குமரிக் கண்டத்தில் பதினெண் சித்தர்கள் பஃறுளி ஆற்றங் கரையில் தாங்கள் உருவாக்கிய சமுதாயத் தத்துவத்தின் முதிர்ச்சியான அரசியல் தத்துவத்தைச் செயலுக்குக் கொண்டு வந்து இம்மண்ணுலகின் முதல் அரசு உருவாக்கினார்கள். இந்த அரசு, இம்மண்ணுலகிற்கே தொன்மையான அரசு அல்லது பழமையான அரசு என்ற பொருளில் ‘பண்டைய அரசு’ என்று குறிக்கப் பட்டது. இதுவே பாண்டிய அரசு ஆயிற்று.
பாண்டிய அரசின் அரியணையில் சித்தர் கருவூறார் அமர்ந்த காலத்தில் தமது மகளான சோழமாதேவிக்குக் குமரியாற்றங் கரையையும், அதன் சுற்று வட்டார நாடுகளையும் பிரித்துச் சோழமாதேவியின் நாடு என்னும் பொருளில் 'சோழநாடு' ஒன்றை உருவாக்கினார். காலப் போக்கில் இவ்விரு பேரரசுகளையும் சேர்ந்த அரச குடும்பத்தவர்கள் சேரர்கள் என்று உருவாக்கப் பட்டு, மலையும் மலை சார்ந்த இடங்களையும் ஆளுவதற்குரியவர்களாக நியமிக்கப் பட்டார்கள்.
இது பற்றிய முழு விவரங்களும் பதினெண் சித்தர்களுடைய அரச பாரம்பரியம் என்ற நூலில் உள்ளன. இதே போல் சமய வரலாறு குருபாரம்பரியம் என்ற பெயரிலும், இலக்கிய வரலாறு இலக்கிய பாரம்பரியம் என்ற பெயரிலும் உள்ளன. இப்படிப் பதினெண் சித்தர்கள் மிகச் சிறந்த வரலாற்றுப் பேராசிரியர்களாக விளங்குகிறார்கள்.