Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • அன்பு சேவுக!>
  • இந்துமத வளவளர்ச்சி
  • இந்துமத வளவளர்ச்சி

    இந்துமத வளவளர்ச்சி

    தமிழரின் தன்னம்பிக்கை இந்துமதத்தின் வளவளர்ச்சியிலேயே உள்ளது

    அன்புள்ள சேவுக!

    இன்றைய நாட்டு நிகழ்ச்சிகளை உற்று நோக்கிடு. இரண்டுக்கும் மேற்பட்ட பட்டங்களைப் பெற்ற ஆசிரியப் பெருமக்கள் நூறாயிரம் பேர்களுக்கும் மேல் வெஞ்சிறையில் ஒரு மாத காலத்துக்கும் மேலாக வாடி வதங்கித் திரும்பியிருக்கிறார்கள். இவர்களில் பதினாறுபேர்கள் பலியாகியிருக்கிறார்கள்; எண்ணற்றோர் உடல்நலத்தையும், உளநலத்தையும் இழந்து திரும்பியிருக்கிறார்கள். ஆனால், ‘போராடித்தான் எதையும் பெறமுடியும்’ - என்ற கருத்தை முழுமையாகப் பெற்றே திரும்பியுள்ளார்கள் இவர்கள். தனிமனிதர், குடும்பம், சமுதாயம், அரசியல், சீர்திருத்தம், போராட்டம், புரட்சி, … என்ற சொற்களைப் புரியவும், புரிய வைக்கவும் முற்படுவார்கள்.

    உடல்வலிமை பற்றிய கவலையின்றி இரவு பகலாகப் படித்து; அறிவு வளத்தை மட்டும் பெருக்கிக் கொண்ட ஆசிரியர் சமூகத்துக்கு வெஞ்சிறைக் கொடுமை ஒரு பெரிய அதிர்ச்சி, பயிற்சித் துவக்கம். அதாவது, முறையாகவும், நிறையாகவும் கற்றுத் தேர்ந்த ஆசிரியர் சமூகத்துக்கும், அரைகுறையாகக் கற்றுத் தேர்ந்த அனைத்துத் தலைமைச் சத்திகளுக்கும் இடையே ஏற்பட்ட நேரடிப் போரே இது. இதனால், ‘படித்தவர்களுக்கும் படியாதவர்களுக்கும் இடையே போர் விளைந்தால்தான் நியாயம் பிறக்கும்’ - என்ற செயல் சித்தாந்தம், நாற்றங்காலில் விதைக்கப்பட்டுப் பயிராக்கப்படும் விவசாயம் துவங்கியிருக்கிறது.

    எப்படியோ! …. ’ ஆசிரியர் சமுதாயம் போராட்ட உணர்வையும், போராட்டப் பண்பையும், போராட்ட நம்பிக்கையையும், போராடும் பழக்கத்தையும், …….. கற்றுக் கொள்ள வேண்டிய அல்லது வளர்த்துக் கொள்ள வேண்டிய நிலைமை வந்து விட்டது. இனிமேல்தான், ஆசிரியர் சமுதாயம் ஏட்டுலகையும், நாட்டுலகையும் இணைக்கும் மாபெரும் பணியில் ஈடுபட்டிடும். அதாவது, இனிமேல், வயிற்றுப் பிழைப்புக்குரிய கல்வியையே வழக்கமாக வழங்கும் நிலைமாறிச் சமுதாய அநீதிகளையெல்லாம் அகற்றும் மெய்ஞ்ஞானக் கல்வியின் வித்துக்கள் விதைக்கப்படும் நிலையே வளர்ந்திடும். அதனால், ஆசிரியர் மாணவர் உறவும், ஆசிரியரின் பாட்டாளி வர்க்க உணர்வும் பொலிவுமிக்க வலிமையோடு செழித்தோங்கி வளரும். எனவே, பொதுவாக இனிமேலாவது ‘உழைக்கும் வர்க்கம்’ என்ற உணர்வோடு ஆசிரியர் கட்டுப்பாடும், விழிச்சியும், எழிச்சியும், செழிச்சியும் பெற்றிடுவர்.

    இதேபோலத்தான், தமிழர்களுக்கும் ஓர் இக்கட்டான போராட்ட நிலைமை உருவாக வேண்டும். அப்போதுதான், இந்துமதத் தத்துவத்திலும், வரலாற்றிலும் உண்மையான பற்றும், முறையான பயிற்சியும், நிறைவான தேர்ச்சியும் விளைந்திடும். அதாவது, இந்துமதத்தை ஏற்றுக் கொண்ட தன்மானத் தமிழனுக்கும்; அரைகுறை இந்து மத அறிவும் பற்றும் பயிற்சியுமுள்ள அப்பாவித் தமிழர்களின் போலித் தலைவர்களுக்கும் இடையே நேரடியான போராட்டம் துவங்கிடல் வேண்டும். அப்பொழுதுதான், தமிழர்கள், தங்களுடைய மொழியுரிமை, இன உரிமை, பண்பாட்டுப் பெருமை, நாகரீக அருமை, சமுதாயக் கட்டுக் கோப்பு, சுய மரியாதை, தன்னம்பிக்கை, …… முதலிய அனைத்துமே இந்துமதத்தின் வளவளர்ச்சியிலும், வலிமைப் பொலிவிலும்தான் இருக்கின்றது என்ற பேருண்மையைக் கற்றுக் கொள்ள நேரிடும்.

    அன்பு
    ஞாலகுரு சித்தர் கருவூறார்

    (குருதேவர் அறிக்கை 23இலிருந்து)

    தொடர்புடையவை: