பதினெண் சித்தர்களின் அருட்கொடை
பதினெண் சித்தர்கள் மனிதர்களின் உடல் நலம் வளத்தோடும், வலிமையோடும், வாலிப்போடும், பொலிவோடும் விளங்க வேண்டுமென்பதற்காக உடம்பில் பூசிக் கொள்ளக் கூடிய தைலங்கள், உள்ளே சாப்பிடக் கூடிய காயகல்ப மருந்துகள், நவநஞ்சுகள், நச்சுமுறிகள், பாலில் சாப்பிடக் கூடிய வளம் எனும் சூரணம், வலிமை எனும் சூரணம், காயகல்ப லேகியங்கள்…… முதலிய பல மருந்துகளை விருந்தாக வழங்கியிருக்கிறார்கள்.
இதேபோலப் பதினெண் சித்தர்களால் மனிதனுடைய ஆவி, ஆன்மா, ஆருயிர் என்ற மூன்றையும் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கும் தன்னோடு தொடர்புடைய மனிதர்களுக்கும் எப்படி யிருக்கின்றன என்று தெரிந்து கொள்ளப் பூசை மறைகளும், முறைகளும், நெறிகளும், வழிவகைகளும் விளக்கப் பட்டிருக்கின்றன. மேலும், ஒவ்வொரு தனிமனிதனும் தன்னுடைய பழம்பிறப்புக்களை உணரவும், மறுபிறப்புக்களைத் தெரியவும், இப்பிறப்பில் மெய்யான நிலைகளை அறியவும் உதவக் கூடிய வழிவகைகளையும், வசதி வாய்ப்புக்களையும் வழங்கியிருக்கிறார்கள் பதினெண் சித்தர்கள்.
இவற்றிற்கெல்லாம் மேலாகப் பதினெண் சித்தர்கள் எல்லா மனிதர்களுமே, தங்கள் தங்களுடைய மொழிக்கும், இனத்திற்கும், வட்டாரத்திற்கும், நாட்டுக்கும் உரிய கடவுள்களைக் காணவும், அவர்கள் கடவுள்களின் அருளைப் பெறவும், கடவுள்களோடு நெருங்கிப் பழகித் தங்களையும் கடவுளாக்கிக் கொள்ளவும் கூடிய எல்லா வகையான பூசைவிதிகளையும், பூசை முறைகளையும், வழிவகைகளையும் வழங்கியிருக்கிறார்கள். இவர்கள், தங்களுடைய தாய்மொழியான தமிழ் மொழியிலேயே அனைத்து வகையான பூசைமொழிகளையும் எழுதியிருக்கிறார்கள் என்றாலும் அவற்றை எந்த மொழிக்காரர்கள் வேண்டுமானாலும் அவர்களுடைய மொழியின் ஒலி நயங்களுக்கேற்ப உச்சரித்து ஓதலாம் என்ற அனுமதியை வழங்கியிருக்கிறார்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு நாட்டு மக்களும் அவரவர்களுடைய நாட்டுக்கும் இனத்துக்கும், மொழிக்கும் உரிய கடவுள்களை எல்லாம் சித்தர்களுடைய பூசைமொழிகளின் மூலம் வழிபட்டு எல்லாவகையான பத்தி, சத்தி, சித்தி, முத்தி நிலைகளையெல்லாம் பெறலாம் என்று விளக்கியிருக்கிறார்கள் பதினெண் சித்தர்கள். இவற்றால் எல்லா மனிதர்களுமே கடவுள் தன்மைகளைப் பெறவும், பிறப்பிறப்பில்லாப் பேரின்பங்களைத் துய்க்கவும், கடவுளாகவே மாறிக் கடவுள்களோடு வாழவும் தேவையான எல்லா வகையான வழிவகைகளையும் செய்திருக்கிறார்கள் பதினெண் சித்தர்கள்.
இப்படிப் பதினெண் சித்தர்கள் பொதுவாக மானுடர் என்ற நோக்கிலும், போக்கிலுமே தங்களுடைய அருட்கொடைகளை வாரி வாரி வழங்கியிருக்கிறார்கள். அதாவது, நாட்டு வெறி, இன வெறி, மொழி வெறி, மத வெறி, சாதி வெறி, வட்டார வெறி, ஏழை பணக்காரர் என்ற வேறுபாட்டு வெறி….. முதலிய வெறியுணர்வுகளில் எந்த வெறியுணர்வும் இல்லாமல் இந்த உலகிலுள்ள எல்லா மனிதர்களையும் சமமாகக் கருதும் மனிதாபிமானத்தோடு செயல்பட்டு வருகிறார்கள். எனவேதான், இந்தப் பதினெண் சித்தர்கள் மட்டுமே தங்களுடைய அருட்கொடைகள் அனைத்திற்கும் ஒட்டு மொத்தமாக ‘இந்து மதம்’ என்று பெயரிட்டுள்ளார்கள். பதினெண் சித்தர்களுடைய இந்து மதம் ஒன்றுதான் தோற்றுவிக்கப்படும் பொழுதே பல சிறப்புக்களைப் பெற்ற ஒரு மதம்.
அதாவது,
‘இந்துமதம் உலக மக்களனைவருக்கும் பொதுவான மதம்’;
‘இந்துமதம் உலக மக்களனைவருக்கும் சமத்துவ சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயத்தை அமைத்துக் கொடுக்கப் பாடுபடக் கூடிய ஒரு மதம்’;
‘இந்துமதம் உலக ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உருவாக்குவதற்கு பாடுபடக் கூடிய ஒரு மதம்’;
‘இந்து மதம் உலக இன மொழி மதங்களின் விடுதலை வாழ்வுக்காகப் பாடுபடுகின்ற ஒரு மதம்’;
‘இந்து மதம் அருளுலகப் பொருளுலக இருளகற்றப் பாடுபடுகின்ற ஒரு மதம்’;
‘இந்து மதம் அருளை அநுபவப் பொருளாகப் பெற்று; அதனை மருந்தாகவும், விருந்தாகவும் அன்றாட வாழ்வில் பயன்படுத்திக் கொள்ளக் கற்றுக் கொடுக்கின்ற ஒரு மதம்’;
‘இந்துமதம் மனிதரைக் கடவுளாக்கக் கற்றுக் கொடுக்கின்ற ஒரு மதம்’;
‘இந்து மதம் அருவங்கள், உருவங்கள், அருவுருவங்கள், உருவ அருவங்கள் எனும் நான்கினையுமே வழிபட்டு பத்தி, சத்தி, சித்தி, முத்திகளைப் பெறலாம் என்ற உறுதி மொழியை வழங்குகிற ஒரு மதம்’;
‘இந்து மதம் எல்லா வகையான பயிரினங்களையும், உயிரினங்களையும், கடவுள்களையும் வழிபடுவதற்குரிய கணக்கற்ற வழிவகைகளையும் அவற்றிற்குரிய பூசைமொழிகளையும், பூசைவிதிகளையும் வழங்குகிற ஒரு மதம்’;
‘இந்து மதம் எதையும் கடவுளாக மாற்றுவதற்குரிய ஆற்றலுடைய குருபீடம், குருதேவர், ஆச்சாரியார், சன்னிதானம், ஆதினம், மடம், தம்பிரான்,….. முதலியவர்களையெல்லாம் பெற்றிருக்கின்ற ஒரு மதம்’;
‘இந்து மதம் எந்த மனிதனாக இருந்தாலும் நேரடியாகக் கடவுளோடு தொடர்பு வைத்துக் கொள்ள அவனுடைய அறிவுக்கும், ஆற்றலுக்கும், ஆர்வத்துக்கும், பக்குவத்துக்கும், விருப்பு வெறுப்புக்கும், வசதி வாய்ப்புக்களுக்கும் ஏற்ற பூசைமுறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுகின்ற அளவிற்கு கணக்கற்றப் பூசை முறைகளை உடைய ஒரு மதம்’;
‘இந்து மதம் இம்மண்ணுலகில் முதன் முதல் தோன்றிய மதம் என்பதால் அது கடந்த நான்கு யுகங்களில் கணக்கற்ற கோடி மனிதர்களைக் கடவுளாக்கியிருக்கிறது. எனவே மக்கள் தொகை எவ்வளவு அதிகமானாலும் ஒவ்வொரு மனிதனும் தொடர்பு கொள்ள ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கடவுள் என்று வழங்குமளவிற்குக் கணக்கற்ற கோடி கடவுள்களைப் பெற்றிருக்கின்ற ஒரே ஒரு மதமாகும்’;
‘இந்து மதம் அருளுலக வாழ்வு வாழ்வதற்கு அறவி, உறவி, துறவி, மறவி எனும் நான்கு வகையான வாழ்க்கை வாழ்பவர்களுக்கும் தகுதி உண்டு என்று மிகத் தெளிவாகக் கூறுகிற ஒரு மதம். அதாவது, இந்து மதம் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய விருப்பம் போல் எத்தகைய வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் அவனுக்கு அருளுலகில் முழுமையான உரிமையும், பெருமையும், பயனும் உண்டு அல்லது கிடைத்திடும் என்று கூறுகிறது’;
‘இந்து மதம் இம்மண்ணுலகில் தோன்றக் கூடிய அருளாளர்கள் அனைவரையும் ஏற்றுப் போற்றி மதித்துப் பேணிப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கும், நோக்கும் உடைய ஒரு மதம்; அதாவது, பதினெண் சித்தர்களுடைய இந்து மதத்திற்கு எந்த அருளாளர்களிடமோ அல்லது எந்த மதத்திடமோ வெறுப்போ!, மறுப்போ!, எதிர்ப்போ!, பகையோ!…… ஏற்படவே ஏற்படாது’;
‘இந்து மதம் ஒவ்வொரு தனிமனிதனும் தன்னுடைய முன்னோர்களை வழிபட வேண்டும் என்றும், மூத்தோர்களை மதித்துப் பணிந்து ஏற்றுப் போற்றிப் பேணிப் பாதுகாத்திடல் வேண்டும் என்றும் வலியுறுத்துகிற ஒரு மதம்’;
‘இந்து மதம் பிண்டம், அண்டம், பேரண்டம், அண்டபேரண்டம் எனும் நான்கின் தோற்ற, மாற்ற, ஏற்ற, இறக்கங்களைப் பற்றியெல்லாம் காலக் கணக்கீட்டு அடிப்படையில் முறையான விளக்கங்களை நிறைவாக வழங்குகிற ஒரு மதம்’;
‘இந்து மதம் இம்மனித வாழ்வில் ஏற்படக் கூடிய நல்லன, அல்லனவற்றிற்கு முறையான விளக்கங்களை நிறைவாகத் தருகிற ஒரு மதம்’;
‘இந்து மதம் மனித வாழ்வில் நாள், கோள், மீன், இராசி….. முதலியவற்றால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களையெல்லாம் தடுத்துக் கொள்ளவும், குறைத்துக் கொள்ளவும் பல்வேறு வகையான வழிவகைகளையும், ஏதுக்களையும், தோதுக்களையும், தூதுக்களையும் வழங்குகிற ஒரு மதம்’;
‘இந்து மதம் மனிதனுக்கு அருளுலகில் வழியாக, வழிகாட்டியாக, வழித்துணையாக, வழிப்பயனாக விளங்கக் கூடிய கருக்கள், குருக்கள், தருக்கள், திருக்கள் எனும் நான்கு வகையான அருளூறு நிலைகளை வழங்குகிற ஒரு மதம்’;
‘இந்து மதம் நோய்நிலை, பேய்நிலை, தேய்நிலை, ஓய்நிலை எனும் நான்கு வகைப்பட்ட நிலைகளுக்கும் மருந்தாக 48 வகை கருவறைகள், 48 வகை வெட்டவெளிக் கருவறைகள், 48 வகை வழிபாட்டு நிலையக் கருவறைகள் என்று 144 வகைப்பட்ட அருளூற்றுக்களை, அருள்வழங்கு கனிமலர்ச் சோலைகளைப் பெற்றிருக்கின்ற ஒரு மதம்’;……
இப்படிப் பட்டியலிட்டு எழுத ஆரம்பித்தால் கணக்கற்ற கருத்து விளக்கச் சுருக்க வாசகங்களைப் பெற்றிருக்கின்ற ஒரு மதமே இந்து மதம்.
(குறிப்பு: இந்த வாசகங்கள் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியான ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் குறிப்புக்களிலிருந்து எடுக்கப்பட்டவை.)
ஆனால் இப்படிப் பட்ட பதினெண் சித்தர்களுடைய ‘சித்தர் நெறி’யெனும் சீவ நெறியான மெய்யான இந்து மதம் பிறமண்ணினரெனும் பிறாமணரான வட ஆரியரால் தோற்றுவிக்கப்பட்ட பொய்யான ஹிந்து மதத்தால் மக்களிடமிருந்து மறைக்கப் பட்டு விட்டது. இதனால், பதினெண் சித்தர்களுடைய இந்து மதத்தின் மூலம் உலகந்தழுவிய நிலையில் எல்லா மானுடருக்கும் விளையக் கூடிய அரிய, பெரிய, சீரிய, நேரிய நன்மைகள் எல்லாம் பெருமளவில் தடைப் பட்டுவிட்டன! தடைப்பட்டு விட்டன! தடைப்பட்டு விட்டன! எனவே, இந்தப் பொய்யான ஹிந்துமதத்தால் ஏற்பட்டுள்ள மாயைகளையும், மயக்கத் தயக்கங்களையும், தவறான செய்திகளையும், பயனற்ற பழக்க வழக்கங்களையும், மடமை நிறைந்த கொள்கைகளையும், கண்மூடித்தனமான ஆபாசக் கற்பனைகளையும், மக்களைச் சுரண்டும் சூழ்ச்சிகளையும் முழுமையாக அகற்றி அழித்து ஒழித்திடல் வேண்டும். அதற்காகத்தான் பத்தாவது, பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகள் மிகப் பெரிய முயற்சிகளைச் செய்திட்டார்கள். இப்பொழுது அவர்களின் வழிவந்த பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் செயல்பட்டு வருகிறார். அவர்களுடைய சாதனைகளில் ஒன்றாக இப்பூசை மொழி வெளிவருகின்றது. எனவே, எல்லாப் பத்தியாளர்களும் குவலய குருபீடமான ஞானாச்சாரியாரின் மூலம் பதினெண் சித்தர்களுடைய இலக்கியங்கள் அனைத்தும் அச்சேறி வெளிவரவும்; உலகெங்குமுள்ள 144 வகைப்பட்ட அருளூற்றுக்களான கோயில்கள் புத்துயிர்ப்புச் செய்யப் படவும் தேவையான எல்லா வகையான உதவிகளையும், உழைப்புக்களையும் நல்கிட முன்வர வேண்டும். இதற்காகப் பதினெண் சித்தர் மடம், பீடம், கருகுலம் அனைத்து வகையான பத்தியாளர்களின் தொடர்பு மையமாக மாற வேண்டும்.
ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்!