ஆதிசங்கராச்சாரியார் என்பவர்கள் பதினெண்சித்தர்களின் நெறிப்படி சத்தி வழிபாடு, கன்னிப்பூசை, தாய்வழிபாடு … முதலிய பூசைகளைச் செய்பவர்களேயாவார்கள். இவர்களில் ஞானசித்தர்களும் தோன்றுவதுண்டு. இப்படித் தோன்றும் ‘ஞானசித்தர்கள்’ உலகியலுக்காகவாவது பெயரளவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதாவது, இல்லறத்தை ஏற்றவர்களாக இருக்க வேண்டும்.
அல்லது ‘கூடுவிட்டுக் கூடு’ பாய்ந்து வேறு உடல்களிலிருந்து பெண்ணின்பத்தைத் துய்த்து பதினெண்சித்தர்களின் மெய்யான இந்துமதத்துக்குரிய இல்லற வாழ்வை ஏற்றவர்களாக ஆக வேண்டும். மேற்படி நெறிப்படி தோன்றி செயல்பட்ட ‘காலடி ஆதிசங்கரன்’ தென்பாண்டித் தமிழனே.
ஆதிசங்கரர் தானே எழுதிய செளந்தர்யலகரியில் தம்மை ஒரு தமிழன் என்று குறிக்கின்றார். (இலகரி = இலாகிரி = மயக்கும் பொருள்). செளந்தர்ய லகரியில் 75வது சூத்திரத்தில் “… தவஸ்தன்யமன்யே” என்று தொடங்கி “திராவிட சிசு ராஸ்வாத்ய தவயத் கவீனால் ப்ரெளடானா மஜனி கமனீயா கவயிதா” என்று முடிகிறது.
இச்சூத்திரத்திலிருந்து நாம் உணர வேண்டிய கருத்தாவது “மலைமகளே, உன்னுடைய பால் ஹ்ருதயத்திலிருந்து உதிர்த்த அமிர்த பிரவாகமோ! சரசுவதியே, பாலாகப் பெருகி வருகிறாளோ! கருணையுடன் நீ கொடுத்த பாலைப் பருகிய திராவிடக் குழந்தை சிறந்த கவிஞர்களுக்குள் உயர்ந்த கவியாக ஆனான்…” என்பதேயாகும்.
இதனுடைய உரைநூல் ஒன்று ‘திராவிட சிசு’ என்பதை காலடி ஆதிசங்கரரையே குறிக்கின்றது என்று கூறுகின்றது. மற்றபடி பல உரைகள் அச்சொல், கருணீக்க வேளாளர் குலத்துத் தோன்றிய ஆதிசங்கரரையும், திருஞானசம்பந்தரையும், இராமலிங்க அடிகளாரையும் குறிக்கும் என்கின்றன.
காலடி ஆதிசங்கரர் தாந்தரீக சித்தியாளனாகவும், மாந்தரீக வல்லியாகவும் விளங்கியதால் தம்மை ஆதரித்துப் போற்றிய பிறாமணர்களும், சமசுக்கிருத மொழியும் கருவறைக்குள், கோயில்களுக்குள் நுழைய வேண்டும் என்பதற்காக பல கோயில் தெய்வங்களைக் கட்டி அடக்கினார். அதனால், பிறாமணர்கள் அவரைப் போற்றி மகிழ்ந்து தங்களின் தலைவனாக ஏற்றனர். இன்று அவரைப் பிறாமணராகக் கூறி வருகின்றனர். இதனைக் கண்டிப்பதற்காகத்தான் சத்தி வழிபாட்டின் சாரமாக சமசுக்கிருத மொழியில் தாம் எழுதிய செளந்தரியலகரியில் 75வது சூத்திரத்தில் சமசுக்கிருத மொழிக்கே உரிய ‘திராவிட சிசு’ என்ற சொல்லால் தன்னை ஒரு தமிழன் என்று குறித்து வெளிப் படுத்துகின்றார். இதனைவிட பெரிய சான்று என்று வேறு என்ன வேண்டும்?