Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி>
  • அருளாட்சி ஆணைகள்.>
  • அருளாட்சி ஆணைகள் - முன்னுரை
  • அருளாட்சி ஆணைகள் - முன்னுரை

    அருளாட்சி ஆணைகள் - முன்னுரை

    பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள் முன்னுரை

    அருளாட்சி நாயகம், ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, இராசிவட்ட நிறைவுடையார், அரசயோகி, குருதேவர் அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம் குவலய குருபீடம், குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் கருவூறார்

    “சித்தர் நெறி” எனும் “மெய்யான இந்துமதம்” பற்றிய விளக்கங்களையும், வரலாறுகளையும், நாயகநாயகிகளின் வாழ்வியல்களையும், போதனைகளையும், சாதனைகளையும், அடிப்படைத் தத்துவங்களையும், செயல் சித்தாந்தங்களையும், … முறையாக வழங்கும் பணி அணிபெற்றால்தான் ‘உலக ஆன்ம நேய ஒருமைப்பாடும்’, ‘உலகச் சமய ஒற்றுமையும்’, ‘உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயமும்’, ‘மொழிவிடுதலையும்’, ‘இன விடுதலையும்’, ‘பண்பாட்டுரிமையும்’, ‘நாகரிக உரிமையும்’, ‘நாடுகளின் தன்னாட்சிப் பெருமையும்’, ‘தனிமனிதத் தன்னம்பிக்கை மிகு தன்மானப் பிடிப்பும்’, ‘உலக அருளாட்சிச் செழுமையும்’, … உருவாகிடும்! உருவாகிடும்! உருவாகிடும்!

    இம்மண்ணுலகின் முதல் மானுட இனமாகவும், மெய்யான இந்துமதத்தின் மூலமாகவும், உள்ளீடாகவும், காவலாகவும் இருக்கின்ற தமிழினத்தின் விடுதலை வாழ்வில்தான் மானுடத்தின் வருங்கால நலமேயுள்ளது. ஆனால், இம் மண்ணுலகிலேயே தன்னுணர்வோ! தன்னம்பிக்கையுணர்வோ! மொழிப்பற்றுணர்வோ! பண்பாட்டுப் பிடிப்புணர்வோ! நாகரிக விடுதலையுணர்வோ!… விழிச்சியடையாமல் பிறரிடம் கூலியாகவும், பிறருக்கு வேலியாகவும் அடிமை வாழ்வே வாழுகின்ற ஓரினமாகப் பன்னெடுங்காலமாக மிடிமையுற்றுக் கிடக்கிறது இந்தத் தமிழினம். இதற்குக் காரணம் இவர்கள் வரலாற்றறிவும், இலக்கிய அறிவும், மத அறிவும் முறையாக வளர்த்துக் கொள்ளாமல் பிறமதங்களுக்கு வேட்டைப் பொருளாகவும், விளையாட்டுப் பொருளாகவும் இருந்து வருவதுதான்.

    யாம், எமது பயிற்சிக்குரிய பதினெட்டாண்டுகளிலும், முயற்சிக்குரிய பதினெட்டாண்டுகளிலும் பாரம்பரியமாக என்மீது சுமத்தப்பட்டுவிட்ட பணிகளை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்ற எண்ணப் போராட்டத்தில்தான் கழித்தோம். யாமறிந்த செய்திகளை வாய்விட்டுப் பேசிடக் கூட எமக்குரிய வாய்ப்பு, வசதி, சூழல்,…. உருவாகவில்லை. எமது ஏட்டறிவும், கேள்வியறிவும், பட்டறிவும் இப்புவிப் பரப்பு முழுதும் விரிந்து, பரந்து, நிறைந்து நிகழ்ந்துற்றன. இருந்தும், யாம், எமது தாயகத்தில் ஓர் அன்னியனாக! புதியவனாக! … நகரங்களிலும், ஊர்களிலும், கிராமங்களிலும், பட்டிதொட்டிகளிலும், மனித நடமாட்டமற்ற காடுகளிலும் அலைந்து திரிவதே வாடிக்கையான வாழ்க்கையாகி விட்டது. இருந்தும், வருந்தாமல், முப்பத்தாறு ஆண்டுகளுக்கு மேல் தனித்தே போராடினோம் …. பயனில்லை.

    இப்போது ஆயிரமாயிரம் படித்த, படிக்கின்ற, படிப்பறிவே இல்லாத இளைஞர்கள் எமது கனவுகளை நனவாக்கிடத் தீரமிக்க தியாகங்களையும், வீரமிக்க செயல்களையும், துணிவுமிக்க பணிகளையும், முழுநேர முயற்சிகளால் தொண்டு புரிகிறார்கள். இவர்களுடைய கட்டுக்கடங்காத காட்டாற்றுப் போக்குடைய பேரார்வத்தாலேயே; யாம், எமது மோன ஞான நிலைகளை விடுத்துச் சில செய்திகளை எழுதாக்கிளவிகளாக வழங்கியும் செயலாற்றுகிறோம். அதாவது, ‘நமது தாயக மக்கள் கணிசமான அளவாவது தங்களுடைய பழமைகளைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும், அக்கரையும் பெற்ற பிறகுதான், பதினெண்சித்தர் பீடாதிபதிகளைப் பற்றியும், சித்தர் நெறி பற்றியும், இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் இரண்டாயிரம் ஆண்டுக்கும் மேற்பட்ட போதனை, சாதனை பற்றியும்…… வெளிப்படையாகப் பேசலாம், எழுதலாம்……’ என்று எமது தந்தையார் அருள்மிகு சித்தர் காக்கையர் எனும் காகபுசுண்டர் ம.பழனிச்சாமி பிள்ளை அவர்கள் கூறிச் சென்ற எச்சரிக்கை அறிவுரையையும் மீறியே செயல்படுகிறோம் யாம். எமது தாயக மக்களோ பெரும்பாலும் மிகமிகக் குறுகிய வட்டங்களுக்குள்ளேயே வாழ்ந்து சமய, சமுதாய, அரசியல், கலை, இலக்கியத் துறைகளனைத்தையும் சூறாவளிக்குட்பட்ட கடலலைகளாக்கி யுள்ளார்கள். இந்தச் சூறாவளிக் கடலலைகளுக்கு இடையில்தான் கலம் செலுத்துகிறோம் யாம். கரை சேறுவது பற்றிக் கனவு காணக் கூட இயலாது. இருந்தாலும் நல்ல இளைய சமுதாயத்தை நம்பிப் பயணத்தைத் துவக்கி விட்டோம் யாம்.

    நமது நாட்டில் எதெதற்கோ வாரிவாரி வழங்கக் கூடியவர்கள் நிறைய இருக்கிறார்கள். இவர்களில் ஒருவராவது நமது முன்னோர்களின் போதனைகளையும், சாதனைகளையும், வரலாறுகளையும், வாழ்வியல்களையும் ….. உலகறியச் செய்ய வேண்டுமென்று நினைத்து எம்மவர்களுக்கு உதவிட முன்வந்தால் போதும். யாம், வெறும் ஏட்டுச் சுரக்காய்களை மட்டும் உருவாக்கவில்லை. இவ்வுலகிலுள்ள 48 வகையான வழிபாட்டு நிலையங்களையும், கருவறைகளையும் பெரிய அளவில் புத்துயிர்ப்புச் செய்யும் அருளாளர், அருளாளி, அருளாடு நாயகம், மருளாளர், மருளாளி, மருளாடு நாயகம், …. எனும் ஆறுவகையினரையும் தொடர்ந்து உருவாக்கி வருகிறோம் யாம். மேலும், எம்மால் இப்பார் முழுதும் பரவலாக உருவாக்கப்பட்டுள்ள கருகுலங்கள், குருகுலங்கள், தருகுலங்கள், திருகுலங்கள், பத்திப்பாட்டைகள், சத்திச் சாலைகள், முத்திச் சோலைகள், சித்திக் கோட்டங்கள், தவப்பள்ளிகள், ஞானமடங்கள், அருவுருவச் சமாது பீடங்கள் ….. முதலியவை நன்கு செயல்பட்டு அருளுலக வாரிசுகளைப் போதுமான அளவுக்கு மேல் உருவாக்கிவிட்டன.

    எனவே, இனியும் நாம், இலைமறைகாயாக, நிலவறைச் சொத்தாக …… இருக்கத் தேவையில்லை என்று எண்ணினோம். ஆனால், எமது தாயக மக்களிடையே எமது நிலை தொடர்ந்து அன்னிய நிலையாக இருந்துவிடக் கூடாது என்றஞ்சுகிறோம் யாம். பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதிக் கேற்பட்ட நிலையை எண்ணிக் கலங்குகிறோம் யாம். அவருக்கே நம் தாயக மக்கள் தோல்வியை நல்கினார்கள் என்பதை எண்ணியெண்ணியே மயங்குகிறோம், தயங்குகிறோம் யாம்…..!?!?!?

    வழக்கம் போல் நம்மவர்கள் எம்மை எமது காலத்தில் பயன்படுத்திக் கொள்ளாமல் போய்விடக் கூடாது என்ற கருத்தில்தான் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தையும், இதன்கீழ் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட அமைப்புக்களையும் உருவாக்கிச் செயல்படுகிறோம் யாம்.

    சித்தர் நெறியைப் பகுத்தறிவுப் போக்கிலும், விஞ்ஞானச் சூழலிலும், வரலாற்றடிப்படையிலுமே வளர்த்து வருகிறோம் யாம். காலப் போக்கில் தோன்றிய கற்பனைகளையும், மடமைகளையும், கண்மூடித் தனங்களையும், மூடப் போக்குகளையும், குருட்டு நம்பிக்கைகளையும்,……. வெளிப்படையாக விவாதித்து விளக்கங் கண்டு விலக்கியே மறுமலர்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ளோம் யாம். மேலும், மதத்தின் பெயரால் மடமையோ, மூடநம்பிக்கையோ, முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையோ, முதலாளித்துவத்தை நியாயப் படுத்தலோ, தொழிலாள அடிமைத்தனத்தை அறநெறியாக்குதலோ, பெண்ணடிமையைச் சட்டமாக்குதலோ, பிச்சைக்காரர்களையும், சோம்பேறிகளையும் வளர்த்தலோ, ஏமாற்றுக் காரர்களையும், சுரண்டல் காரர்களையும் ஆதரித்தலோ ….. வளர்க்கப் பட்டுவிடக் கூடாது என்பதாலேயே யாம்; மதக் கருத்தரங்குகளையும், வினா விடைக் கூட்டங்களையும், ஆய்வு மன்றங்களையும் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறோம் யாம்.

    ஒருவேளை, எமக்கும் தோல்வி யேற்பட்டிடுமோ என்றஞ்சியே எம்மோடு ஞானவாழ்வு வாழ்ந்த நிர்வாணிகளும், சத்தி யோகிகளும், சித்தி மகான்களும், கபாலிகர்களும், துறவிகளும், பைராகிகளும், தவசிகளும், ….. தங்கள் தங்கள் விருப்பம் போல் இமயத்தின் மடியிலும், மலைகளின் முடிகளிலும், அடர் காடுகளிலும், பாழிடங்களிலும், விடரகங்களிலும், …… வெறிமிகு அருள்வாழ்வு வாழுகிறார்கள். அதாவது, தோல்வியே வெற்றியாக்கித் தரும் வீரசத்தியாக, மாசத்தியாக, போர்க்காலக் கொற்றவையாக, காடுகிழாளாக……. வாழ்ந்து வரும் அருளாளர்கள் இந்துமத மறுமலர்ச்சியை இந்திய நாட்டின் சமய சமுதாய அரசியல் துறைகளுக்குரிய முழுமைப் புரட்சியாக ஆக்கிடுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.

    எனவேதான், யாம் எதையும் நிதானமாக, சமாதானமாக, கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் அன்பு வழியில், அறவழியில், அருள்வழியில், ஆரவாரமின்றி அமைதியாகச் செய்திட முயலுகிறோம். ஆனால், தமிழினத் துரோகிகளும், விரோதிகளும் சாதுரியமாகச் சிக்கல்களையும், சீற்றங்களையும் வளர்க்கிறார்கள். இவற்றை முறியடிக்க வேண்டுமென்றால் ‘தனித்தமிழ் இயக்கம்’, ‘தமிழ்மொழி விடுதலை இயக்கம்’, ‘தமிழின விடுதலை இயக்கம்’, ‘தமிழ்ப் பண்பாட்டு வளவளர்ச்சி இயக்கம்’, ‘தமிழிலக்கிய மறுமலர்ச்சி இயக்கம்’, ‘தமிழ்ச் சமய விழிச்சி இயக்கம்’, ‘தமிழ்ச் சமுதாய ஒற்றுமை வளர்ச்சி இயக்கம்’, ‘தமிழின அரசியல் செழிச்சி இயக்கம்’, …. எனப் பல இயக்கங்கள் பலரின் தலைமையில் அருகு போல் தோன்றி ஆல்போல் தழைத்திடல் வேண்டும்.

    நமது மதம்தான், நமது மொழியை, கலையை, அகப்பண்பாட்டை, புறநாகரிகத்தை, சமுதாயக் கட்டமைப்பை, தனிமனித வாழ்வின் ஒழுங்கை, அரசியல் நேர்மையை ….. வளர்த்து வந்திருக்கிறது! வளர்த்து வந்திருக்கிறது! வளர்த்து வந்திருக்கிறது! என்ற பேருண்மையை நம்மவர்களாவது நன்கு புரிந்தும் புரிய வைத்தும் செயல்பட வேண்டும்.

    இந்த நூலில் மட்டுமின்றி வேறு எந்த நூலானாலும் சரி; எமது முன்னோர்களின் படைப்புக்களில் ஓர் எழுத்தைக் கூட மாற்றாமல், திருத்தாமல் வெளியிடும் பணியைத்தான் செய்கிறோம் யாம். எனவே, எமது படைப்பல்லாத இது போன்ற நூல்களில் உள்ள எந்த வாசகத்தையும், எந்தக் கருத்தையும் எம்முடையதாகக் கருதத் தேவையில்லை. அதாவது, யாம், எமது முன்னோர்களின் கருத்துக்களையும், வாசகங்களையும் அப்படியே இன்றைய தாயக மக்களுக்கு வழங்கியுள்ளோம். இவற்றைப் புரிந்தும் புரியவைத்தும் செயல்பட வேண்டிய பொறுப்பை எம்காலத்து மக்களுக்கு ஒப்படைக்கிறோம் யாம்.

    யாம், எமது காலத்தின் தத்துவமாக, சித்தாந்தமாக, இலக்கியமாக, வரலாறாக, …. வாழ முயலுகிறோம். யாமே, ‘எமது வாழ்வை ஒரு தெய்வீகச் சோதனையாக (My life is the Test of Divinity) அறிவித்துச் செயல்படுகிறோம். எனவே, எமது போதனைகளையும், சாதனைகளையும் முயற்சிகளையும் நடுநிலையாளர்களாகவாவது இருந்து எம் தாயக மக்கள் ஆய்வு செய்யட்டும் என்று வேண்டுகோள் விடுத்துக் கொள்கிறோம் யாம்.

    தமிழ்மொழியிலேயே அனைத்து வகையான வழிபாட்டு நிலையங்களும், கருவறைகளும், வெட்டவெளிக் கருவறைகளும் புத்துயிர்ப்புச் செய்யப்படல் வேண்டும். இதற்குரிய மந்திற, மந்திர, மந்தர, மாந்தர, மாந்தரீகங்களும்; தந்திற, தந்திர, தந்தர, தாந்தர, தாந்தரீகங்களும்; எந்திற, எந்திர, எந்தர, ஏந்தரீகங்களும்; ஐந்திறங்களும், ஐந்திரங்களும், ஐந்தரங்களும், ஐந்தீ வேட்டல்களும்; முத்தீ ஓம்பல்களும், பூசாவிதிகளும், பூசைமறை, முறை, நெறி, வேதங்களும்; பூசை மரபுகளும், கருவறைப் படிகளும், குடமுழுக்குச் சாத்திற, சாத்திர, சாத்தரங்களும்; தோத்திற, தோத்திர, தோத்தரங்களும்; நேத்திற, நேத்திர, நேத்தரங்களும்; வேத்திற, வேத்திர, வேத்தரங்களும்; அத்திற, அத்திர, அத்தரங்களும்; சூத்திற, சூத்திர, சூத்தரங்களும்; சித்தங்களும், நாதங்களும், போதங்களும், ஓதங்களும், சுருதி, ஆரண, ஆகம, மீமாம்சைகளும்; நேம, நியம, நிடத, நிட்டை நீதிகளும்; நான்மறைகளும், நான்முறைகளும், நானெறிகளும், நான்வேதங்களும்……. முறைப்படி சித்தர்நெறியின் மரபுகள் வழுவாமல் ஏட்டறிவாகவும், பட்டறிவாகவும் கற்றுக் கொடுக்கக் கூடிய வாய்ப்பு வசதிகளை உருவாக்க முயலுவதே எமது பணி.

    இப்பணிக்குத் தேவையான ஏந்துகளையும், உதவிகளையும், உறுதுணைகளையும், ஆதரவுகளையும் நல்குமாறு அனைவரையும் வேண்டி விரும்பிக் கேட்டபடி இந்த முன்னுரையை நிறைவு செய்கிறோம், யாம்.

    அன்பு

    குவலய குருபீடம்,

    குருமகா சன்னிதானம்,

    ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்

    தொடர்புடையவை: