Gurudevar.org
 • முகப்புப் பக்கம்>
 • அன்பு சேவுக!>
 • தலைவர்கள் இல்லாத நிலை!
 • தலைவர்கள் இல்லாத நிலை!

  தலைவர்கள் இல்லாத நிலை!

  நாட்டில் தலைவர்களே இல்லாத இருண்ட நிலை

  அன்புச் சேவுக!

  அஞ்சல் வடிவக் கட்டுரைகளும், கட்டுரைகளும், நூல்களும் பழைய நூல்களைத் தேவைக்கேற்ப சிறுசிறு செய்தித் தொகுப்பாக வடிவப்படுத்தும் செய்திக் கட்டுரைகளும், ……. எழுதி எழுதிக் கோப்புகள் நூற்றுக்கணக்கில் குவிந்ததுதான் மிச்சம், பயன் ஏதும் உருப்படியாக எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை.

  நெஞ்சத்தில் நெருப்புக் கடல் கொதித்துப் பேரலைகள் மிகுந்து அனல் புயல் வீச ஆரம்பித்து விட்டது. இனியும், தாமதிக்கக் கூடாது! தாயகத்து மக்களைத் தவறான, போலியான, சோம்பலான, ஏமாளியான, கோமாளியான, மோசமான, மோசடியான, கூலிப் போக்குடைய, அடிமைச் சிந்தையுடைய, பயனற்ற….. வாழ்க்கை வாழுமாறு செய்யும் மத்திய மாநிலச் சமய, சமுதாய, அரசியல், கலை, இலக்கியத் தொழில் துறைத்தலைவர்களை எண்ணி எண்ணிச் சிந்தை எரிமலை எனக் குமுறி வெடித்துச் சிதறி நெருப்புக் குழம்பு ஆறாக ஓட ஆரம்பித்து விட்டது. இருமருங்கும் சாம்பல் மேடுகள் கரைகளாக உயர்ந்து வருகின்றது.

  இந்தியத் துணைக்கண்டத்தில் மக்களின் உள்ளத்தைத் தொட்டும், சிந்தையைத் தட்டியெழுப்பியும், உணர்வில் நிறைந்தும் செல்வாக்குப் பெற்றுத் தலைமை தாங்கி வழி நடத்தக் கூடிய தலைவர்களேயில்லை (Neither the leaders are inspired nor they can inspire others). அதாவது, தன்னம்பிக்கையும் தன்னுணர்வும், அகஞானமும், புற ஞானமும் மீக்கூரப் பெற்றுத் தற்கவர்ச்சியும், புறக்கவர்ச்சியுமுடைய தலைவர்களே நம் நாட்டில் ஏறத்தாழ இல்லை! இல்லை!! இல்லை!!! எனவேதான், எங்கும் இருள்! இன்னல்! இடர்! இழிவழிவு! ஏமாற்று! சுரண்டல்! கொள்ளை! அநியாயம்! அநீதி!

  நண்ப! அனைத்துத் துறைகளில் உள்ள தலைவர்களும், தங்களுக்கு எதிர்பாராமல் கிடைத்த மதம், சாதி, பாரம்பரியம், பணம், புகழ், ……. முதலிய போலியான செல்வாக்கை வைத்துக் கொண்டு ஏமாற்று வேலையே செய்து வருகிறார்கள். இவர்களுக்கெல்லாம் மிக நன்றாகத் தெரியும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மக்கள் செம்மறியாட்டு மந்தை போலத் தங்களின் பின்னால் வந்தே தீருவார்கள் என்பது. எனவேதான், இவர்கள் கொள்கையோ [Policy], நெறியோ [Principle], முறையோ [Standard approaches and attitudes of procedure], குறிக்கோளோ [aim] …… இல்லாமல் சுயநல வெறிகொண்டவர்களாகவே செயல்படுகிறார்கள். அதாவது, இவர்கள் தங்களின் குடும்பம், சொந்தம், உறவினர், நண்பர், இயக்கத்தவர் ……. என்ற குறுகிய எல்லைகளையே பாதுகாப்புக் கோட்டைகளாகவும், நடைபாதைகளாகவும் கொண்டு செயல்படுகிறார்கள்.

  நண்ப! இன்றைய இந்தியத் தலைவர்கள் அனைவருக்குமே, மிக நன்றாகத் தெரியும், தாங்கள் மக்களை ஏமாற்றுகிறோம் என்று. எனவேதான், அவர்கள் மக்கள் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தங்களை மறுக்கக் கூடும், வெறுக்கக் கூடும், …… என்பதைத் தெளிவாக உணர்ந்து அதற்கேற்ப எச்சரிக்கையாகவே வாழுகிறார்கள். இவற்றால்தான், எந்தத் தலைவரும் உண்மையான பிடிப்போடும், துடிப்போடும் செயல்படுவதேயில்லை. இப்படிப்பட்ட ஓர் இரண்டுங் கெட்டான் நிலையில் தலைவர்களும், மக்களும் உள்ள காலத்தில்தான் நாம் செயல்படுகிறோம் என்பதை எண்ணும்பொழுதுதான் நமது இன்றைய கொள்கை முழக்க, விளக்க வளர்ப்பு முயற்சிகள் மாற்றிக் கொள்ளப்பட வேண்டுமோ என்று எண்ணுகிறோம் யாம்.

  நண்ப! யாம் தாலாட்டுப் பாடல்களாகவும், காவடிச் சிந்துகளாகவும், தெம்மாங்குகளாகவும், கலை நிகழ்ச்சி இன்னிசைப் பாடல்களாகவும், கதை நிகழ்ச்சி வில்லுப்பாடல்களாகவும், நாடகங்களாகவும், …….. நமது வரலாறுகளையும், இலக்கியங்களையும், தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் எழுதிவிடலாமா' என்று எண்ணுகிறோம். இது ஒருவேளை எமக்குப் பெரிய வீழ்ச்சியாக இருக்கலாம். ஆனாலும் வேறு வழியில்லை. கலைகளின் மூலம்தான் நமது கருத்துக்களைப் பரப்பியாக வேண்டுமென்ற நிலை நம்மவர்களால் விரும்பி வரவேற்கப்படுகிறதா என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம் யாம்.

  நண்ப! நாம் அ.வி.தி. யின் பெயரால் பயிற்சி கொடுத்து வளர்த்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் அனைவருமே கோபுரத்தைத் தாங்கள்தான் தாங்கும் பதுமை போல் இருக்கிறார்கள். எனவே, இ.ம.இ.யின் மூலம் ஆங்காங்கே சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், சிறப்புக் கூட்டங்கள், பட்டிமன்றங்கள், ……… முதலியவை நிகழ்த்தி நமது வரலாறுகளையும், இலக்கியங்களையும், தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் நேரடியாகப் பொதுமக்களிடம் விளக்கி நமக்கு ஆதரவு திரட்டினால்தான் முடியும். அதாவது, அ.வி.தி. செயல்வீரர்களால் தேவையில்லாத போட்டிகளும், பொறாமைகளும், சண்டை சச்சரவுகளும், நிறுவன நிர்வாகச் சீரழிவுகளும்தான் ஏற்படுகின்றன. விரிவாக உங்களின் நெஞ்சந் திறந்த உணர்வு நிறை எண்ணங்களைப் பதிலாக உடனே அனுப்புமாறு வேண்டி இந்த அஞ்சலை நிறைவு செய்கிறோம்.

  அன்பு
  ஞாலகுரு சித்தர் கருவூறார்
  14-7-1985

  (குருதேவர் அறிக்கை 18இலிருந்து)