைவரும் காணச் சபரிமலைப் பதினெட்டாம்படிக் கருப்புகளின் அருட்கோட்டத்தில் நிறைந்தான். இவன் ஆண்டு தோறும் அருட்பெருஞ்சோதியாகத் தோன்றி அருள் வழங்குகிறான். மாதம்தோறும் பூச மீனின் நிறைவின் போது அருட்கோட்டக் கருவறையில் அருட்பெருஞ் சோதியாகக் காட்சி தருகிறான்.
இவனது தந்தை பந்தள மன்னன் அரசசேகரன் வேண்டுகோளின் படி காக்கா வழியன் பண்ணையாடி, அமராவதி ஆற்றங்கரைச் சோழியாயி (சோழமா தேவி) கோயில் பூசாரி சித்தர் காகபுசுண்டர் (காக்கையர்) பரமசிவம் பிள்ளை மகனார் வீரபத்திரப் பிள்ளை சந்தன மரத்தால் ஐயப்பன் சிலை செய்து அருளேற்றிக் கொடுத்தார். அதனைத் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் வழி வந்தவரும், அரியலூர்க் கோவிலூர் ஐயப்பன் கோயில் பூசாரியுமான சித்தர் கைகொட்டி நாதர் என்பவர் ஐந்தீ வேட்டல், முத்தீ ஓம்பல்… முறைகளில் சபரி மலைக் கருவறையில் வெட்டவெளிக் கருவறை கொண்டருளு தேவன் ஐயப்பன் என்று நிறுவிப் பந்தள மன்னன் மகன் ஐயப்பனுக்கு அருவுருவ சமாது ஆலயம் நிறுவினார்.
இந்தச் சரவணபிள்ளைதான் தமிழ் விடு தூது பாடிய கவிஞர் என்பதாக இலக்கிய பாரம்பரியச் செய்தி கூறுகிறது. சோழ அரச குலத்து மன்னன் நாட்டரசன் பதவி இழந்ததால், ஏட்டரசனாகித் தமிழ் விடு தூது பாடிப் புகழுடம்பு பெற்றான். இவன் ஆலயங்கள் நிறுவும் வல்லியாக விளங்கியது போலவே; தமிழ் விடு தூது பாடியதன் மூலம் தமிழ்த் தாய்க்கும் ஓர் ஆலயம் நிறுவினான். இவன் சபரி மலையில் நிறுவிய ஐயப்பன் ஆலயம் ‘சந்தனம் அரைக்க அரைக்க மணப்பது போல் காலம் செல்லச் செல்ல; பத்தி செய்யச் செய்ய அருள் மணம் பரப்பும் இந்த ஆலயம் ஆண்டுக்கு ஒரு முறை தொழுகை செய்யப் படும் வெட்ட வெளிக் கருவறை ஆலயம்’ என்பதைக் குருவாக்கிலும், குருவாக்கியத்திலும், குருவாசகத்திலும், குருபாரம்பரியத்திலும் காண்க.
- இலக்கியப் பாரம்பரியம்