Gurudevar.org
 • முகப்புப் பக்கம்>
 • மெய்யான இந்துமதம்>
 • தீவாளித் (தீபாவளி) திருநாள்
 • தீவாளித் (தீபாவளி) திருநாள்

  தீவாளித் (தீபாவளி) திருநாள்

  பதினெண் சித்தர்கள் வழங்கிய இந்தியத் திருநாள்

  தீவாளி - விளக்கம்

  தீ ஆவளி சித்தர்கள் உருவாக்கிய திருநாள். கார்த்திகைக்கு அகல் விளக்குகளை வழிபாடு செய்வது போல்; தீஆவளிக்கு குத்து விளக்கு ஏற்றியும், தீ வளர்த்தும் (ஐந்தீ) ஒளியை வழிபடுவதுதான் தீஆவளித் திருநாள். இந்த ஒளி வணக்கமே இம் மண்ணுலகை அண்டபேரண்டங்களோடு இணைக்கிறது.

  தீவாளி - வரலாறு

  தீஆவளி எனும் திருநாள் அனாதிக்காலம் தொட்டு நிகழ்ந்து வருகிறது. பாரத காலத்தில் நரகாசுரன் தீஆவளி அன்று போரிட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சி ஏதேச்சையாக நடந்ததால்; பின்னர், அது வரலாற்று நிகழ்ச்சியாகவும், அதனாலேயே தீஆவளித் திருநாள் தோன்றியது என்ற தவறான கருத்து உருவாக்கப் பட்டு விட்டது. எனவே, தீஆவளி திருநாளுக்கும் நரகாசுரன் மடிவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இதே போல், இன்றுள்ள சமண மதத்தைத் தோற்றுவித்த 27-வது தீர்த்தங்கரான மகாவீரர் நிர்வாண முத்தி நிலையை அடைந்தது இதே தீஆவளி நன்நாளில்தான்; இதன்படி சமணர்கள் (சைனர்கள் = அருக சமயத்தவர்) தங்களுடைய மத குருவான மகாவீரர் நிறைவு பெற்றதை ஒட்டிய நாளான இந்நாளை தங்கள் தலைவரால்தான் தோன்றியது எனக் கூறி வருகிறார்கள். இதுவும் ஒரு வரலாற்று நிகழ்ச்சியே!.

  “முருகன் தேவசேனாதிபதியாகப் பொறுப்பேற்றதும்; சிவ பெருமான் திரிபுரம் எரித்ததும்; இறையனார் இம்மண்ணுலகை அருளாட்சிக்குரியதாக ஏற்றதும்; பதினெண் சித்தர்கள் இம் மண்ணுலகிற்கு வந்ததும்; இந்து மதத்தை வழங்க ஆரம்பித்ததும்; முதல் கருவறையை அமைத்ததும் இத்தீஆவளித் நன்நாளில்தான் எனக் குருபாரம்பரியம் மிகத்தெளிவாக பாராட்டிக் குறிக்கிறது. எனவே, தீஆவளி தமிழர் திருநாள்; மனித நாகரீகமும் பண்பாடும் மணிசன் மனிதனாக மாறிய பொன்நாள்” … … அனாதிக்கால கருவூறார் குருபாரம்பரிய வாசகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை.

  தீவாளி - கொண்டாடும் முறை

  ‘தீஆவளி’ பற்றிக் குறிக்கும் குருபாரம்பரிய வாசகங்கள் இன்றைய தமிழகத்தைக் காக்கும் ஒரு வலிமை மிகும் சாதனம் ஆகும். ‘தமிழர்கள் தீவாளித் திருநாள் தங்களுடைய திருநாள்தான்’ என்ற பேருண்மையை உணர்ந்தும், நம்பியும் செயல்பட்டால்தான் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் வளர்ச்சியையும் தமிழினத்தின் உரிமையையும் பேண முடியும். இதற்காகத் தீவாளி எப்படிக் கொண்டாடப்பட வேண்டுமென்பதை விளக்குகிறோம்.

  பதினெண் சித்தர்கள் தமிழ்மொழியின் ஒலி அலைகளின் மூலம் தனிமனிதர்கள் தங்களுடைய முன்னோர்களில் பிறப்பெடுக்காமல் அலைபவர்களின் ஆவி, ஆன்மா, உயிர் எனும் மூன்றையும் ஆண்டுக்கு ஒருமுறை தீவாளி அமாவாசை அன்று எண்ணை நீராடிப் புத்தாடை அணிந்து அவரவர் வசதிப்படி புறா, கோழி, ஆடு, மீன்…. பலியிட்டு; அழைத்து விருந்திட்டு மகிழும் திருநாளாகவே தீவாளித் திருநாளை படைத்தார்கள்.

  (1) கொடிநிலை வழிபாடு:

  அமாவாசையின் அதிகாலையில் குடும்பத் தலைவர்கள் எண்ணை நீராடிப் புத்தாடையணிந்து தீ+ஆவளி –> குத்து விளக்குகளை விண்வெளியில் மீன் (விண்மீன்) கூட்டத் தோற்றமாக வீட்டின் உள்ளும் புறமும் ஏற்றிடல் வேண்டும். வாசலில் புதுமணல் பரப்பிக் குண்டம் அமைத்து நெருப்பு வளர்த்துப் பலி கொடுத்து மெய்ஞ்ஞானக் கொடி ஏற்றி அவ்வக்காலப் பதினெண் சித்தர் பீடாதிபதிகளால் வழங்கப்படும் பூசாமொழி வாசகங்களைக் கூறிக் ‘கொடிநிலை வழிபாடு’ என்பதனை நிறைவேற்ற வேண்டும். இதில், விண்மீன்கள், கோள்கள், இராசிகள், பிண்ட, அண்ட, பேரண்ட, அண்ட பேரண்டத்தவர்கள், இம்மண்ணுலக உருவ, அருவ, அருவுருவங்கள்… … முதலிய அனைவரும் வழிபடப் படுகிறார்கள். அமாவாசை நாளில் மேற்குறித்த அனைவரும் அழைப்பை ஏற்று வருவர். அமாவாசை விரதத்தின் பெயரால் மரக்கறி உணவுதான் படைத்தல், உண்ணல் … என்ற பழக்கம் பிற்காலத்திய பழக்கம். அமாவாசையில் இறைச்சியுணவு (புலால், மாமிசம்) படைக்கப்பட்டேயாக வேண்டும்.

  குறிப்பு:- தீவாளி அல்லாத மற்ற அமாவாசைகளில் குறிப்பிட்டத் தனிமனிதருக்காகப் பூசை செய்தால்; இறந்து போன அந்த மனிதன் எந்த உணவை விரும்பி உண்பாரோ (மரக்கறி உணவு அல்லது இறைச்சி) அந்த உணவைத்தான் படையலாகப் போட்டு வழிபட வேண்டும். அப்படியல்லாமல் அமாவாசைப் பூசை யென்றால் இறைச்சி உணவே கூடாது என்று மறுத்து மரக்கறி உணவையே படைப்பது தவறு! தவறு!! தவறு!!!

  (2) கந்தழி வழிபாடு:

  கந்தழி வழிபாடு - அதாவது சூரியனை வழிபடல். பகலில் உருமவேளை அல்லது உச்சி வேளை எனப்படும் கலசப் பூசைக்குரிய (தாந்தரீக எந்தாரீக மாந்தரீகப் பூசைகளுக்கும் உரிய) 11 முதல் 1:30 வரை = 2:30 மணி நேரம் = 1 சாமம் வீட்டில் செய்த பலகாரங்கள், காலையில் பலி கொடுத்ததைச் சமைத்த உணவு, பூசைக்குரிய பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பூ, புகை (சாம்பிராணி, ஊதுபத்தி), கற்பூரம் … … முதலியவைகளை யெல்லாம் வைத்து கந்தழி எனப்படும் சூரிய வழிபாட்டைச் செய்ய வேண்டும்.

  (3) வள்ளி வழிபாடு:

  மாலையில் வள்ளி வழிபாடு (வள்ளி நிலை வழிபாடு) வீட்டின் முற்றத்தில் அல்லது நடுவீட்டில் அல்லது பூசையறையில் ஐந்து (5) திரியிட்ட குத்து விளக்கை ஏற்ற வேண்டும். அதற்கு நேராகச் சுவற்றில் நிலவைப் போல் வட்டமாக அவரவர் விருப்பப்படி விருப்பமான அளவில் சந்தனத்தாலோ அல்லது மஞ்சளாலோ பூசி மெழுக வேண்டும். அதில் திருநீற்றாலும் குங்குமத்தாலும் பட்டைகளும் பொட்டுக்களும் 3 முதல் 48 வரை வைத்து அலங்கரிக்க வேண்டும். ஒரு மண் கலயத்தில் மஞ்சள்நீர் நிரப்பி 1. மாவிலை 2. வேப்பிலை 3. அரச இலை 4. ஆலிலை 5. வில்வ இலை 6. தென்னைக் குருத்தோலை 7. பனைக் குருத்தோலை 8. துளசி இலை 9.அருகம்புல் முதலியவைகளை வைத்து நடுவில் தேங்காய் வைத்து நூல் சுற்றி கலசம் தயாரித்து வைக்க வேண்டும். வசதி வாய்ப்புகளுக்கேற்ப எல்லோரும் புத்தாடையணிந்து பால், பழங்கள், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பால் பொங்கல், பலகாரங்கள் … … முதலியவைகளைப் படைத்து நிலவை (திங்களை) வழிபட வேண்டும்.

  வசதி வாய்ப்புகளுக்கேற்ப அவரவர் வீட்டு வாசலிலோ, தெரு முனையிலோ, கோயில்களின் வாசல்களிலோ ஒன்று முதல் ஒன்பது சொக்கப்பானைகள் (வைக்கோல், சோளத்தட்டை, ஓலைகள், விறகுகள் முதலியவைகளால் கோபுரம் போல் கட்டி நிறுத்தப் படுபவை) நிறுத்திடல் வேண்டும். அவரவர் வீட்டில் நிலவுப் பூசை குத்து விளக்கின் முன் செய்து முடித்தபிறகு வீட்டினுள் ஏற்றிய கற்பூரத்தை அல்லது குத்து விளக்கு (நெருப்பை) தீயைப் பயன்படுத்தித்தான் சொக்கப்பானை எரிக்க வேண்டும். இந்த சொக்கப்பானையின் சாம்பலை அவரவரின் வீடு, நிலம், காடு, தோட்டம், வயல் முதலிய எல்லா இடங்களிலும் தூவி விடுவதால் எல்லாவகையான தீமைகளும் தடுக்கப்பட்டும் அகற்றப்பட்டும் தேவையான நன்மைகள் விளைந்திடும்.

  எனவே, தமிழர்கள் அனைவரும் இம்மண்ணுலகுக்குரிய கொடிநிலை வழிபாடு, கந்தழி நிலை வழிபாடு, வள்ளி நிலை வழிபாடு எனும் முப்பெரும் வழிபாட்டினையும் தீவாளியை முன்னிட்ட அமாவாசை நாளில் கொண்டாடி எல்லாவித நன்மைகளையும் அடைய வேண்டும். இதன் மூலம் தமிழர்கள், பதினெண்சித்தர்கள் வழங்கிய இந்து மதப்படி வாழ்ந்து மொழிப்பற்று, இன ஒற்றுமை, நாட்டு உரிமை, பண்பாட்டுப் பிடிப்பு முதலியவற்றில் விழிப்போடும், செழிப்போடும் என்றென்றும் வாழ்ந்திடுவார்கள் … - என்ற பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி அமராவதி ஆற்றங்கரைக் கருவூறாரின் குருபாரம்பரிய வாசகங்களைப் பற்றி கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் உ. இராமசாமிப் பிள்ளை குறிக்கிறார்.

  கி.மு.100க்கும் கி.மு.150க்கும் இடைப்பட்ட காலத்தில் வட ஆரியர் தமிழினத்தைப் பல்வேறு போர்முறைகளால், உள்நாட்டுப் பூசல்களால், பிரிவினைகளால், சூழ்ச்சிமிகு சண்டைச் சச்சரவுகளால் … … மிகப்பெரிய அழிவையும், வீழ்ச்சியையும், தாழ்ச்சியையும் அடையுமாறு செய்தனர். அப்பாவித் தமிழினம் கரடிப்போர் முறையால் கதிகலங்கிக் கருத்தழிந்து சிதறிச் சீரழிவுற்றது. அந்த அவலக்கோலங்களையும் வட ஆரிய மாய வலைகளையும் அகற்றப் பல நூற்றாண்டுகள் தமிழினத் தலைவர்கள் பகுத்தறிவோடும், தன்னலமின்றியும், அற்ப ஆசைகளுக்கு அடிமையாகாமலும் … … போரிட வேண்டுமென்று உணர்ந்தும் உணர்த்தியும் தமிழிலக்கியங்களைத் தொகுத்தார்; எண்ணற்ற இலக்கியங்களையும் எழுதியும் எழுதுவித்தும் செயல்பட்டார்; மூன்று பெரும் சத்திகளான 1. குருபாரம்பரியம், 2. அரசபாரம்பரியம், 3. இலக்கிய பாரம்பரியம் எனும் சித்தர்களின் முக்கோணக் கோட்டையை வலிமைப்படுத்தினார் .. .. பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி.

  இன்றைக்கு தமிழர்களிடையே தீவாளியைக் கொண்டாடுவதைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுவதால் இ.ம.இ. யின் இன்றைய ஈடு இணையற்ற தலைவரும் பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியும் ஆகிய இந்துமதத் தந்தை, குருமகாசன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறார் அவர்கள் தமிழக மக்களுக்கு தீவாளி பற்றிய இக் குருபாரம்பரிய வாசகத்தை அருளுகின்றார்.

  குருதேவரிடம் விளக்கம் கேட்டு இக்கட்டுரையினை எழுதியவர்கள் “குருதேவர்” மாத ஏட்டின் ஆசிரியர் குழுவினர்.

  தொடர்புடையவை: