Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • அன்பு சேவுக!>
  • குருதேவரின் வாழ்க்கை
  • குருதேவரின் வாழ்க்கை

    குருதேவரின் வாழ்க்கை

    குருதேவரது உயரிய வாழ்க்கை வரலாறு

    அன்புள்ள சேவுக,

    “…. நான் என்னுடைய ஏட்டறிவும் பட்டறிவும், முயற்சியும், உழைப்பும் உயர்நோக்கும் அக்கரையும், ஆர்வமும், … உலகுக்குப் பயன்படாமல் போய்விடக்கூடாதே என்ற அச்சத்தால்தான் அச்சங்கள் கடந்து அயராது பாடுபட்டு வருகிறேன்.

    நான், உலகுக்கு வழங்குபவை அனைத்தும் உலக முதலினமான தமிழினத்தவர் உருவாக்கிய அறிவுச் செல்வங்களே! இவை தமிழர் புகழ் பாடுபவை மட்டுமல்ல; மனித இனத்தின் நல்வாழ்வுக்கு வழியமைப்பவை.

    இன்றுள்ள கலை, இலக்கியம், சமுதாயம், அரசியல் முதலிய பெரும்பாலான துறையின் பெரும்பாலானவர்கள் மக்களைச் சிந்திக்கவிடாமல் திசை திருப்பிப் போலிகளாக, கூலிகளாக, காலிகளாக, எடுபிடிகளாக, அடிமைகளாக, கோழைகளாக, தன்னல வெறியர்களாக, ஊழல் பேர்வழிகளாக உருவாக்கி வருகிறார்கள். இதனைத் தடுத்துத் திருத்தும் மாபெரும் பணியில் துணிவோடும் பணிவோடும் ஈடுபட்டிருப்பவனே நான்.

    நான் எனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும், வசதியையும், பிறரின் ஏக்கங்களும், ஏமாற்றங்களும், தேக்கங்களும், விம்மல்களும், விசும்பல்களும், புலம்பல்களும், துடிதுடிப்புக்களும், இல்லாமைகளும், இயலாமைகளும் …… அகற்றப்படுவதற்காகவே பயன்படுத்துவேன். இது உறுதி, உண்மை, வாய்மை என்பதனை என்னை ஆளாக்கிய என் தந்தை, பேராசான், சிந்தனையாளன், ஆராய்ச்சியாளன், மிகப்பெரிய படிப்பாளி, பொதுவுடமைத் தத்துவத்தின் தன்னிகரற்ற தலைவன், அரசியல் மாமேதை, அறிவியல் வித்தகன், சமுதாயத் தத்துவஞானி, சித்தர் காக்கையர் ம. பழனிச்சாமி முழுமையாக நம்பியது ஒன்றே எமக்குப் போதும், பிறரை நம்ப வைக்கும் முயற்சியில் ஈடுபடப் போவதில்லை நான்.

    எனவே, நான் புகழுக்காகவோ! பொருளுக்காகவோ! பதவிக்காகவோ! ……. நடிக்க வேண்டிய அவசியமே எனக்கு இல்லை. எனவேதான், நான் எனது ஒவ்வொரு நொடி வாழ்வையும் சான்றுகளும், ஊன்றுகளும், சாட்சிகளும் நிறைந்த வரலாறாக உருவாக்கி வருகிறேன்.

    இந்த வரலாறு, மானுட நல உரிமை என்றாவது, எப்படியாவது செயலாகிட வழியாக, வழிகாட்டியாக, வழித்துணையாக அமைந்திடும். இதுவே, எனது தெளிவான முடிவான கருத்து!….”

    ஓம் திருச்சிற்றம்பலம்
    அன்பே சிவம்!

    அன்பு
    இந்துமதத் தந்தை
    குருமகா சன்னிதானம்
    ஞாலகுரு சித்தர் கருவூறார்

    (குருதேவர் அறிக்கை 5இலிருந்து எடுக்கப் பட்டது.)

    தொடர்புடையவை: