அன்புச் சேவுக! உன்னோடு உளம் திறந்த சிந்தை நிறைந்த அஞ்சல் வழித் தொடர்பு நிகழ்த்துவதில் பல நன்மைகள் விளைகின்றன. முதலாவதாக என்னுள்ளே உள்ள தத்துவப் போராட்டங்கள், சித்தாந்தப் போராட்டங்கள், உலகியல் போராட்டங்கள், முரண்பாடுகளுக்குள் பிறக்கும் முரண்பாட்டுச் சிந்தனைப் போராட்டங்கள், திடீர் திடீரென்று எமது நினைவுக்கு வரும் எமது கேள்வியறிவுச் செய்தி, பட்டறிவுச் செய்தி, ஏட்டறிவுச் செய்தி, … முதலியவை உலகுக்குக் கூறப்பட்டேயாக வேண்டுமென்ற ஏக்கப் போராட்டங்கள்,…. முதலியவற்றின் வழிகளாக, அமைதி வழி முயற்சியாக அமைகின்றன யாமெழுதும் அஞ்சல்கள்.
நண்ப! யாம் எமது கடலோடிக் காடோடி, நாடோடி வாழ்வில் அச்ச கூச்ச இச்சை மாச்சரியங்களை இயல்பாகவே கடந்து நடந்து வந்திட்டோம். பதினெட்டாண்டுப் பயிற்சியும், பதினெட்டாண்டு முயற்சியும் நிறைந்து உலகியலில் நடை பயிலும் போதுதான் அனைத்து விதமான அச்ச, கூச்ச, இச்சை, மாச்சரியங்கள் உறவு பூண்டுள்ளன. யாம் தனியாகக் காட்டெருமைக் கூட்டங்களோடு நடந்தும், ஓடியும் விளையாடியதுண்டு; காட்டானைகளின் நீராடுந் துறையில் யாமும் அவற்றோடு நீராடியதுண்டு; வேகமாக ஓடி வரும் வேங்கையையும் வேடிக்கை பார்த்தபடி சென்றதுண்டு. ஆனால், சாதுவாகவும், அழகு செய்து கொண்ட பதுமைகளாகவும், கடமை வீரர்களாகவும், அருள் நெறியினராகவும், அறிவியல் வாதிகளாகவும், .... வாழுகின்ற மனிதர்களைக் கண்டுதான் புரியாமையால், மயக்க தயக்க தேக்க உணர்வுகளால் அச்ச கூச்ச இச்சை மாச்சரியங்களால் அலைகடலிடைத் துரும்பாகிறேன். நண்ப! நமது நாட்டில், கோவில்கள் (வழிபாட்டு நிலையங்கள்) நிறைய இருக்கின்றன. கடவுள்கள் (48 வகை நிலையினர்கள்) நிறைய இருக்கின்றனர். அருளை அடைந்த அருளாளர்கள் (48 வகை அருளாளர்கள்; அருளாளிகள், அருளாடு நாயகங்கள்; 48 வகை மருளாளிகள், மருளாடு நாயகங்கள்; 48 வகை அருட்பட்டத்தவர்கள், 13 வகைச் சித்தியாளர்கள்...) நிறைய இருக்கின்றனர். மதத்தின் தலைவர்கள் (மடாதிபதி், பீடாதிபதி, சன்னனிதானம், ஆதீனம், தம்பிரான், பண்டாரம், ... என்ற 48 வகையினர்) நிறைய உள்ளார்கள். மதக் கல்வி, கலை, அறிவியல் முதலியவைகளை முறைப்படி விளக்கி, வழங்கி வளர்த்திடும் ஆசிரியர்கள், குருமார்கள், ஆச்சாரியார்கள், (48 வகைப் பதினெண் சித்தர் பீடாதிபதி வழி ஆச்சாரியார்கள்; 13 வகைக் கருவழி ஆச்சாரியார்கள், 13 வகைக் குருவழி ஆச்சாரியார்கள், இதுவரை தோன்றியுள்ள 12 பதினெண் சித்தர் பீடாதிபதிகள், 48 வகைச் சித்தர்கள், பதினெண் சித்தர்கள், பதினெட்டாம்படிக் கருப்பர்கள்... ) நிறைய உள்ளார்கள்..... ஆனால், இந்து மதத்துக்கென்று நிறுவனக் கட்டமைப்புக்களையும், நிர்வாக ஒழுங்கமைப்புக்களையும் உடைய இயக்கம் இந்தியா தழுவியும், உலகம் முழுவதும் பரவியும்.... ஒன்று கூட உருவாகவில்லை! உருவாக வில்லை! உருவாக வில்லை! இல்லை; இல்லை; இல்லை; ஏன்? ஏன்? ஏன்? ....நண்ப! மேலே எழும்பியுள்ள ஏன்? ஏன்? ஏன்? … என்ற வினாவுக்கு எம்மைத் தவிர அல்லது நம்மைத் தவிர வேறு எவராலும் விடையைக் கூற இயலாது! இயலாது! இயலாது! இயலவே இயலாது! இதுதான் உண்மை! பேருண்மை! சத்தியம்! இன்னும் சொல்லப் போனால், மேலே நாம் எழுப்பியுள்ளது போல் ஒரு வினாவை எழுப்புவதற்குக் கூட இந்துக்களில் எவராலும் முடியாது! இயலாது! முடியவே முடியாது! இயலவே இயலாது! ஏனெனில், நமது இந்துக்கள் முடக்கு வாத நோயால் நடக்க முடியாது போனவர்கள் போல் மடமைகளால், ஏமாற்றுக்களால், பொய்களால், மூடப் பழக்க வழக்கங்களால்; கண்மூடித் தனமான கற்பனைகளால், சிந்தனைச் சிறகு ஒடிக்கப்பட்ட பறவைகளாக, கால்களில் விலங்குகள் பூட்டப்பட்டு இருள் நிறைந்த சிறைச் சாலைகளுக்குள் அடைக்கப் பட்ட ஆயுட் கைதிகளாக எதையும் காணாத பிறவிக் குருடர்களாக…. ஆக்கப் பட்டு விட்டார்கள். பிறமண்ணினரான பிறாமணர்களால்.! எனவேதான், நமது பணிகள் பன்னிரண்டாண்டுகளாகியும், பட்டி தொட்டி குக்கிராமங்களில் எல்லாம் வளவளர்ச்சி பெற்றும் கூட ஏட்டுலகிலும் (பத்திரிகைகள், படித்த மக்கள்), நாட்டு நடப்பிலும் உரிய விளம்பரமோ, வளர்ச்சியோ பெற முடியாத நிலை இருக்கிறது! இருக்கிறது! இருக்கிறது!…. இனி எவ்வளவு காலம் இந்நிலை இருக்கும்?!?!….
நண்ப! தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் இந்துமதத்தார் மீது கொண்டிட்ட அளப்பரிய ஆர்வத்தாலும், நல்லெண்ணத்தாலும்தான் விரைந்தும் விரிந்தும் இந்துமதக் கேடுகளை யெல்லாம் அகற்றும் பணியில் ஈடுபட்டிட்டார். ஆனால், அவர் எரியும் நெருப்புக்குள் கையை வைக்கப் போகும் குழந்தையைத் தாய் அவசர அவசரமாகத் தூக்கித் திட்டி நாலு அடி கொடுத்து “இனிமேல் அடுப்பினருகில் போகாதே; போனால் கொன்று போடுவேன்”… என்று பாசத்தால் பதறிச் செயல்படுவது போல் செயல்பட்டிட்டார். அதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் பிறமண்ணினரான பிறாமணர்கள். அதாவது, அப்பாவிகளாகவும், ஏமாளிகளாகவும், மூட நம்பிக்கைக் காரர்களாகவும், அறியாமை மிகுந்தவர்களாகவும் இருந்த இந்துக்களைப் பெரியார் ஈ.வெ.ரா. ஒரு நாத்திகர், கடவுள் மறுப்பாளர், மத வெறுப்பாளர், அருளுலகைக் கேலியும் கிண்டலும் செய்பவர், மதவாதிகளுக்கு விரோதி… என்றெல்லாம் பழி கூறிப் பெரியாரின் அரிய, பெரிய, சீரிய, நேரிய, பெரிய சிந்தனைகளையும், தத்துவங்களையும், சீர்திருத்தத் திட்டங்களையும் செல்வாக்குப் பெற முடியாமல் செய்திட்டார்கள். இதனால், 96 வயது வரை போரிட்ட அவர் வெற்றி தோல்வி இன்றித் தொடர்ந்து போர் நடக்க ஏற்பாடு செய்திட்டார். ஆனால், அவர் உருவாக்கிய வாரிசுகள் அவரையே புரிந்து கொள்ள முடியாதவர்களாக சிறு பிள்ளைத் தனமான விளையாட்டுச் செயல்களில் அனைத்தையும் வீணாக்குகிறார்கள். எனவேதான், நாம் ‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ என்ற இயக்கத்தைத் தோற்றுவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.
நண்ப! இவ்வாறு இந்து மதத்தை வளர்க்க வேண்டிய ஆத்திகர்களும், இந்துமதத்தைச் சீர்திருத்த முற்பட்ட பகுத்தறிவு வாதியினர், நாத்திகர்கள், கடவுள் மறுப்பாளர்கள், சிந்தனையாளர்கள், சீர்திருத்த வீரர்கள்… முதலியவர்களும் இந்து மதத்துக்கு நிறுவனக் கட்டமைப்பையோ, நிர்வாக ஒழுங்கமைப்பையோ உருவாக்க இயலாதவர்களாக, முடியாதவர்களாக ஆகிவிட்டார்கள். எனவே, நமக்குத்தான் அம்மாபெரும் பொறுப்பு வந்துள்ளது. நாம், நமது இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் கீழ் பதின்மூன்று வகை அமைப்புக்களை உருவாக்கிச் செயல்படுகிறோம். இது போதாது; இன்னும் பல நிறுவனங்களைக் கழகமாக, கட்சியாக, சங்கமாக, மன்றமாக, குழுவாக, திருநெறிக் கூட்டமாக, திருச்சபையாக, இயக்கமாக, … விரைந்து உருவாக்கிச் செயல்பட்டேயாக வேண்டும். அப்பொழுதுதான் பல்வேறு நிலையினர்களையும் ஒருமுகப் படுத்தி இந்து மதத்துக்கென நல்ல ஓர் அமைப்பை உருவாக்க இயலும்.
நண்ப! ஏறத்தாழ எல்லா மதத்து இளைஞர்களும் துப்பாக்கியைத் தோளிலும், தோட்டாச்சரங்களைக் கழுத்தில் மாலையாகவும், இடுப்பில் பட்டியாகவும் மாட்டிக் கொண்டு ஆயுதப் புரட்சியில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஆனால், நாமோ 43,73,086 ஆண்டுகளாக ‘நாம் வழிபடும் கடவுள்கள் ஆயுதமேந்திப் போர்க் கோலத்தில்தான் வழிகாட்டுகிறார்கள்’ என்பதையும்; ‘நமது புராண இதிகாசங்களனைத்தும் ஆயுதப் போரின் மூலம்தான் நேர்மையையும், நீதியையும் நிலை நாட்ட முடியும்’ என்ற தத்துவ விளக்கமாக இருப்பதையும் தெளிவாகப் புரிந்து “ஆயுதப் போர் கூடாது! காயுதப் போர்தான் தேவை” என்ற முடிவான கருத்தை நமது தத்துவமாக வழங்குகிறோம். இந்தக் காயுதப் போர்த் தத்துவம்தான் ‘சித்தர் நெறி’ எனப்படும் இந்துமதம். அதாவது, ‘தத்துவப் புரட்சி’, ‘கருத்துப் போர்’, ‘முரண்பாட்டுச் சண்டை’, ‘கொள்கைச் சிக்கல் போக்கு’, ‘சர்ச்சை’, … என்று அனைத்துமே பேச்சின் மூலம், எழுத்தின் மூலம்தான் தீர்க்கப் பட்டிடல் வேண்டுமே தவிர, ஆயுதப் புரட்சி, வன்முறை, அழிவு, சிதைவு, … முதலியவை கூடாது! கூடாது! கூடாது! …. என்று வலியுறுத்திக் கூறுவதுதான் பதினெண் சித்தர்கள் படைத்த ‘இந்துமதம் என்கின்ற சித்தர் நெறி’.
எனவே, மக்களை அன்பு வழியில், அற வழியில், அமைதி வழியில், சமாதான வழியில், சகோதரத் தத்துவ வழியில், சமத்துவ வழியில்…. செயல்படச் செய்து மானுட இன ஒற்றுமை, பற்று, பாசம், நளினமெலினம், கனிவு, அழகு, அன்பு, கூட்டு வாழ்வு, உண்மை உறவு, பெருமைமிகு உரிமை… முதலியவைகளை வளவளர்ச்சியும், வலிமைச் செழிச்சியும் அமையச் செய்யும் ஆற்றல் பதினெண் சித்தர்களின் சித்தர் நெறி என்கின்ற இந்து மதத்துக்குத்தான் உண்டு … என்பது தெளிவாகிறது.
நண்ப! இன்றுள்ள குழப்பமெல்லாம் இந்து மதத்தின் பெயரால் வாழும் ஆச்சாரியார்கள், சன்னிதானங்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள், ஆதீனங்கள், தம்பிரான்கள், குருமார்கள், பூசாரிகள், ஓதுவார்கள், தேசிகர்கள், பண்டாரங்கள்…. முதலியோரும் இந்துமதத்துக்கென உருவாக்கப் பட்டுள்ள கட்சிகளின் தலைவர்களும்…. இந்துமத வரலாறு, இந்துமதத் தத்துவம்(Philosophy), சித்தாந்தம் (Theology), ஒழுகலாறு (Way of Life), மரபு (Traditions), சடங்கியல் (Rituals), கொள்கை (Fact and Policy), நம்பிக்கை (Faith and Belief) … முதலியவைகளை விளக்கும் பாரம்பரிய மரபுகளையோ! செவி வழிச் செய்திகளையோ! மறைகளையோ! நடைமுறைகளையோ! இலக்கியங்களையோ! தேவையான அளவு கூடத் தெரிந்து கொள்ளாதவர்களாகவே இருக்கிறார்கள்.
அதாவது, இந்து என்ற சொல்லுக்குப் பொருளோ! அச்சொல்லின் வரலாறோ!, அச்சொல் குறிக்கும் மதத்தைப் பற்றிய பேருண்மைகளையோ!… தெரியாதவர்கள்தான் பெரும்பாலும் இந்துமதத்தின் வழிகாட்டிகளாக, வழித் துணைவர்களாக, வழிபாட்டுக்குரிய தலைவர்களாக இருக்கிறார்கள். எனவேதான், இந்துமதத்தவர் தன்னம்பிக்கையோ! மதப்பற்றோ!, மதவாழ்வில் பாசப் பிடிப்போ!, மத ஒற்றுமையில் பேரார்வமோ!…. இல்லாமல் நெல்லிக்காய் மூட்டை போல் எந்த நேரமும் தனித் தனியாகச் சிதறியோடும் தன்மை படைத்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களைத் திருத்தும் தரமோ, பக்குவமோ, அறிவாற்றலோ, ஆர்வமோ, உரமோ, தீரமோ, வீரமோ…. இல்லாதவர்கள்தான் இந்துமதத்தின் வழிபாட்டுக்குரிய தலைவர்களாக, வழிகாட்டிகளாக, துணைவர்களாக உள்ளார்கள்! உள்ளார்கள்! உள்ளார்கள்!
இவற்றிற்கெல்லாம் காரணம் இந்துமதத்தின் மூலவர்களாகவும், காவலர்களாகவும் உள்ள தமிழ் மக்களின் கையில் இந்துமதமில்லை. தமிழர்களும் வரலாற்றறிவோ, ஆராய்ச்சியுணர்வோ, உண்மை காணும் பேணும் ஆற்றலோ…. இல்லாமல் இந்துமதம் தங்களுடையதுதான் என்று புரியாமல், இந்துமதத்தை மறுக்கவும், வெறுக்கவும், எதிர்க்கவும், பகைக்கவும், நகைக்கவும்…. செய்கிறார்கள். எனவே, இந்துக்கள் தங்கள் மதத்தைக் காத்திட வேதமதப் பிறாமணர்களையே தங்களுடைய மதத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இதுதான் கொடுமையிலும் கொடுமை! இழப்பிலும் இழப்பு! அதாவது, பலியாகப் போகும் கிடாய் தன்னை வெட்டப் போகும் கொலையாளியைப் பாசத்தோடு நக்கிக் கொடுப்பது போன்றுள்ளது இந்நிலை.
நண்ப! பிறமண்ணினரான பிறாமணர்கள் தங்களுடைய வேதமத்தைப் பரப்பி இந்தியாவின் பூர்வீகக் குடிகளான தமிழர்களின் அகப் பண்பாட்டையும், புற நாகரீகத்தையும், அறிவியலையும், கலையையும்,…. விளக்கி வளர்க்கும் மெய்யான இந்துமதத்தைச் சிதைத்துச் சீர்குலைத்துச் சீரழித்திட முயலுவதை அப்பாவித் தமிழர்களே ஏற்றுப் போற்றித் துணை போகிறார்கள். இந்த வரலாற்றுக் குழப்பத் தாழ்ச்சி வீழ்ச்சி நிலைகள் பிறாமணர்களின் சூழ்ச்சிகளால் மட்டும் விளைந்தவையல்ல! தமிழரின் அப்பாவித் தனத்தாலும், ஏமாளித் தனத்தாலும், ஒற்றுமையின்மையாலும், தனிமனிதப் பேராசைகளாலும், தனிமனிதத் தன்னலச் செயல்களாலும், தனிமனிதத் துரோகங்களாலும், மொழிப் பற்றின்மையாலும், இனப்பற்றின்மையாலுமே விளைந்தன. எனவேதான், மேற்படி வரலாற்றுக் குழப்பங்களைத் தீர்க்கும் முயற்சியே பிறக்கவில்லை.
நண்ப! எல்லாக் கோயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றது. எல்லாவிதமான மதத் திருநாள்களும் திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. தனிமனித வாழ்வியல் நிகழ்ச்சிகள், குடும்ப வாழ்வியல் நிகழ்ச்சிகள், சமுதாய வாழ்வியல் நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள், தொழில் நிகழ்ச்சிகள்… முதலிய அனைத்துமே சமயச் சாத்திறச் சம்பிறதாயச் சடங்குகளுடன் தான் நிகழுகின்றன; …. ஆனால், மதக் கருத்துக்களும், கொள்கைகளும், நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும், இலக்கியங்களும் பொதுவாகக் கேலிக்கும் கிண்டலுக்கும் தாக்குதலுக்குமே உரியனவாகின்றன.
இன்னும் சொல்லப் போனால்; மேலெழுந்தவாரியாகக் கடவுள் மறுப்பும், மத வெறுப்பும், மதத் தலைவர்களுக்கு எதிர்ப்புமே நாட்டு நடப்பில் இருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு மாபெரும் முரண்பாடு எப்படி உருவாயிற்று?, எவ்வாறு தொடர்ந்து வாழ்ந்து வருகிறது? …. என்பதைப் பற்றிச் சிந்திக்கும் எண்ணமோ, துணிவோ, தெளிவோ, தரமோ, உரமோ, நிறைவோ, மறமோ, …. ஏறத்தாழ எவரிடமுமே இல்லை! இல்லை! இல்லை! இல்லவே இல்லை!
இத்தகைய அவலக் கேவல இருள் நிலையில்தான் நாம் மத மறுமலர்ச்சிப் பணியைத் துவக்கியுள்ளோம். எனவே, நமக்கு மதவாதிகளிடமிருந்தும் …. எதிர்ப்புக்கள் ஏற்படத்தான் செய்யும்! இவற்றை எண்ணிக்கையில் சிலராகத் தேர்ந்தெடுக்கப் படும் நமது அடியான், அடியாள், அடியார் …. முதலியோர்க்கு நல்ல வளமாள, வலிவான ஏட்டறிவையும் பட்டறிவையும் வழங்கித் திட்டமிட்ட செயல்முறைகளில் செயல்படச் செய்வதே உரிய வழி!
நண்ப! நாம் மதவரலாறு, மத இலக்கியம், மதத் தத்துவம், மதச் சித்தாந்தம், மத அறிவியல், மதக் கலை…. முதலியவைகளை எழுதியும், பேசியும் வளர்த்துத்தான் உண்மையான மதவாதிகளை உண்டாக்க வேண்டும். இந்த உண்மையான மதவாதிகளைக் கருவியாகக் கொண்டுதான் மத இயக்கக் கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டும்.
நண்ப! இந்துமதம்தான், நமது மக்களைச் சாதிவெறி, தவறான மதவெறி, அரசியல் கட்சி வெறி …. முதலியவைகளிலிருந்து காப்பாற்றிடும். அப்பொழுதுதான், உண்மையான பற்று, பாசம், ஒற்றுமை, கட்டுக் கோப்பு முதலியவை உருவாகிடும்.
நண்ப! ஏறத்தாழ எல்லாருமே சமத்துவத்தையும், பொதுவுடமையையும் விரும்புகிறார்கள். ஆனால், இந்தத் தத்துவம் ஏட்டுலகில் எப்படி யிருக்கிறது? நாட்டு நடப்பில் எப்படி இருக்கிறது? என்பதை எவரும் பொறுமையோடும், பொறுப்போடும் இருந்து ஆராய்ந்து அறியவில்லை. அதனால்தான் உண்மையான சமத்துவத் தத்துவமும் பொதுவுடமைத் தத்துவமும் மக்களுக்குத் தெரியவில்லை. அதற்காக, அரசியல் வாதிகளோ, மெற்படித் தத்துவங்களுக்குரிய கட்சிகளோ, இயக்கங்களோ முயற்சிக்க வில்லை. ஆனால், இவர்கள் மந்திறவாதிகள் உச்சரிக்கும் மந்திறங்கள் போல்; சமத்துவம், பொதுவுடமை என்ற சொற்களை மட்டும் உச்சரித்தே பிழைப்பு நடத்துகிறார்கள். இவர்களைப் போலத்தான் நமது இந்துமதத் தலைவர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் அனைவருமே உண்மையான இந்துமத வரலாறு, தத்துவம், அறிவியல், கலை, இலக்கியம், நடைமுறை…. முதலியவைகளை விளக்காமல் விழாக்கள் கொண்டாடியும், கதைகள் கூறியும், விளக்கவுரைகள் வழங்கியும்…. வயிறு பிழைக்கிறார்கள். இதைத் தடுத்து நிறுத்தி அறிவுப் புரட்சி! அருட்புரட்சி! ஆன்மீகப் புரட்சி! மெய்ஞ்ஞானப் புரட்சி! மதப் புரட்சி! …. முதலியவைகளைச் செய்ய வேண்டும் நாம்.
அன்பு
ஞாலகுரு சித்தர் கருவூறார்.
21/10/1985.