பதினெண் சித்தர் பீடாதிபதியின பதினெட்டு அருளாட்சி ஆணைகள் 15 வது ஆணை
அனைத்து வகையான வழிபாட்டு நிலையங்களிலும், கருவறைகளிலும், வெட்டவெளிக் கருவறைகளிலும் ஊழியம் புரிகின்ற அனைத்து வகையான ஊழியக் காரர்களுக்கும் நிறைவான ஏட்டறிவும், பட்டறிவும் வழங்குவதற்குரிய பயிற்சிகள் கருகுலங்களின் மூலமும், குருகுலங்களின் மூலமும், தருகுலங்களின் மூலமும், திருகுலங்களின் மூலமும் வழங்கப் பட்டேயாக வேண்டும்! வழங்கப் பட்டேயாக வேண்டும்! வழங்கப் பட்டேயாக வேண்டும்!
இதற்கான அனைத்து வகையான ஏற்பாடுகளையும் அவசியம் நேரடிப் பார்வையில் அந்தந்த வட்டாரத்து மக்களால் நிகழுமாறு செய்ய வேண்டும். இதற்குரிய பணிகளையும் கோயில் நிறுவன நிர்வாகங்களையும் கவனிப்பதற்காக வாரத்தின் ஏழு நாட்களிலும் செயல்படக் கூடிய ஏழு கரையினர்களாக (கூட்டத்தினர்களாக) ஒவ்வொரு வட்டாரத்து மக்களையும் பிரித்திடல் வேண்டும். இந்தக் கரையாளர்கள்தான் அனைத்துப் பொறுப்புக்களையும் அக்கரையோடு கவனித்து எக்குறையும் வராமல் மெய்யான இந்துமதத்தைப் போற்றிப் பேணிப் பாதுகாத்திடல் வேண்டும்.
இந்த நியதியைச் சட்டமாக்கிட வேண்டும். இதனையே நாட்டு நடப்பில் புதிய கட்டமைப்புக்களை உண்டாக்குவதற்குரிய திட்டங்களாகச் செயலாக்க வேண்டும். அதாவது ஆலய நிறுவன நிர்வாகக் கட்டமைப்புக்கள் ஒழுங்காகவும் நேர்மையாகவும் மென்மையாகவும் திண்மையாகவும் அமைந்திட்டால்தான் சமுதாயத்தின் செயல்நிலைகளும் அரசியலின் இயக்க நிலைகளும் உய்வு பெறும், உயர்வு பெறும், வாய்மை பெறும், நன்மை தரும்.
இதனை உணர்ந்து தமிழின அருட்பேரரசு அனைத்துத் தலைமைகளையும், பொறுப்புக்களையும் தமிழர்களுக்கே தர வேண்டும். தமிழிலேயே நிகழ்த்த வேண்டும். இதனைச் செயலாக்கத் தயங்கும் அருட்பேரரசனை எதிர்த்துப் போரிட அனைவரும் தயாராக வேண்டும். இது அருளாணை.
இதனைச் செயலாக்குவதைப் பொறுத்துத்தான் வருங்காலத் தமிழர்களின் தன்னம்பிக்கையும், தன்மானமும், இனப்பற்றும், இன ஒற்றுமையும், மொழிப் பற்றும், நாட்டுப் பற்றும் உரிமை பெற்றிடும்! பெருமை பெற்றிடும்! விழிப்பு மிக்க செழிப்புற்றிடும்!